Wednesday, July 28, 2010

பக்தன்

குரு ஒருவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.
அதுசமயம் பக்தன் ஒருவன் அவரைக் காண வந்தான்.
அவர் அமர்ந்திருந்த இடம் ஆற்றங்கரையின் அருகிலிருந்த மிக உயரமான பாறையாயிருந்தது.
அந்தப் பாறையின் கீழே அந்த ஆறு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது.
வந்த பக்தன் அவர் காலடியில் இரண்டு வைரக் கற்களை வைத்து வணங்கினான்.
அவன் வாழ்நாளெல்லாம் அலைந்து சேர்த்த செல்வம் அது.
குரு கண்விழிக்கும்வரை அங்கேயே அமைதியாக காத்து நின்றிருந்தான்.
மெல்லக் கண் விழித்த குரு அவனைப் பார்த்தார்.
அவன் தன் காலடியில் வைத்திருந்த வைரக் கற்களையும் பார்த்தார்.
அவர் அதில் ஒன்றைக் கையில் எடுத்துப் பார்த்தபோது அது கை நழுவி ஆற்றின் மையத்தில் போய் விழுந்தது..
பதறிப்போன பக்தன் ஓடிச் சென்று நதியில் குதித்தான்.
இங்கும் அங்கும் மூழ்கி மூழ்கி அதைத் தேடினான்.
நெடுநேரம் தேடிப் போராடிக் களைத்துபோய் மேலேறி வந்தவன், கண்மூடித் தியானத்திலிருந்த குருவை எழுப்பி,"வைரம் எந்த இடத்தில் விழுந்தது என்று சரியாகச் சொல்ல முடியுமா...?" என்று கேட்டான்.
குரு மற்றொரு வைரத்தை எடுத்து நடு ஆற்றில் எறிந்துவிட்டு,"அதோ அங்கேதான்...!" என்று சொல்லிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.
.
.
.

Saturday, July 24, 2010

ஐம்பது பைசா


டேனி அன்றைய தினத்தை எங்களுக்கு திகிலுடன் தான் துவக்கினான்.


அவன் அப்பா ட்ரஸ் மாற்றும்போது கீழே விழுந்த ஒரு ஐம்பது பைசா நாணயத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

அவர் பதறி, "துப்புடா... துப்புடா...!!" என்று கத்திக்கொண்டே வருவதற்குள், இப்போதுதான் வட்டமாய் வாட்டமாய்ச் சின்னதாய் இருக்கிறதே... அந்த ஐம்பது பைசாவை அவன் விழுங்கியே விட்டான்.

அவர் மேலும் பதறி,"முழுங்கிட்டான்.. முழுங்கிட்டான்.." என்று வீட்டையே ரணகளப் படுத்திவிட்டார்.

"கொஞ்சம் பொறுமையா இருங்க.." என்ற நான் டாகடருக்குப் போன் செய்தேன்.

டாக்டர் விக்குகிறானா, மூச்சுத் திணறுகிறதா என்பதெல்லாம் விசாரித்துவிட்டு, 'பயப்பட ஒண்ணுமில்ல... பதினோரு மணிக்கு ஹாஸ்பிடல் வந்திடுங்க...!' என்று போனை வைத்துவிட்டார்.

அதற்குள் அவர் ஊரிலிருக்கும் அவருடைய அம்மாவிற்குப் போன் செய்து விசாரித்து விட்டார்.

அவருடைய அம்மாவும் பதறாமல், 'கொஞ்ச நாள் விளக்கெண்ணெயும் பூவன் பழமுமாகக் கொடுத்தால் தன்னால வந்துடப் போகுது...!' என்று சொன்னதும்தான் சற்றே ஆசுவாசமானார்.

ஆனால், இதற்கிடையில் இவர் பண்ணிய ஆர்ப்பாட்டத்தில் மிரண்டு அழ ஆரம்பித்த டேனியோ இன்னும் நிறுத்தாமல் அழுதுகொண்டிருந்தான்.

எவ்வளவு சொல்லியும் கொஞ்சியும் அவன் விடாமல் அழுது கொண்டிருக்கவே டேனியின் அப்பா அவனுடைய கவனத்தைத் திசைதிருப்ப ஒரு மேஜிக் செய்வதாய் ஆரம்பித்தார்.

பாக்கெட்டில் இருந்து டேனி விழுங்கியதைப் போலவே ஒரு சிறிய புது ஐம்பது பைசாவை எடுத்து வைத்துக் கொண்டு டேனியைக் கூப்பிட்டார்.

"டேனி, இங்க பாரு... அப்பா இப்ப ஒரு மேஜிக் பண்ணுவேனாம். டேனி அழுகாமப் பார்ப்பானாம்...! இப்ப, அப்பா டேனி முழுங்குன காசை எப்படி எடுக்கப் போறேன் பாரு...!" என்றவர், அந்த இன்னொரு ஐம்பது பைசாவை வைத்திருந்த கையை அவன் வயிற்றருகில் கொண்டு சென்று,"ஜீபூம்பா..." என்று சொல்லி கையை ஒரு ஆட்டு ஆட்டி, மேலே தூக்கி... அவன் முகத்தருகே கொண்டு சென்று அந்த ஐம்பது பைசாவை டேனியிடம் காட்டினார்.

அவர் மேஜிக் செய்ய ஆரம்பித்ததுமே அழுகை குறைந்த டேனி, ஆச்சர்யமும் ஆர்வமுமாய் அவன் அப்பா கையிலிருந்த புது ஐம்பது பைசாவையே பார்த்துக் கொண்டிருந்தவன் டப்பென்று அந்த ஐம்பது பைசாவையும் பிடுங்கி வாயில் போட்டு சடாரென்று விழுங்கிவிட்டு சொன்னான்.

"எங்கே இன்னொருவாட்டி எடு பார்போம்...!".
.
.
.

