Wednesday, April 7, 2010

தீபாவளி சரவெடி


கண்ணாயிரம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் கணேஷை போனில் அழைத்துச் சொன்னார்.

"கணேஷா... நான் இதைச் சொல்லறதுக்கு ரொம்ப வருத்தப்படறேன். ஆனா... சொல்லாம இருக்க முடியாது. நானும் உன் அம்மாவும் டைவர்ஸ் பண்ணிக்கப் போறோம். நாப்பத்தஞ்சு வருசத் துக்கம் முடியப்போகுது...!".

கணேஷ் ஒரு கணம் அரண்டு போனான்.

"என்னது டைவர்ஸா... என்ன பேசறீங்க...? நாளைக்கு நாங்க யாரும் வெளிய தலைகாட்ட வேண்டாமா..?".

அப்பா நிதானமாய் பதிலளித்தார்.

"எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வரல. அவளப் பாத்தாலே எரிச்சலா இருக்கு... இதப் பத்திப் பேசக்கூட எரிச்சலாத்தான் இருக்கு. என்ன பண்ணறது..? லண்டன்ல இருக்கற உன் தங்கச்சிக்கிட்டயும் சொல்லிடு. அவளும் தெரிஞ்சுக்கட்டும். வச்சிடட்டா..?"என்று போனை வைத்தார்.

மகன் கணேஷ் உடனே தங்கை துளசிக்குப் போன் செய்து விஷயத்தை சொல்ல அவள் போன் தன் அப்பாவிடம் அலறினாள்.

"அப்பா... நீ எந்தக் காரணம் அம்மாவை டைவர்ஸ் செய்யக் கூடாது. எதுவும் அம்மாகிட்ட பேசக்கூடக் கூடாது. நான் கணேஷை அமெரிக்காவிலிருந்து உடனே கிளம்பிவரச் சொல்றேன். எங்க வீட்லருந்து அவர் வந்ததும் சொல்லி நானும் அவரும் கிளம்பி வர்றோம்... புரிஞ்சுதா..?" என்று சொல்லி போனை வைத்தாள்.

கண்ணாயிரமும் போனை வைத்துவிட்டு உள்ளே திரும்பி,"அடியே இவளே...!" என்று அழைத்தவர் சொன்னார்.

" வருஷா வருஷம் தனியாவே தீபாவளி கொண்டாட வேண்டியிருக்குனு புலம்பிக்கிடே இருப்பியே... இந்த வருஷம் தீபாவளிக்கு உன் மகனும் மகளும்  நம்ம வீட்டுக்கு குடும்பத்தோட வர்றாங்க.அதுவும் அவங்க செலவுலயே...!".
.
.
.

1 comment:

வெங்கட்ராமன் said...

என்ன ஒரு வில்லத்தனம்.

Post a Comment