Wednesday, December 29, 2010

கொடி அசைந்ததால்

இரண்டு ஜென் துறவிகள் கோவில் வாசலில் நின்றிருந்தார்கள்.

இருவரும் மேலே கோபுரத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவர் சொன்னார், "கொடி அசைகிறது..!"

"இல்லை..." என்றார் அடுத்தவர். "காற்றுதான் அசைகிறது..!"

"ம்ஹூம், தப்பு...!" என்றார் முதல் துறவி. "காற்று எங்கேயும்தான் இருக்கிறது. ஆனால் கொடி இங்கே மட்டும்தானே அசைகிறது..?".

"காற்று மட்டும் இல்லாவிட்டால் கொடியால் எப்படி அசையமுடியும்..?" என்றார் இரண்டாவது துறவி.

இவர்கள் இப்படி மாறி மாறிச் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், அந்தப் பக்கமாக அவர்களுடைய குருநாதர் வந்தார்.

"உங்களுக்குள் என்ன சண்டை..?".

துறவிகள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, தங்களுடைய பிரச்னையைச் சொன்னார்கள்.

"நீங்களே சொல்லுங்கள் குருவே. இங்கே கொடி அசைகிறதா, அல்லது காற்று அசைகிறதா..?".

சொல்லிவிட்டு இருவரும் குருவின் முகத்தையே ஆர்வமாய்ப் பார்க்க, குரு சொன்னார்

"இரண்டுமே இல்லை. உங்களுடைய மனம்தான் அசைகிறது...!".

சொல்லிவிட்டு குரு போக, துறவிகள் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
.
.
.

Tuesday, December 28, 2010

தொடப்பக் கட்டை

தில்லுதுரயின் அலுவலகத்தில் அப்போதுதான் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்தான் அந்த இளைஞன்.

தில்லுதுர அந்த இளைஞனை கையைக் குலுக்கி வரவேற்று, பெயர் என்ன என்று கேட்டுவிட்டு, அவன் கையில் ஒரு துடைப்பத்தைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்.

"தம்பி... உன்னோட முதல் வேலை, இந்த ஆஃபீஸை நல்லா, சுத்தமா, குப்பை இல்லாமப் பெருக்கறது தான். எங்கே செய்யுங்க பார்ப்போம்..?".

அதைக் கேட்டதும், அந்த இளைஞன் கோபத்துடன் திரும்பி தில்லுதுரயிடம் சொன்னான்.

"சார்... ஒரு போஸ்ட் கிராஜுவேட். என்னைப் போயி..!".

அவன் சொன்னதும் தில்லுதுர வருத்தத்துடன் சொன்னார்.

"ஓஹ்... ஐ ஆம் வெரி வெரி சாரி தம்பி...! எனக்கு அது தெரியாமப் போச்சே. மொதல்ல அந்தத் துடைப்பத்தைக் கொடுங்க...!" என்று துடைப்பத்தைக் கையில் வாங்கியவர் தொடர்ந்து சொன்னார்.

"இப்ப, எப்படிக் பெருக்கறதுன்னு உங்களுக்கு நான் சொல்லித் தர்றேன்...!" என்றார்.
.
.
.

Monday, December 27, 2010

தில்லுதுரயின் மனைவி

தில்லுதுரயின் மனைவி அழுது கொண்டே தன் அம்மாவுக்கு போன் செய்தாள்.

"அம்மா... மறுபடி மறுபடி அவர் என்னோட சண்டை போட்டுக்கிட்டே இருக்காரு. என்னால இவரோட வாழ முடியல. நான் உன்னோடயே வந்துடறேம்மா...!".

மறுமுனையில், தில்லுதுரயின் மாமியார் பொறுமையாய் மகளுக்குப் புரியும்படி நிறுத்தி, நிதானமாய்ச் சொன்னார்.

"பொறுமையாய் இருடி. ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. ஆனா, நாம யாருன்னு நாமதான் அவங்களுக்குக் காட்டணும். நீ அங்கயே இரு. நான் வந்து உன்னோட இருக்கறேன்...!".
.
.
.

Friday, December 24, 2010

கிறிஸ்துவும் மூன்று மரங்களும்

ஒருகாலத்தில், மலை ஒன்றின் மீது மூன்று இளம் மரங்கள் நின்றன.

அவை, எதிர்காலத்தில் தாங்கள் வளர்ந்து பெரியவை ஆனதும், தாங்கள் அடைய விரும்பும் நிலை பற்றி கனவு கண்டுகொண்டிருந்தன.
முதலாவது மரம், “நான் உலகின் விலையுயர்ந்த பொக்கிஷத்தைச் சுமக்கவிரும்புகிறேன்.. ” என்றது.