Friday, July 23, 2010

வியாபாரம்

சின்னப்பன் செட்டி என சென்னையில் அழைக்கப்படும் சின்னப்பனின் தொழில் ஹோல்சேல் வியாபாரம்.
'செட்டி அன் கோ' என்றால் தெரியாதவர் சென்னைக்குப் புதுசு என்று அர்த்தம்.
அவர் குடும்பம் பரம்பரையாய் வியாபாரத்தில் பெயர் பெற்றது.
கடல் கடப்பது மதவிரோதமாய் இருந்த காலத்திலேயே கடல்கடந்து வியாபாரம் செய்தவர்கள் அவர்கள்.
ராஜாக்கள் காலத்திலும் வெள்ளைக்காரன் காலத்திலும் விடாமல் வியாபாரம் செய்து பொருளீட்டியது அவர் வம்சம்.
எல்லாம் சின்னப்பன் காலத்தில் தொலைந்துவிடும் போலிருக்கிறது.
சின்னப்பனுக்கு சமீபமாய் வியாபாரத்தில் பயங்கர நஷ்டம்.
நஷ்டத்தைச் சரிக்கட்டப்போய் இன்னொரு நஷ்டம்... அதைச் சரிக்கட்ட இன்னொரு நஷ்டம்... என வளர்ந்து வளர்ந்து மொத்தத்தில் மூழ்கிப்போகும் நிலைக்கு வந்துவிட்டார்.
எல்லாம் கணக்குப் பார்த்ததில் மிஞ்சியது ஒன்றுமில்லை.
வீட்டை விற்று, காட்டை விற்று கடைசியில் போன வாரம் கார் வரை விற்றாகிவிட்டது.
காரை விற்றதிலிருந்து, தாத்தா உபயோகப்படுத்திய ஒரு வெள்ளைக்காரன் காலத்து தகர டப்பா காரைத்தான் உபயோகப்படுத்தி வருகிறார்.
அதுவோ பெட்ரோலைக் குடித்துத் தள்ளுகிறது.
அதன் சத்தமோ ரோட்டில் சின்னப்பனின் மானத்தை வாங்கிவிடுகிறது.
இத்தனை காலம் சேர்த்த மரியாதை போயாச்சு. மானம் போயாச்சு. பணம் போயாச்சு.
சின்னப்பனிடம் இனிப் போவதற்கு ஒன்றுமில்லை.
இருந்த காசையும் கார் பெட்ரோலாய்க் காலி பண்ணிவிட இப்போது ஊருக்குப் போவதற்குக்கூடப் பைசா இல்லை.
ராத்திரிப்பூராவும் யோசித்தார்.
இந்தக்காரை வாங்குபவன் பேரீச்சம்பழம் தராமல் ஒரு ரெண்டாயிரம் ரூபாய் தந்தால் சத்தம் காட்டமல் உறுக்கு ஓடிவிடலாம்.
ஒரு இருபதாயிரம் தந்தால் ஊரில் ஒரு பொட்டிக்கடை போட்டு 'ஐயா வணக்கம்' என்று முதலில் இருந்து ஒருமுறை விளையாடிப் பார்க்கலாம்.
யோசித்துக் கொண்டே உறங்கிவிட்டார்.
காலையில் வாசலில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும்போது தெருவில் வாக்கிங் போய்க்கொண்டிருந்த ஒருத்தர் வந்தார்.
"சார்... நான் பக்கத்துத் தெருவில்தான் இருக்கிறேன். ராஜேஸ்வரி மில்லோட ஓனர். பழைய வின்டேஜ் கார்கள் சேகரிப்பது என்னோட ஹாபி. நீங்க இந்தப் பழைய ஆஸ்டின் காரை விக்கறதா இருந்தாக் கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்...!".
சின்னப்பனுக்குள் ஒரு சந்தோசம் வந்து உட்கார்ந்தது.
'இந்த காரை வாங்கறதுக்குக் கூட ஊருக்குள்ள பைத்தியங்கள் இருக்குதா என்ன...?' என்று யோசித்தபடியே கேட்டார்.
"என்ன விலை தருவீங்க...?".
வந்தவர் லேசாய் இழுத்தபடி சொன்னார்.
"ஒரு ஐம்பதாயிரம்னா முடிச்சுடலாம்...!".
சின்னப்பன் கொஞ்சம்கூட யோசிக்காமல் சடாரென்று சொன்னார்.
"சார் ஒரே ரேட்டு... ரெண்டு லட்சம்னா நாம மேல பேசலாம்
...!".

Wednesday, July 21, 2010

கடவுளின் பிறந்தநாள்

துறவி ஒருவருக்கு இறை வழிபாட்டில் மிகுந்த பிரியம்.
ஆனால், அவருக்கு எந்த மார்க்கத்தில் கும்பிட்டால் இறைவனை அடையலாம் என்று குழப்பம்.
ஒருநாள் இரவு... இதே எண்ணத்துடன் தூங்கும்போது அவர் ஒரு கனவு கண்டார்.
கனவில் அவர் தேவலோகத்தில் இருக்கிறார்.
அங்கே வண்ண விளக்குகளும் வான வேடிக்கைகளுமாய் ஒரே குதூகலமாய் இருக்கிறது தேவலோகம்.
துறவி கேட்டார்,"என்ன விசேஷம்...?"
அருகிலிருந்தவர் சந்தோசமாய் சொன்னார்,"தெரியாதா... இன்று கடவுளின் பிறந்தநாள்...!இன்னும் சற்று நேரத்தில் அவர் ஊர்வலம் வர இருக்கிறார்...!".
துறவிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்.
"கடவுளுக்கே பிறந்தநாளா...? சரி பார்ப்போம்...!".
நினைத்துக் கொண்டிருக்கும் போதே வாத்தியங்கள் ஒலிக்க, ஜெயகோஷங்கள் முழங்க ஒரு ஊர்வலம் வந்தது.
கூட்டம் மிகப் பெரிதாயிருக்க கூட்டத்தின் நடுவே அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஒருவர் மொட்டைத் தலையுடன் ஒருவர் வந்தார்.
"இவர்தான் கடவுளா...?" துறவி கேட்டார்.
"இல்லை.."என்ற அருகிலிருந்தவர் ஒரு பெரிய மதத்தின் பெயரைச் சொல்லி 'அதன் தலைவர் இவர்... உடன் வருபவர்கள் அவரைப் பின்பற்றுபவர்கள்...!" என்றார்.
சற்று நேரத்தில் இன்னொரு ஊர்வலம் வந்தது.
இப்போது ஒருவர் ஊர்வலத்தின் மத்தியில் ஒரு குதிரை மீது அமர்ந்து வந்தார்.
நீண்ட சடாமுடியும் பெரிய தாடியுமாயிருந்த அவரை வேறொரு மதத்தின் தலைவர் என்று துறவியிடம் சொன்னார் அருகிலிருந்தவர்.
அடுத்தடுத்து ஏராளமான ஊர்வலங்கள்.
சிலவற்றில் பத்திருபது பேர்கூட இல்லை.
சிலவற்றில் லட்சக் கணக்கானவர்கள் கூட்டம்.
நாள் முழுவதும் இது நடந்துகொண்டே இருந்தது.
எல்லாம் முடிந்து கடைசியில் ஊர்வலமில்லாமல் ஒரேயொரு குதிரை தள்ளாடியபடி மெல்ல நடந்து வந்தது.
அதன் மீது ஒரு வயதான நபர் அமர்ந்து இருந்தார். அவர் தோற்றமே பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.
துறவி கேட்டார்,"இவர் எந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவர்..?".
"என்னது..?" அருகிலிருந்தவர் குரல் ஆச்சர்யத்துடன் கீச்சிட்டது.
"இவரைத் தெரியவில்லையா...இவர்தான் கடவுள். இவருக்குத்தான் இன்று பிறந்தநாள்.!".
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார் துறவி. கனவு கலைந்தது.
அன்றோடு மார்க்கங்களைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு கடமைகளை அமைதியாய் கவனிக்க ஆரம்பித்தார் துறவி.

