Thursday, January 27, 2011

கிளி ஜோஷியம்

டேனி இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளியில், அவனது ஆசிரியை கிளி பற்றிச் சொல்லும்போது, கிளி ஜோதிடம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

"கிளியானது எடுத்துக் கொடுக்கும் கார்டை வைத்து ஜோசியக்காரர் நம்ம எதிர்காலத்தைச் சொல்லுவார். உங்க யாருக்காவது இதுபோலக் கார்டை வச்சு எதிர்காலத்தைச் சொல்லும் ஆட்களைத் தெரியுமா..?".

மாணவர்கள் எல்லோரும் அமைதியாய் இருக்க, டேனி மட்டும் கையை உயர்த்தினான்.

"மிஸ்... என் அம்மா சொல்லுவாங்க மிஸ்..!".

ஆசிரியை மிகவும் ஆச்சர்யத்துடன் அவனிடம் கேட்டார்.

"நிஜம்மாவா..? எப்படிச் சொல்லுவாங்க..?".

டேனி தனது கண்களை விரித்துக் கொண்டு விளக்கமாய்ச் சொன்னான்.

"யெஸ் மிஸ்... ஒவ்வொரு தடவை என்னோட பிராக்ரஸ் கார்டைப் பார்க்கும்போதும் எங்கப்பா வீட்டுக்கு வந்ததும் என்ன நடக்கும்னு சொல்லுவாங்க. அதேதான் நடக்கும்...!" என்றான்.
.
.
.

Tuesday, January 25, 2011

தொபுக்கடீர்..!

ஒரு மாலை வேளையின் இளம் வெயிலில், அந்த மூன்று துறவிகளும் இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் ஏரியின் நடுவில் இருந்த படகில் உட்கார்ந்திருந்தார்கள்.

அதில் இருவர் அந்த இடத்திற்கு மிகப் பழக்கமானவர்களாகவும், ஒருவர் மிகப் புதியவராகவும் தோன்றினார்கள்.

வெயில் சற்றே அதிகமாக, அதில் ஒரு துறவி புதிய துறவியிடம், "நான் கரையில் இருக்கும் மரத்தடிக்குப் போகிறேன்..!" என்றபடி, படகை விட்டு இறங்கி சடசடவென்று தண்ணீரின் மீது நடந்துபோய், கரையில் இருந்த அந்த மரத்தடியில் உட்கார்ந்தார்.

உடனே, அடுத்த துறவியும் புதிய துறவியிடம், "நானும் அவருக்குத் துணையாய் அங்கே போகிறேன்..!' என்றபடி படகில் இருந்து இறங்கினார்.

அவரும், அதேபோல் தண்ணீரில் மேலாக ஒரு நடை நடந்துபோய், முந்தைய துறவியுடன் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டார்.

இதைப் பார்த்த அந்த புதிய துறவி, 'அவர்களால் முடியும்போது, நம்மால் முடியாதா என்ன..?" என்று எண்ணியபடி ஏரியில் இறங்கியவர், தொபுக்கடீர் என்று ஏரித் தண்ணீரில் விழுந்து காணாமல் போனார்.

கரையில் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு துறவிகளில், ஒருவர் மற்றொருவரிடம் சொன்னார்.

"அவர்கிட்ட பாறை எங்கெங்கே இருக்குன்னு நாம சொல்லவே இல்லியோ..?".
.
.
.

Saturday, January 22, 2011

வேண்டா விருந்து

தனது மேனேஜரை, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார் என் கணவர்.
எதற்கெடுத்தாலும் டிரீட் கேட்டு தொந்தரவு செய்யும் மேனேஜர் என்பதால், வேண்டா வெறுப்பாய்த்தான் விருந்துக்கு அழைத்திருந்தார்.

மேனேஜர் வந்ததும், டைனிங் டேபிளை ஒழுங்கு செய்வதற்காக நானும் என் கணவரும் உள்ளே போயிருந்தபோது, ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த என் நான்கு வயது மகனிடம் பேச்சுக் கொடுத்தார் அவர்.

