Tuesday, September 25, 2012

தில்லுதுரயும் திடுக் பாட்டியும்


நண்பர் நடத்தும் முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த டூர்  பஸ்ஸுக்கான ட்ரைவருக்கு அன்று ஏனோ வரமுடியவில்லை.

'இல்லத்தின் முதியவர்கள் ஏமாந்துவிடக்கூடாதே..' என்று அந்த நண்பர் அன்று தில்லுதுரயின் உதவியைக் கேட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் தில்லுதுரயும் சந்தோஷமாய் அந்த பஸ் டிரைவர் வேலையை ஒப்புக் கொண்டார்.

காலை ஆறுமணிக்கு பஸ் கிளம்பியதிலிருந்தே எல்லா முதியவர்களும் தங்கள் வயதை மறந்து ஆட்டம் பாட்டம், கேலி, கிண்டல், பாடல்கள் என அட்டாகசம் செய்தபடி குழந்தைகள் போல குதூகலமாய் வந்து கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு நேரம் முடியும்..?

எட்டு மணிக்கு எல்லாம் அடங்கி, ஆளாளுக்கு அவரவர் கொண்டு வந்திருந்த தின்பண்டங்களை பகிர்ந்து கொண்டு சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்.
ஒரு பத்து பதினைந்து நிமிடம் இருக்கும்.

வயதான பாட்டி ஒன்று வந்து பஸ்ஸை ஓட்டிக் கொண்டிருந்த தில்லுதுர தோளைத் தட்டியது.

திரும்பிய தில்லுதுரயைப் பார்த்து தனது பொக்கை வாயை காட்டி சிரித்தபடி, "இந்தா தம்பி.... இதைக் கொஞ்சம் சாப்பிடு..!" என்று கொஞ்சம் உடைந்த முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவை இருந்த ஒரு காகிதப் பொட்டலத்தை நீட்டியது.

தில்லுதுரயும் சிரித்தபடியே வாங்கி சாப்பிட்டபடி வண்டியை தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருந்தார்.

எல்லாம் காலியாகி இன்னும் ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும்.

அதே பாட்டி அதேபோல் தில்லுதுர தோளைத் தட்டியது.

"இன்னும் கொஞ்சம் சாப்பிடறயா தம்பி..?" என்று அதேபோல் மறுபடி ஒரு பொட்டலத்தை நீட்டியது.

அதே உடைந்த முந்திரி, பாதாம், பிஸ்தா வஸ்துக்கள்.

தில்லுதுர சிரித்தபடி மறுத்தார்.

"போதும் பாட்டி.. நீங்களே சாப்பிடுங்க..!".

பாட்டி புன்னகைத்தபடி பதில் சொன்னது.

"இல்ல தம்பி... எங்க யாருக்கும் பல்லு கிடையாது. அதனால இதை எங்களால சாப்பிட முடியாது.! நீ சாப்பிடலைனா இதை கீழதான் போடணும்..!".

பாட்டி சொன்னதும் ஆச்சர்யத்துடன் திரும்பிய தில்லுதுர கேட்டார்.

"சாப்பிட முடியாதுன்னா... அப்புறம் எதுக்கு இதையெல்லாம் வாங்கினீங்க..?".

தில்லுதுர கேட்டதும் அந்தப் பாட்டி அப்போதும் புன்னகை மாறாமல் பதில் சொன்னது.

"இதை யாரு வாங்கினா.? நாங்க வாங்கின சாக்லெட் பாருக்குள்ள இது இருந்தது. உண்மைல இதைச் சுத்தி இருக்கற சாக்லெட் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். அதை நாங்கெல்லாம் சப்பிச் சாப்பிட்டுட்டு இதை வேஸ்ட்டா எறிய வேண்டாமேன்னு உனக்கு குடுத்தேன்...!" என்றார்.
.
.
.

Monday, September 10, 2012

ரியாஷ் டென்டிஸ்ட்டும் டேனியும்

ரியாஷ் டென்டிஸ்ட் கோவையில் தனது டிஸ்பென்சரியின் கிளை புதிதாய் திறந்திருந்த நேரம்.

கோவை மக்களைக் கவர புதிதாய் ஒரு விளம்பரத்தை போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டினார்.

மறுநாள் கோவையில் அந்த "வலியில்லா வைத்தியர் ரியாஷ் டென்ட்டிஸ்ட் இப்போது கோவையிலும்.!" போஸ்டரை பார்த்தவர்கள் எல்லோரும் வியந்தே போனார்கள்.