Monday, July 19, 2010

சொர்க்கத்தில் டாம் & ஜெர்ரி

இறந்ததும் சொர்க்கத்திற்கு வந்தது பூனை ஒன்று.
சித்திரகுப்தன் கேட்டார்.
"சொர்க்கத்திற்கு நல்வரவு பூனையே..!சொல் உனக்கு என்ன வசதிகள் வேண்டும்...?"
பூனை கேட்டது.
"அய்யா சீனா குனா... நான் பூமியில் வாழ்ந்த காலங்களில் நிறைய அவஸ்தைப் பட்டுவிட்டேன். மனிதர்களுக்கும் நாய்களுக்கும் பயந்தும் எலிகளைத் தேடி ஓடியும் ஓய்ந்து போய் விட்டேன். எனக்கு இப்போது தேவை ஒரு படுக்கை. அனந்தமாய் யார் தொந்தரவும் இல்லாமல் சுகமான தூக்கம்... அவ்வளவுதான்...!".
சித்திரகுப்தன் பூனை சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுவிட்டு, அது கேட்டதை ஏற்பாடு செய்துகொடுத்தார்.
பூனைக்குப் பின்னாலேயே எலிகள் வந்தன.
சித்திரகுப்தன் அவைகளிடம் கேட்டார், "உங்களுக்கு என்ன வேண்டும்...?".
எலிகள் சொல்லின,"பூமியில் பூனைகளுக்குப் பயந்து ஓடியோடியே எங்கள் வாழ்க்கை வீணாய்ப்போனது. இனி எங்களால் ஓட முடியாது... எங்களுக்கு ஆளுக்கொரு ரோலர் ஸ்கேட்டிங் வேண்டும்..!".
சித்திரகுப்தன் எலிகள் கேட்டது கிடைக்க ஏற்பாடு செய்தார்.
கொஞ்ச நாள் சென்றதும் சித்திரகுப்தன் மறுபடி ஒருவேலையாய் சொர்க்கத்திற்கு வந்தபோது முதலில் பூனையைச் சந்தித்தார்.
"என்ன பூனையே... எப்படி இருக்கிறது சொர்க்கம்...?"
பூனை சந்தோசமாய்ப் பதில் சொன்னது.
"சொர்க்கம்னா சொர்க்கம்தான் போங்க... பூமியில் எல்லாம் ஒரு எலிக்காக ஊரெல்லாம் ஓடுவோம். ஆனா இங்கே பாருங்க... எலியெல்லாம் காலில சக்கரம் கட்டிகிட்டு நம்ம உட்கார்ந்திருந்த இடத்துகே நேரா வந்து மாட்டுதுக...!".

Friday, July 16, 2010

சூரசம்ஹாரம்

சின்னத்தம்பி ஒரு பெரிய இறைச் சொற்பொழிவாளர்.
ஊர் ஊராகச் சென்று கடவுள்கள் குறித்தும் அவர்கள் திருவிளையாடல்கள் குறித்தும் சொற்பொழிவாற்றுவது என்பது திட்டம்.
அன்று, அப்படித்தான் பொள்ளாச்சியில் சுப்ரமணியர் கோவிலில் உரையாற்ற வந்திருந்தார்.
கந்தசஷ்டியானதால் ஒரு வாரம் சூரசம்ஹாரம் குறித்து உரையாற்றுவது அவர் வேலை.
அன்று சூரன் மற்றும் முருகக் கடவுள் இடையேயான போர் பற்றிய சொற்பொழிவு.
மக்களின் திரளான கூட்டம்.
சின்னத்தம்பியின் உரையிலோ உற்சாகம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கு அவரது உரை போரைக் கண்முன்னே கொண்டுவந்து காட்டிகொண்டிருக்கிறது.
கூட்டம் முருகக் கடவுளின் வெற்றியைக் கைதட்டிக் கொண்டாடுக் கொண்டிருக்கிறது.
ஆனால்,மேடைக்கருகில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு கிராமத்து ஆள் பேச்சாளர் சின்னத்தம்பியை படாத பாடு படுத்திக் கொண்டிருந்தார்.
அவர் முருகன் ஜெயிக்கும்போது எப்படிக் கைதட்டிக் கொண்டிருந்தாரோ... அதேபோல் சூரன் ஜெயிக்கும்போதும் இவர்மட்டும் கைதட்டிக் கொண்டிருந்தார்.
கண்டுகொள்ளாமல் பேச்சைத் தொடர்ந்தாலும் அவர் விடாமல் சூரனுக்கும் கைதட்டிக் கொண்டிருந்தது சின்னத்தம்பியின் கவனத்தைத் திசைதிருப்பிக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் சின்னத்தம்பி அந்த கிராமத்து ஆளைப் பார்த்துக் கேட்டார்.
"யோவ்... என்னய்யா ஆளு நீ...? முருகன் ஜெயிச்சாலும் கை தட்டுற... சூரன் ஜெயிச்சாலும் கை தட்டுற ... உன் மனசுல என்னதான் நெனச்சுகிட்டு இருக்கிற...?".
அந்த கிராமத்து ஆள் அப்பாவியை சின்னத்தம்பியைப் பார்த்துச் சொன்னார்.
"இன்னும் போர் முடியலீங்களே... யாரு ஜெயிப்பாங்கன்னு எப்படித் தெரியுமுங்க... எதுக்கும் இருக்கட்டுமுன்னுதான் ரெண்டுபேருக்கும் கைதட்டி வெச்சேனுங்க...!".

Thursday, July 15, 2010

அன்பே சிவம்

வாரப் பத்திரிக்கை ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டம் அது.
'நிகழ்காலத்தில் ஏழ்மை' என்ற தலைப்பில் பொதுமக்கள் பேச மேடை அமைத்திருந்தது அந்தப் பத்திரிக்கை.
கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் ஏழ்மை பற்றி உருக்கமாய் ஏகப்பட்ட செய்திகளைப் பகிர்ந்து கொண்டாலும் அங்கு வந்திருந்த ஒரு பெரியவர் சொன்ன உண்மைக் கதை எல்லோர் கண்ணிலும் கண்ணீரை வரவைத்துவிட்டது.
அவர் சொன்னது...
"எங்கள் ஊரில் நல்லசிவம் என்றொருவர் இருக்கிறார்.
அவருக்குக் காச நோய்.
அவர் மனைவிக்கோ புற்றுநோய்.
அவருக்கு எட்டு குழந்தைகள்.
அதில் முதல் குழந்தை ஊனம்...மூன்றாவது குழந்தை குருடு...
நான்காவது குழந்தைக்கோ மனவளர்ச்சியில்லை.
நல்லசிவம் தன் குடும்பத்தின் மருத்துவச் செலவுக்காக கடன் வாங்கி, கடன் வாங்கி... அதைக் கட்ட முடியாமல் ஒரு கட்டத்தில் குடும்பத்துடன் கொத்தடிமையாக வேலை செய்ய ஆரம்பித்தார்.
இருபது வருடங்களுக்கு மேலாயிற்று.
இன்னும் கடன் அடையவில்லை.
இதில் இரண்டு பெண்களின் திருமணம் வேறு.
நல்லசிவம் நன்றாக மாட்டிக் கொண்டார்.
கடன் கழுத்தை நெரித்தது.
வட்டியோ தலைமீது ஏறிப் பேயாட்டம் போட்டது.
இப்போது அவர்கள் வீட்டு வாடகை கட்டமுடியாமல் விழி பிதுங்கிக் கிடக்கிறார்கள்.
நீங்கள் எல்லோரும் கொஞ்சம் பண உதவி செய்தால் அவர்கள் தப்பிக்க கொஞ்சம் வழி இருக்கிறது...!"
பெரியவர் மேலும் சொல்லச் சொல்ல கூட்டம் கண்களைக் கசக்கி கொள்ள ஆரம்பித்தது.
அப்போது, தாங்கமுடியாத துன்பத்தோடு ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.
"அய்யா... ஒரு பாவப்பட்ட குடும்பத்தின் மீது இவ்வளவு அக்கறையும் பரிவும் கொண்டு பேசுகிறீர்களே நீங்கள் யார்...?".
அந்தப் பெரியவர் கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்தபடி அமைதியாய் நிதானமாய்ச் சொன்னார்.
"அய்யா... நான் அந்த ஊரின் ஜமீன்தார். அந்த நல்லசிவம் குடும்பம் என்னிடம்தான் வேலை செய்கிறது...!".

