Tuesday, August 31, 2010

மாட்டுப் பெண்

(இது என் கணவர் சொன்ன கதை - அவருடைய வார்த்தைகளில்.)


என் நண்பன் சின்னச்சாமி ஒரு பெரிய பால்பண்ணை வைத்திருக்கிறான்.

ஒரு சமயம் அவன் பசு மாடு ஒன்றின் பிரச்சினை சம்பந்தமாக அருகிலிருந்த வெட்ரினரி டாக்டர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தோம்.

டாக்டரைப் பார்க்கவோ அங்கே கூட்டமான கூட்டம்.

ஊரிலேயே அவர்தான் கைராசியான டாக்டர் என்று பேச்சு.

அவரிடம் கால்நடை சென்றால், எப்படிப்பட்ட வியாதி என்றாலும் உடனே சொஸ்தமாகிவிடும் என்பது பரவலான நம்பிக்கையாம்.

என் வீட்டில் நாயோ பூனையோ இல்லாததால் எனக்கு இதுபற்ற்யெல்லாம் தெரியாமல்தான் கூடச்சென்றேன்.

டாக்டரைப் பார்க்கக் காத்திருந்த நேரத்தில், அவன் சொன்ன டாக்டர் புராணம்தான் இத்தனையும்.

கொஞ்ச நேரத்தில், எங்கள் டோக்கன் எண்ணைச் சொல்ல நாங்கள் இருவரும் உள்ளே சென்றோம்.

டாக்டர் சின்னச்சாமியிடம் கேட்டார்.

"என்ன பிரச்சினை..?".

சின்னச்சாமி சொன்னான்.

"சார்... என்னோட பண்ணைல இருக்கற ஒரு பசுமாட்டுகிட்ட ஒரு பிரச்சினை. அது சம்பந்தமா உங்ககிட்ட ஒரு தகவல் கேட்டுட்டுப் போலாம்னு வந்தோம்...!".

டாக்டர் கேட்டார்.

"பசுவைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்களா...?".

"இல்லை சார்..."

"உங்க பண்ணைல எத்தனை பசு இருக்கு...?"

சின்னச்சாமி பதில் சொன்னான்.

டாக்டர் கேட்டார்.

"மத்த பசுக்கள்கிட்ட நீங்க சொன்ன பிரச்சினை இருக்கா..?".

"இல்லை சார்... இந்த ஒரு பசுகிட்ட மட்டும்தான்...!".

டாக்டர் சற்று ஆசுவாசமாய் உட்கார்ந்து என் நண்பனின் முகத்தைப் பார்த்துக் கேட்டார்.

"இப்பச் சொல்லுங்க... அந்தப் பசுகிட்ட என்ன பிரச்சினை...?".

நண்பன் சொல்ல ஆரம்பித்தான்.

"சார்... வாங்கிட்டு வந்த நாளிலிருந்தே இப்படித்தான் பண்ணிக்கிட்டு இருக்கு. வைக்கோல் வச்சா வைக்கோலச் சாப்பிடாது, அத்துக்கிட்டுப் போய் பேப்பரைச் சாப்பிடும். களணித் தண்ணிய வச்சா அதக் குடிக்காம கால்வாய்த் தண்ணியக் குடிக்கப் போயிடும். இப்பக் குட்டி போட்டிருச்சு. ஆனா,கன்னுக்குட்டிக்கு பால் தர்றதில்ல. கறக்கப் போறவங்களை எட்டி ஒதைக்குது... முட்ட வருது..! மொத்தத்துல கண்ட்ரோலே பண்ண முடியலை. அதான் இதுக்கு என்ன பண்ணலாம்னு உங்ககிட்டக் கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்...!".

நண்பன் சொல்லி முடித்ததும் டாக்டர் கொஞ்ச நேரம் யோசித்தவர், என் நண்பனைப் பார்த்துக் கேட்டார்.

"நீங்க அந்த மாட்டை மசக்காளிபுரத்துலருந்தா வாங்கினீங்க..?".

நண்பன் ஒரு கணம் என்னைத் திகைப்புடன் பார்த்துவிட்டு, டாக்டரைப் பார்த்து ஆச்சர்யமாய்க் கேட்டான்.

"ஆமா டாக்டர்... உங்களுக்கு எப்படித் தெரியும்..? நீங்க எப்படிக் கண்டுபிடிச்சீங்க...?".

நண்பன் கேட்டதும் டாக்டர் அலுப்புடன் சொன்னார்.

"ஏன்னா... நானும் அந்த ஊர்லதான் பொண்ணெடுத்தேன்...!".
.
.
.

Saturday, August 28, 2010

கடவுள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது

துறவியைச் சந்திக்க வந்திருந்தார் ஒருவர்.


துறவி அவரை ஏறெடுத்து நோக்கினார்.

"என்ன வேண்டும்...?"

"அய்யா... நான் ஒரு புகழ்பெற்ற மடாலயத்தின் தலைவர். எங்கள் மடம் எப்போதும் இளைஞர்களாலும் இறை வழிபாட்டாலும் நிறைந்திருக்கும். ஆனால், இப்போதோ அவ்வாறு யாரும் வருவதில்லை. இருப்பவர்களும் சிரத்தையின்றி ஏனோதானோவென்று இருகிறார்கள். ஏன் இது ஏற்பட்டது...?".

துறவி அமைதியாய்ச் சொன்னார்.

"உங்கள் அறியாமைதான் காரணம். உஙகள் கூட்டதில் உங்கள் நடுவே ஒரு இறைத்தூதர் இருக்கிறார். அவர் யாரென அறிந்து கொண்டால் போதும். இக்குறைகள் எல்லாம் நீங்கிவிடும்...!".

சொல்லிவிட்டு துறவி கண்களை மூடிகொள்ள, மடாலயத்தின் தலைவர் குழப்பத்துடன் ஊர் திரும்பினார்.

அவர் சொன்னதைக் கேட்ட மடத்தின் மற்றவர்களுக்கும் ஆச்சர்யமாயிருந்தது.

இவராயிருக்குமோ..?

அவராயிருக்குமோ...?

யார் இறைத்தூதர்...?

-என்று ஒவ்வொருவரும் மற்றவரிடம் மரியாதையாய் நடந்து கொள்ள ஆரம்பித்தனர்.

ஒவ்வொருவரும் மற்றவரை இறைத்தூதராக எண்ணி பணிவுடனும் மதிப்புடனும் நடத்தினர்.

கொஞ்சநாளில் மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று.

இது வெளியே பரவ, மேலும் பலர் மடத்தைத் தேடிவர...

எண்ணற்றவர் இறைப்பணி புரிய...

அங்கே ஆன்மீகமும் புகழும் போடியிட்டு வளர ஆரம்பித்தது.

மடாலயத் தலைவருக்கு இறைத்தூதர் வேறெங்கும் இல்லை... நம்முல்லேயே ஒளிந்திருக்கிறார் என்பது அப்புறம்தான் புரிந்தது.
.
.
.

Friday, August 27, 2010

புரட்சிக்காரன் தில்லுதுர

பெட்ரோல் விலையை மறுபடியும் உயர்த்தியாகிவிட்டது.

லிட்டர் இப்போது எண்பது ரூபாய்.

நாட்டின் தலைவர்கள் எப்போதும்போல் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்கிறார்கள்.

பக்கத்து நாட்டைவிட விலை கம்மி என்கிறார்கள்.

இதன் மூலமாக விலைவாசி மறைமுகமாக ஏறுவதைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை.

மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

ஆளும்கட்சி இதைச் சப்பைக்கட்டு கட்டுகிறது.

எதிர்க்கட்சிகள் இதை வைத்து அரசியல் பண்ணுகிறது.

மக்கள் தலைவன் ஒருவன் ஒருநாள் பந்த்துக்கு அறைகூவல் விடுத்தான்.

ஏமாந்த மக்கள் அவன் பின்னால் ஒன்று திரண்டனர்.

அவன் சொன்னான்.

"மக்களே... நாம் யாரென இந்த அரசுக்குப் புரிய வைப்போம். நமது எதிர்ப்பை மௌனமாய்ப் புரிய வைப்போம். நாளை ஒரு நாள் நமது அடையாள எதிர்ப்பைக் காண்பிப்போம். நாளை யாரும் சொந்த வாகனங்களை ஓட்டக்கூடாது. பிற வாகனங்களை ஓட்டவும் அனுமதிக்கக் கூடாது. இது எதிர்ப்பு மட்டுமல்ல. ஒருநாள் நமது உலகம் மாசற்று இருக்கட்டும்...!"

மக்கள் ஒப்புக்கொண்டார்கள்.

காலையிலிருந்து யாரும் வாகனங்களை எடுக்காமலும் மற்ற வாகனங்களை ஓட விடாமலும் பார்த்துக் கொண்டாரகள்.

மறுநாள், சாலைகள் அனைத்தும் வாகனங்கள் இன்றி சப்தமில்லாமல் இருக்கும் போது தில்லுதுர தனது ஓட்டை பைக்கை டபடப என்று ஒரு முக்கிய சாலையில் ஓட்டிக் கொண்டு வந்தான்.

சாலையில் கவனித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் அவனது வண்டியைச் சூழ்ந்து கொண்டனர்.

"இன்னிக்கு யாரும் வண்டியை ஓட்டக் கூடாது எனச் சொல்லியிருக்கே... தெரியாதா..?".

தில்லுதுர கேட்டான்,"எதுக்கு...?".

கூட்டத்தில் ஒருவன் கோபமாய்ப் பதில் சொன்னான்.

"பெட்ரோல் விலை ஏற்றம் எல்லோரையும் பாதிக்குதே... அதை எதிர்த்துத்தான்...!".

தில்லுதுர கொஞ்சமும் கோபமின்றி அவர்களிடம் பதில் சொன்னான்.

"ஓகே, பெட்ரோல் விலையேற்றம் உங்களை பாதிக்குது... நீங்க ஸ்ட்ரைக் பண்ணறீங்க. என்னை அது பாதிக்கலியே... நான் ஏன் இதுல கலந்துக்கணும்...?".

வண்டியை மறித்தவர்கள் மிரண்டு போனார்கள்.

"என்னய்யா சொல்லுற... பெட்ரோல் விலையேற்றத்தால நாடே கதிகலங்கிக் கிடக்குது. இருபது ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இப்ப எண்பது ரூபாய்க்கு விக்குது. உன்னைப் பாதிக்கலைனு அலட்டிக்காமச் சொல்லுற.,எப்படி...?".

அவர்கள் கேட்டு முடித்ததும் தில்லுதுர அவர்களிடம் சொன்னான்.