இரண்டாவது மரம், “நான் மாபெரும் சமுத்திரங்களைக் கடக்கப் போகின்றேன். பேரரசர்களையெல்லாம் தாங்கிச் செல்வேன். உலகிலேயே அதிபலம் பொருந்திய மரக்கலமாக நான் இருப்பேன்,” என்றது.

மூன்றாவது மரமோ, “நான் இம்மலை உச்சியை விட்டுப் போகப்போவதே இல்லை. நான் மிகவும் உயரமாக வளர விரும்புகிறேன். அப்போது, என்னைப் பார்க்கும் மக்கள், சுவர்க்கத்திற்கு உயரே தங்கள் கண்களை உயர்த்தி கடவுளைப் பற்றி நினைப்பார்கள். உலகிலேயே மிக உயர்ந்த மரமாக நானே இருப்பேன்,” என்றது.

வருடங்கள் பல சென்றன.  அந்த சிறிய மரங்களும் உயரமாக வளர்ந்தன. ஒரு நாள், மூன்று விறகுவெட்டிகள் அந்த மலை மீது ஏறினர்.

அவர்கள் ஆளுக்கொரு மரத்தை வெட்டிச் சாய்த்து, தங்கள் வண்டியில் மரங்களை நகரத்துக்குள் எடுத்துச் சென்றனர்
தன்னை விறகுவெட்டி தச்சு வேலை செய்யுமிடத்திற்குத் தன்னை கொண்டு வந்தபோது மிகவும் களிப்படைந்தது. ஆனால், அந்த தச்சன் அதை மிருகங்களுக்கு தீனிவைக்கும் கொட்டில் தொட்டியாக அதை வடிவமைத்தான்.

ஒரு காலத்தில் மிகவும் அழகு வாய்ந்த அந்த மரம், பொன்னால் இழைக்கப்படவில்லை, பொக்கிஷங்களையும் தாங்கி நிற்கவில்லை. அது மரத்தூள்களால் தூசுபடிந்தும் பசியோடிருக்கும் பண்ணை மிருகங்களுக்குத் தீனி தாங்கி நின்றது.

இரண்டாவது மரம், தன்னை விறகுவெட்டி ஒரு கப்பல் கட்டுமிடத்திற்குக் கொண்டு சென்றவுடன் மிகுந்த உற்சாகமடைந்தது. ஆனால், அது நினைத்தற்கு  மாறாக, ஒரு சிறிய மீன்பிடி படகாக செய்யப்பட்டது. சமுத்திரத்தில் செல்ல முடியாத அளவிற்கு அது வலிமையற்றதாக இருந்தது. ஏன், ஒரு சிறிய ஆற்றில் கூட அதனால் பயணம் செய்ய முடியாமல், ஒரு சிறிய ஏரிக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

மூன்றாவது மரமோ, தன்னை வெறும் கட்டைகளாக வெட்டி மரக்கொட்டில் ஒன்றில் போட்டு வைத்தபோது, தான் விரும்பியது நடக்காமல் மனம் வருந்திக் கிடந்தது..

பல நாட்களும் இரவுகளும் கடந்தன. அந்த மூன்று மரங்களும் தாங்கள் கண்டு வந்த கனவுகளையெல்லாம் மறந்து விட்டிருந்தன.
ஆனால் ஒரிரவு ஒரு இளம் பெண், தான் அப்போதுதான் ஈன்றெடுத்த தனது குழந்தையை அத்தொட்டிலில் இட்டபோது அந்த முதல் மரத்தின் மீது நட்சத்திர ஒளிவெள்ளம் பாய்ந்தது.

“அவனுக்கு ஒரு தொட்டில் என்னால் செய்ய முடிந்தால்...,” என அப்பெண்ணின் கணவன் முணுமுணுத்தான்.

அந்த இளம் தாய், அவனது கைகளைப் பிடித்து புன்னகைத்தாள். அந்த மரத்தொட்டிலின் மீது விண்மீன்களின் ஒளி பாய்ந்துகொண்டிருந்தது. “இந்த மரத்தொட்டில் மிகவும் அழகாக இருக்கின்றது,” என்றாள்.

அப்போது அந்த மரம், தான் உலகிலேயே அதி உயரிய பொக்கிஷத்தைத்  தாங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தது.

இன்னும் சில நாள் கழித்து,  ஒரு சாயங்காலம், மிகவும் களைப்படைந்த ஒரு வழிப்போக்கனும் அவனது நண்பர்களும் அந்த சிறிய படகில் செல்லும்போது, இடியும் மின்னலும் கொண்ட புயல் ஆரம்பித்தது.
அந்த சிறிய மரம் நடுங்கியது. .

களைப்படைந்த அந்த வழிப்போக்கன் எழுந்து உட்கார்ந்தான். பிறகு எழுந்து நின்று, தனது கைகளை நீட்டி, “அமைதி,” எனக் கூறியதும், புயல் ஆரம்பித்த வேகத்திலேயே ஓய்ந்தது.