Tuesday, July 13, 2010

படையல்

டேனியின் அம்மா ஒரு சைவம்.
அவர் வீட்டிலும் அசைவம் சமைப்பதில்லை.
எனவே, டேனியும் பிறந்ததிலிருந்தே முட்டைகூடச் சாப்பிட்டதில்லை.
ஆனால், அவன் அப்பாவோ பரம்பரையாய் மாமிசப் பட்சிணிகள்.
டேனியின் அம்மாவும் இதுவரை அவன் அசைவம் சாப்பிட வாய்ப்பு அமையாதவாறே பார்த்துக் கொண்டு வந்திருக்கிறாள்.
கடைகளில் கோழியும் ஆடும் தோலுரிந்து தொங்குவதைப் பார்க்கையில் அதை வினோதமாய்ப் பார்த்ததுண்டே தவிர அது ஏன், எதற்கு அவ்வாறு தொங்குகிறது என்று அவன் ஆச்சர்யமாய் கேட்டதில்லை.
இது இப்படியிருக்க... சோதனையாய் அந்த மாதம் அவன் அப்பா ஊரில் ஒரு கோவில் விசேஷம் வந்தது.
டேனியின் அம்மாவுக்கோ அந்த சமயத்தில் கல்லூரியில் விடுமுறை கிடைக்கவில்லை.
அவளுக்கோ பயமான பயம்.
ஏற்கனவே கணவன் வீட்டில் பையன் கறி, மீனெல்லாம் சாப்பிட்டாத்தான் 'பையன் கொஞ்சம் திடமா வளர்வான்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் வேறு.
'இதுதான் சமயம்' என்று தன் பிள்ளையை அசைவம் சாப்பிடப் பழக்கிவிடுவார்களோ என்று பயந்துகொண்டே இருந்தாள்.
கணவன் 'என்னுடன் இருக்கும்போது அப்படியெல்லாம் உன் விருப்பமில்லாமல் அசைவம் சாப்பிடப் பழக்க மாட்டேன்...' என்று உறுதி கூறி அவனையும் ஊருக்கு உடன் அழைத்துச் சென்றார்.
ஊரில் டேனியும் அவன் அப்பாவும் கோவிலில் நின்று கொன்டிருக்கும்போதுதான் கோழி அறுத்தார்கள்.
டேனி கோழி அறுப்பதையும் அது துடிக்கத் துடிக்க சாமிக்கு ரத்தம் படைப்பதையும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
பிறகு, "என்னப்பா செய்றாங்க...?" என்று கேட்டுத் தெரிந்து கொண்டான்.
கோவிலில் சாமிக்குப் படையல் எல்லாம் முடிந்த பிறகு பந்தியில் டேனி சாப்பிடாதால் அவன் அப்பாவும் 'அசைவம் வேண்டாம்' என்று சொல்லிவிட அவர்களுக்கு சைவச் சாப்பாடே பரிமாறப்பட்டது.
என்றாலும்,அவர்கள் பந்திக்கு நேரெதிரே ஊர்க்காரர்களில் யாரோ ஒருவர்கூட வந்திருந்த ஒரு ஆங்கிலேயன் உட்கார்ந்திருந்தான்.
அவனுக்குப் பரிமாறப்பட்ட கோழியின் தொடையை அவன் கத்தி மற்றும் முள்கத்தியின் உதவியுடன் கொத்திக் கொண்டிருக்கையில் டேனி அவன் அப்பாவிடம் கேட்டான்.
"ஏம்பா...அந்த அங்கிள் அதைக் கத்தியால குத்திகிட்டு இருக்காரு. அந்தக் கோழி இன்னும் சாகலையாப்பா...?".

Friday, July 9, 2010

தோள்... தோள்... தோள் மேல...

அத்தியாயம் - 3
கடவுள் சொன்ன பொய்
(கீழே முந்தைய இரு அத்தியாயங்களைப் படித்துவிட்டு வரவும்)


கணேஷ் சாயந்திரம் வீடு திரும்பியபோது, வாசலில் வசந்தியின் செருப்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான்.

எப்போது வந்தாள்?

என்றைக்குமே இல்லாத ஆர்வத்தோடு வசந்தி ஓடோடி வந்து, ஏதோ விருந்தாளியை வரவேற்பது போல் வரவேற்றாள்.

"வாங்க, வாங்க. என்ன இவ்வளவு லேட்?"

"வசந்தி, ஊர்ல இருந்து நாளைக்குத்தானே வரதா இருந்தே?"

"ஆமா. ஆனா என்னமோ நேத்துலர்ந்தே மனசுக்குள்ளே படபடன்னு இருந்தது. அதான் ஒரு நாள் முன்னாலயே புறப்பட்டு வந்துட்டேன். வந்தது நல்லதாப் போச்சு. நான் கேள்விப்பட்டதெல்லாம் நிஜமா?"

கணேஷ் சற்றே துணுக்குற்று அவளைப் பார்த்தான். "என்ன கேள்விப்பட்டே?"

"கடவுள் உங்க முன்னால வந்தாராம். கண்ணாடி குடுத்தாராம்."

"யார் சொன்னா உனக்கு?"

வெக்கென்று மோவாயை தோளில் இடித்துக் கொண்டு முணுமுணுத்தாள். "ஆமா, கட்டின பெண்டாட்டிக்கு கூட யாராவது மூணாவது மனுஷங்க சொல்லித்தான் தெரியணும்."

கணேஷ் அவளை சமாதானப்படுத்த முயன்றான். "நீதான் ஊர்ல இருந்தியே வசந்தி..."

"இல்லேன்னா மட்டும்? ஏன், ஊர்ல இருந்தா போன் பண்ணி சொல்ல முடியாதா? உங்க ஆபிஸ் பூராவும் தெரிஞ்ச விஷயம் எனக்குத் தெரியலை. சே, கேவலம். சரி அதை சீக்கிரமா எடுத்துட்டு வாங்க."

"எதை?"

"அந்தக் கண்ணாடியைத்தான்."

"எதுக்கு வசந்தி?"

"அதுல என்னோட கால் தடத்தை நான் பார்க்கணும்."

கணேஷ் திடுக்கிட்டான். "வசந்தி... அதுல எப்படி உன்னோட கால் தடம்...?"

"ம்ம்... கண்ணாடில உங்க கால் தெரியும். கடவுளோட கால் தெரியும். உங்க மேனேஜரோட புட் ப்ரிண்ட் கூட தெரியும். ஆனா உங்க வாழ்க்கைப் பாதையில் என்னோட கால் இருக்காதா...?"

அவள் கேள்வியில் திணறிப்போய் வாய் குழறினான். "அதில்லை வசந்தி. அது அப்படிப்பட்ட கண்ணாடி இல்லை. என்னோட வாழ்க்கைப் பாதையை காட்டும் கண்ணாடி. என்னோட பாதம் தெரியும். கடவுளோட கால் தடமும் தெரியும். வேற யாரோட பாதத்தையும் அதிலே பார்க்க முடியாது."

"என்னை ஏமாத்தப் பார்க்காதிங்க. அப்ப மேனேஜரோட புட் ப்ரிண்ட் மட்டும் எப்படி தெரிஞ்சதாம்?"

"அந்த ஆள் ஆபிஸ்ல என்ன உளறினாலும் எல்லாரும் ஆமா ஆமான்னு தலையாட்டிட்டுதான் வருவோம். அதைப் போய் பெரிசா எடுத்துக்கிறதா?"

"என்னை ஏமாத்தறதா நினைச்சு உங்களை நீங்களே ஏமாத்திக்காதிங்க. ஆபிஸ் நேரத்தில் உங்களோட தெரிஞ்சது மேனேஜர் கால் தடம்தான். அதே மாதிரி மத்த சமயங்களில் உங்களோட இருந்தது என்னோட பாதங்களாகத்தான் இருக்கும். கண்ணாடியை சீக்கிரமா கொண்டு வாங்க. அதை கன்பர்ம் பண்ணிரலாம்."

