Monday, April 9, 2012

தில்லுதுரயின் குடும்பக் கதை

அன்று தில்லுதுர தனது நிறுவனத்தை நடத்தும் ஏரியாவின், ஓனர்ஸ் அசோசியேஷன் மெம்பர்கள் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள்.

ஓனர்ஸ் அசோசியேஷனுக்கு இதுவரை ஒரு பைசா கூடத் தராத தில்லுதுரயிடமிருந்து, இந்த முறை ஒரு நல்ல தொகையைப் பெறாமல் போகக் கூடாது என்ற முடிவில் வந்திருந்தார்கள் அவர்கள்.

தில்லுதுரயின் டேபிளுக்கு வந்ததும் அவர்களில் ஒருவர் ஆரம்பித்தார்.

"தலைவரே... நம்மளோடது வருஷத்துக்கு 50கோடி டர்ன் - ஓவர் பண்ணற கம்பெனி. ஆனாலும், இதுவரை நீங்க ஓனர்ஸ் அசோசியேஷனுக்கு எதுவும் உதவி செய்யல.! அதனால, இந்தத் தடவை நீங்க எதாவது ஒரு பெரிய தொகைக்கு செக் கொடுத்தே ஆகணும்..!".

கறாராகச் சொன்னவரை, கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தார் தில்லுதுர.

"என் வருமானத்தைப் பத்திச் சொல்லறீங்களே... என் அம்மா பத்து வருஷமா படுத்த படுக்கையா இருந்து போன மாசம்தான் ஹாஸ்பிடலை விட்டு வந்தாங்க.! அவங்களுக்கு எத்தனை கோடி செலவாச்சுனு உங்க யாருக்காவது தெரியுமாப்பா..?".

வந்தவர்கள் தெரியாது என்று மெல்லத் தலையாட்டினார்கள்.

தில்லுதுர தொடர்ந்தார்.

"என் தம்பி.. கண்ணு தெரியாம, கால் நடக்க முடியாம இருந்து ஆறு மாசம் முன்னாடி அவனுக்கு ஆப்பரேஷன் செஞ்சு சரி செஞ்சோமே.... அதுக்கு எத்தனை பணம் செலவாச்சுனு தெரியுமா உங்களுக்கு..?".

வந்தவர்கள் இன்னும் சங்கடத்தோடு தெரியாது என்று மறுபடி தலையாட்டினார்கள்.

தில்லுதுர தனது கோபம் ஆறாமல் தொடர்ந்தார்.

"என் தங்கச்சியோட கணவர், ரெண்டு மாசம் முன்னாடி ஒரு ரோட் ஆக்ஸிடென்ட்ல இறந்து போனாரு. என் தங்கச்சி மூணு கைக்குழந்தையோட கையில காசு இல்லாம கஷ்டப்படறாளே... அவளுக்கு மாசம் என்ன செலவாகுது தெரியுமா உங்களுக்கு..?".

வந்தவர்கள் மன்னிப்புக் கோரும் வகையில்,"மன்னிச்சுக்கங்க தில்லுதுர... எங்களுக்கு இது எதுவுமே தெரியாது...!'" என்றதும், தில்லுதுர சற்றே கோபம் தணிந்த குரலில் சொன்னார்.

"இவ்வளவு கஷ்டப்படற அவங்களுக்கே நான் இதுவரை ஒரு பைசா தந்ததில்ல. நீங்க யாருன்னு உங்களுக்கு கொடுக்கறதுனு சொல்லுங்க...!"
.
.
.

Monday, April 2, 2012

இப்ப என்ன செய்வீங்க.?

(நகைச்சுவைதான் என்றாலும்... ஒரு மனிதனாக, ஒரு இக்கட்டான சமயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள் எனத் தெரிந்து கொள்ள கேட்கப்படும் கற்பனைக் கதை இது. எனவே, வரிவரியாக கவனமாகப் படித்து பதில் சொல்லவும்)

நீங்கள் ஒரு தமிழர்.

அதிலும் 'மயக்கம் என்ன..?' தனுஷ் போல ஒரு அற்புதமான ஃபோட்டோகிராபர்.

நீங்கள் இப்போது ஒரு பத்திரிக்கை சார்பாக, கடலில் சூரியன் மறைவதைப் பார்க்க வந்திருக்கும் பிரதமரை ஃபோட்டோ எடுக்க வந்திருக்கிறீர்கள்.

கடற்கரையில் பிரதமருக்காக காத்து நிற்கும்போது ஒரு சூறாவளி அடிக்கிறது.

சூறாவளி என்றால் கடும் சூறாவளி.

நீங்கள் இப்போது அந்த சூறாவளியின் சரியான மையத்தில் நிற்கிறீர்கள்.

வீடும் மரமும் மரங்களும் கால்நடைகளும் கடல் நீரும் இப்போது உங்களைச் சுற்றி சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது.

உங்களால் இப்போது செய்யக் கூடியது ஒன்றும் இல்லை என்றாலும், இயற்கையின் பெரும்பலத்தை உணர்த்தும் அந்த அற்புதமான தருணத்தை அழகழகான ஃபோட்டோக்களாய் கேமராவில் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள்.

அப்போதுதான், அந்தச் சூறாவளியின் நடுவே உயிருக்காக போராடும் அந்த மனிதனைப் பார்க்கிறீர்கள்.

காற்றும் நீரும் சகதியும் அந்த மனிதனை சுழற்றி எறிய எறிய பக்கத்தில் சென்ற நீங்கள் அந்த மனிதனை எங்கோ பார்த்திருப்பதாய் உணர்கிறீர்கள்.

ஓ... அது நமது பிரதமர்.!

இப்போது உங்களுக்கு ரெண்டு வாய்ப்பு இருக்கிறது.

ஒன்று உங்கள் தேசத்தின் பிரதமர் உயிரைக் காக்கும் அரிய வாய்ப்பு.

அல்லது ஒரு பவர்ஃபுல் மனிதரின் கடைசி நிமிடத்தை ஃபோட்டோவாய் பதிவு செய்ததற்காக, ஃபோட்டோவின் ஆஸ்கார் போன்ற புலிட்சர் விருது.

இப்போது தான் நீங்கள் பதில் சொல்ல வேண்டிய தருணம்.

தயவுசெய்து இந்தக் கேள்விக்கு நியாயமான பதிலைச் சொல்லுங்கள்.

"நீங்கள் இப்போது இந்தத் தருணத்தில் இதைப் பதிவு செய்ய கலர் ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா... இல்லை, காலம் கடந்து நிற்க வேண்டும் என்பதற்காக கருப்பு வெள்ளை ஃபிலிமைத் தேர்ந்தெடுப்பீர்களா.?".
.
.
.