அந்தப் படகு அப்போது, சுவர்க்கத்திற்கும் பூவுலகிற்கும் அரசராக விளங்கியவரைத் தான் சுமந்துசெல்வதை உணர்ந்தது.

ஒரு வெள்ளிக் கிழமை காலை வேளை, தன்னைப் போட்டு, மறந்துவிட்டிருந்த இடத்திலிருந்து தான் அகற்றப்பட்டபோது மூன்றாவது மரம் திடுக்கிட்டது.
மிகவும் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டிருந்த ஒரு கூட்டத்தின் நடுவே தான் தூக்கிச் செல்லப்பட்ட போது அந்த மரம் படபடத்தது. ஒரு மனிதனின் கரங்களை தன் மீது வைத்து ஆணியால் அடித்தபோது அந்த மரம் நடுநடுங்கியது.

ஆனால், ஞாயிறின் காலையில், சூரியன் உதித்தபோது உலகமே களிப்புணர்வால் தனக்குக் கீழே அதிர்ந்தபோது, இறைவனின் அன்பு யாவற்றையும் மாற்றிவிட்டது என அம்மரம் உணர்ந்தது. அது அந்த மரத்தை உறுதிப்படுத்தியது.

அந்த மூன்றாவது மரத்தைப் பற்றி மக்கள் நினைத்த போதெல்லாம், கடவுளின் ஞாபகம் தான் அவர்களுக்கு வந்தது. உலகிலேயே உயர்ந்த மரமாக இருப்பதை விட, அது அதிசிறப்பான ஒன்றாக இருந்தது.
.
.
.
இளமையில் உங்கள் எண்ணம் எதுவோ, அதை அடைய பொறுமையுடன் காத்திருந்தால்...

அது கிடைக்காமல் போகாது என்பதற்கு இந்த மூன்று மரங்கள், மக்களுக்கு உலகம் உள்ள வரையும் சாட்சியாய் இருந்தது.

Tuesday, December 21, 2010

மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது

கோவையிலிருந்து சென்னை செல்ல அவசர அவசரமாக ஒரு ஆம்னி பஸ்சைப் பிடித்து ஏறின சமயம் நடந்தது அது.

கிளம்பிய பஸ், பஸ் ஸ்டாண்டை ஒரு சுற்றுச் சுற்றி, தடதடவென ஆடி, மீண்டும் கிளம்பிய இடத்துக்கே வந்து அமைதியாய் நின்றது.

என்ன பிரச்சினை, எதுவென்று தெரியாமல் ஒரு கால்மணி நின்ற பிறகு, பஸ் எப்போதும் போல் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்தது.

விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வத்துடன், டிக்கெட் செக் செய்ய வந்தவரிடம் பக்கத்து சீட்டிலிருந்தவர் கேட்டார்.
"என்ன சார் பிராப்ளம்..?".
அவர் அலட்டிக் கொள்ளாமல் சொன்னார்.
"வண்டியிலிருந்து வந்த சத்தம் சரியில்லாததால.., டிரைவர் வண்டியை எடுக்கப் பயந்து நிறுத்திட்டாரு..!".
அப்படியும் எதுவும் சரி செய்ததுபோல் தெரியாததால், அவர் மறுபடியும் கேட்டார்.

"அதுக்குள்ள சரி பண்ணிட்டிங்களா என்ன..?'

டிக்கெட் செக்கர் முகத்தில் எந்த பாவமும் இல்லாமல் சொன்னார்.

"பண்ணியாச்சு சார்..!".
கேட்டவர் கொஞ்சம் குசும்புக்காரர் போல.. தொடர்ந்து கேட்டார்.

"அதுக்குள்ள என்ன இஞ்ஜினையா மாத்திட்டிங்க..?".
செக்கர் இப்போதும் அதேபோல் பாவமற்ற முகத்துடன் சொன்னார்.

"இல்ல சார்... டிரைவரை மாத்திட்டோம்..!".
.
.
.

Thursday, December 16, 2010

ஒருகை ஓசை

அது ஒரு வளரும் அரசியல் கட்சி.

கட்சி ஆரம்பித்துக் கொஞ்ச நாள்தான் ஆகியிருப்பதால், கட்சியின் எல்லாச் செயல்களும் கட்சித் தலைவருக்கு அடுத்தபடியாக இருக்கும் இளவழகன் முடிவுப்படி தான் நடந்து கொண்டிருந்தது.

கட்சி சம்பந்தமான மீட்டிங்குகளில் பார்க்க வேண்டும் இளவழகனின் பேச்சை.

அனல் பறக்கும்.

