Friday, February 8, 2013

டேனி என்றொரு ஞானி




அவரோட அக்கா கோடை விடுமுறைக்கு குழந்தைகளை கூட்டிக் கொண்டு வீட்டில் விட்டிருந்த நேரம்.

குழந்தைகளா அதுக.?

எந்நேரமும் எதையாவது உடைச்சுகிட்டே தான் இருக்கும்.

ஆனாலும், எப்போதும் தனியாகவே எங்களோடு இருக்கும் டேனிக்கு, இவர்கள் வருகை மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதால் அவர்களை நான் சகித்துக் கொண்டு போய்விடுவேன்.

பத்தாதுக்கு இவரோட அக்கா குழந்தைக வேற.!

ஆனாலும், பொதுவாய் நான் டீச்சர் என்பதாலோ என்னவோ, அந்தக் குழந்தைகள் தவறு செய்யும் போது கத்தி விடுவதும் என் வழக்கமாய் இருந்து வந்தது.

அன்றும் இப்படித்தான்.

சாயங்காலம் வேலை முடித்து வீட்டுக்குள் நுழையும் போதே டீப்பாய் உடைந்திருப்பது கண்ணில் பட்டது.

அதற்கொரு பாட்டம் திட்டி முடித்து விட்டு...

ராத்திரி சாப்பாட்டுக்கு உட்கார்ந்திருந்த போது, டேனிக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவரோட அக்கா பையன் உப்பு வைத்திருந்த பீங்கான் கிண்ணத்தை டைனிங் டேபிளில் இருந்து கீழே தள்ளி உடைத்து விட... கோபத்துடன் அவனைத் திட்டிக் கொண்டே அதைப் பூராவும் சுத்தம் செய்து முடித்தேன்.

அடுத்த சில நிமிடத்தில் அவரோட அக்கா பெண் சட்னியைக் கீழே சாய்த்துவிட, அவர் 'திட்டாதே திட்டாதே...' என்று கண்ணைக் காட்டுவதையும் பொருட்படுத்தாமல், எனக்கு வந்த கோபத்தில் கன்னாபின்னாவென்று அந்தக் குழந்தைகளைத் திட்டிவிட்டு, அடுத்த சட்னியை தயார் செய்ய சமையல் அறையில் நுழைந்தேன்.

கூடவே அந்தக் குழந்தைகளும் நான் திட்டுவதை பொருட்படுத்தாமல் எனக்கு உதவ ஓடிவர... அதை கவனிக்காத மாதிரி காட்டிக் கொண்டு, கோபத்துடன் வேகமாய் எடுத்த எண்ணெய் பாட்டில் கை வழுக்கி தரையில் சிலீரென்ற சத்ததுடன் விழுந்து உடைந்தது.

அந்தக் குழந்தகள் ரெண்டும் அதைப் பார்த்து அதிர்ச்சியுடன் விலகி நிற்க, இத்தனை நேரம் திட்டிய குழந்தைகள் முன்னால் இப்போது தவறு செய்த குற்ற உணர்வுடன் நான் நிற்க... டைனிங் ஹாலில் அவர் டேனியிடம் சொல்வது கேட்டது.

"ஐயையோ தொலைஞ்சாய்ங்க... இப்ப யாரு மாட்டினா தெரியலையே.!".

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த டேனி சொன்னான்.

"இப்ப... இதை உடைச்சது அவங்க ரெண்டு பேருமே இல்ல.! அம்மா...!".

இவன் எப்படி டேனி அங்க உட்கார்ந்த இடத்திலிருந்தே இங்கே நடப்பதை  சொல்கிறான் என்ற ஆச்சர்யம் மனதில் ஓடுவதற்குள், அவர் டேனியிடம் கேட்டார்.

"அதெப்படிடா... அம்மா உடைச்சாங்கனு சொல்ற.?".

அவர் கேட்டதும் டேனி அமைதியாய் தெளிவாய் பதில் சொன்னான்.

"இவ்வளவு நேரமாகியும் அம்மா யாரையுமே திட்டலியே.!".
.
.
.