Friday, April 16, 2010
ஜில்லுனு ஒரு சாப்பாடு...
நாராயணன் ஒரு மேடைப் பேச்சாளர்.
அவர் இறந்ததும் சொர்க்கத்துக்குப் போனார்.
சித்திரகுப்தன் அவரை அழைத்து, "தம்பி... நீ ரொம்ப நல்லவன்.அதனால உனக்கு சொர்ர்க்கம் கிடச்சிருக்கு. ஆனாலும் உனக்கு இங்கே ஒரு தண்டனை இருக்கு. அதுக்கு ஒத்துக்கிட்டீனா இங்கேயே எவ்வளவு வருசம் வேணும்னாலும் இருக்கலாம். என்ன சொல்லற..?".
நாராயணன் கேட்டார்.
"சொர்க்கத்துல இருக்கறதுன்னா என்ன தண்டனைனாலும் சரி. என்ன தண்டனைனு மட்டும் சொல்லுங்க போதும்..!".
சித்திரகுப்தன் பதில் சொன்னார்.
" நீ பூலோகத்துலயே வேண்டிய அளவு பேசிட்டதால இங்கே இருக்கற வரைக்கும் என் அனுமதி இல்லாம ஒரு வார்த்தைகூட பேசக் கூடாது. நான் எப்ப எவ்வளவு பேசலாம்னு சொல்றனோ... அப்ப அவ்வளவு பேசலாம். இது பிடிக்கலைனா எப்ப வேணும்னாலும் கிளம்பலாம். என்ன சொல்ற...?"
பேச்சாளனை பேசக்கூடாது என்பது எவ்வளவு பெரிய கொடுமை.
ஆனாலும் நாராயணன் அதை சொர்க்கம் என்பதற்காக ஒத்துக் கொண்டார்.
அதன் பிறகு ஐந்து வருடங்கள்... நாராயணன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் சொர்க்கத்தில் வாழ்ந்தார்.
ஐந்தாவது வருட முடிவில் சித்திரகுப்தன் அவர் முன் தோன்றி, "தம்பி... நீ சொர்க்கத்திற்கு வந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. நீ இப்போது நாலு வார்த்தைகள் பேசலாம்...!".
நாராயணன் ரொம்ப யோசித்து, "மெத்தை கல்லைப் போல் இருக்கிறது...!" என்றார்.
அதற்கு சித்திரகுப்தன்,"உடனே, இதைச் சரி செய்யச் சொல்கிறேன்...!" என்று மறைந்தார்.
அதற்கு அப்புறம் மீண்டும் ஐந்து வருடங்கள் ஓடி விட்டது.
திரும்ப சித்திரகுப்தன் வந்தார்.
"தம்பி... நீ சொர்க்கத்திற்கு வந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. நீ இப்போது மறுபடி நாலு வார்த்தைகள் பேசலாம்...!".
நாராயணன் முன்பைவிட ரொம்ப யோசித்து, "சாப்பாடு ரொம்ப ஜில்லுனு இருக்கு...!" என்றார்.
அதற்கு சித்திரகுப்தன்,"உடனே, இதைச் சரி செய்யச் சொல்கிறேன்...!' என்று மறைந்தார்.
இப்படியே நாராயணன் சொர்க்கத்திற்கு வந்து பதினைந்தாவது வருடமும் முடிந்துவிட்டது.
இதுவரை எட்டு வார்த்தைகள்தான் பேசியிருக்கிறார். என்ன கொடுமை இது..? இதற்கு நரகமே மேலாய் இருக்கும் போலிருக்கிறதே...!
நாராயணன் மிகவும் வெறுத்துப் போயிருந்தார்.
இந்தமுறை சித்திரகுப்தன் வந்து திரும்பவும் வந்து, "தம்பி... நீ சொர்க்கத்திற்கு வந்து பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன. நீ இப்போது மீண்டும் நாலு வார்த்தைகள் பேசலாம்...!".
வெறுத்துப் போயிருந்த நாராயணனோ கோபமாய், "நான் சொர்க்கத்தை விட்டுக் கிளம்புகிறேன்...!" என்றார்.
அதற்கு சித்திரகுப்தன், "ஆமாம்...ஆமாம்... அதுதான் நல்லது. நானும் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்.. நீ விடாமல் சொர்க்கத்தை பற்றிக் குறை கூறிக் கொண்டே இருக்கிறாய்... கிளம்பு கிளம்பு...!" என்றார்.
.
.
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment