Thursday, April 22, 2010

கில்லி



எனக்கு ஏன் தான் இந்த வயதில் இந்த ஆசை வந்தது என்று தெரியவில்லை.

சிவராத்திரிக்கு சிவராத்திரி குலதெய்வம் கும்பிட ஊருக்குப் போவது எங்கள் வழக்கம்.

அந்த வருஷமும் அப்படித்தான் போயிருந்தேன்.

சாமி கும்பிட இன்னும் நேரம் இருக்கும் போது அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கப் போனேன்.

ஒரு தெருவில் சிறுவர்கள் கில்லி தாண்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

எவ்வளவு காலம் ஆச்சு இதை விளையாடி...?

இன்று மறுபடி ஒருமுறை விளையாடிப் பார்ப்போமா...?

மனதிற்குள் ஒரு உற்சாகம் துள்ளியது.

சிறுவர்களிடம் வெட்கத்தைவிட்டுக் கேட்டுமாச்சு.

"அங்கிள்... யாராவது பாத்தா சிரிப்பாங்க...!".

"பரவாயில்லடா...!".

கொஞ்ச நேரத்தில் வித்தை பிடிபட விளையாட்டு சூடுபிடிக்க ஆரம்பித்தது.

விளையாடிக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த ஒரு பெரியவர், "நானும் வருகிறேன்...!" என்று இணைந்து கொண்டார்.

அவரும் நானும் எதிரெதிர் டீமில் விளையாட, விளையாட்டு அனல் பறந்தது.

ஒவ்வொரு சாட்டும் அருமையாய் அடித்துவிட்டு அவர், "நானெல்லாம் சின்ன வயசுல..." என்று பெருமை வேறு.

அது எனக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் அந்தப் பெரியவர் என்னை உசுப்பேற்ற அதை அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்.

உண்மையில், அவர் மிக அருமையாய் வேறு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது என்னுடைய டர்ன்.

நான் அடிக்கும் பாதையில் வேப்பமரம் ஒன்று பூதாகரமாய் நின்றுகொண்டிருந்தது.

கில்லியை அடிக்க கையை ஓங்கியிருப்பேன்.

உடனே அந்தப் பெரியவர், "நான்... என் சின்ன வயசுல அந்த வேப்ப மரத்தோட உயரத்தைத் தாண்டி எல்லாம் கில்லியை அடிச்சிருக்கேன்...!'.

உடனே சிறுவர்கள் எல்லோரும்,"அங்கிள் விடாதீங்க...நீங்களும் மரத்தைத் தாண்டி அடிங்க...அடிங்க...!" என்று என்னை உசுப்பேற்றத் தொடங்கினர்.

எனக்கு ரத்தம் கொதித்தது.

 சவாலில் ஜெயித்தே ஆகவேண்டும்.

குறி பார்த்து நேராய் வேப்பமரத்தின் உயரத்திற்குத் தூக்கி அடித்தேன்.

கில்லி பறந்தது.

மரத்தின் உயரம் நோக்கி மேலே மேலே போய்... தாண்ட வேண்டிய நேரத்தில் கில்லி டக்கென்று ஒரு கிளையில் மாட்டிக் கொண்டது.

"என்ன அங்கிள் நீங்க...!' சிறுவர்கள் எல்லோரும் சலித்துக் கொண்டு கில்லியை எடுக்க மரத்தடியை நோக்கி ஓடினார்கள்.

சிறுவர்கள் இல்லாத அப்போதுதான்...  என்னைக் கடுப்பேற்றுகிற மாதிரி அந்தப் பெரியவர் மெதுவாய்ச் சொன்னார்.

"என்னோட சின்ன வயசுல, இந்த வேப்ப மரம் சும்மா ஒரு மூணு அடி உயரம்தான் இருக்கும் பாத்துக்க...!".
.
.
.

1 comment:

Aba said...

ஆகா... நல்ல ட்விஸ்ட்..

Post a Comment