"தம்பி, உன் பேரு என்ன..?".

"டேனி.."

"ஸ்வீட் நேம். நான் யாருன்னு உனக்குத் தெரியுமா..?".

"ஓ தெரியுமே... நீங்க மேனேஜர் அங்கிள்..!".

"வெரிகுட். இன்னிக்கு யாருக்கு உங்க வீட்டுல விருந்துன்னு சொல்லு பார்க்கலாம்..!".

"உங்க வீட்டு நாய்க்கு அங்கிள்..!".

டேனியின் பதிலால் குழப்பமாகிப் போன மேனேஜர் அவனிடம் தெளிவாய்க் கேட்டார்.

"என் வீட்டு நாய்க்கா..? எப்படிச் சொல்லற..?".

டேனி இப்போது மிகத் தெளிவாய் அவரிடம் சொன்னான்.

"இன்னிக்குக் காலைல, 'எதுக்கு இவ்வளவு சிக்கன் வாங்கிட்டு வந்தீங்க'ன்னு அம்மா கேட்டப்ப, அப்பா சொன்னாரே... 'இன்னிக்கு அந்த மேனேஜர் நாய் விருந்துக்கு வருது'-ன்னு..!".
.
.
.

Thursday, January 20, 2011

நம்ம சிங்கு, நம்ம சிங்குதான்...!

நம்ம சிங் வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவருக்கு முதலில் கிடைத்த வேலை கொஞ்சம் விநோதமானது.

அது ஒரு நெடுஞ்சாலை கான்ட்ராக்டரிடம், அவர் கான்ட்ராக்ட் எடுத்திருந்த சாலையின் மத்தியில், பட்டையாய் பெயின்ட்டில் வெள்ளைக் கோடு போடும் வேலை.

நம்ம சிங் அந்த வேலையையும், மிக ஆர்வத்துடனும் மிகுந்த செய் நேர்த்தியுடனும் செய்தார்.

அவர் முதல் நாள், ஐந்து கிலோ மீட்டருக்கு அந்த மாதிரி கோடு போட்டிருந்தார்.

அடுத்த நாள், மூன்று கிலோ மீட்டருக்கு அதேபோல் கோடு போட்டிருந்தார்.

அதற்கடுத்த நாள், வெறும் ஒரு கிலோ மீட்டர்தான் கோடு போட்டிருந்தார்.

அவனுடைய கூலியைக் கொடுக்க வந்த அன்று, முதலாளி அவனுடைய நோட்டைப் பார்த்துவிட்டுக் கேட்டார்.

"என்ன சிங்கு... வந்த அன்னைக்கு நல்லா செஞ்சிருக்க. அப்புறம், கொஞ்ச கொஞ்சமாய்க் குறைஞ்சு இன்னைக்கு வெறும் ஒரு கிலோ மீட்டருக்குத்தான் பெயின்ட் பண்ணிருக்க. என்ன விஷயம்..?".

கேள்வி கேட்ட முதலாளியைப் பார்த்து, நம்ம சிங் சொன்னார்.

"இல்ல மொதலாளி... இதுக்கு மேல எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல. ஒவ்வொரு நாளும் எனக்கும் பெயின்ட் டப்பாவுக்கும் இடையில இருக்கற தூரம் அதிகமாயிட்டே போகுதில்ல..?".
.
.
.

Wednesday, January 12, 2011

பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...?

மூன்று மதத் துறவிகளும் கடவுள் மறுப்பாளரும் சந்தித்துக் கொண்ட ஒரு அற்புத நிகழ்வு அது.

அவரவர் மதத்தின் மீது அவரவருக்கு எவ்வளவு பற்று இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க நினைத்த ஒருவர், அந்தத் துறவிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்க விரும்பினார்.

துறவிகளின் அனுமதி கிடைத்ததும் அவர் மூன்று மதத் துறவிகளிடமும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்.