"பெட்ரோல், அப்ப இருபது ரூபாய்க்கு விற்ற போதும் சரி... இப்ப எண்பது ரூபாய்க்கு விற்கும் போதும் சரி... நான் ஐம்பது ரூபாய்க்குத்தான பெட்ரோல் போடுவேன். அப்புறம் எப்படி என்னை விலையேற்றம் பாதிக்கும்...?".
.
.
.

Wednesday, August 25, 2010

திருடர்களைப் பிடிப்பது எப்படி...?

இது நடந்து ஒரு மாதம் இருக்கும்.

என் பக்கத்து வீட்டில் ஒரு நள்ளிரவில் திருடு போய்விட்டது.

அதுவும் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.

பக்கத்து காம்பவுண்டில் இருந்தது சுமித்ராவின் குடும்பம்.

அன்று வெளியூர் போவதாக என்னிடம் சொல்லிவிட்டுதான் கிளம்பினார்கள்.

அப்போது, இரவு ஒரு ஒன்பது மணி இருக்கும்.

ட்ரெயினுக்கு நேரமாச்சு என்று அவசர அவசரமாகக் கிளம்பிப் போனார்கள்.

இரவு பதினோரு மணிப்போல் பார்த்த போது அவர்கள் வீட்டில் லைட் எரிந்துகொண்டிருந்தது.

டீவியில் படம் ஓடிக் கொண்டிருந்தது.

சரி, ட்ரெயின் மிஸ் ஆகிவிட்டதுபோல... காலையில் விசாரித்துக் கொள்வோம் என்று தூங்கப் போய்விட்டேன்.

காலையில் எழுந்து பார்த்தால் கதவு தாழ்ப்பாளை நெம்பி யாரோ உள்ளே போய்த் திருடி இருப்பதாகத் தெருவே களேபரமாய் இருந்தது.

பிறகு, சுமித்ராவின் கணவருக்குப் போன் செய்து, அவர் வந்து, போலீசுக்குப் புகார் எல்லாம் கொடுத்து ...

அது ரெண்டு மூணு நாட்கள் ஆகிவிட்டது.

ஒருநாள், சுமித்ராவின் வீட்டுக்கு வந்த போலீஸ் என்னையும் விசாரித்தது.

நான் நடந்தவைகளைச் சொல்ல, அதை ஒருமுறை ஸ்டேஷனுக்கு வந்து எழுதித் தர முடியுமா என்று கேட்டார்கள்.

"தாரளமாய்..." என்ற நான் மறுநாள் என் நான்கு மகன் டேனியையும் அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்குப் போனேன்.

நான் எழுதிக் கொண்டிருக்கும்போது, அங்கிருக்கும் 'வான்டட் கிரிமினல்'களின் போட்டோக்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த டேனி கிளம்பும்போது அந்த இன்ஸ்பெக்டரிடம் கேட்டான்.

"அங்கிள்... இந்த போட்டோல இருக்கறவங்க எல்லாம் யாரு...?"

அந்த இன்ஸ்பெக்டர் என் மகனிடம் மிகுந்த கனிவுடன் பதில் சொன்னார்.

"அவனுக எல்லாம் ரொம்பக் கெட்ட பசங்க....!".

டேனி லேசான குழப்பத்துடன் திரும்பி,"எதுக்காக கெட்ட பசங்களோட போட்டோவ இங்க மாட்டி வச்சிருக்கீங்க...?".

இன்ஸ்பெக்டர் சொன்னார்.

"அவனுகளைப் பாத்ததும் தேடிப் பிடிக்கறதுக்காகத்தான் அவனுகளோட போட்டோவை இங்கே மாட்டி வச்சிருக்கோம்...!".

இன்ஸ்பெக்டர் சொன்னதும் டேனி தனது சந்தேகம் தீராமல் அவரிடம் மீண்டும் கேட்டான்.

"ஏன் அங்கிள்... அவங்களை இப்பத் தேடிப் பிடிக்கறதவிட இந்த போட்டோவ எடுக்கும் போதே பிடிச்சிருக்கலாமே அங்கிள்...!".
.
.
.

Friday, August 20, 2010

தில்லுதுரயும் தீவிரவாதியும்

ஒரு ஹிந்திக்காரன், நம்ம தில்லுதுர, ஒரு மலையாளி மூவரும் ஒரு பயங்கரத் தீவிரவாத கும்பலிடம் மாட்டிக்கிட்டாங்க.

தீவிரவாதியின் தலைவனோ, அவனோட கோரிக்கைகள் எதுவும் சரியாகததால இவங்க மூணு பேரையும் கொல்லற முடிவுல இருந்தான்.

இவங்களும் ரொம்பக் கெஞ்சிக்கூத்தாடிப் பாத்துட்டாங்க.

அவன் ஒண்ணும் மசியறதாத் தெரியல.

கடைசியா அவன் சொல்லியும் சொல்லிட்டான்.

"இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க மூணூ பேரையும் கொல்லப் போறேன். உங்களோட கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லுங்க. முடிஞ்சா நிறைவேத்தி வைக்கிறேன்...!'.

அந்த ஹிந்திக்காரன் சொன்னான்.

"அய்யா... நான் எதுவும் சொல்ல விரும்பலை. கொல்லும்போது கொஞ்சம் வலியில்லாம சட்டுனு கொன்னுடுங்க...!'.