மாசற்ற தமிழர் பெருமை, வீரம், மொழி, இனம், பாரம்பரியம் குறித்தெல்லாம் அவன் பேசினால்... கேட்பவர் மனம் சொக்கிக் கிடப்பார்கள்.

அந்த சமயத்தில், தொண்டர்களை உண்டியல் குலுக்கி வசூலை ஆரம்பிக்கச் சொல்லியிருந்தான் இளவழகன்.

அப்போதுதான், மக்களும் அந்த உணர்ச்சி வேகத்தில் பணத்தை அள்ளி உண்டியலில் கொட்டுவார்கள்.

அப்படி வசூலாகும் பணம்தான், இளவழகனின் எல்லா செலவுகளையும் சரிக்கட்டி வருகிறது.

அன்றும் இதுபோல்தான், கோவையில் இளவழகன் பேச்சு ஏற்பாடாகி இருந்தது... நல்ல கூட்டம்.

இளவழகன் வரும் முன்னரே, கூட்டத்தைக் கணக்கிட்டு வசூல் செய்ய, வழக்கமான இரண்டு உண்டியலுக்குப் பதிலாக நாலு உண்டியல் ஏற்பாடு செய்திருந்தார்கள் விழாவை ஏற்பாடு செய்திருந்தவர்கள்..

ஆனால், இளவழகன் வந்ததும் அந்த மற்ற இரு உண்டியல்காரர்களையும் தடுத்துவிட்டான்.

காரணம் கேட்டபோது சொன்னான்.

"ரெகுலரா உண்டி குலுக்கறவங்களப் பாத்திங்க தானே..? அவங்க ரெண்டு பேருமே ஒரு கை உள்ளவங்கனு தெரியாதா..?" என்றான்.
.
.
.

Wednesday, December 15, 2010

ராசா மந்திரி

ஒரே ஒரு காட்டிலே, ஒரே ஒரே ஒரு கிணறாம்... அந்தக் கிணற்றுக்குள்ளே எக்கச்சக்கமான தவளைகளாம்.

தங்களுக்கு என ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுப்போம் என்று முடிவு செய்தனவாம் அந்தத் தவளைகள். அதே கிணற்றில் இருந்த ஓர் ஆமைக்கு பட்டம் சூட்டி கோஷம் போட்டனவாம் அந்த ஆமைகள். ஆமையோ, தவளைகளின் நன்மைக்காக உருப்படியாக எதுவும் செய்யாமல், சோம்பேறித்தனமாகவே இருக்க... கொஞ்ச நாளிலேயே சலித்துவிட்டதாம்.

"சுறுசுறுப்பான ஒரு ராஜாதான் வேண்டும்" என்று முடிவெடுத்து, ஒரு பச்சோந்தியைப் பதவியில் அமர்த்தினவாம். நிமிடத்துக்கு ஒரு வண்ணத்துக்கு மாறி, தவளைகளுக்கு நன்றாகவே பொழுதுபோக்கு காட்டிய பச்சோந்தி, அந்தத் தவளைகள் அசந்த நேரம் பார்த்து, அவற்றுக்கு இரையாக வேண்டிய பூச்சிகளை எல்லாம் தானே பிடித்து தின்ன ஆரம்பித்துவிட்டதாம். பட்டினியில் துடித்த பாவப்பட்ட தவளைகள், "பூச்சிக்கு ஆசைப்படாத பெரிய ஜீவராசியாகத் தேர்ந்தெடுத்து அதிகாரத்தை அவர் கையில் கொடுப்போம்" என்று வானத்தைப் பார்த்து பலமாக யோசித்தனவாம்.

அந்த நேரம் பார்த்து, ஜிவ்வென்று வந்து அங்கே இறங்கியதாம் ஒரு நாரை. "ஆஹா, இவர்தான் எத்தனை வெள்ளை! இவர் அலகுதான் எத்தனை உறுதி! சிறகுதான் எத்தனை அகலம்! தூய்மையும், பலமும்,அசாத்திய திறமையும் கொண்ட இவரை ராஜாவாக்கினால், நமக்கு விடிவுகாலம் வந்து விடும்!" என்று நம்பிக்கையோடு நாரையைத் தேர்ந்தெடுத்தன அந்தக் கிணற்றுத் தவளைகள்.

இந்த முறை அசாத்திய மாற்றம்! தவளைகளுக்குப் போட்டியாக பூச்சிகளை யாரும் தின்னவில்லை. அதேசமயம், நாளுக்கு நாள் தவளைகளின் எண்ணிக்கையே குறைய ஆரம்பித்தன!

