Saturday, December 31, 2011

புத்தாண்டில் தில்லுதுர

புத்தாண்டுக் கொண்டாட்டம் முடிந்து இரவு மூன்று மணி.

தில்லுதுர தான் கொண்டு வந்த காரை பார்க்கிங்கிலேயே விட்டுவிட்டு, அடித்த தண்ணியின் மப்பு தீராமல் இடதும்வலதுமாய் தள்ளாடியபடி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

நல்ல போதையில் சாலையின் மத்தியில் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த போலீஸ் நைட் பேட்ரோல் வண்டி சைரன் அடித்தபடி வந்து தில்லுதுரயின் அருகில் நின்றது.

இறங்கிய இன்ஸ்பெக்டர் கோபத்துடன் தில்லுதுரயிடம் கேட்டார்.

"யோவ்... ராத்திரி மூணு மணிக்கு இங்க எங்கய்யா சுத்திக்கிட்டு இருக்க?".

கேட்ட இன்ஸ்பெக்டரிடம் பாவமாய் தில்லுதுர சொன்னார்.

"நா... நான் இப்ப ஒரு பிரசங்கம் கேக்க போயிட்டிருக்கேன் இன்ஸ்பெக்டர்.!".

கேட்ட இன்ஸ்பெக்டர் கடுப்புடன் கேட்டார்.

"யோவ்... எங்களைப் பாத்தா எப்பிடித் தெரியுது.? இந்த ராத்திரி மூணு மணிக்கு எங்கய்யா பிரசங்கம் நடக்குது? யாரு பிரசங்கம் பண்ணப் போறா.?".

கேட்ட இன்ஸ்பெக்டர் முகத்தைப் பரிதாபமாய் பார்த்தபடியே தில்லுதுர சொன்னார்.

"எங்க வீட்டுல இன்ஸ்பெக்டர்... என் மனைவி..!".
.
.
.

Tuesday, September 20, 2011

செக்கில் கையெழுத்திடுவது எப்படி.?

தில்லுதுர முதன்முதலாய் தனது செக்கின் மூலமாக பணம் எடுப்பதற்காக பேங்கிற்குள் நுழைந்திருந்தார்.

பணம் எடுப்பதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அடுத்தவரிடம் கேட்க வெட்கப்பட்டு இங்கும் அங்குமாய் கொஞ்ச நேரம் அலைந்தவர், பிறகு கூட்டம் அதிகமில்லாத ஒரு கேஷியரின் டேபிளை நோக்கி நகர்ந்தார்.

அந்த கேஷியர் டேபிளில் கூட்டம்தான் இல்லையே தவிர, அவர் பயங்கர பிஸியாய் வேலை செய்து கொண்டிருந்தார்.

தில்லுதுர மெல்லிய குரலில் அவரிடம் கேட்டார்.

"சார்... இந்த செக்குல பணம் எடுக்க என்ன சார் செய்யணும்.?".

தலையே நிமிராமல் வேலை செய்தபடியே அந்த கேஷியர் சொன்னார்.

"மொதல்ல அந்த செக்குல முன்னாடிப் பக்கம் கேட்டிருக்கற டீடெய்ல்ஸ் எல்லாம் ஃபில்லப் பண்ணுங்க..!".

தில்லுதுர தலையை ஆட்டியபடி சொன்னார்.

"சார்... அதெல்லாம் அல்ரெடி ஃபில்லப் பண்ணிட்டேன் சார்..!".

அந்த கேஷியர் தொடர்ந்து சொன்னார்.

"அப்படியே செக்கோட பின்னாடிப் பக்கம் ஒரு கையெழுத்தை போட்டு இங்கே கொடுங்க..!".

தில்லுதுர கேட்ட உதவி கிடைத்த மகிழ்ச்சியுடன், "தாங்க்ஸ் சார்..!" என்றபடி நகரும்போது, அந்த கேஷியர் சொன்னார்.

"கையெழுத்து இங்க பேங்க்ல நீங்க லெட்டர் கொடுத்தப்ப எந்த மாதிரிப் போட்டீங்களோ... அதே மாதிரிப் போடணும்..!".

தில்லுதுர இன்னும் மகிழ்ச்சியுடன், "ஓகே சார்..!" என்றபடி சந்தோஷமாய் கையெழுத்திட்டு கேஷியரிடம் செக்கை திரும்ப நீட்டினார்.

செக்கை வாங்கி முன்பக்கத்தை சரிபார்த்துவிட்டுத் திரும்பிய கேஷியர் அரண்டுபோய் தில்லுதுரயைப் பார்த்தார்.

அதில்...

"தங்கள் உண்மையுள்ள,
தில்லுதுர"

என்றிருந்தது....
.
.
.

Wednesday, September 14, 2011

என்ன கொடும சரவணா இது..?

தில்லுதுர வாழ்க்கையில் கடினமாகப் போராடிக் கொண்டிருந்த நேரம்.

எங்கு தேடினாலும் வேலை கிடைக்கவில்லை.

வேலை இல்லாததால் வருமானம் இன்றிப்போக, அவருக்கு உறவில் யாரும் பெண் கொடுக்கத் தயாராயில்லை.

திருமண வயது தாண்டிக் கொண்டிருந்தது பற்றிய கவலையில் சுற்றிக் கொண்டிருக்கும்போது தான் தில்லுதுர ஒரு தினசரியில் அந்த விளம்பரத்தைப் பார்த்தார்.

ஒரு பயங்கரப் பணக்காரப் பெண்ணுக்கு ஏற்ற வரன் கேட்டு வந்திருந்தது அந்த விளம்பரம்.
போய்ப் பார்த்தால், அந்தப் பெண்ணோ சகிக்க முடியவில்லை.

'எவ்வளவு கோடி கொடுத்தாலும் வேண்டாம்..' என்று வந்தவன் எல்லாம் தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறான்.

வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமே...
'ஒகே..' சொன்னது தில்லுதுர மட்டும்தான்.

ராஜா போல இருக்கும் தில்லுதுரயை யாரும் வேண்டாம் என்பார்களா..?

அந்தக் கோடீஸ்வரி தில்லுதுரயை செலெக்ட் செய்து விட்டாள்.

திருமணம் எல்லோரும் ஆச்சர்யப் படும்படி இனிதே முடிந்தது.

நண்பர்களின் கேலிப் பார்வைகளை தில்லுதுர கண்டுகொள்ளவேயில்லை.

அதுதான் அப்படியென்றால், திருமணம் முடிந்து எங்கே சென்றாலும் அந்த அவலட்சண மனைவியையும் உடன் அழைத்தபடியே சுற்றினான்.

சினிமாவுக்குப் போனால், பார்க்குக்குப் போனால், பீச்சுக்குப் போனால், ஆஃபீஸுக்குப் போனால் என எங்கேயும் வித்தியாசம் இல்லாமல் மனைவியை உடன் அழைத்துக் கொண்டே சுற்றினான் தில்லுதுர.

நண்பர்களுக்கோ இதுதான் ஆச்சர்யமான ஆச்சர்யம்...'இதென்னடா இது... இப்படி ஒரு லவ்வு' என்று.

ஒருநாள் ஒருவன் அதை தில்லுதுரயிடம் கேட்டும் விட்டான்.

"நண்பா... நீ பணத்திற்காகத்தான் அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டாயென்பது தெரியும். ஆனால், இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு ஜாலியாய் இருப்பதை விட்டுவிட்டு, இந்த அளவுக்கு எங்கே போனாலும் அவளையும் கூடவே கூட்டில் கொண்டு சுற்றுவதுதான் ஏன் என்று புரியவில்லை..!".

அவன் கேட்டு முடித்ததும் தில்லுதுர சோகமாய்ச் சொன்னான்.

"என் மனைவி கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. நான் அவளை விட்டு எப்பப் பிரிஞ்சு போனாலும் அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டுத்தான் போகணும். அதெப்படி முடியும் சொல்லு... அதனால அதிலிருந்து தப்பிக்கத்தான் இப்படி அவளைக் கூடக் கூப்பிட்டுக்கிட்டே சுத்தறேன்..!".

Wednesday, September 7, 2011

மனைவியின் திருட்டு



என் கணவர் அலுவலகத்துக்கு கிளம்பும்காலையில் கோபமாய் டேனியைப் பற்றிக் கத்திக் கொண்டு இருந்தார்.

"உன் பையன் என் சர்ட் பாக்கெட்ல இருந்து பணம் எடுத்திருக்கான். அவனை இனிமே என்னைக் கேக்காம என் பாக்கெட்ல கை வைக்கக் கூடாதுன்னு சொல்லி வை...!".

என் மகனைப் பற்றி யாராவது குறை சொன்னாலே எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். இதில் என் கணவரே குறை சொன்னால். அதிலும், விட்டால் திருட்டுப் பட்டமே கட்டிவிடுவார் போலத் தோன்றவே கோபமாய் அவரைக் கேட்டேன்.

"பணத்தை நீங்களே எங்கயாவது செலவு செஞ்சுட்டு மறந்துட வேண்டியது. இங்க வந்து அவன்மேல பழி போட வேண்டியது. இதோட நாலஞ்சு தடவை ஆச்சு..!".

நான் சொன்னதும் கோபமாய் திரும்பிய அவர், கடுகடுப்பு மாறாமல் சொன்னார்.

"ஏன்... என்னைப் பார்த்தா தண்ணியடிச்சுட்டு ஒளறுற மாதிரித் தெரியுதாக்கும்..? நான் செலவு செஞ்சிருந்தா எனக்குத் தெரியாதா..?".

அவர் அப்படிக் கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியாமல், சமாளிக்கும் விதமாய் அடுத்துச் சொன்னேன்.

 "ஏன் டேனியவே சொல்லறீங்க... பணத்தை நான்கூட எடுத்திருக்கலாமே..?".

நான் கேட்டதும் கொஞ்சமும் யோசிக்காமல் என்னைப் பார்த்து திரும்பியவர், என்னைக் கடுப்பேற்றும் விதமாய் சிரித்தபடியே பதில் சொன்னார்.

"கண்டிப்பா அவன் தாண்டி எடுத்திருக்கான். நீ எடுத்திருந்தாத்தான் என் பாக்கெட்ல ஒண்ணுமே மிச்சம் இருக்காதே...!".
.
.
.

Saturday, June 25, 2011

டேனியின் அப்பா என்ன செய்கிறார்.?

டேனி முதல் நாள் வகுப்புக்கு சென்றதினத்தில் நடந்தது இது.

வகுப்பில் அன்று ஆசிரியை ஒவ்வொரு மாணவனைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆவலில் ஒவ்வொருவரைப் பற்றியும் கேட்டுக் கொண்டு வரும்போது டேனியையும் கேட்டார்.

பெயர், குடும்பத்தில் உள்ள நபர்கள் பற்றிக் கேட்ட ஆசிரியை, அடுத்து அவன் அப்பாவின் வேலை பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டார்.

"சரி டேனி... உன் அப்பா என்ன செய்கிறார்..?"

ஒரு கணம் யோசித்த டேனி ஆசிரியையிடம் தெளிவாய் கூறினான்.

"என் அம்மா என்ன சொல்றாங்களோ, அதையெல்லாம் அப்படியே அப்பா செய்வார்..!".
.
.
.

Tuesday, May 3, 2011

டேனியின் கையில் கேக்




டேனியின் கையில் அவ்வளவு பெரிய கேக் துண்டைப் பார்த்ததுமே உயிரே போய்விட்டது எனக்கு.

டேனியின் க்ளாஸ்மேட் அச்சுத்துக்கு இன்று பர்த்டே..!

டேனியை அழைத்துக் கொண்டு போகவே முதலில் பயமாயிருந்தது.

டேனிக்கு பூச்சிப்பல் இருக்குமோ என்ற ஒரு சந்தேகம் வெகுநாளாய் இருந்ததும், தகுந்தாற்போல் அவனும் அவ்வப்போது பல்வலி என்று சொல்லிக் கொண்டே இருப்பதுமே காரணம் அதற்கு.

வேலைப் பளுவால் டேனியை டாக்டரிடம் அழைத்துச் செல்வதும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் இங்கே வந்து சாக்லெட், கேக் என தின்று தொலைத்தான் என்றால் அந்தத் தலைவலி வேறு வந்துவிடுமே என்று பயந்து கொண்டிருந்தேன்... அது நடந்தே விட்டது.

எனவே, டேனியை தனியாய் கூப்பிட்டு, தணிந்த குரலில் ஆனால் மிரட்டும் தொனியில் சொன்னேன்.

"டேனி... இந்த ஒரு கேக்கோட போதும். அச்சுத்தோட அம்மாகிட்டயோ அப்பாகிட்டயோ இன்னொரு கேக் வேணும்னு கேட்கக் கூடாது. என்ன..?".

நான் பேசி முடித்ததும் பரிதாபமாய் என்னைப் பார்த்த டேனி சொன்னான்.

"இல்லம்மா... ஆனா, இந்த கேக்கை அச்சுத்தோட அம்மா வீட்டுலயே செஞ்சதுன்னு ஒரு ஆன்ட்டிகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நான் உடனே, 'கேக் சூப்பரா இருக்கு ஆன்ட்டி.. எப்படி செய்யணும்னு எங்க அம்மாவுக்கு கொஞ்சம் சொல்லிக் குடுக்கறீங்களானு கேட்டேன்..!'. அதுக்கு அவங்க சிரிச்சுக்கிட்டே நான் கேக்காமயே ரெண்டு பெரிய கேக் துண்டை கொடுத்திட்டாங்களே...!" என்றான்.
.
.
.

Tuesday, April 26, 2011

தில்லுதுரயின் பி.ஏ.



தில்லுதுரயின் உயிருக்குயிரான நண்பரும் தனது அந்தரங்க காரியதரிசியுமான டேவிட், அன்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே இறந்து போனார்.

தில்லுதுர தனது கம்பெனி சம்பந்தமான முடிவுகளாகட்டும் தொடங்கி அடுத்த நாள் மீட்டிங்கிற்கு என்ன உடை உடுத்துவது வரை டேவிட்டின் அட்வைஸ் இல்லாமல் செய்ய மாட்டார்.

எனவே, டேவிட்டின் இடத்துக்கு வருவதற்கு, அலுவலகத்தில் அடுத்த தகுதியுள்ளவர்களிடையே ஒரு பெரும் போட்டி சத்தமில்லாமல் நடந்து கொண்டிருந்தது.

இந்தப் போட்டி பற்றித் தெரிந்தபோது, தில்லுதுர மனது உடைந்து போனார்.

நண்பன் இறந்த சோகத்தைவிட இது பெரியதாய் இருந்தது தில்லுதுரக்கு.

"ஒரு மனிதனைப் புதைக்கும் வரை காத்திருக்கும் நாகரீகம் கூடவா இல்லை நம் மனிதரிடம்..!" என்று தில்லுதுர மனம் வெதும்பிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

மாலையில் கல்லறையில் புதைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.

நண்பனைப் புதைப்பதற்காக, தோண்டிக் கொண்டிருக்கும் குழியை சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுரயிடம், ஆர்வமாய் வந்த ஒரு வேலையாள் கூப்பிட்டார்,"சார்...!".

ஒன்றுமே பேசாமல் வெறுமையாய் திரும்பிய தில்லுதுரயிடம் அவர் கேட்டார்.

"சா.. சார்..! எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தீங்கன்னா நான் டேவிட்டோட இடத்துல சர்வ் பண்ண ஆசைப்படறேன் சார்..!".

லேசான கடுப்புடன் திரும்பிய தில்லுதுர அவரிடம் சொன்னார்.

"கண்டிப்பா தர்றேன்..!" என்றவர் தொடர்ந்து சொன்னார்.

"ஆனா நீங்க கொஞ்சம் அவசரப் படறீங்கனு நெனைக்கிறேன். இவரு இந்தக் குழியைத் தோண்ட இன்னும் அரை மணி ஆகும். அதுவரை நீங்க வெயிட் பண்ணியே தீரணும்..!". என்றார்.



Friday, April 22, 2011

தில்லுதுர இன் ஆஸ்த்திரேலியா




ம்பெனி தான் வாங்கியிருந்த நிலங்களில் நவீன விவ்சாயம் பற்றி கற்று வருவதற்காக தில்லுதுரயை ஆஸ்த்திரேலியா அனுப்ப முடிவு செய்தது.

போவதற்கு முன்னரே எல்லோரும், 'ஆஸ்த்திரேலியர்கள் அடுத்த நாட்டவரை மதிப்பதில் சற்று கம்மியானவர்கள். அதனால், அவர்கள் எப்போது எது பற்றிப் பேசினாலும் அதைவிட பெரியதாய் நம் நாட்டில் இருப்பதைப்போல் பேசிவிடு. அப்போதுதான் உன்னை மதிப்பார்கள்..!' என்று ஏற்றிவிட, தில்லுதுர அதே மனதுடன் அங்கே வந்திறங்கினார்.

முதல்நாள் விவசாய நிலத்துக்கு தில்லுதுரயைக் கூட்டிப்போன ஆஸ்த்திரேலியர் அவரிடம் உழுவதற்கு உதவும் உயர்ரக காளை மாடுகளை காட்டினார்.

மாடுகளைப் பற்றி அவர் சொல்ல ஆரம்பித்ததும் தில்லுதுர கேட்டார்.

"என்ன மாடுகள் இவ்ளோ சின்னதா இருக்கு.? எங்க ஊரு மாடுக எவ்வளவு பெருசா இருக்கும் தெரியுமா..? இதைப்போல ரெண்டு மடங்கு சைஸ் இருக்கும்..!".

இந்தியாவைப் பற்றி முழுவதும் தெரிந்த அந்த ஆஸ்த்திரேலியர் கடுப்புடன் தில்லுதுரயை பார்த்துவிட்டு, ஒன்றும் பேசாமல் அடுத்த ஏரியாவுக்கு கூட்டிச் சென்றார்.

அங்கே வயல்வெளிகளில் பயணிக்க உதவும் குதிரைகளை காட்டினார்.

குதிரைகள் ஒவ்வொன்றும் அரேபியப் போர்க்குதிரைகள் போல மினிமினுவென்று உயர உயரமாய் நின்று கொண்டிருக்க, தில்லுதுர அசராமல் அவரிடம் கேட்டார்.

"என்ன குதிரை எல்லாம் இவ்ளோ சோப்ளாங்கியா இருக்கு.? எங்க ஊரு குதிரைகள் எல்லாம் என்ன சைஸ்ல இருக்கும் தெரியுமா.? இது மாதிரி ரெண்டு மடங்கு சைஸ்ல இருக்கும்..!".

கடுப்பாகிப் போன அந்த ஆஸ்த்திரேலியர், "அப்படியா..?" என்று மட்டும் கேட்டுவிட்டு அடுத்த வயலுக்கு கூட்டிப் போனார்.

போகும் வழியில், திறந்த வெளிகளில் ஓடிச் செல்லும் கங்காருக்களைப் பார்த்த தில்லுதுர அந்த ஆஸ்த்திரேலியரிடம் கேட்டார்.

"இது என்னது பாஸ் புதுசா இருக்கு..?".

கொஞ்சம்கூட எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல் திரும்பிய அந்த ஆஸ்த்திரேலியர் ,தில்லுதுரயிடம் கேட்டார்.

"ஏம்பா... இந்தியால நீ வெட்டுக்கிளியை பார்த்ததே இல்லியா..?".

Thursday, April 21, 2011

ஓவியர் தில்லுதுர

தில்லுதுர வாழ்க்கையில் ஒரு படைப்பாளியாய் மாற முயற்சித்துக் கொண்டிருந்த காலம் அது.

பிசினஸ், பேங்க், லோன், அக்கவுண்ட் என வாழ்க்கை இப்படியே மெஷின்போல போய்விடுமோ என்று பயந்துபோய் விட்டார் அவர்.

'கிரியேட்டிவாய் யாராவது ஒரு ஐடியா சொல்லுங்களேன்..' என்று கேட்டபோது, அவர் நண்பர் ராஜாதான் ஓவியம் கற்றுக்கொள்ளும் யோசனையைச் சொன்னார்.

தில்லுதுரக்கும் அந்த ஐடியா பிடித்துப் போக, உடனே அதைச் செயல்படுத்த ஆரம்பித்தார்.

ஓரிரு மாதங்கள் தபால் மூலம், அப்புறம் லோக்கலில் ஒரு ஆசிரியரிடம் என்று ஒவியக்கலையை கொலை செய்யத் தொடங்கினார்.

மேலும் ரெண்டு மாதம் போயிருக்கும்.

தில்லுதுர வேக வேகமாய் ஓவியராய் வளர்ந்து கொண்டிருந்தார்.

நாய் படம் போட்டால் காக்காய் போலிருந்தது.

மயில் படம் போட்டால் மாரடோனா படம் போலிருந்தது.

தில்லுதுர கடைசியாய் ஓவியத்தில் தன்னுடைய ஏரியாவைக் கண்டே பிடித்துவிட்டார்.

அது... இனி நமக்கு மாடர்ன் ஆர்ட் தான் பெஸ்ட் என்பதே..!

முதன்முதலாய் ஒரு மிகப் பெரிய கேன்வாஸ் வாங்கி, எல்லா நேரமும் அதில் ஆயில் பெயின்டால் தீட்டிக் கொண்டே இருந்தார்.

அவருடைய 'தாட்'டுகள் அதில் ஏற ஏற... அந்த் ட்ராயிங் யாருக்கும் புரியாததாய் அற்புதமாய் வடிவம் பெற ஆரம்பித்தது.

அந்த ஓவியத்தை விடக் கொடுமை அவருடைய ஓவியம் குறித்த பேச்சுக்கள் தான்.

பிக்காஸோ,பிதாகரஸ்,வான்கா,டேலி போன்றோர் குறித்து அடிக்கும் லெக்சரர்கள் இருக்கிறதே, அனுபவித்தர்களால்தான் சொல்ல முடியும்.

எல்லாக் கொடுமையையும் தாண்டி, கடைசியாய் ஒரு ஆறு மாதத்தில் தில்லுதுர அந்த ஓவியத்தை வரைந்து முடித்தே விட்டார்.

அந்த ஓவியம் ஒன்றும் சாதாரண ஓவியம் இல்லையே..!

அதனால், அந்த ஓவியம் குறித்து அலுவலகத்தில் ஒரு அறிமுக விழா நடத்த முடிவு செய்து தேதியும் குறித்தாகிவிட்டது.

அறிமுக விழாவில், அந்த ஓவியமும் அதில் உள்ள தத்துவங்களும், சமகால ஓவியங்களில் அது எவ்வாறு சிறந்தது என்று ஒரு பேருரையும் நிகழ்த்தினார்.

எல்லா மொக்கைகளும் முடிந்த பிறகு ஏதவது ஒரு பொதுத் தொண்டு நிறுவனத்திற்கு அதை வழங்க முடிவு செய்து, எந்த நிறுவனதுக்கு வழங்கலாம் என்று சிறந்த ஐடியா தருபவருக்குப் பரிசும் அறிவித்தார்.

வந்த முடிவுகள் எவ்வளவோ இருந்தாலும், பரிசு பெற்ற ஐடியா ஒன்று இருந்தாலும்... ரிஜெக்ட் செய்யப்பட்ட ஒரு ஐடியாவையே சிறந்தது என்று அவர் நண்பர்கள் எல்லோரும் இன்றுவரை பேசி வருகிறார்கள்.

அது...

"இந்த ஓவியத்தை நீங்கள் கண்பார்வையற்றோர் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கலாம்..!" என்பதே.
.
.
.

ஷகிலாவின் லாக்கெட்



ஷகிலாவின் பரந்த மார்பில் எடுப்பாய் கிடந்த சங்கிலியையும் அதனுடன் இணைந்த அந்த அழகிய லாக்கெட்டையும் பார்த்த கமலா ஆர்வம் தாங்காமல் லேசாய் பொறாமையுடன் கேட்டாள்.

"இது என்னடி புதுசா லாக்கெட்..? எதுவும் ஞாபகச் சின்னமா..? லாக்கெட் உள்ள எதுவும் இருக்கா என்ன..?".

ஷகிலா புன்னகையுடன் திரும்பியவள் சொன்னாள்.

"ஆமாடி... என் கணவரோட தலைமுடியைத்தான் வச்சிருக்கேன்..!".

லேசாய்க் குழப்பத்துடன் கமலா கேட்டாள்.

"ஏண்டி... உன் ஹஸ்பண்ட் உயிரோட தான இருக்கார். அதுக்குள்ள இது எதுக்கு..?".

ஷகிலா சிரித்தபடி சொன்னாள்.

"அவருக்கென்ன குத்துக்கல்லாட்டம் நல்லாத்தான் இருக்காரு. ஆனா, தலையிலதான் ஒரு முடியும் இல்லியே..!".
.
.
.

Saturday, April 9, 2011

ஆஸ்ப்ரின்



ஜேக்கப் ஒரு கெமிக்கல் சைன்டிஸ்ட்.

எந்நேரமும் ஆராய்ச்சி, ஆராய்ச்சி, ஆராய்ச்சிதான் அவருக்கு.

எந்திரன் விஞ்ஞானி ரஜினி போல் எப்போதும் லேப்பிலேயே வாழும் ஆள் அவர்.

நிறைய அவார்டெல்லாம் வாங்கியிருக்கிறார் அந்தத் கெமிக்கல் துறையில்.

அன்றும் அப்படித்தான்... உடம்பில் ஏதோ அசௌகரியமாய் உணர்ந்த அவர், மெல்ல பக்கத்திலிருந்த மெடிக்கல் ஷாப்பை நோக்கி நடந்து போய் அங்கிருந்த ஃபார்மசிஸ்ட்டிடம் யோசனையுடன் கேட்டார்.

"தம்பி... உங்ககிட்ட இந்த அசிட்டிலலிசிலிக் ஆசிட் இருக்கா..?".

ஒரு விநாடி குழப்பமாய் அவரைப் பார்த்த ஃபார்மசிஸ்ட், திருமப அவரிடம் கேட்டார்.

"நீங்க ஆஸ்ப்ரினையா கேக்கறீங்க..?".

சற்றே யோசித்த ஜேக்கப் புன்னகைத்தபடி சொன்னார்.

"கரெக்டா சொன்ன... எனக்கு அந்த வார்த்தையே ஞாபகம் வர மாட்டேங்குது..!".
.
.
.

Thursday, April 7, 2011

அசிங்கமான மனைவி






தில்லுதுர வாழ்க்கையில் கடினமாகப் போராடிக் கொண்டிருந்த நேரம்.

எங்கு தேடினாலும் வேலை கிடைக்கவில்லை.

வேலை இல்லாததால் வருமானம் இன்றிப்போக, திருமணமும் தள்ளிக்கொண்டே போனது.

அவருக்கு உறவில் யாரும் பெண் கொடுக்கவும் தயாராயில்லை.

திருமண வயது தாண்டிக் கொண்டிருந்தது பற்றிய கவலையில் சுற்றிக் கொண்டிருக்கும்போது தான் தில்லுதுர ஒரு தினசரியில் அந்த விளம்பரத்தைப் பார்த்தார்.

ஒரு நல்ல பணக்காரப் பெண்ணுக்கு ஏற்ற வரன் கேட்டு வந்திருந்தது அந்த விளம்பரம்.

போய்ப் பார்த்தால், அந்தப் பெண்ணோ பார்க்கச் சகிக்க முடியாத அவலட்சணமாயிருந்தாள்.

'எவ்வளவு கோடி கொடுத்தாலும் வேண்டாம்..' என்று பெண்பார்க்க வந்தவன் எல்லாம் தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறான்.

வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமே...

'ஒகே..' சொன்னது தில்லுதுர மட்டும்தான்.

மஹாராஜா போல் தில்லுதுரயை யாரும் வேண்டாம் என்பார்களா என்ன..?

அந்தக் கோடீஸ்வரியும் தில்லுதுரயை செலெக்ட் செய்து விட்டாள்.

திருமணம் எல்லோரும் ஆச்சர்யப் படும்படி இனிதே முடிந்தது.

'பணத்துக்காக இப்படி ஒரு பெண்ணைக் கட்டுவானா ஒருவன்..?' என்ற நண்பர்களின் கேலிப் பார்வைகளை தில்லுதுர கண்டுகொள்ளவேயில்லை.

அதுதான் அப்படியென்றால், திருமணம் முடிந்து எங்கே சென்றாலும் அந்த அவலட்சண மனைவியையும் கையோடு உடன் அழைத்தபடியே சுற்றிக் கொண்டிருந்தான்.

மனைவி இல்லாமல் தில்லுதுரயை வெளியில் பார்ப்பது அபூர்வமாய் இருந்தது.

நண்பர்களுக்கோ இதுதான் ஆச்சர்யமான ஆச்சர்யமாய் இருந்தது.

ஒருநாள் ஒருவன் அதை தில்லுதுரயிடம் கேட்டும் விட்டான்.

"நன்பா... நீ பணத்திற்காகத்தான் அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டாயென்பது தெரியும். ஆனால், இந்த அளவுக்கு எங்கே போனாலும் அவளையும் கூடவே கூட்டிக் கொண்டு சுற்றுவதுதான் ஏன் என்று புரியவில்லை..!".

அவன் கேட்டு முடித்ததும் தில்லுதுர சோகமாய்ச் சொன்னான்.

"என் மனைவி கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. நான் அவளை விட்டு எப்பப் பிரிஞ்சு போனாலும் அவ எனக்கு ஒரு முத்தம் கொடுப்பா. பதிலுக்கு நான் அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்கணும். அது எப்படி முடியும் சொல்லு. அதனால, அதிலிருந்து தப்பிக்கத்தான் இப்படி அவளையும் கூடக் கூப்பிட்டுக்கிட்டே சுத்தறேன்..!".
.
.
.

Friday, April 1, 2011

டேனியும் தில்லுதுரயும்




அன்று அலுவலகத்திலிருந்து மாலை அபார்ட்மென்ட்டுக்கு வந்த தில்லுதுர, தனது நாயை பார்த்ததும் அரண்டுவிட்டார்.

பக்கத்து வீட்டு சுட்டிப்பையன் டேனி பாசமாய் வளர்த்து வந்த கிளிக்குஞ்சை வாயில் கவ்வியபடி நின்றிருந்தது நாய்.

கிளியின் உடலை கவ்வியதோடு விடாமல், மண்ணில் போட்டு புரட்டி எடுத்து வந்திருந்தது நாய்.

பார்த்ததுமே தில்லுதுரக்கு தெரிந்துவிட்டது... கிளி கண்டிப்பாய் இறந்திருந்தது.

'நம்ம நாய் கிளிய கொன்னுடுச்சுனு தெரிஞ்சா இந்த டேனிப்பய நம்ம சும்மா விடமாட்டானே..!'

வேக வேகமாய் வெளியே வந்து பார்த்த தில்லுதுர கொஞ்சம்போல நிம்மதியடைந்தார்.

டேனியின் வீட்டில் எல்லோரும் எங்கேயோ போயிருந்தார்கள்.

யோசித்த தில்லுதுர நாயின் வாயிலிருந்த கிளியைப் பறித்து, பாத்ரூமுக்கு கொண்டு போய் ஷாம்பூ போட்டுக் கழுவி, ஹேர் ட்ரையரை எடுத்து அதன் ரெக்கை எல்லாம் காயவைத்து, வேகவேகமாய் ஃப்ளாட்டின் வாசலில் இருந்த, அதனுடைய கூண்டுக்குள்ளேயே திரும்பப் போட்டுவிட்டு வந்துவிட்டார்.

இனி யாராவது பார்த்தாலும், அது இயற்கையாய் அதனுடைய கூண்டிலேயே இறந்ததாய்த்தானே நினைப்பார்கள்.

தெளிவாய் செய்துவிட்டாலும், குற்ற உணர்ச்சியில் டேனியையோ, அவன் வீட்டு ஆட்களையோ ரெண்டு மூணு நாட்கள் பார்க்காமலேயே சுற்றிக் கொண்டிருந்தார் தில்லுதுர.

ஆனால், சனிக்கிழமை மாலை காரை கொண்டு நிறுத்தியபோதே வாசலில் விளையாடிக் கொண்டிருந்த டேனி, தில்லுதுரயைப் பார்த்து ஓடி வந்தான்.

"அங்கிள்... உங்களுக்கு தெரியுமா.? என்னோட கிளி ஸ்நூஃபி செத்துப்போச்சு..!".

பாசமாய் சொல்லும் டேனியின் முகத்தை பார்க்க முடியாமல் தில்லுதுர, வருத்ததுடன் சொன்னார்.

"அப்படியாடா... பாவம் ஸ்நூஃபி. என்னாச்சு..?".

தில்லுதுர கேட்டதும் டேனி கண்களை விரித்துக் கொண்டு ஆச்சர்யமாய் சொன்னான்.