"ஓகே...!' என்ற தீவிரவாதித் தலைவன் தில்லுதுர பக்கம் திரும்பினான்.

"சொல்லு... உன்னோட கடைசி ஆசை என்ன..?".

'கடைசி காலத்தில் நாம் பயந்து செத்ததாக வரலாறு சொல்லிவிடக் கூடாது...' என்று யோசித்த தில்லுதுர,"எனக்கு ஒரு ஐந்து நிமிடம் பேச அனுமதி கொடுங்கள். நான் எங்கள் தமிழரின் வீரம், தமிழரின் ஒற்றுமை, தமிழின் பெருமை பற்றிப் பேச விரும்புகிறேன். அதுவே எனது கடைசி உரையாய் இருக்கணும்னு விரும்பறேன்...!" என்றான்.

"சரி...!' என்ற தீவிரவாதித் தலைவன் அந்த மலையாளியிடம் திரும்பினான்.

"உன்னோட கடைசி ஆசை என்ன..?'.

ஏற்கனவே மிரண்டு போயிருந்த மலையாளி... இன்னும் அதிக மிரட்சியோடு சொன்னான்.

"தயவுசெய்து அவன் பேசறதுக்கு முன்னாடி என்னைக் கொன்னுடுங்க...!'.
.
.
.

Thursday, August 19, 2010

மூன்றாவது பதிப்பு

டெட்சுகன் ஒரு ஆரம்ப ஜென் குருக்களில் ஒருவர்.

அவர் ஜென் சூத்திரங்களை சீன மொழியிலிருந்து ஜப்பானிய மொழியில் மொழி பெயர்க்க வேண்டுமென்று முடிவு செய்தார்.

அதற்குத் தேவையான பெரும் பணத்தை சேகரிக்க ஜப்பானின் கிராமங்கள், நகரங்கள் எனப் பல இடங்களுக்குச் சென்று, பலரையும் சந்தித்து நிதி திரட்டினார்.

தேவையான நிதி திரட்டுவதற்குள் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஓடிவிட்டன.

நிதி சேர்ந்த சமயம், உஜி நதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கால் மக்கள் தமது வீடு,வாசல்,உடைமைகளை இழந்து உணவின்றித் தவித்தனர்.

டெட்சுகன் தாம் திரட்டிய பொருள் அனைத்தையும் மக்கள் மறுவாழ்விற்காகச் செலவிட்டார்.

மீண்டும் புதிதாக நிதி திரட்டத் தனது பயணத்தைத் துவக்கினார்.

மீண்டும் பல ஆண்டுகள் கழிந்து ஒருவாறு பணம் சேர்ந்த சமயம்... நாடெங்கும் கொள்ளை நோய் பரவியது.

இந்த முறையும் டெட்சுகன் மக்கள் உயிரைக் காக்க தான் திரட்டிய பணத்தைச் செலவிட்டார்.

பின்னர் மூன்றாம் முறை, அடுத்த இருபது ஆண்டுகள் பொருள் சேர்த்து தனது லட்சியப்படி சீன சூத்திரங்களை ஜப்பானிய மொழியில் ஏழாயிரம் படிகள் எடுத்தார்.

அதன் முதல்பிரதி கியோடோ நகரின் ஓபகு மடாலயத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அதனைப் பார்வையிட்ட ஜென் குருமார்கள் தமது சீடர்களிடம்,"டெட்சுகன் வெளியிட்ட இந்தப் பதிப்பு... மூன்றாவது பதிப்பு. இதைவிடக் கண்ணுக்குத் தெரியாத அந்த முதல் இரண்டு பதிப்புகளும்தான் அற்புதமானவை!" என்று மகிழ்வுடன் சொன்னார்கள்.
.
.
.

Tuesday, August 17, 2010

எல்லாமே இலவசம்

துறவி ஒருவர் தன்னுடைய சிஷ்யர்களுக்கு பொறுமையைப் பற்றிக் கற்றுக் கொடுக்க ஒரு புதுமையான ஏற்பாடு செய்திருந்தார்.

அவருடைய சிஷ்யர்கள் யாரும் ஒரு வருடத்திற்கு ஊரைவிட்டு வெளியே செல்லக் கூடாது.

அது மட்டுமல்ல... அவருடைய சிஷ்யர்களை யாரும் நிந்தித்தாலோ அடித்தாலோ கோபப் படக்கூடாது.

மேலும், நிந்தித்தவர்களுக்கு அந்த சிஷ்யர்கள் பரிசுப் பணமும் தர வெண்டும்.

அதுவும் இந்த ஊரில் மட்டும்தான்.

சிஷ்யர்கள் ஊருக்குள் வரும்போது அந்த குருவுக்காக அவர்களை வணங்குபவர்கள் எப்படி இருந்தார்களோ அதேபோல் திட்டுபவர்களும் இருந்தார்கள்.

சிஷ்யர்கள் எப்படி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்களோ அதேபோல் திட்டுபவர்களையும் பொறுத்துக் கொண்டதோடு அவர்களுக்கு குருவின் சொல்படி பரிசுப் பணமும் கொடுத்து வந்தார்கள்.

இப்படியே இந்த ஊரில் ஒரு வருடம் கழிந்தது.

சிஷ்யர்கள் இப்போது பக்கத்து ஊர்களுக்கும் செல்ல ஆரம்பித்தார்கள்.