சும்மா கிடந்த ஆமை ராஜா, தங்கள் இரையைப் பிடுங்கித் தின்ற பச்சோந்தி ராஜா, தவளையே தின்கிற நாரை ராஜா... இவர்களுக்கு அடுத்தபடியாக எந்த புது ராஜாவைத் தேடுவது?" என்று மிச்சம் மீதியிருந்த தவளைகள் கவலையோடு கூடி உட்கார்ந்து, மறுபடி யோசிக்க ஆரம்பித்தனவாம்.

நீதி: கதரோ, கதிரோ, காவியோ... ராஜாக்களை மாற்றிக்கொண்டே இருந்தாலும், தவளைகளின் தலைவிதி மட்டும் மாறுவதே இல்லை..!
.
.
.
நன்றி: விகடன்

Tuesday, December 14, 2010

லட்சம் கோடி

தேசமே திரும்பிப் பார்த்த, அந்த மாபெரும் ஊழலின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது.

மந்திரியை குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்த அரசு தரப்பு வக்கீல் காட்டமாய் அவரிடம் கேட்டார்.

"இந்தக் கேஸை ஒன்றுமில்லாமல் செய்ய, நீங்கள் முன்னூறு கோடி பேரம் பேசினீர்களா இல்லையா..?".

வக்கீல் கேட்டதும் எல்லோரும் மந்திரியைத் திரும்பிப் பார்க்க, அவரோ வக்கீல் கேட்டதே காதில் விழாததுபோல் நீதிமன்ற ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

வக்கீல் மறுபடி கேட்டார்.

"சொல்லுங்கள்... இந்தக் கேஸை ஒன்றுமில்லாமல் செய்ய நீங்கள் முன்னூறு கோடி பேரம் பேசினீர்களா, இல்லையா..?".

மந்திரி இப்போதும் எந்தச் சலனமும் இல்லாமல் ஜன்னல் வழியாகவே பார்த்துக் கொண்டிருந்தார்.

மீண்டும் ஒருமுறை வக்கீல் கேட்க, மந்திரி வக்கீலைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் நிற்பதைப் பார்த்த நீதிபதி, கோபத்துடன் சுத்தியலை டேபிள் மீது நாலு தட்டுத் தட்டி மந்திரியைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டார்.

"மிஸ்டர் மந்திரி... வக்கீல் கேட்கிறர் அல்லவா..? பதில் சொல்லுங்கள் ..!".

"ஓ..!" நீதிபதி சொன்னதும் திரும்பிய மந்திரி சொன்னார்.

"மன்னிக்க வேண்டும் நீதிபதி அவர்களே..! இவ்வளவு நேரமும் வக்கீல் உங்களிடம் பேசிக் கொண்டிருப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன்..!".
.
.
.

Monday, December 13, 2010

ஒரு டம்ளர் பால்

இரவு தூங்கப் போகும் முன் ஒரு பெரிய டம்ளரில் பால் குடிப்பது டேனியின் வழக்கம்.

அன்று ஒரு சின்ன விசேஷம் காரணமாக நிறைய விருந்தாளிகள் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.

எனவே, இரவு டேனிக்குப் பால் கொடுக்க கொஞ்சம் லேட்டாகிவிட்டது .

ஏற்கனவே ரகளை பண்ணுவதில் பிஹெச்டி வாங்கும் டேனி சொந்தங்களைப் பார்த்த உற்சாகத்தில், "எனக்குப் பால் கொடு..எனக்குப் பால் கொடு..!" என்று இன்னும் கொஞ்சம் அதிகமாய்க் கத்தி ரகளை பண்ணிக் கொண்டிருந்தான்.

'சொந்தங்கள் முன்னால் இப்படி மானத்தை வாங்குகிறானே..' என்ற கடுப்பில் நான் அவனிடம் சற்று கோபமாகவே கேட்டேன்.

" ஏன் டேனி இப்படிக் கத்தற.. உன்னிடம் கொஞ்சம் கூடப் பொறுமையே இல்லையா...?".

அதற்கு டேனி இன்னும் கடுப்பேற்றும் விதத்தில் சிரித்தபடியே சொன்னான்.

"ஓ மை டியர் மம்மி... என்கிட்ட பொறுமை ரொம்ப இருக்கு. ஆனா, பால்தான் இல்லை...!".
.
.
.

Saturday, December 11, 2010

தில்லுதுரயின் தாடி

தில்லுதுர ஒருசமயம் பிசினஸ் விஷயமாக வெளியூர் போயிருந்தார்.

ஊருக்குத் திரும்ப வந்தபோது, எல்லோரும் அவருடைய கேவலமான நீளமான தாடியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

நண்பர்களோ அவரது தாடி குறித்து அவரிடமே கிண்டல் செய்தனர்.

"என்ன தில்லு.. எதுக்காக இப்படி ஒரு கேவலமான தாடி..?".

பதிலுக்கு தில்லுதுர அதைவிடக் கேவலமாய் தாடியைப் பற்றி பதில் சொன்னார்.