"அப்ப கடவுளோட பாதம்?"

"கடவுள் உங்க கிட்டே அது தன்னோட பாதம்ன்னு பொய் சொல்லியிருக்கார்."

"என்ன சொல்றே நீ? கடவுள் பொய் சொல்லுவாரா? ஏன் அப்படிச் சொல்லணும்?"

"குழந்தைங்க நச்சரிப்பு தாங்கலைன்னா சமாளிக்க அதுங்க கிட்ட நாம அப்போதைக்கு மனசுக்குத் தோணின எதையாவது சொல்றதில்லையா? ஞாயித்துக் கிழமை உங்க நச்சரிப்புத் தாங்காம உங்க முன்னாடி காட்சி குடுத்துட்டார். இந்தக் கண்ணாடியையும் குடுத்துட்டார். அப்புறம் சும்மா திரும்பிப் போனா நல்லாருக்காதுன்னு நினைச்சு உனக்கு எல்லாமே நான்தான்னு பெருமையடிச்சுட்டுப் போயிருக்கார்."

"வசந்தி, எனக்கு ஒரே குழப்பமா இருக்கே! அப்போ கஷ்ட காலத்தில் என் கூட இருந்தேன்னு கடவுள் சொன்னதெல்லாம் பொய்யா?"

"ஆமா. உங்களோட அல்லும் பகலும் கூட வந்தது என்னோட பாதமாகத்தான் இருக்கணும்."

கணேஷால் ஆர்வம் தாங்க முடியவில்லை. கண்ணாடியை கொண்டு வந்து அங்குமிங்கும் தட்டித் தட்டி, பாதங்களை உற்று உற்றுப் பார்த்தான். கூடவே வரும் அந்தப் பாதத் தடங்கள் நளினமான பெண்ணின் பாதம் போலத்தான் தெரிந்தது.

"வசந்தி, நீ சொல்றது சரிதான் போலிருக்கு. ஆனா..."

"ஆனா என்ன?"

"தனியா ஒரு ஜோடி பாதம் மட்டும் தெரிஞ்சதே... கஷ்ட காலத்தில் நான்தான் உன்னை சுமந்தேன்னு கடவுள் சொன்னாரே... அதுதான் புரியலை."

வசந்தி புன்னகைத்தாள். ஓடிப் போய் ட்ரன்க் பெட்டிக்குள் குடைந்து ஒரு பழைய டயரியை எடுத்து வந்தாள். "ஆகஸ்ட் பனிரெண்டு 1997-ல் பாருங்க, ஒரு ஜோடி பாதம் மட்டுந்தான் இருக்கும்."

"ஆமா."

"18 ஜூன் 2000?"

"ஆமா வசந்தி. கரெக்ட்."

"28 பிப்ரவரி 2001 டு 14 மார்ச் 2001?"

"ஒரு ஜோடி பாதம் மட்டும் தெரியும் இந்த தேதிகளை எப்படி இவ்வளவு துல்லியமா சொல்றே?"

"அப்போ எல்லாம் நான் கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டேன். நீங்க மட்டும் தனியா வீட்டில் இருந்திங்க. அதான் ஒரே ஒரு ஜோடி பாதம். 22 செப்டெம்பர் 2003?" - உற்சாகமாக கேட்டுக் கொண்டே கண்ணாடியைப் பார்த்த வசந்தி சட்டென்று பத்ரகாளியாக உருமாறிப் போனாள்.

கணேஷுக்கும் மூச்சடைத்தது போலானது.

அந்த தேதியில் இரண்டு ஜோடி பாதங்கள் தெரிந்தன. அதில் ஒன்று படு நளினமாக இருந்தது.
.
.
.
நெஜம்மாவே
முற்றும்.
.


எழுத்து: சத்யராஜ்குமார்
.Thursday, July 8, 2010

தோள் மேல... தோள் மேல...

அத்தியாயம் - 2
(கீழே முந்தைய அத்தியாயத்தைப் படித்துவிட்டு வரவும்)மறுநாள் திங்கட்கிழமை.

கணேஷ் கம்பெனிக்குப் போனதும் மேனேஜர் கேட்டார்.

"என்னா கணேஷ்... நேத்து உங்க வீட்டுக்கு கடவுள் வந்திருந்தாராமே... ஏதோ கண்ணாடி எல்லாம் தந்ததா பேசிக்கிறாங்க...!".

கணேஷ் மிரண்டு போனான்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை.

'நம் வீட்டில் நடந்தது இவருக்கு எப்படித் தெரியும்...?'

யோசித்துக் கொண்டே இருக்கையில் மேனேஜர் சொன்னார்.

"இதப்பாரு கணேஷு... நீ எங்க போற.. என்னென்ன பண்ணுற...யாருகூட என்னவெல்லாம் பேசுற.. எல்லாம் எனக்குத் தெரியும். இவன் எங்கயோ இருக்கானே, இவன்கிட்ட எதுக்குச் சொல்லணும்னு எதையும் எங்கிட்ட மறைக்க முடியாது... தெரிஞ்சுக்கோ...!"

கணேஷ் என்ன சொல்வதென்று தெரியாமல் தலையாட்டினான்.

மேனேஜர் தொடர்ந்தார்.

"சரி.. சரி... அதென்ன கண்ணாடி...? அதச் சொல்லு மொதல்ல...!".

கணேஷ் நடந்ததைச் சொன்னான்.

"எங்கே... அந்த வாழ்க்கைக் கண்ணாடியை எடு பார்ப்போம்...?"

கணேஷ் எடுத்ததும் மேனேஜர் கேட்டார்.

"அதுல நம்ம கம்பெனில உன்னோட ஃபுட் ப்ரின்ட்ஸைக் காட்டு பார்ப்போம்...!".

கணேஷ் பதில் சொன்னான்.

"சார்... எல்லா நேரத்துலயும் கடவுள் என் கூடவே இருந்திருக்காரு...!"

"அதெல்லாம் கம்பெனிக்கு வெளியே... கம்பெனிக்குள்ள வொர்க்கிங் டைம்ல கடவுளாவே இருந்தாலும் அல்வ் பண்ண முடியாதுல்ல..! நீ கம்பெனி டைம உன் கண்ணாடில காட்டுப்பா...!"

கணேஷ் கண்ணாடியில் அலுவலக நேரத்தை எடுத்தான்.

கண்ணாடியில் முன்பைப் போலவே இரு ஜோடிப் பாதங்கள் தெரிந்தது.

மேனேஜர் சொன்னார்.

"பாத்தியா... இதுலயும் ரெண்டு ஜோடிப் பாதம் தெரியுது..! ஒரு ஜோடி உன்னுது... இன்னொரு ஜோடி  என்னுது...!".

கணேஷ் கண்ணாடியில் அதைப் பார்த்தான்.

அதிலும், சில இடங்களில் ஒரே ஒரு ஜோடிப் பாதங்கள் மட்டும் தெரிய சந்தேகத்துடன் கேட்டான்.

"சார்... இதுல சில இடங்கள்ல ஒரு ஜோடி மட்டும்தான இருக்கு...!"

மேனேஜர் சொன்னார்.

"ஓ... அதுவா? அது நம்ம கம்பெனியோட ப்ராப்ளமேட்டிக் டைம்ஸ்...!"

அந்த சமயங்களில் இவர் கடவுள்போல தன்னைச் சுமந்திருக்கவில்லை என்று தெரிந்தாலும் கணேஷ் கேட்டான்.

"அந்த மாதிரி சமயங்கள்ல... நீங்க என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டிங்களா சார்...?".

மேனேஜர் பொறுமையாய் சிரித்தபடி...

"அதெப்படி கணேஷ்... அப்படிப் பொறுப்பில்லாம விட்டுட்டுப் போக முடியும்...? அந்த மாதிரி சமயங்கள்ல நான்தான் உன்மேல உக்காந்திருந்தேனே...!" என்றார்.
.
.
.

இப்போதைக்கு
முற்றும்.

Wednesday, July 7, 2010

தோள் மேல...

அத்தியாயம் - 1
கணேஷ் ஒரு கம்பெனியின் புரொடக்ஸன் சூப்பர்வைசர்.

ஐம்பத்தி ஐந்து வயதுக்கு கொஞ்சம் அதிகம்.

இன்னும் ஓரிரு வருடங்களில் ரிட்டயர் ஆகப் போகிறான்.

கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து வருடங்கள் ஒரே கம்பெனியில் ஒரே வேலை பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டான்.

முன்னேற்றமே இல்லை, வாழ்க்கையிலும் நிம்மதி இல்லை.

வெறுத்துப்போய் ஒரு நாள் கடவுளிடம் முறையிட்டான்.

முறையிடுதல் என்றால் அப்படி இப்படி இல்லை.

அவன் புலம்பல் தாங்க முடியாமல், கடவுளே நேரில் வந்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கணேஷ் கடவுளிடம் கேட்டான்.

"கடவுளே... நான் என்ன பாவம் செய்தேன்...? என் வாழ்க்கையை ஏன் இப்படி வெறுப்பானதாய் ஆக்கினாய்...?".

கடவுள் பதில் அளித்தார்.

"கணேஷ்...கஷ்டம் யாருக்குத்தான் இல்லை. ஆனால், நீதான் எனது செல்லப்பிள்ளை தெரியுமா...?".

கணேஷ் கேட்டான்.

"எப்படி நம்புவது...?".

கடவுள் ஒரு கண்ணாடியை நீட்டினார்.

"இதோ பார்... இது உன் வாழ்க்கைக் கண்ணாடி. இந்தக் கண்ணாடியில் தெரிவது உன் வாழ்க்கைப் பாதை. உன் வாழ்க்கைப் பாதை முழுவதும் தெரிவது உன்னுடைய ஜோடிப் பாதங்கள். அதனுடன் கூடவே தெரிகிறதே, மற்றொரு ஜோடிப் பாதங்கள்... அதுதான் என்னுடையது. இப்போது தெரிகிறதா... நீ என் செல்லப் பிள்ளை என்பது..?".

கணேஷ் நம்பமுடியாமல் அந்தக் கண்ணாடியையே பார்த்தான்.

கடவுள் சொன்னதுபோல் வாழ்க்கை முழுவதும் அவனுடனே நடந்து வந்திருக்கிறார்.

திருப்தியுடனே பார்த்துக் கொண்டு வந்தவன், கடவுளிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்டான்.

"கடவுளே... சில இடஙகளில் ஒரு ஜோடிப் பாதம் மட்டும் தெரிகிறதே... அது என்ன...?".

கடவுள் பதில் சொன்னார்.

"அது உன்னுடைய கஷ்டகாலங்கள்...!".

கணேஷ் கடவுளைச் சந்தேகத்துடன் கேட்டான்.

"ஏன் கடவுளே.. கஷ்ட காலங்களில் மட்டும் ஒரு ஜோடிப் பாதங்கள்  தெரிகிறது..? அந்தக் காலங்களில் என்னை மட்டும் தவிக்க விட்டுவிட்டு நீங்கள் எங்கே போனீர்கள்..?".

கடவுள் புன்னகைத்தபடி பதில் சொன்னார்.

"நன்றாகப் பார் கணேஷ். கஷ்டகாலங்களில் கீழே தெரிவது உன் பாதங்களல்ல... என் பாதங்கள். அந்தக் கஷ்டகாலங்களில் எல்லாம், உன்னை என் தோள்களில் தூக்கிச் சுமந்தபடி நான் நடந்து கொண்டிருந்தேன்...!".
.
.
.
தொடரும்...

Tuesday, July 6, 2010

தில்லுதுர அட் மைக்ரோசாப்ட்


தில்லுதுர படிச்சு முடிச்சுட்டு ரொம்பநாளு வேலை இல்லாம சுத்திக்கிட்டு இருந்த காலம் அது.

யாரு கேடடாலும், 'என் தகுதிக்கு ஏத்த வேலையா தேடிக்கிட்டு இருக்கேன்...' என்பார்.

அதையும் தாண்டி யாராவது நோண்டி நோண்டி விசாரிச்சா, 'நானெல்லாம் என் தகுதிக்கு அமெரிக்காவுல இருக்க வேண்டியவன்...' என்று ஆரம்பித்துவிடுவார்.

எல்லோரும் 'இவன் கெட்ட கேட்டுக்கு அமெரிக்காவாம்...!'னுட்டு போயிடுவாங்க.

ஆனாப்பாருங்க... ஒருநாளு அவரு சொன்ன மாதிரியே மைக்ரோசாப்ட்லருந்து இன்டர்வ்யூ வந்துடுச்சு.

தில்லுதுர ஒரே சந்தோஷமாயிட்டாரு.

அன்னிக்கு காலைல எழுந்திருச்சு, குளிச்சு,பாடி ஸ்பிரேயெல்லாம் அடிச்சு, பக்காவா ட்ரெஸ்ஸெல்லாம் பண்ணிக்கிட்டு மைக்ரோசாப்ட் ஆபீஸ் வாசலுக்குப் போயிட்டார்.

ரிஷப்ஷன்ல ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணச் சொன்னாங்க.

தில்லுதுர காத்திருந்தார்.

பத்து நிமிஷம் கழிந்தது.

தில்லுதுரக்கு அழைப்பு வந்துவிட்டது.

தில்லுதுர உள்ளே நுழைந்ததும் அவருடைய ஃபைலை கொஞ்ச நேரம் புரட்டிவிட்டு, அவருடைய குடுமபம், வசதி, முன் அனுபவம் எல்லாவற்றையும் பார்த்த ஹெச்.ஆர். அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"மிஸ்டர். தில்லுதுர... இப்ப உங்களுக்கு வேலை கொடுக்க கம்பெனி தயார்னு வெச்சுக்கங்க... உங்களுக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட டிபார்ட்மென்ட்ல வேலை பாக்கணும்னு ஆவல் இருக்கா...?"

தில்லுதுர அசராமல் பதில் சொன்னார்.

"எஸ் சார்... உங்க கம்பெனில சி.இ.ஓ. இல்லைனா ஜெனரல் மேனேஜரா மேனேஜ்மென்ட்ல இருக்க ஆசைப்படறேன்...!".

தில்லுதுரயின் பதிலைக் கேட்டு அரண்டுபோன ஹெச்.ஆர். கேட்டார்.

"ஏய் மிஸ்டர்... உனக்கு பைத்தியம் ஏதாவது புடிச்சிருக்கா...?".

அதைக் கேட்ட தில்லுதுர கூலாய் அவரைப் பார்த்துக் கேட்டார்.

"ஏன் சார்... அதுதான் அந்தப் போஸ்ட்டுக்கான தகுதியா...?".
.
.
.
நன்றி: அஷீதா.கே

Monday, July 5, 2010

டேனி Vs தில்லுதுர

தில்லுதுர வீட்டுக்கு பிஸ்ஸா டெலிவரி செய்ய வந்தவன் டேனி என்னும் டீனேஜ் பையன்.