அங்கேயும் இவர்களிடம் வாழ்த்துப் பெற வந்தவர்களும் இருந்தார்கள்... திட்ட வந்தவர்களும் இருந்தார்கள்.

ஆனால், வந்தவர்கள் எவ்வளவு திட்டினாலும் அவர்கள் அதைச் சந்தோசமாய் ஏற்றுக் கொண்டு சிரித்தபடியே இருப்பதைப் பார்த்தவர்கள், 'இவர்களுக்குத்தான் எவ்வளவு ஞானம்...?' என்று வியந்து போனார்கள்.

இதை பார்த்துக் கொண்டே இருந்த ஒருவர், ஒருநாள் தாங்க முடியாமல் ஒரு சிஷ்யரிடம் கேட்டார்.

"எப்படி உங்களால் இத்தனை திட்டுக்களையும் கோபம் இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடிகிறது...?".

அதற்கு அந்த சிஷ்யர், அவரிடம் புன்னகை மாறாமல் சொன்னார்.

"முன்பெல்லாம் நாங்கள் இதற்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தோம்... இப்போதெல்லாம் இது எங்களுக்கு இலவசமாகவே கிடைக்கிறது...."

ஞானம் பெறுவது எவ்வளவு சுலபம் பாருங்கள்...?
.
.
.

Monday, August 16, 2010

ஆண் என்ன பெண் என்ன...?

நீலிமா என்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு ஆசிரியை.

இன்னும் சொன்னால் எனக்கு மிக நெருங்கிய தோழி.
அவள் மிகச் சமீபமாய் குழந்தைப் பேறு அடைய இருக்கிறாள்.

நாட்கள் நெருங்கி வரவர அது பெண் குழந்தையாய் இருக்குமோவென்று அவளுக்கு பயம் அதிகமாகிக் கொண்டே வந்தது.

பெண் குழந்தை மீது அவளுக்கு ஒன்றும் வெறுப்பு இல்லை என்றாலும், அதை வேண்டாம் என்பதற்கு ஒரு ஆச்சர்யமான காரணம் இருந்தது அவளிடம்.

நீலிமாவின் வீட்டில் யாருக்கும் ஆண் குழந்தை பிறந்ததே இல்லை என்பதுதான் அது.

அவளுடன் பிறந்தவர்கள் இருவரும் பெண்கள்.

அவள் அம்மாவுக்கும் உடன் பிறந்த நான்கும் பெண்கள்.

அவள் பாட்டிக்கும் பாட்டியின் அம்மாவிற்கும் உடன் பிறந்தது எல்லாம் பெண்கள் என அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் பெண்களாய்ப் பிறந்து வந்ததுதான் அந்தப் பரம்பரை சோகம்.

இது பழைய கதை என்றால், சமீபமாய்த் திருமணமான நீலிமாவின் அக்கா இருவருக்கும் சொல்லி வைத்தது போல் ஆளுக்கு இரண்டு பெண் குழந்தைகளே.

எனவே... நீலிமா தனக்கு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட ஆரம்பித்தாள்.

முதலில் சாதரண ஆசையாய்த் தெரிந்த இது பின்னர் வளர்ந்து வளர்ந்து வெறியாய் மாற ஆரம்பித்துவிட்டது.

கடைசி கடைசியாய்... பெண் குழந்தை இவள் ஏற்றுக்கொள்ள மாட்டாளோ என பயப்படும் அளவுக்கு அவளது ஆண்குழந்தைப் பித்து தலைக்கேறிப்போய்க் கிடந்தது.

அன்றும் அப்படித்தான் நீலிமா வேலைக்கு வந்து கொஞ்ச நேரத்தில் அவளுக்கு பிரசவ வலி வந்துவிட்டது.

ஆம்புலன்ஸ் வந்து கிளம்பும்வரை என் கையைப் பிடித்துக் கொண்டு 'பையனாப் பிறக்கணும்னு கும்பிட்டுக்கடி...!' என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.

எனக்கும் என்னவோ... அவளுக்கு பையனே பிறக்க வேண்டும் என்று தோன்றியது.

நீலிமா கிளம்பிப்போன அன்று பூராவும் அவளுக்கு பிரசவம் ஆகவில்லை.

கணவர் வராததால், அவளைப் போய்ப் பார்க்கவும் முடியவில்லை.

மறுநாள், காலையில் சமையல்.. பையனை கிளம்ப வைத்து, அவரை வேலைக்கு அனுப்பி, காலேஜ் உள்ளே நுழைந்ததிலிருந்து விடாமல் க்ளாஸ் என இருந்ததால் நீலிமாவைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

கிட்டத்தட்ட ஒரு மணி... லன்ச் சமயத்தில் ரெஸ்ட் ரூம் வந்து  செல்போனை எடுத்தால், நீலிமாவின் போனில் இருந்து நாலைந்து மிஸ்டு கால் வந்திருந்தது.

ஒரு குற்ற உணர்ச்சியுடனும், அவளுக்கு ஆண் குழந்தையே பிறந்திருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் நீலிமாவிற்கு போன் செய்தேன்.
மறுமுனையில் அவள்தான் எடுத்தாள்.

காலை மூன்றரை மணிக்கே பிரசவம் ஆகிவிட்டதாம்... சுகப் பிரசவம்.

