Friday, April 9, 2010

கோயம்புத்தூர் 2 சொர்க்கம்

கோவையில் ஒரு பள்ளியில் ஆசிரியையாய் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது நடந்தது இது.


என் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்னெறிக் கதைகள் சொல்லும் வகுப்பு அது.

குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க, ஒரு கேள்வி பதில் விளையாட்டைத் தொடங்கினேன்.

முதலில் அமர்ந்திருந்த மாணவனை அழைத்தேன்

"முத்து... நீ சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறாயா..?"

அவன் பதில் சொன்னான், "ஆமாம் டீச்சர்...!"

"சரி... போய் சுவற்றைப் பார்த்து நில்லு...!"

அவன் அதே போல் போய் நின்றான்.

அடுத்தவனை அழைத்தேன்,"சங்கர்... நீ சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறாயா..?"

அவன் பதில் சொன்னான், "ஆமாம் டீச்சர்...!"

"சரி... போய் சுவற்றைப் பார்த்து நில்லு...!"

அவனும் அதே போல் போய் நின்றான்.

மூன்றாவது சிறுவனை அழைத்தேன், "ரமேஷ்...நீ சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறாயா..?"

"இல்லை டீச்சர்...!"

எனக்கோ ஆச்சர்யமாய் ஆகிவிட்டது.

"என்னது... நீ இறந்தால் சொர்க்கத்திற்குப் போக விரும்பவில்லையா...?".

அவன் என்னைவிட வியப்புடன் பதில் சொன்னான்.

"இறந்த பிறகா...? இறந்த பிறகென்றால் சரி... நான் சொர்க்கத்திற்குப் போவேன். நான்கூட இப்பவே சொர்க்கத்திற்கு போக க்ரூப்பாய் நிற்கச் சொல்லுகிறீர்களோ என்று பயந்து விட்டேன்...!" என்றான்.
.
.
.

No comments:

Post a Comment