அதைக்கேட்ட அவரது நண்பர்கள் மிக ஆச்சர்யமாய் தில்லுதுரயைப் பார்த்துக் கேட்டார்கள்.

"பிடிக்கலைனா எதுக்கு தில்லு வளர்க்கிற..?".

தில்லுதுர அவர்களிடம் கூலாய் பதில் சொன்னார்.

"பிடிக்கலை... ஆனாலும் வளர்க்கணும்...!".

நண்பர்கள் திரும்பவும் ஆச்சர்யத்துடன் கேட்டார்கள்.

"பிடிக்காததை ஏன் வளர்க்கிற.. எடுத்துட வேண்டியதுதான..?"

தில்லுதுர முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பதில் சொன்னார்.

"எடுத்திடலாம்னுதான் இருந்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது... என் மனைவிக்கும் இந்த தாடி பிடிக்கலைனு...!".
.
.
.

Friday, December 10, 2010

மழையின் காரணமாக பள்ளி விடுமுறை

மழையின் காரணமாக விடுமுறை என்பதால், இரண்டாம் வகுப்புப் படிக்கும் என் மகன் டேனியை ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்ப அழைத்து வந்து கொண்டிருந்தேன்.

எதிர்பாராத விடுமுறை என்பதால் மிகுந்த சந்தோஷத்துடன் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தவன், அந்த டெலிபோன் கம்பங்களைப் பார்த்ததும் திடீரென என்னிடம் திரும்பிக் கேட்டான்.

"ஏம்மா... அந்த வயர்ல எல்லாம் கரண்ட் போகுதாம்மா..?".

நான் தமிழ் படித்தவள்.. கல்லூரியில் விரிவுரையாளர்.

எனக்கு அது டெலிபோன் சம்பந்தமான கம்பங்கள் என்று தெரியுமேயொழிய, அதில் கரண்ட் போகுதா... இல்லை, வெறும் சிக்னல்கள் மட்டும் போகுதா என்பது தெரியாது என்பதால் சொன்னேன்.

"எனக்கு சரியாத் தெரியலையேடா...!".

டேனி ஒன்றும் சொல்லாமல், அவனது சாலையோர விளையாட்டுகளில் கவனம் ஆனான்.

கொஞ்ச நேரம்தான்... இப்போது ஒரு சரியான மின்னலைத் தொடர்ந்து இடி இடிக்க அடுத்த கேள்வியைக் கேட்டான்.

"ஏம்மா... இந்த மின்னல், இடி எல்லாம் எப்படிம்மா வருது..?".

உண்மையில் எனக்கு சந்தேகமாக இருந்ததால் அவனிடம் சொன்னேன்.

"எனக்குத் தெரியலையேடா...!".

அடுத்து "ஓணான்ல கேர்ள்ஸ்னு எப்படிம்மா தெரிஞ்சுக்கறது..?" போல அவனது சந்தேகங்கள் எல்லாம் விதவிதமாய், வீடு வந்து சேரும்வரை வந்து கொண்டே இருந்தாலும், நான் சொன்ன பதில் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

"எனக்குத் தெரியலையேடா...!".

'எப்படித்தான் இவனுக்கு இத்தனை சந்தேகங்கள் வருது... தெரியலையே?' என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறக்கையில் அவன் கேட்டான்.

"ஏம்மா... நான் ரொம்ப கேள்வி கேட்டு உன்னைத் தொந்தரவு பண்ணறேனா..?".

டேனி கேட்டதும் சந்தோஷமாய்,"இல்லைடா கண்ணா...!" என்று சொன்னவள் தொடர்ந்து சொன்னேன்.

"நீ நிறைய கேள்விகள் கேட்டாத்தான், நிறையா கத்துக்க முடியும்...!".
.
.
.

Wednesday, December 8, 2010

ரத்த சரித்திரம்

டேனி படிக்கும் வகுப்பில் உயிரியலில் ரத்த ஓட்டத்தைப் பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் அறிவியல் ஆசிரியர்.

மிகத் தெளிவாக பாடம் நடத்தும் ஆசிரியர் என்பதால், எல்லோருக்கும் புரியும்படியான எளிமையான உதாரணத்தைக் கையில் எடுத்தார் அவர்.

"மாணவர்களே... நம் எல்லோருக்கும் நடக்கும் ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். இப்போது நான் தலைகீழாய் நிற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அப்போது, ரத்தமானது என் தலையை நோக்கி அதிவேகமாய்ப் பாய்கிறது. அதனால், எனது முகம் இன்னும் அதிகமாய் சிவக்கிறது... இல்லையா..?".

மாணவர்கள் எல்லோரும் கோரசாய், "ஆமாம் சார்..!" என்றார்கள்.

ஆசிரியர் அடுத்துக் கேட்டார்.