கொஞ்சம் பயத்துடனே என்ன குழந்தை என்று கேட்டேன்.

"ஏய்டி இவளே... நீ கும்பிட்டது வீண்போகலைடி. எங்க வம்சத்துலயே இல்லாம எனக்கு பையனே பொறந்துட்டாண்டி....! அம்மா அப்பா அக்கா அக்கா வீட்டுக்காரரு எல்லாருக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம்...! எல்லாரும் குழந்தைய கையில தூக்கிட்டே அலையறாங்க. கீழ வைக்கலேன்னா பாத்துக்கோயேன்".

மிகுந்த சந்தோசத்துடன் அவள் பேசப் பேச நான் ஆர்வத்துடன் கேட்டேன்.

"ஆமா... பையன் யாரு மாதிரி இருக்கான்..? அப்பா மாதிரியா,  இல்லை உன்னை மாதிரியா...?".

நீலிமா இன்னும் அந்தச் சந்தோசம் மாறாத குரலில் சொன்னாள்.

"தெரியலடி... மூஞ்சியை யாரு பார்த்தா...?".
.
.
.

Monday, August 9, 2010

பிறந்தநாள் பரிசு

டேனி  படிக்கும் யூகேஜி வகுப்பின் ஆசிரியையின் பிறந்த நாள் அது.
 வகுப்பு டீச்சர் தனது மாணவர்களிடமிருந்து பரிசுகளைப் பெற்றுக்கொண்டிருந்தார்.
முதலில் ஒரு பூக்கடை முதலாளியின் மகன் ஒரு பரிசுப் பொட்டலத்தைக் கொண்டு வந்தான்.
பரிசைப் பெற்றுக் கொண்ட டீச்சர் சொன்னார்.
"ஒரு மாஜிக்... இதுல என்ன இருக்குன்னு நான் சொல்லட்டுமா..?".
அந்தச் சிறுவன் ஆச்சரயமாய்க் கேட்டான்.
"எங்கே சொல்லுங்க பார்க்கலாம்...?".
டீச்சர் கண்களை விரித்துக் கொண்டு சொன்னார்.
"பூச்செண்டு...!".
"கரெக்ட்..!" மிகுந்த ஆச்சர்யத்துடன் கேட்டான், "எப்படிக் கண்டுபிடிச்சீங்க...?".
"அதுதான் சொன்னேனே மாஜிக் என்று...!" என்ற டீச்சர்... அடுத்த சிறுமியிடம் சென்றார்.
அவள் ஒரு ஸ்வீட் ஸ்டால் முதலாளியின் மகள்.
"நீ என்ன கொண்டு வந்திருக்கேன்னு சொல்லட்டுமா..?".
அந்தச் சிறுமி மேலும் ஆச்சர்யத்துடன்," சொல்லுங்க டீச்சர்...!" எனறாள்.  
டீச்சர் அந்தப் பெட்டியை வாங்கிக் சொன்னார், "ஸ்வீட் பாக்கெட்... சரியா..?"
"கரெக்ட்...!"என்ற சிறுமி கேட்டாள், "எப்படி டீச்சர்...?".
டீச்சர் சிரித்தபடியே  சொன்னார்," அதுதான் மாஜிக்...!".
கேட்டுக் கொண்டே அவர் வந்தது டேனியிடம்.
டேனியின் அப்பா ஒரு ஜுஸ் ஸ்டால் வைத்திருப்பது அவருக்குத் தெரியும். எனவே தனது மாஜிக் ஒன்றும் பெரிய கஷ்டமாய் இருக்காதென்பது அவருக்குத் தெரியும்.
டேனி நீட்டிய பார்சல் அவர் நினைத்ததைப் போலவே  சற்றுப் பெரியதாய் இருந்தது.
கையில் வாங்கிய போது, உள்ளே என்னவோ  உருளுவதும் என்னதோ உடைந்து சொட்டுச் சொட்டாய் லீக் ஆவதும் தெரிந்தது.
டீச்சரின் மாஜிக் இன்னும் சுலபமாய்ப் போனது.
நம்பிக்கையுடன் கேட்டார், "உள்ளே என்ன இருக்குன்னு சொல்லட்டுமா...?".
டேனி கண்கள் நிறைய  ஆச்சர்யத்துடன் கேட்டான் ,"எங்கே சொல்லுங்க...?".
டீச்சர் சொன்னார்,"ஆப்பிள் ஜுஸ்...!"
டேனி தலையை ஆட்டினான்,"இல்லை...!".
பெட்டிக்குள் இப்போது நன்றாகவே உருண்டது.
கொஞ்சம் குழப்பத்துடன் டீச்சர் வடிந்துகொண்டிருந்த ட்ராப்பில் ஒரு ட்ராப்பைத் தொட்டுச் சுவைத்துவிட்டு,"நன்னாரி சர்பத்..." என்றார் ஆவலுடன்.
டேனி மறுபடி தலையசைத்தான்'"இல்லை...!".
டீச்சர் இன்னொரு சொட்டையும் சுவைத்துவிட்டுச் லேசாய்க் உப்புக் கரிக்கவே கேட்டார்," சால்ட் லெமன்...?".
"இல்லை..." டேனி முற்றிலும் தலையசைத்து மறுக்க, டீச்சர் தன் மாஜிக் பலிக்காத சோகத்துடன் சோர்வாய்ச் சொன்னார்.
"சரி, எனக்குத் தெரியல. அதுல என்ன இருக்குன்னு நீயே சொல்லு...!".
டீச்சர் அவ்வாறு சொன்னதும் டேனி சந்தோசமாய்ச் சொன்னான்.
"அது என்னோட நாய்க்குட்டி...பப்பி...!".
.
.

