Thursday, July 25, 2013

இரவுப் பிரார்த்தனை


டேனியின் ஸ்கூலில் புதிதாய் இரவு தூங்கும் முன்னர் பிரார்த்தனை செய்துவிட்டுத் தூங்கக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

இப்போதெல்லாம், அவன்  விடிவிளக்கின் வெளிச்சத்தில் படுக்கையில் அமர்ந்தபடி கண்களை மூடி, கைகளைக் கூப்பி முணுமுணுப்பது பார்க்க அவ்வளவு அழகாய் இருக்கும்.

அன்றும் அப்படித்தான்.

படுக்கைக்கு வந்ததும், இன்னும் ஓரிரு வாரத்தில் வரப்போகும் அவனது பிறந்த நாளுக்கான அவனது பிரார்த்தனையை எப்போதும் போல் இல்லாமல் சத்தமாய்க் கூறத் துவங்கிவிட்டான்.

"கடவுளே... எனக்கு இந்த பர்த்டேக்கு எப்படியாவது ஒரு ப்ளே-ஸ்டேஷன் கிடைக்க அருள்புரிவாய்... ஆண்டவா.!".

வழக்கமாய் முணுமுணுத்தபடி பிரார்த்தனை செய்யும் டேனி, இன்று சத்தமாய் பிரார்த்தனை செய்யவே நான் லேசான குழப்பத்துடன் அவனிடம் கேட்டேன்.

"எதுக்கு இவ்வளவு சத்தமா ப்ரே பண்ணற.? மெதுவாச் சொன்னாலே சாமிக்குக் கேட்கும் இல்லியா.?".

நான் கேட்டதும், என் பக்கமாய் திரும்பிய டேனி லேசான புன்னகையுடன் கூறினான்.

"ஆனா... அப்பாவுக்கு கேக்காதே.!".
.
.

Thursday, July 18, 2013

மரணக் காமெடி


சில சமயங்களில் நாம் எதிர்பாராத இடங்களில் நடக்கும் காமெடி நம் வயிறைப் பதம் பார்த்து விடும்.

இருக்கும் இடத்தின் நாகரிகம்கூடத் தெரியாமல் வாய்விட்டுச் சிரிக்க வைத்துவிடும்.

அப்படி ஒரு நிகழ்ச்சிதான் அன்று நடந்தது.

காலையில் கண்விழிக்கும் முன்பே அந்த போன் வந்தது.

கணியூர் சித்தப்பா இறந்துவிட்டாராம்.

அப்பாவின் வழியில் ஏதோ ஒரு முறையில் சித்தப்பாவான அவர் பயங்கரக் குடிகாரர்.

எந்நேரமும் சாராயக் கடையே கதியாய்க் கிடப்பார்.

தப்பித்தவறி வீட்டுக்கு வந்தாலோ, சித்தியுடன் சண்டையும் அடிதடியுமாய் இருக்கும் வீடு.

பையன்களையும் படிக்க வைக்கவில்லை.

அப்பேர்ப்பட்டவர்தான் இறந்தார் என்பதால் வருத்தம் ஒன்றும் இல்லை என்றாலும், தவிர்க்க முடியாமல் மரணத்திற்குப் போக வேண்டியதாகி விட்டது.

கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு, கணவருடன் காலையிலேயே அங்கே போய்விட்டேன்.

கிராமத்தில் மரணம் விழுந்த வீடு எப்படி இருக்குமோ... அந்த இலக்கணம் மாறாமல் இருந்தது.

உடம்பு சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இறந்ததினால் அன்றே ஆகவேண்டியதை செய்துவிடுவது என்று முடிவு செய்திருந்தார்கள்.

உறவினர் எல்லாம் மாலைக்குள் வந்துவிட... இறுதிப் பயணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தது.

வீட்டுக்கு சற்று முன்னால் ஒரு மரப் பெஞ்சில் சித்தப்பாவின் உடலைக் குளிப்பாட்ட எடுத்துப்போன போதுதான் நடந்தது அது.

யாரோ ஊர்ப் பெரியவர்... சித்தப்பாவின் நண்பராயிருக்க வேண்டும்...
இறந்தவரைச் சிறப்பிக்க வேண்டுமென்று நினைத்து, எல்லோருடைய காதுபட சித்தப்பாவைப் பற்றி பெருமையாய்ப் பேசிக் கொண்டு இருந்தார்.

"என் நண்பன் ஒரு மகா மேதை. அவன்  எங்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாய் வாழ்ந்து முடிச்சவன். வாழும் காலத்தில் அவனுடைய கடமைகளை சரியாய்ச் செஞ்சு முடிச்சுட்டான். ஓரு நல்ல கணவனாய், ஒரு நல்ல தகப்பனாய், நல்ல மனிதனாய்... மிக நல்லபடி தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சிருக்கான் என் நண்பன்...!".

அந்தப் பெரியவர் பேசிக்கொண்டே இருக்கையில், வீட்டுக்குளிருந்த என் சித்தி ஆற்றாமையுடன் மூக்கைச் சிந்தியபடி  தன் மூத்த மகனை கூப்பிட்டு அழுதபடியே சொன்னார்.

"டேய் கொமாரு... எதுக்கும் ஒருவாட்டி உங்க அப்பாவைத்தான் குளிப்பாட்டறாங்களான்னு பாத்துட்டு வந்திருடா..!".
.
.
.