"உங்களை யாருமில்லாத தனித்தீவில் விட்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்க்ளுடன் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதித்தால், நீங்கள் எந்தப் புத்தகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுவீர்கள்...?".

கேள்வியைக் கேட்டதும் அந்தக் கிறிஸ்துவத் துறவி சொன்னார்.

"நான் என்னுடன் எப்போதும் பைபிள் இருப்பதையே விரும்புவேன். அதனால், நான் பைபிளைத்தான் எடுத்துச் செல்வேன்..!".

முகம்மதியரான அந்தத் துறவி மிகுந்த பெருமையுடன் சொன்னார்.

"என் உயிரினும் மேலான எங்கள் திருமறையான குர்-ஆன் ஒன்றே, நான் என்னுடன் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!".

இந்துத் துறவியோ,"கீதை தவிர உயர்ந்தது எதுவும் உண்டோ. அதுவே நான் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!".

கேள்வியைக் கேட்டுப் பதில் பெற்றுக் கொண்டவருக்கு பரம திருப்தி.

என்றாலும், கடவுள் உணர்வாளர்கள் அவரவர் மதத்தின் மறைகளை எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்று தெரிந்து விட்டது...

கடவுளை மறுக்கும் அந்த நாத்திகருக்கு மதமோ, மறையோ இல்லையே, அவர் என்ன புத்தகத்தைக் கொண்டு செல்வார் எனத் தெரிந்து கொள்ள விரும்பி.. அவரிடம் திரும்பி அந்தக் கேள்வியைக் கேட்டார் அவர்.

கடவுளை மறுக்கும் அந்தக் கருப்புச் சட்டைக்காரர், சிரித்தபடியே அதற்கு பதில் சொன்னார்.

"அப்படி ஒரு நிலையில், நான் 'சீக்கிரம் கப்பல் கட்டுவது எப்படி?' என்னும் புத்தகம் கிடைத்தால் அதை எடுத்துச் செல்லவே விரும்புவேன்..!" என்றார்.
.
.
.

Tuesday, January 11, 2011

சார்ஜென்ட் தில்லுதுர

தில்லுதுர கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது.

கல்லூரியின் என்சிசி, ஒரு மலை வாசஸ்தலத்தில் ஒரு மாதம் கேம்ப் போட்டிருந்தது.

அந்த கேம்ப் வந்திருக்கும் என்சிசியில், தில்லுதுர ஒரு கம்பெனியின் சார்ஜென்ட் பொறுப்பில் இருந்தார்.

கேம்ப்பிற்குச் சென்ற மூன்றாம் நாள்.

அவர் கம்பெனியில் இருந்த ஒரு கேடட்டின் அம்மா இறந்து விட்டதாகச் செய்தி வந்திருந்தது.

மாஸ்டர் கூப்பிட்டு தில்லுதுரயிடம் சொன்னார்.

"சார்ஜென்ட் தில்லுதுர... கேடட் செந்திலின் அம்மா இறந்து விட்டதாக தந்தி வந்திருக்கிறது. அவரை வந்து என்னைப் பார்க்கச் சொல்..!".

தில்லுதுர போனபோது, அதிகாலைப் பேரேடில் நின்றிருந்தது ட்ரூப்.

அவர்களைப் பார்த்து பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க ஆரம்பித்தார் தில்லுதுர.

"கம்பெனி லிஷன்... நான் சொல்பவர்கள் ஒரு வரிசை முன்னால் வந்து நிற்கவும். கேடட் ரமேஷ்... இன்று கிச்சன் உங்கள் பொறுப்பு. கேடட் செந்தில்... நமது தங்குமிடம் சுத்தம் செய்வது உங்கள் பொறுப்பு. அப்புறம், கேடட் செந்தில்... உங்கள் அம்மா இறந்துவிட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. நீங்கள் சென்று, அலுவலகத்தில் நமது கேபடனைச் சந்திக்கவும்..!".

