Tuesday, April 13, 2010

அது ஒரு கார்காலம்



சந்தோஷுக்கு அன்று அளவுக்கதிக சந்தோசம்.

அலுவலகத்தில் அவனது பதவி உயர்வுக்கு பார்ட்டி கொடுத்ததில் அவனுக்கே கொஞ்சம் ஓவராய்ப் போய்விட்டது.

மெல்லிய தள்ளாட்டத்துடன் காரை எடுத்தவன் காரை மெதுவாய் ஓட்ட ஆரம்பித்தான்.

அந்தப் பின்னிரவில் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாதது கொஞ்சம் வசதியாய் இருந்தது.

ஆனால், வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே போதை மெல்ல ஏறி மெல்லப் பறப்பது போலத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

எல்லாம் கொஞ்ச நேரம்தான். வண்டி அலைபாய்வது தெரிந்து 'ஹைவே பேட்ரோல் போலிஸ்' காரில் விளக்குகள் எரிய வந்து அவனைச் சாலையில் நிறுத்திவிட்டது.

"இறங்கு...!".

போலிஸ் சொன்னதும் சந்தோஷ் இறங்கினான்.

"ஊது...!".

 ஸ்வாசத்தைச் செக் செய்யும் மெஷினை ஒரு போலிஸ்காரர் நீட்டினார்.

சந்தோஷ் ஊதுவதற்கு முன்... அந்தப் பக்கமாய் ஒரு திருடன் சாலையைத் தொட்ட ஒற்றையடிப் பாதியில் இறங்கி ஓட, ஊர் மக்கள் அவனைத் துரத்துவதைப் பார்த்த அந்தப் போலிஸ்காரர்கள்...

சந்தோஷிடம் "நாங்கள் வரும் வரை எக்காரணம் கொண்டும் இந்த இடத்தை விட்டு அசையக் கூடாது...!" என்று சொல்லி விட்டுத் திருடனைத் துரத்திக் கொண்டு ஒடினர்.

சந்தோஷ் ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் என்று வெயிட் பண்ணிப் பார்த்து விட்டு, அவர்கள் வராமல் போகவே டக்கென்று காரை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி வந்துவிட்டான்.

காரை செட்டில் விட்டுவிட்டு கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்த மனைவியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, "போலிஸ் வந்தால்... நான் தூங்குகிறேன், எனக்கு சிக்குன்குனியா என்றும் ஒரு வாரமாய் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறேன் என்றும் சொல்லி அனுப்பிவிடு... நாளை பார்த்துக் கொள்ளலாம்...!" என்று சொல்லிவிட்டுப் போய்ப் படுத்துக் கொண்டான்.

சரியாய் ஒரு மணி நேரம் கழித்து போலிஸ் வந்து கதவைத் தட்டியது.

அது சந்தோஷின் வீடுதானா என்பதை அவர்கள் விசாரித்துக் கொண்டார்கள்.

சந்தோஷின் மனைவியும் அவன் சொல்லியபடி 'அவருக்கு ஒரு வாரமாய் சிக்குன்குனியா... நடக்க முடியாமல் படுத்திருக்கிறார்...!' என்று கூறி அவர்களை அனுப்பப் பார்த்தாள்.

அதற்கு சந்தோஷின் 'டிரைவிங் லைசன்ஸை'க் காட்டிய போலிஸ் ஆபிஸர்கள்... அவனது காரைப் பார்க்க முடியுமா என்று கேட்டார்கள்.

அவள்,"அவர் காரை நீங்கள் ஏன் பார்க்கவேண்டும்..?" என்று கேட்டபடியே அவர்களை அழைத்துக் கொண்டு போய் கார் செட்டின் கதவைத் திறந்தாள்.

செட்டின் உள்ளே...

 அந்த போலிஸ் கார் இன்னும் மேலே விளக்குகள் ஒளிர நின்று கொண்டிருந்தது.
.
.
.

No comments:

Post a Comment