ஒரு வாரத்துக்கு அப்புறம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்தப் போஸ்டரை பார்த்துவிட்டு, "அதெப்படி வலியில்லா வைத்தியர் .?" என்பதை வியந்து பேசிக் கொண்டிருக்கையில் டேனி சொன்னான்.

"அந்த டாக்டர் பொய் சொல்றாரு அங்கிள்.!".

டேனி சொன்னதும் ஆச்சர்யத்துடன் திரும்பிய பக்கத்து வீட்டுக்காரர் அவனிடம் கேட்டார்.

"அதெப்படி அவர் பொய் சொல்றாருனு சொல்ற.?"

அவர் கேட்டதும் டேனி ஆர்வத்துடன் தனது அனுபவத்தை சொல்ல ஆரம்பித்தான்.

"நேத்து எனக்கு பல்லு வலினு என்னை எங்கம்மா அந்த டாக்டர்கிட்டதான் கூட்டிட்டுப் போனாங்க அங்கிள்.!".

டேனி கேட்பதற்கு ஆள் கிடைத்ததும் தன் கண்களை விரித்த படி கதையை தொடர்ந்தான்.

"சேர்ல ஏத்தி உக்கார வச்சிட்டு வாயைத் திறக்கச் சொல்லி ஒரு விரல விட்டு கடவாய்ப் பல்லுகிட்ட செக் பண்ணாரா... நான் பயத்துல அவர் விரல நல்லா நறுக்குனு கடிச்சு வச்சிட்டேன்.!".

"ம்ம்ம்... அப்புறம்..!" பக்கத்து வீட்டுக்காரர் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

டேனி தொடர்ந்து சொன்னான்.

"நான் கடிச்ச உடன, அந்த வலியில்லா வைத்தியருனு சொன்னவரு நம்ம எல்லார் மாதிரியுந்தான் 'ஐயோ... அம்மா'னு கத்தினாரு அங்கிள். அப்ப அவருக்கு வலிக்குதுதான.!" என்றான்.
.
.
.

Wednesday, September 5, 2012

தில்லுதுர என்றொரு கடன்காரன்

தில்லுதுரயின் ரெடிமேட் துணிக்கடை பிசினஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலம் அது.

ஏரியாவே தில்லுதுரயின் கடையை நம்பியிருந்தாலும் தில்லுதுர சரக்கை சப்ளை செய்பவர்களுக்கு ஒரு சிம்மசொப்பனம் தான்.

தெரியாமல் எவனாவது சரக்கை கொடுத்து விட்டால், அதற்கு பணத்தை வசூல் செய்வதற்குள் அவனுக்கு குறைந்தது ஐந்தாறு பிறந்தநாளாவது வந்துவிடும்.

அன்றைக்கும் அப்படித்தான்.

தில்லுதுர திருப்பூரின் மிக பிரபலமான கம்பெனிக்கு ஒரு பத்தாயிரம் பனியன்கள் சப்ளை செய்யச் சொல்லி ஒரு மெயில் அனுப்பியிருந்தார்.

அந்தக் கம்பெனியில் தில்லுதுரயின் பழைய வராக்கடன்களை எல்லாம் பட்டியலிட்டு விட்டு கூடவே ஒரு மெயிலும் அனுப்பியிருந்தார்கள்.

"மன்னிக்கவும் மிஸ்டர். தில்லுதுர...
தங்களது பழைய பாக்கி இவ்வளவு இருப்பதால் தாங்கள் அதை நேர் செய்த பின்பே இந்த ஆர்டரை பிராசஸ் செய்து பொருட்களை அனுப்ப முடியும். தங்களின் மேலான பதிலை எதிர்பார்த்து...!" என எழுதி ஒப்பம் அட்டாச் செய்யப் பட்டிருந்தது.

மெயிலைப் பார்த்த தில்லுதுர உடனடியாய் அவர்களுக்கு இவ்வாறு ஒரு பதில் போட்டார்.

"ஐயா...
வியாபாரம் ஜரூராய் நடந்து கொண்டிருக்கும் சமயம். சரக்கு மிக அவசரத் தேவையாய் இருக்கிறது.
நீங்களோ பழைய கடனை பைசல் செய்தால்தான் சரக்கை சப்ளை செய்ய முடியுமென்று சொல்கிறீர்கள்.
ஆனால், என்னால் அவ்வளவு நீண்டகாலம் காத்திருக்க முடியாதென்பதால் நான் வேறு இடம் பார்த்துக் கொள்கிறேன்.
அந்த ஆர்டரை கேன்சல் செய்து விடுங்கள்.

அன்பன்,
தில்லுதுர."
.
.
.