Wednesday, August 4, 2010

மனைவியைக் காணோம்

தில்லுதுர ஒரு பொருட்காட்சியில் தன் மனைவியைத் தொலைத்துவிட்டார்.
பொருட்காட்சியிலோ கட்டுக்கடங்காத கூட்டம்.
எங்கே எதைத் தேடிக் கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை... அவளும் போன் செய்யவில்லை; தில்லுதுர போன் செய்தாலும் எடுக்கவில்லை.
தில்லுதுரக்கு கோபமான கோபம்.
கூட்டம், புழுக்கம்,தூசி,சப்தம் என இத்தனைக்கும் நடுவே மனைவியைத் தேடிச் சுற்றிச் சுற்றி டயர்டாகிப் போனார் அவர்.
சரி, ஒரு ஜூஸாவது குடிக்கலாம் என்று பொருட்காட்சியிலேயே ஜூஸ் கடையில் போய், "ஒரு ப்ளெய்ன் சாத்துக்குடி..." என்று சொல்லிவிட்டு கண்களைக் கூட்டத்தில் அலையவிட்டார்.
ம்ஹூம்... மனைவி கண்ணில் மாட்டவேயில்லை.
ஜூஸ் வந்து சாப்பிடும்போதுதான் தில்லுதுர தன் எதிரே நிற்கும் அவனைக் கவனித்தார்.
நல்ல அழகான இளைஞன்.
பார்க்க ஒரு சினிமா நடிகன் போலிருந்தான்.
உடையிலும் அணிந்திருக்கும் கண்ணாடி ஷூ போன்றவற்றிலும் அவன் பணக்காரத்தனம் தெரிந்தது.
கையில் செல்போனை வைத்துக் கொண்டு பரபரவென யாருக்கோ ட்ரை பண்ணிக் கொண்டிருந்தான்.
தில்லுதுர தன் கவலை மறந்து, கொஞ்சம் ஆர்வமாய் அவனைக் கவனிக்க ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரம் போனில் ட்ரை செய்வதும் கொஞ்ச நேரம் கூட்டத்தில் தேடுவதுமாய் இருந்த அவனிடம் தில்லுதுர கேட்டார்.
"என்ன பிரதர்... என்ன பிராப்ளம்...?".
அவனும் தில்லுதுர போலவே கூட்டத்தில் தன் மனைவியைத் தொலைத்துவிட்டுத் தேடும் தனது சோகத்தைச் சொன்னான்.
"போனைக் கூட எடுக்கமாட்டேங்கறா சார்...!".
தில்லுதுர அலுப்புடன் பதில் சொன்னார்.
"எல்லாப் பொண்ணுகளும் அப்படித்தாம்பா... எம் பொண்டாட்டியையும் நான் உன்னை மாதிரித்தான் தேடிக்கிட்டு இருக்கேன். சரி, ஒண்ணு பண்ணுவோம். நாம ரெண்டு பேரும் ஒண்ணாச் சேர்ந்து தேடுவோம். என் வொய்ஃபப் பாத்தா நீ சொல்லு... உன் வொய்ஃபப் பாத்தா நான் சொல்லறேன்... என்ன...?".
அவனும் ஒத்துக்கொண்டான்.
"சரி... உன் வொய்ஃப் எப்படி இருப்பா? அடையாளம் சொல்லு...!".
அவன் சொல்ல ஆரம்பித்தான்.
"சார், அவ பேரு ஜெஸிந்தா. இருபத்திரெண்டு வயசு. ரொம்ப அழகா இருப்பா...!".
தில்லுதுர ஆர்வமாய் நிமிர்ந்து உட்கார்ந்து கேட்டார்.
"இப்பிடிச் சொன்னா எப்பிடிப்பா.... ஏதாவது குறிப்பான அடையாளம் இருந்தாச் சொல்லு...!"
அவன் தொடர்ந்தான்.
"சார்... ஜெஸி உயரமும் கிடையாது, குள்ளமும் கிடையாது... அளவான உயரம். அதுக்குத் தகுந்த உடம்பு. உதட்டுக்கு மேல ஒரு சின்ன மச்சம் இருக்கும். நல்ல வட்டமான முகத்துல ஒரு சின்ன ஸ்டிக்கர்ப் பொட்டு. நல்லா லூஸ் ஹேர் விட்டிருந்தா. அப்புறம் ட்ரெஸ் வந்து முக்காக்காலுக்கு தொடையைக் கவ்வுன மாதிரி ஸ்கைப்ளூ கலர்ல ஸ்ட்ரெட்ச் பேன்டும்... மேல வொயிட் கலர்ல ஒரு ட்ரான்ஸ்பரென்ட் சர்ட்டும் போட்டிருந்தா...!".
என்றவன் நிமிர்ந்து தில்லுதுரயப் பார்த்துக் கேட்டான்.
"சார்... நீங்க உங்க வொய்ஃப் அடையாளம் ஒண்ணும் சொல்லலியே...!".
கேட்டதுதான் தாமதம் சட்டென்று பதிலளித்தார்.
"அவ கெடக்கிறா விடுங்க.... மொதல்ல உங்க வொய்ஃப்பத் தேடுவோம்...!".