அன்று மாலை, தில்லுதுரயிடம் மாஸ்டர் சொன்னார்.

"சார்ஜென்ட் தில்லுதுர... ஒரு கேடட்டின் அம்மா இறந்ததை நீங்கள் தெரிவித்த விதம் சரியில்லை என்றே நான் நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் பதமாக, புத்திசாலித்தனமாகச் சொல்ல முயற்சி செய்யலாம்...!".

"யெஸ் சார்...!" சொன்ன தில்லுதுர, கேப்டனுக்கு ஒரு சல்யூட் அடித்து விடை பெற்றார்.

மறுபடி, ஒரு பதினைந்து நாள் இருக்கும்... அதேபோல் ஒரு அதிகாலையில் மாஸ்டர் தில்லுதுரயைக் கூப்பிட்டார்.

"சார்ஜென்ட் தில்லுதுர... கேடட் மகேஷின் அம்மா இறந்து விட்டதாக தந்தி வந்திருக்கிறது. அவரை வந்து என்னைப் பார்க்கச் சொல். ஆனால், இந்தமுறை செய்தியைக் கொஞ்சம் பக்குவமாக, புத்திசாலித்தனமாகச் சொல்லவும்...!".

"ஓகே சார்...!" சல்யூட் அடித்துவிட்டு வந்த தில்லுதுர, காலைப் பேரேடில் வரிசையாய் நின்றிருந்த கம்பெனியிடம் சொன்னார்.

கேடட் மகேஷிடம் செய்தியை எப்படிச் சொல்வது என்று யோசித்தபடியே சொன்னார்.

"அட்டென்ஷன் கேடட்ஸ்.. லிசன்...! உங்களில் யார் யாருக்கெல்லாம் அம்மா இருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இரண்டு ஸ்டெப் முன்னால் வரவும்." என்றவர் தொடர்ந்து சொன்னார்.

"நோ நோ... கேடட் மகேஷ். நீங்க முன்னால வர வேண்டாம்..!
.
.
.

Monday, January 10, 2011

ஹிந்தி வாழ்க..!

சென்னையின் ஒரு பேருந்துப் பயணத்தின் இடையில், முழுக்க முழுக்க ஆன்டிராய்ட் மொபைலில் நான் தட்டச்சு செய்து வெளியிட்ட முதல் கதை:

மிக்கி... சுண்டெலியில் ஒரு சுட்டி எலி.
அது தனது அம்மாவின் பேச்சைக் கேட்காமல், அன்றும் வெளியே விளையாடப் போயிருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தை வெகுநாளாய் எதிர்பார்த்திருந்த டாம், இப்போது மிக்கியைத் துரத்தத் துவங்கியது.
துரத்தும் பூனையைக் கண்ட சுண்டெலி மிக்கி, உயிரைக் கையில் பிடித்தபடி தன் வளையை நோக்கி ஓடியது.
குட்டியைத் துரத்தும் டாமைக் கண்ட மிக்கியின் அம்மா தனது வாயைக் குவித்துக் கொண்டு,"லொள்... லொள்..!" என்று நாயைப்போல் கத்தியது.
எலியைத் துரத்திக் கொண்டு வந்த டாம் பூனை, புலியின் குரலைக் கேட்டதுபோல் அலறியபடி திரும்பி ஓட...
இன்னும் உயிர் பயத்தில் நின்றிருந்த குட்டி மிக்கியைப் பார்த்து, அதன் அம்மா சிரித்தபடி சொன்னது.
"இன்னொரு பாஷையைத் தெரிந்து வைத்துக் கொள்வது எவ்வளவு உபயோகம் பார்த்தாயா..?".
,
,
,

தில்லுதுரயின் திருமணம்

தில்லுதுர தனது திருமண விஷயமாக, தன் காதலியின் தந்தையைச் சந்தித்துப் பேச, அவர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

காதலியின் தந்தை எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்ட பின்னர், தனது மனைவிக்கும் இதில் சம்பந்தம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள, தில்லுதுரயிடம் கேட்டார்.