"அப்படியானால்... நான் நேராய் நிற்கும்போது, அதே ரத்தமானது, ஏன் என் கால்களில் அவ்வாறு பாய்வதில்லை..? ஏன், என் கால்கள் சிவப்பதில்லை..?".

எல்லா மாணவர்களும் சற்றே யோசனையில் அமைதியாய் இருக்கும்போது, டேனியின் பளிச்சென்று கேட்டது.

"ஏனென்றால், உங்களுடைய கால் காலியாய் இல்லை..!".
.
.
.

Tuesday, December 7, 2010

நம்ம சிங்

ரயில்வே ஸ்டேஷனில் யாருக்காகவோ காத்திருந்தார் கிட்டத்தட்ட எழுபது வயதுக்கும் மேலான, மிகவும் கிராமத்து விவசாயியான நம்ம சிங்.

பக்கத்தில் இருந்தவர் நம்ம சிங்கின் முகத்தில் தெரிந்த பரபரப்பைப் பார்த்து ஆர்வத்துடன் கேட்டார்.

"யாருக்காகவோ வெயிட் பண்ணறீங்க போலிருக்கே..?"

நம்ம சிங் முகத்தில் ஆர்வம் சற்றும் குறையாமல் சொன்னார்.

"ஆமா சார்.. சரியா சொன்னீங்க. இந்தியா சுதந்திரத்தப்ப ரெண்டாப் பிரிஞ்சு பாகிஸ்தான் ஆனது. அப்ப, அந்த நாட்டோட தங்கிட்ட என் பெரியப்பா பையன் இன்னிக்கு இந்தியாவுக்கு ட்ரெயின்ல வர்றான். அவனுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்...!".

பக்கத்தில் இருந்தவர் இப்போது கேட்டார்.

"இங்கிருந்து போனப்ப அவருக்கு என்ன வயசு இருக்கும்..?".

நம்ம சிங் சொன்னார்.

"ஒரு நாலு இல்லாட்டி அஞ்சு வயசு இருக்கும் சார்..!".

"அதுக்கப்புறம் எப்போதாவது அவரப் பாத்து இருக்கீங்களா..?".

நம்ம சிங் சோகமாய்ச் சொன்னார்.

"எங்கே.. யாரு விட்டா.? எழுதப்படிக்கத் தெரியதனால இதுவரைக்கும் ஒரு லெட்டர் போக்குவரத்துகூடக் கிடையாது. ஒரு ஃபோட்டோ கீட்டோ பார்த்தது கிடையாது. ஏதோ இப்ப ரெண்டு நாட்டுக்கு இடையில ரயில் ஓடறதால இப்பவாவது பாக்க முடிஞ்சது..."

கிட்டத்தட்ட அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கப்போகும் சகோதரர்கள்... நெகிழ்ச்சியுடன் பக்கத்தில் இருந்தவர் கேட்டார்.

"உங்களால இப்ப அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா..?".

நம்ம சிங் பரிதாபமாய்ச் சொன்னார்.

"அதெப்படிங்க முடியும்.? அவனை நான் கடைசியா அறுபது எழுவது வருஷத்துக்கு முன்னால சின்னப்பையனா இருந்தப்ப பார்த்தது..! இப்ப என்ன வயசாச்சோ.. எவ்வளோ பெருசா இருக்கானோ..!".

அதே சோகத்துடன் பக்கத்திலிருந்தவர் கேட்டார்.

"அப்ப.. அவராவது உங்களை கண்டுபுடிச்சுடுவாரா..?".

பக்கத்தில் இருந்தவர் கேட்டதும் நம்ம சிங் உற்சாகமாய் பதில் சொன்னார்.

"கண்டிப்பா அவன் என்னைக் கண்டுபுடிச்சுடுவான் சார். ஏன்னா, நான் எங்கேயும் போகலியே... இங்கேயேதான இருக்கேன்..!".
.
.
.

Saturday, December 4, 2010

மிட்டாய்க் கடவுள்

கோவில் ஒன்றில் சிறுவர்களுக்காக ஏற்பாடாகியிருந்த, அந்த ஒருநாள் நிகழ்ச்சியின் மதிய உணவு நேரம்.


தனக்குத் தானே பறிமாறிக் கொள்ளும் முறையில் அமைந்திருந்தது அந்த உணவு வேளை.

குழந்தைகளுக்கு சாப்பாடு முடிந்து வரிசையாய் வெளியேறும் இடத்தில், இரண்டு பெரிய தட்டுகளில் முதல் தட்டில் நிறைய பிஸ்கெட்டுகள் இருந்தன.

குழந்தைகள் அதை நெருங்கும்போது, ஒரு பகதர் தட்டின் அருகே இவ்வாறு எழுதி வைத்திருப்பதைக் கவனித்தார்கள்.

"கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஆளுக்கு ஒன்று மட்டும் எடுக்கவும்..!".

அந்த வரிசை இன்னும் கொஞ்சம் நகர்ந்ததும் அடுத்த தட்டில் நிறைய சாக்லேட்டுகள் இருப்பது தெரிந்தது.

முன்னால் இருந்த ஒரு சிறுவன், 'சாக்லெட்டில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாமா... இல்லை இரண்டை எடுக்கலாமா...?' என்று குழப்பத்துடன் கையை நீட்டியபோது, அவனுக்குப் பின்னால் நின்றிருந்த டேனி சொன்னான்.

"டேய் ரமேஷ்... எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்க. கடவுள் பிஸ்கெட்டைத்தான் கவனிச்சுக்கிட்டு இருக்காரு..!".
.
.
.

Friday, December 3, 2010

தண்டச்சோறு தில்லுதுர

பொருளாதார வீழ்ச்சி தில்லுதுரயையும் பாதித்திருந்த காலம் அது.

தில்லுதுர தன் பிசினஸையும் கவனிக்காமல், வேலைக்கும் போகாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்.

மனைவியின் குடும்பம் மொத்தமுமே, தில்லுதுரயின் குடும்பத்தை சப்போர்ட் செய்து கொண்டிருந்தது.

யார் யாரோ எவ்வளவோ சொல்லியும், தில்லுதுர அசைவதாய் இல்லை.

வீட்டுச் செலவைச் சமாளிக்க, பொருளாதாரத் தேவைகளைச் சாமாளிக்க பணமும் இன்னபிறவும் தில்லுதுரயின் மாமியார் வீட்டிலிருந்தே வந்து கொண்டிருந்தது.

அன்றும் அப்படித்தான், அந்த மாதச் செலவுக்காக அப்பா அனுப்பிய பணத்தைப் பெற்றுக் கொண்ட மனைவி, தில்லுதுரயிடம் வருத்தத்துடன் சொன்னாள்.

"எனக்கே கேவலமாய் இருக்கு. என் அப்பா சாப்பாட்டுக்குப் பணம் அனுப்பறாரு. அண்ணன் துணிமணிகள் எடுத்துக் கொடுத்துடறான். தம்பி காய்கறி பூராவும் அனுப்பிடறான். இதெல்லாம் போக, என்னோட ஒரு மாமாவும் மளிகைச் சாமானுக்காக பணம் அனுப்பறாரு. இதெல்லாம் வெளியே சொல்லக் கூட எனக்கு வெட்கமாய் இருக்கு...!"

கேட்டுக் கொண்டிருந்த தில்லுதுர அதைவிட வருத்தத்துடன் சொன்னார்.

"ஆமாம், எனக்கும் வெட்கமாத்தான் இருக்கு. உன்னுடைய ஒரு மாமாதான் பணம் அனுப்ப்றாரு... இன்னொரு மாமா எதுவுமே செய்யறதில்லியே...!".
.
.
.

Wednesday, December 1, 2010

அவ்வளவுக்கவ்வளவு

துறவியிடம் அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

"ஸ்வாமி... நானும் கடவுளும் ஒன்றிணைவது என்பது எப்போது நடக்கும்..? எனக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் தூரம் எவ்வளவு..? "

துறவி சொன்னார்.

"நீ கடவுளுடன் இணைவதை எவ்வளவுக்கெவ்வளவு கடினம் என்று நினைக்கிறாயோ... அவ்வளவுக்கவ்வளவு உனக்கும் கடவுளுக்கும் தூரம் அதிகமாகும்..?".

அவன் தொடர்ந்து கேட்டான்.

"ஸ்வாமி... நான் அந்த தூரத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்..?"

"நீ அந்த இடைப்பட்ட தூரத்தை இல்லை என்று கருதுவாயானால், அது இல்லாமல் போய்விடும்...".

அவன் குழப்பத்துடன் மீண்டும் கேட்டான்.

"அவ்வாறு கருதினால், நானும் கடவுளும் ஒன்று என்றாகிவிட முடியுமா..?".

துறவி சிரித்தபடி சொன்னார்.

"அப்போதும்கூட நீயும் கடவுளும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".

அவன் மேலும் குழம்பியவனாய்க் கேட்டான்.

"அதெப்படி ஸ்வாமி முடியும்...?".

துறவி தனது புன்னகை மாறாமல் பதில் சொன்னார்.

"அது அப்படித்தான். எப்படியென்றால், இதோ நீ பார்க்கும் கடலும் அதன் அலையும், சூரியனும் அதன் கதிரும், ஒரு பாடகனும் அவனது பாடலும் ஒன்றல்ல... அதே சமயம் வெவ்வேறும் அல்ல...!".
.
.
.