Tuesday, August 3, 2010

சொல்லாதே..!

துறவி ஒருவர் மலைப் பகுதியில் குதிரையில் வந்து கொண்டிருந்தார்.
நேரமோ மாலை நேரம்.
இருட்டத் துவங்கியிருந்தது.
அப்போது பாதையின் ஓரத்தில் ஒருவன் மயங்கிக் கிடப்பதைத் துறவி பார்த்தார்.
குதிரையிலிருந்து இறங்கிய அந்தத் துறவி அவனை அசைத்துப் பார்த்தார்.
அவன் அசையவில்லை.
எனவே, துறவி தன் கையிலிருந்த தண்ணீர் குடுவையிலிருந்து நீரைக் கொஞ்சம் முகத்தில் தெளித்து அவனை மயக்கம் தெளிவித்தார்.
மயக்கம் தெளிந்தவனைக் கைத்தாங்கலாய் அழைத்துக் குதிரையில் ஏற்றி அமரவைத்தார்.
அவன் ஏறி அமர்ந்த மறுகணம், லகானைப் பற்றி ஒரு சொடுக்கு சொடுக்க குதிரை திருடனுடன் சடுதியில் பறந்தோடி மறைந்துவிட்டது.
துறவிக்கு அப்போதுதான் அவன் திருடன் என்பதும் இதுவரை அவன் நடித்திருக்கிறான் என்பதும் புரிய வந்தது.
குதிரை பறிபோனதால் அவர் மெல்ல நடந்து, மலையைக் கடந்து, பொழுது புலரும் நேரத்தில் நகரத்தை அடைந்தார்.
நகரத்தை அடைந்த துறவி நேராகச் சந்தைக்குப் போனார்.
அங்கே சந்தையில் திருடன்... இவர் குதிரையை விற்க நின்று கொண்டிருந்தான்.
துறவி மெல்லச் சென்று அவன் தோளைத் தொட்டார்.
திரும்பிப் பார்த்த திருடன் மிரண்டு போனான்.
துறவி மெல்லச் சிரித்தபடிச் சொன்னார்,"சொல்லாதே..!".
திருடன் அதிர்ச்சி மாறாமல்,"என்ன?எது?" என்று உளறினான்.
துறவி முன்னிலும் அதிக அன்புடன் சொன்னார்.
"குதிரையை நீயே வைத்துகொள். ஆனால், நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிய வந்தால்... எதிர்காலத்தில் உண்மையிலேயே சாலையில் யாராவது மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன்வரமாட்டார்கள். புரிகிறதா...?".
திருடன் கண்ணில் இப்போது கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
சொல்லிவிட்டு துறவி தன்வழியே போய்க் கொண்டிருந்தார்.

Monday, August 2, 2010

திருடன் போலீஸ்

பக்கத்திலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு விடிந்த கொஞ்ச நேரத்தில் அந்த போன் வந்தது.
போனை ஒரு போலிஸ்காரர் எடுத்தார்.
"ஹலோ...!".
மறுமுனையில் குரல் ரகசியமாய்ச் சொன்னது.
"சார்... எங்கள் தெருவில் மகேஷ் வீட்டில் பெரிய பெரிய மரக்கட்டைகளுக்குள்ளே வைத்து போதைப் பொருள்களைக் கடத்துகிறார்கள்....!"
"தகவலுக்கு நன்றி. அந்த வீட்டின் முகவரி சொல்ல முடியுமா...?"
அந்தக் குரல் சொல்லச்சொல்ல போலீஸ்காரர் குறித்துக் கொண்டார்.
"சரி... நீங்கள் யார் எனச் சொல்ல முடியுமா..?".
போன் டக்கென்று துண்டிக்கப்பட்டது.
சற்று நேரத்தில் போலீஸ் அந்த வீட்டை ரவுண்ட் செய்தது.
நேராய் வீட்டைச் சோதனையிட்ட போலீஸ், பின்பக்கம் இருந்த பெரும் பெரும் மரக்கட்டைகளைக் கண்டுபிடித்தது.
உஷாரான போலீஸ் டீம்... ஏற்கனவே கொண்டு வந்திருந்த கோடாரிகளை உபயோகப்படுத்தி எல்லா மரக்கட்டைகளையும் துண்டு துண்டாக வெட்டியெறிந்தது.
கடைசிக் கட்டை வரைக்கும் துண்டாடிய பிறகும் போதைப் பொருள் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாத போலீஸ் மகேஷிடம் சாரி சொல்லிவிட்டுக் கிளம்பியது.
போலீஸ் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் மகேஷுக்கு போன் வந்தது.
"மகேஷ்.. நான் தினகர் பேசறேன். உங்க வீட்டுக்குப் போலீஸ் வந்ததா...?"
மகேஷ் பதில் சொன்னான்.
"ஆமாம்...!".
"கட்டைகளைப் பிளந்ததா...?".
"ஆமாம்...!".
சொன்னதும் மறுமுனையில் குரல் புன்னகையுடன் சொன்னது.
"வெரிகுட்,இனி இப்ப உன்னுடைய முறை.!நீ போன் பண்ணு... எனக்கு என்னோட தோட்டத்து மண்ணை உழுதுவிட வேண்டும்...!".