Monday, April 12, 2010

எண்பது வயது துரோகம்



நாராயணனும் அவரது மனைவியும் தங்களுடைய அறுபதாவது திருமண நாளைக் கொண்டாடிய உற்சாகத்தோடு தங்களது இளம் வயது நினைவுகளில் மூழ்கிப் போனார்கள்.

பள்ளிப் பருவத்தில் இந்த ஊரிலேயே ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள் அவர்கள்.

இன்று அந்த நினைவு வர நாராயணன் தன் மனைவியைக் கேட்டார்.

"சுந்தரி... இன்னிக்கு நாம படிச்ச பள்ளிக்கூடம் வரை ஒரு வாக் போயிட்டு வரலாமா...?".

மனைவியும் ஆமோதிக்க மெல்ல ஒரு நடை போனார்கள்.

இருவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு மெல்ல நடந்து பள்ளியை அடைந்த போது பள்ளிக்கூடம் இன்னும் பூட்டாமல் இருந்தது.

எனவே இருவரும் உள்ளே தங்களது வகுப்பறையைத் தேடி தாஙகள் அமர்ந்திருந்த டெஸ்க்கைத் தேடி அதில் "ஐ லவ் யூ சுந்தரி" செதுக்கினார் நாராயணன்.

அவர்கள் வீடு திரும்பும் போது.... அந்த அரை இருட்டில் ஒரு போலிஸ் காரில் இருந்து ஒரு பை விழுவதை இருவரும் பார்த்தார்கள்.

காரோ நிற்காமல் செம ஸ்பீடில் போய்விட்டது.

சுந்தரி அம்மாள் என்ன செய்வதென்று தெரியாமல் டக்கென்று அந்த பையை எடுத்துக் கொண்டாள்.

வீட்டில் சென்று திறந்து... அதை பார்த்தால்  அத்தனையும் பணம்.  அதுவும் ஐம்பது லட்சம்.

நாராயணன் "திருப்பிக் கொடுத்துவிடலாம்..." என்று சொன்னாலும், சுந்தரி அம்மாள் "பணம் எடுத்தவருக்கே சொந்தம்..." என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

நாராயணன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்தப் பணத்தை அதே பையிலிட்டு ஒளித்து வைத்துவிட்டாள்.

மறுநாள் காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தால் இரண்டு போலிஸ்காரர்கள்.

உள்ளே வந்து அமர்ந்த அவர்களில் ஒருவர் கேட்டார்.

"அம்மா... நேற்று இந்த வழியாய்ச் சென்ற போலிஸ் வண்டியிலிருந்து ஒரு பணப்பை விழுந்துவிட்டது. அதைத் தேடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எதுவும் பார்த்தீர்களா...?".

சுந்தரி அம்மாள் ,"இல்லை..."என்று சொல்ல....

நாராயணன், "இல்லை ஆபிஸர்... இவள் பொய் சொல்கிறாள்... அந்தப் பணத்தை இவள் எடுத்து ஒளித்து வைத்ததை என் கண்ணால் பார்த்தேன்...".
போலிஸ்காரர்கள் சந்தேகத்தோடு பார்க்க, சுந்தரி அம்மாள், "அவரை நம்பாதீர்கள்... அவருக்கு மிக வயதாகிவிட்டது. இப்படித்தான் எப்போதும் சம்பந்தமில்லாமல் உளறிக் கொண்டிருக்கிறார்...!" என்றாள்.

போலிஸ்காரரில் முதலாமவர் நாரயணனிடம் திரும்பி, "அய்யா... நாங்கள் உங்களை நம்புகிறோம்... நேற்று என்ன நடந்தது... முதலில் இருந்து சொல்லுங்கள்...!".

நாராயணன் தமது நேர்மைக்கு கிடைத்த வெற்றியை பற்றிய சந்தோஷத்தோடு...

"ஆபிஸர்... நேற்று நானும் இவளும் ஸ்கூலுக்குப் போய்ட்டு வரும்போது..." என்று ஆரம்பிக்க...

...அந்த முதல் ஆபிஸர் சட்டென்று எழுந்து தனது சகாவிடம் திரும்பிச் சொன்னார்.

"சீக்கிரம் கிளம்பு....!"
.
.
.

No comments:

Post a Comment