"அங்கிள்... அது ஒரு நாள் கூண்டுக்குள்ளயே செத்துக் கிடந்தது அங்கிள். எனக்கு பயங்கரமா அழுகை அழுகையா வந்துச்சு. அப்பறம், அதை நானும் அப்பாவும் அதை எடுத்துட்டு போயி ஃப்ளாட்டுக்கு பின்னாடி தோட்டத்துல பொதச்சுட்டோம். அதுக்கு அப்பறம், அப்பா என்னையும் அம்மாவையும் சாப்பிட வெளிய கூட்டிட்டு போயிட்டாரு. திரும்பி வந்து பார்த்தா யாரோ ஸ்நூஃபிய பொதச்ச எடத்துலருந்து எடுத்து குளிப்பாட்டி, திரும்ப அதோட கூண்டுலயே கொண்டு வந்து போட்டிருந்தாங்க அங்கிள். ஸோ ஃபன்னி..!" என்றான் டேனி.
.
.
.

Friday, March 25, 2011

ஹீமேன் தில்லுதுர




காட்டில் ஆதிவாசிகளுக்கு வாழும் முறை கற்றுக் கொடுக்க தில்லுதுர சென்றிருந்த போது நடந்தது இது. வாராவாரம் க்ளாஸ் எடுத்து போரடித்ததால், இந்தவாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு மாறுதலுக்காகாக காட்டுக்குள் ஒரு தடவை போய் வரலாம் என முடிவெடுத்தார்கள் தில்லுதுரயின் நண்பர்கள்.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே எழுந்து கொண்டார்கள் எல்லோரும்.

காட்டுக்குள் வழி காட்டவும், வன விலங்குகளால் எதுவும் ஆபத்து வந்தால் சமாளிக்கவும் மாதையன் என்னும் ஒரு ஆதிவாசியையும் அழைத்துக் கொண்டார்கள் அவர்கள்.

காட்டுக்குள் செல்லும் வழியெல்லாம் மாதையன் காட்டின் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டே வந்தான்.

காட்டில் நிறைய காட்டெருமைகளையும், மான்களையும் காட்டிக் கொண்டே வந்தவன், காட்டுக்குள் நிறைய புலிகள் இருப்பதாகவும் அதிர்ஷ்டம் இருந்தால் அவைகளையும் பார்க்கலாம் என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

அதுவரை சந்தோசமாக சிரித்தபடி கும்மாளமிட்டபடி வந்து கொண்டிருந்த 'தில்லுதுர அன் கோ'விற்கு புலி என்றதும் வயிற்றில் புளி கரைத்தது போலாகிவிட்டது.

அதன் பிறகு, அவர்கள் எதுவும் பேசாமல் மாதையனின் பின்னால் நடக்கத் தொடங்கினார்கள்.

பயத்தில் யாருக்கும் வார்த்தையே வரவில்லை.

தில்லுதுர திரும்பிடலாம் என்று எண்ணினாலும், அதைச் சொல்ல கௌரவம் தடுத்தது.

மாதையனோ இன்னும் 'இதோ கரடி போயிருக்கு, யானை லத்தி போட்டிருக்கு'னு இன்னும் அதிகமாய் கலவரப் படுத்திக் கொண்டே வந்தான்.

ஒரு அரை மணி இருக்கும்.

நல்ல நடுக்காடு.

கீழே பார்த்துக் கொண்டே வந்த மாதையன் திடீரென வாயில் விரலை வைத்து,"உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!" என்றான்.

எல்லோரும் திரும்பி அவனைப் பார்க்க, எச்சரிக்கையுடன் சப்தமில்லாமல் காலடி எடுத்து வைத்த அவன் கிசுகிசுவென சப்தமில்லாமல் ரகசியமாய் சொன்னான்.

"இதோ பாருங்க... இதுதான் புலியோட காலடித்தடம். இன்னும் காலடித்தடம் அச்சுக் குழையாம இருக்கு. இது இப்பத்தான் இந்தப்பக்கமா போயிருக்கு. இங்க எங்கயாவதுதான் இருக்கும். சத்தம் போடாம என் பின்னயே வாங்க. புலி எங்க போயிருக்குனு பாக்கலாம்..!".

சொல்லிவிட்டு முன்னோக்கி நகர ஆரம்பித்த மாதையனை தொடர்வதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் நண்பர்கள் தில்லுதுரயைப் பார்க்க... தில்லுதுர அவர்களிடம் தைரியமாய்ச் சொன்னார்.

"என்னடா பாக்கறீங்க. நீங்க எல்லாரும் மாதையன் கூடவே டீமாப் போயி புலி எங்க போயிட்டிருக்குனு பாருங்க. நான் ஒத்தை ஆளாப் போயி புலி எங்க இருந்து வந்துச்சுனு பாக்கறேன்..!" என்றார்.
.
.
.

Thursday, March 24, 2011

குழந்தையின் கருணை



மிக போரடிக்கிறதே என்று டேனியை கோவை வ.உ.சி. பூங்கா அழைத்துச் சென்ற ஒரு ஞாயிறு அன்று நடந்தது இது.

பூங்காவில் நான் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்க, டேனி அவன் வயதை ஒத்த ஐந்து ஆறு வயதுச் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரம் இருக்கும்.

வேக வேகமாய் என்னிடம் ஓடிவந்தவன், பூங்காவில் கொஞ்ச தூரம் தள்ளி அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி கேக்கறாங்க, அவங்களுக்கு கொடுக்கணும் என்று அவருக்கு தருவதற்காய் பத்து ரூபாய் கேட்டான்.