தன் வண்டியை ஓரமாய்ப் பார்க் செய்துவிட்டு தில்லுதுர வீட்டு காலிங்பெல்லை அழுத்தினான்.

தில்லுதுர வந்து பிஸ்ஸாவை வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு, "சாதாரணமா டிப்ஸ் எவ்வளவு வாங்குவீங்க...?"

டேனி லேசான தயக்கத்துடன் சொன்னான்.

"சார் கோவிச்சுக்கக் கூடாது. நான் இந்த வீட்டுக்கு டெலிவரிக்கு வர்றது இதுதான் முதல் தடவை. ஆனா, என்னோட வேலை பாக்கற மத்த பசங்க, 'அந்த ஆளுகிட்ட அஞ்சுரூபா டிப்ஸ் வாங்கிட்டா நீ பெரிய ஆளுடா...!' அப்படின்னு சொன்னாங்க..."

தில்லுதுர தாடையைத் தடவியவாறே யோசித்தபடி சொன்னார்.

"அப்படியா சொன்னானுக... இந்தா, நான் உனக்கு டிப்ஸா இந்த நூறு ரூபாயத் தர்றேன். உன் ஃபிரண்ட்ஸ்கிட்டப் போயி அவனுக சொன்னது தப்புன்னு ப்ரூஃப் பண்ணிக் காட்டு...!".

தில்லுதுர நீட்டிய நோட்டை வாங்கியபடியே டேனி சொன்னான்.

"இதை அப்படியே எங்க காலேஜ் ஆதரவற்றோர் நல நிதியில சேர்த்துடப் போறேன்...!".

சற்றே ஆர்வமாய் தில்லுதுர கேட்டான்.

"தம்பி... காலேஜ்ல என்ன படிக்கற..?".

டேனி சிரித்தபடி சொன்னான்.

"அப்ளைட் சைக்காலஜி...!".
.
.
.

கடவுளின் குழந்தை

டேனியை சமீபத்தில் தான் அந்த நர்சரிப் பள்ளியில் சேர்த்திருந்தேன்.

பள்ளியில் ஒரு புது மாதிரியாய் மேக்னட்டில் ஆங்கில எழுத்துகளைப் ப்ரிண்ட் பண்ணி, டேபிள் போர்டுகளில் ஒட்டவைத்து விளையாடியபடியே வார்த்தைகளை கற்றுக்கொள்ள சொல்லிக் கொடுக்கிறார்கள்.

டேனியும் இப்போது வித விதமாய் வார்த்தைகளை வடிவமைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான்.

வீட்டிற்கு வந்ததும் சி ஏ டி...கேட், டி ஓ ஜி...டாக், டி ஏ டி..டேட்,எம் ஓ எம்..மாம் - போன்ற ஆங்கில வார்த்தைகளை ஃபிரிட்ஜ்-ல் ஒட்டி விளையாடுவான்.

என்னிடமும் தவறாமல், "பாத்தியா...நான் என்ன ஒட்டிருக்கேன்னு...?" என்று மழலை மாறாமல் கேட்பான்.

அன்றும் அப்படித்தான்...

அவசரமாய் வெளியே கிளம்பிக் கொண்டிருந்த நேரம்.

நான் வேகவேகமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தபோது, அவன் உற்சாகமாய் அந்த மேக்னட் எழுத்துக்களை எடுத்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

நான் பார்த்ததும்,"அம்மா பாத்தியா...நான் என்ன ஒட்டிருக்கேன்னு...?"

நான் பார்த்தபோது, அவன் கையில் 'ஜி ஓ டி.. காட்' என வைத்திருந்தான்.

பரவாயில்லையே... இந்த நர்சரியில் நல்ல நல்ல வார்த்தைகளைச் சொல்லித் தருகிறார்களே என்று எண்ணியபடியே கிளம்பும் அவசரத்தில் அவனிடம், " சூப்பர் டேனி... ஓடிப்போய் ஃபிரிட்ஜ்-ல ஒட்டிவச்சுட்டு வா... சாயங்காலம் அப்பா வந்தா பாக்கட்டும்....!" என்றேன்.

டேனி உள்ளே போய் சற்று நேரத்தில் குரல் மட்டும் கேட்டது.

"அம்மா... இதுக்கப்புறம் 'ஜில்லா'க்கு என்ன ஸ்பெல்லிங் வரும்...?".
.
.
.

Saturday, July 3, 2010

மட்டன் ஸ்டால் மன்னாருமன்னாரு என்றும் போல் அன்றும் காலை தனது மட்டன் ஸ்டாலை திறந்து வைத்தான்.

ஆனால், அன்று அவனது கடைக்கு வந்ததோ ஒரு விநோதமான கஸ்டமர்.

மொபைல் விளம்பரத்துல வருமே அதேபோல் ஒரு நாய் வாயில் மூன்று நூறு ரூபாய் நோட்டுகளுடன் வந்தது.

கூடவே, மட்டன் எத்தனை கிலோ வேணும்னு ஒரு சீட்டு.

மன்னாரு அசந்து போனான்.

இந்த நாய் என்னதான் பண்ணுகிறது என்று பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

பேசாமல் அதில் இருந்த அளவுக்கு மட்டனை வெட்டி, ஒரு பொட்டலம் கட்டிக் கொடுத்துவிட்டு அது போகும் வரை காத்திருந்தான்.

நாய் நகர்ந்ததுதான் தாமதம்.

கடையைச் சாத்திவிட்டு மன்னாரும் நாயின் பின்னாலே கிளம்பினான்.

நாய் வாயில் கவ்விய பையுடன் சாலையின் ஓரத்திற்குச் சென்றது.

பச்சை விளக்கு விழும் வரை காத்திருந்து, சாலையின் இரு பக்கமும் பார்த்துக் கிராஸ் செய்தது.

பஸ் ஸ்டாப்புக்கு வந்து பஸ் டைமிங்கைச் செக் செய்துவிட்டு பெஞ்சில் பையை வைத்துவிட்டு சாலையைக் கவனிக்க ஆரம்பித்தது.

வந்த பஸ்ஸின் எண்ணையும் போகும் ரூட்டையும் கவனித்து பிறகுதான் அதில் ஏறியது.

மன்னாரும் அதே பஸ்ஸில் ஏறிக் கொண்டான்.

நாய் டிக்கட் வாங்கிய அதே இடத்துக்கு டிக்கட் வாங்கிக் கொண்டான்.

அந்த நாய் பஸ்ஸின் ஜன்னலோரம் ஒரு சீட்டைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்து கொண்டு வீதியின் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே வந்தது.

கொஞ்ச நேரம் கழித்து புளியமரம் ஸ்டாப் வந்ததும் அதுவே இறங்கி வேகவேகமாய் நடக்கத் தொடங்கியது.

மன்னாரும் அதன் பின்னாலேயே தொடர்ந்தான்.

சாலையின் இருபக்கமும் கவனமாய்ப் பார்த்தபடி சென்ற அது ஒரு வீட்டின் கேட்டை முட்டித் திறந்து நுழைந்தது.

கேட்டைத் தாண்டி வீட்டின் முன்னே வந்த அந்த நாய் கதவை முட்டிப் பார்த்தது.

கதவு திறக்கவில்லை.

சற்றே பின்னால் வந்து வேகமாய் ஓடி ஒரு ஜம்ப்.