"இது சம்பந்தமாக, இதற்கு முன்னர் நீ என் மனைவியைச் சந்தித்திருக்கிறாயா..?".

அவர் கேட்டதும், லேசான சங்கடத்துடன் தில்லுதுர அவரிடம் சொன்னார்.

"பார்த்திருக்கிறேன் சார்...! ஆனாலும், எனக்கு உங்கள் மகளைத்தான் அதிகம் பிடித்திருக்கிறது..!".
.
.
.

Friday, January 7, 2011

காக்காவும் அதன் கக்காவும்

தில்லுதுர அவரது நண்பர் ராஜாவுடன் பார்க்கில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு காக்கா தில்லுதுர மீது பறந்தபடியே கக்கா பண்ணிவிட்டது.

அசிங்கமாகிவிட்ட சட்டையைத் துடைக்க தண்ணீர் எடுத்துவர, ராஜா வேகவேகமாய் பக்கத்திலிருந்த பைப்பை நோக்கி ஓடினார்.

தில்லுதுர நண்பரைப் பார்த்துச் சொன்னார்.

"யூஸ் இல்ல, விட்டுடுங்க...!".

குழப்பமாய்த் தன்னைப் பார்த்த ராஜாவிடம் தில்லுதுர தொடர்ந்து சொன்னார்.

"எப்புடியும் நீங்க தண்ணியப் புடிச்சுட்டு வர்றதுக்குள்ள, அந்தக் காக்கா இன்னும் அஞ்சாறு கிலோமீட்டர் பறந்து போயிருக்குமே...!" என்றார்.
.
.
.

Wednesday, January 5, 2011

ஆட்டு நாக்கு

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், தில்லுதுர வீட்டில் பிரியாணி செய்யச் சொல்லியிருந்தார்.

டிபார்ட்மென்டல் ஸ்டோரில் முட்டை மற்றும் தேவையான ஐட்டங்களை வாங்கிக் கொண்டு, நேராக மட்டன் கடையில் வந்து பைக்கை நிறுத்தினார் தில்லுதுர.

நல்ல கூட்டம் கடையில்.

காய்கறி இன்னபிற உள்ள பையை பைக்கிலேயே வைத்துவிட்டு, முட்டையை மட்டும் பத்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு தன்னுடைய டர்னுக்காக காத்திருக்கும் போதுதான், அவர் கறிக் கடைக்காரர் மட்டன் வெட்டும் அந்த அடிமரக் கட்டையின் மேலிருந்த ஆட்டின் நாக்கைப் பார்த்துவிட்டுக் கேட்டார்.

"இன்னாதுப்பா அது..?".

கறிக் கடைக்காரர் எப்போதும்போல் உற்சாகமாய் பதில் சொன்னார்.

"ஆட்டோட நாக்கு சார்.ஒரு அம்மா எடுத்து வைக்கச் சொல்லிட்டுப் போயிருக்கிது..!".

தில்லுதுர ஆச்சர்யமாய்க் கேட்டார்.

"ஆட்டோட நாக்கை எல்லாமா தின்னுவாங்க..?".

கறிக்கடைக் காரர் சிரித்தார்.

"இன்னா சார் இப்பிடிக் கேட்டுட்ட.? ஷோக்கா இருக்கும். உனக்கு வோணுமா..?".

தில்லிதுர அருவருப்புடன் பதில் சொன்னார்.

"சேச்சே... ஒரு மிருகத்தோட வாயிலருந்து வந்ததை என் வாயில போடறதா..? சான்ஸே இல்லை..! கருமம்..கருமம்..".

கடையில் நின்றிருந்தவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்க்க, கறிக் கடைக்காரர் தில்லுதுர சொன்ன எதைப் பற்றியும் கவலைப்படாமல் கறியை வெட்டியபடியே கேட்டார்.

"அதென்ன சார் கையில வச்சிருக்கீங்க... முட்டையா..?" என்றார்.
.
.
.