சரியாய் காலிங்பெல்லில் முட்டியது.

கதவு திறக்கவில்லை.

திரும்பவும் பின்னால் வந்து ஓடி ஜம்ப் செய்து காலிங்பெல்லில் ஒரு முட்டு.

கதவு திறக்க இன்னும் தாமதமாக இதுவே நான்கைந்து முறை தொடர்ந்தது.

கொஞ்ச நேரம் கழித்து குண்டாய் ஒருவன் கடுகடுவென்ற முகத்துடன் கதவைத் திறந்தான்.

நாயைப் பார்த்துக் கத்தினான்.

"ஏய் நாயே...! அறிவில்ல உனக்கு...? எத்தனை தடவை சொன்னாலும் புத்தி வராது உனக்கு...?"

அவன் திட்டிக்கொண்டே போக மன்னாருக்கு வந்ததே கோபம்.

அந்த குண்டனைப் பார்த்து வேகமாய் ஓடினான்.

"ஏய் என்னப்பா நீ... இந்த நாயப் போயித் திட்டறியே...! உன் நாய் உண்மையிலேயே ஒரு ஜீனியஸ் தெரியுமா...?".

அந்த குண்டன் மன்னாரைப் பார்த்து அலுப்புடன் சொன்னான்.

"எது... இதுவா ஜீனியஸ்...? இந்த வாரத்துலயே ரெண்டாவது தடவையா கதவு சாவிய மறந்துட்டு வந்து காலிங் பெல்லை அடிச்சுக்கிட்டு இருக்கு...!".
.
.
.

Thursday, July 1, 2010

தில்லுதுர அட் லோனாவாலாதில்லுதுர லோனாவாலா போனப்ப நடந்த பயங்கர எக்ஸ்பீரியன்ஸ் இது.

அவரு மும்பையிலிருந்து பூனா கார்ல போகப் போறேன்னு சொன்னதுமே ஆபிஸ்ல அவரோட சினேகிதர் சொன்னாரு, “இதாப் பாரு தில்லு… மும்பை டூ பூனே போறப்ப புது எக்ஸ்பிரஸ்வே-ல போகாதே… அதுக்குப் பதிலா ஓல்ட் ரோட்டுல போனினா சீனெரி எல்லாம் பாக்க சூப்பரா இருக்கும்”னு கொளுத்திப் போட தில்லுதுரயும் அந்த ரூட்லயே போக முடிவு செஞ்சிட்டாரு.

அவருக்கு கார் மலை உச்சில பிரேக் டவுனாகி நிக்கற வரைக்கும் தெரியாது… அந்த முடிவு எவ்வளவு பெரிய தப்புன்னு…!

தில்லுதுர காரைவிட்டு எறங்கி நின்னு பாக்கறாரு… கண்ணுக்கு எட்டுனவரைக்கும் ஒரு ஈ காக்காயக் காணம்.

பயங்கர இருட்டு… மழை வேற.

கொஞ்ச நேரத்துல நல்லா நனஞ்சு நடுங்க வேற ஆரம்பிச்சுடுச்சு.

வண்டி எதுவும் அந்த வழியில வர்ற மாதிரியும் தெரியல.

வேறவழியில்லாம பக்கத்துல ஏதாவது சிட்டி தெரியுதானு தேடி நடக்க ஆரம்பிச்சாரு.

கொஞ்ச நேரம் போயிருக்கும்.

ஒரு கார் அவரைப் பாத்து வருது... வந்து மெதுவா அவர் பக்கத்துல நிக்குது.

தில்லுதுர யோசிக்கவே இல்ல.

டப்புனு காரோட பின்னாடிக் கதவத் தொறந்து பாய்ஞ்சு சீட்ல ஒக்காந்திட்டாரு.

கொஞ்சம் மனசு நிதானமாகி கார் டிரைவருக்கு ஒரு நன்றியச் சொல்லிடலாம்னு முன் சீட்டப் பாத்தாரு.

பாத்ததுதான் மாயம்... நெஞ்சுக் கொலயே ஆட்டம் கண்டுடுச்சு.

கார்ல டிரைவர் சீட்ல ஆளயே காணோம்.

தில்லுதுர அப்பத்தான் கவனிச்சாரு... கார் ஓடற மாதிரி எஞ்சின் சவுண்டையும் காணோம்... ஆனா, கார் நகர்ந்து போய்கிட்டிருக்கு.

தில்லுதுர நெஞ்சப் பிடிச்சுக்கிட்டு மெல்ல ரோட்டப் பாக்கறாரு... சாமி... காரு அந்த பெண்டுல ஒரு பெரிய பள்ளத்தப் பாத்து போயிட்டுருக்கு.

தில்லுதுரைக்கோ குடலே வாய்க்கு வந்திடும் போல ஆயிடுச்சு.

செத்தோம்டானு பயந்து போயி அவர், 'சாமி..சாமி'ன்னு சாமி கும்புட ஆரம்பிச்சுட்டாரு.

கரெக்டா அந்த பெண்டோட சுவத்த கார் முட்டப் போன நேரம்... நனைஞ்சு ஈரமா இருந்த ஒரு  கையி ஜன்னல் வழியா வந்து ஸ்டீரிங் வீல ஒரு திருப்பு திருப்புச்சு.

கார் பெண்ட முட்டாம பத்திரமாத் திரும்பி அடுத்த பெண்டப் பாத்துப் போக ஆரம்பிச்சிருச்சு.

அடுத்த பெண்டுலயும் அதே கையி ஜன்னல் வழியா மறுபடி வந்து ஸ்டீரிங்கத் திருப்புச்சு.

ஒவ்வொரு பெண்டுலயும் இதே நடக்க தில்லுதுர நெஞ்சு இப்ப படபடன்னு அடிக்க ஆரம்பிச்சிருச்சு.

அவரு பக்கு பக்குனு ரோட்டயே வெறிச்சுப் பாத்துகிட்டு ஒக்காந்திருந்தாரு.

சடார்னு ரோட்ல ஒரு வெளிச்சம்... எதுத்தாப்புல ஒரு வண்டி தாண்டிப் போகுது.

தில்லுதுர மனசுல எல்லா தைரியத்தையும் வரவச்சுகிட்டு... காரை விட்டுக் குதிச்சு கீழே இருக்கற ஊரப் பாத்து கத்திக்கிட்டே எடுத்தாரு பாருங்க ஒரு ஓட்டம்.

அந்த ஊரு டீக்கடைல வந்துதான் நின்னாரு.

கடைல நொழஞ்சு ஒரு ஜக்குத் தண்ணிய மடக்கு மடக்குனு குடிச்சுட்டு... அங்க இருந்தவங்ககிட்ட நடந்ததப் பத்தி நெஞ்சப் புடிச்சுக்கிட்டு சொல்லிட்டு இருக்காரு.

எல்லாரும் அந்த நம்பமுடியாத கதைய வாயப் பொளந்துகிட்டுக் கேட்டுட்டு இருக்காங்க....

அப்பத்தான் அந்த ரெண்டு பேரும் வேர்க்க விறுவிறுக்க கடைக்குள்ள நுழையறாங்க.

அதுல ஒருத்தன் தில்லுதுரயப் பாத்ததும் பக்கத்துல இருந்தவங்கிட்டச் சொன்னான்.

"மாப்ள... இந்த மடையந்தாண்டா நாம காரைத் தள்ளிக்கிட்டு வந்தப்ப நமக்குத் தெரியாம ஏறி உள்ளே உக்காந்திட்டு வந்தவன்...!".
.
.
.
நன்றி: வெங்கட்