இந்த வயதிலேயே என் பையனுக்கு இவ்வளவு கருணை இருக்கிறதே, அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் இருக்கிறதே என்ற பெருமையுடன் பர்ஸைத் திறந்தவள், பத்து ரூபாயை எடுத்து கையில் கொடுத்தபடி கேட்டேன்.

"எதுக்காக டேனி அவங்களுக்கு பணம் கொடுக்கணும்னு தோணுச்சு..? அவங்கனால வேலை எதுவும் செய்ய முடியாதா..?".

கேட்ட என்னைக் குழப்பத்துடன் பார்த்த டேனி சொன்னான்.

"ஏன் முடியாது... நல்லா முடியுமே..! அவங்கதான் அங்கே மிட்டாய் வித்துகிட்டு இருக்காங்க...!" என்றான்.
.
.
.

Tuesday, March 22, 2011

தில்லுதுரயும் ஆதிவாசியும்


தில்லுதுர இளைஞராய் இருந்தபோது நடந்தது இது.

தில்லுதுரயின் அலுவலகம் வனவிலங்கு வாரம் முடித்த பிறகு, அதன் தொடர்ச்சியாக காட்டில் வசிக்கும் ஆதிவாசிகளுக்கு நாகரிகம் கற்றுக் கொடுக்க முடிவு செய்தது.

மலையின் மீது வசிக்கும் அந்த மக்கள் முழுவதும் சுகாதாரம் இல்லாது வசிப்பது கண்டு மனம் நொந்து போனார் தில்லுதுர.

நல்ல சுகாதாரமான உணவு இல்லை. உடைகள் இல்லை. வசிப்பிடம் இல்லை.

வாழும் முறையில் ஒரு ஒழுங்கு இல்லை.

தில்லுதுர தனது நான்கைந்து நண்பர்களோடு சேர்ந்து அவர்களை சுகாதாரமாய் வாழக் கற்றுக் கொடுக்க முடிவு செய்தார்.

அதற்காக அலுவலகத்தில் பேசி அனுமதியும் வாங்கிவிட்டார்.

ஒரு வருடம், வார இறுதியில் அந்த மலைவாழ் ஆதிவாசிகளோடே வாழ்ந்தார் தில்லுதுர.

அவர்களுக்கு நல்ல சுத்தமாக உடை உடுத்தக் கற்றுக் கொடுத்தார்.

உணவை நன்றாக சமைத்துச் சாப்பிடக் கற்றுக் கொடுத்தார்.

குடிசை கட்ட கற்றுக் கொடுத்தார்.

அவர்கள் கும்பிடும் காட்டுக் கருப்பன் தெய்வத்துக்கு கோயில் கட்டிக் கொடுத்தார்.

கும்பிடக் கற்றுக் கொடுத்தார்.

வரைமுறையாய் வாழ்வதற்கு திருமணம் என்பதைக் கற்றுக் கொடுத்து, குடும்ப வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுத்தார்.

ஒரு முழு வருடம்.

அந்த ஆதிவாசிகள் முற்றிலும் மாறிப் போனார்கள்.

கிட்டத்தட்ட, ஒரு வருடத்தில் நகரத்தில் வாழ்பவர்களைப் போல அவர்களை மாற்றிய சந்தோஷத்தில் அவர்களைப் பிரியும் தினத்தில், அந்த ஆதிவாசி மக்கள் எல்லாம் குழுமியிருக்கும் கூட்டத்தில் தில்லுதுர அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

"இந்த ஒரு வருஷத்துல நீங்க கத்துகிட்டதுலயே, நீங்க அதிகம் சந்தோசப்பட்டது எந்த விஷயத்துக்காகன்னு சொல்ல முடியுமா..?".

தில்லுதுர கேட்டதும் அந்த ஆதிவாசி ஆண்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் சந்தோஷமாய் சொன்னார்கள்.

"நாங்கள் உங்களிடம் கற்றுக் கொண்டதிலேயே மிக மகிழ்ச்சியான விஷயம் எதுன்னா, இந்த திருமண வாழ்க்கைதான்...!".

குடும்ப ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்த சந்தோஷத்தில் தில்லுதுர முகம் மலர்ந்து அவர்களிடம் கேட்டார்.

"அது ஏன்னு சொல்ல முடியுமா..?".

தில்லுதுர கேட்டதும் அந்தக் கூட்டத்தில் தலைவன் மாதிரி இருந்தவன் சிரித்தபடியே மிக சந்தோஷமாய்ச் சொன்னான்.

"அதுக்கப்புறம்தான் எங்களோட பழைய மனைவிகளுக்கு பதிலா, புதுசு புதுசா மனைவிகள் கிடைச்சாங்க..!".
.
.
.

Friday, March 11, 2011

தில்லுதுர என்னும் அறிவாளி

தில்லுதுரயின் கம்பெனி அன்று கோவையின் வனவிலங்கு பாதுகாப்பு வார விழாவில் பங்கெடுத்துக் கொண்டிருந்தது.

பல்வேறு கம்பெனிகளும் பலவிதமாய் பங்கெடுத்துக் கொண்டிருக்க,
தில்லுதுரயின் கம்பெனி வனப்பாதைகளில் வாகனங்கள் செல்லும் வழிகளில், மிருகங்கள் நடமாட்டம் குறித்து சைன் போர்டுகள் வைப்பதாக உறுதி கொடுத்திருந்தது.

அதேபோல், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் வழியெங்கும் ஆங்காங்கே போர்டுகளை நட்டுக் கொண்டிருந்தனர்.

தில்லுதுரயும் அவர் நண்பரும் மலைப்பாதையில் மான் நடமாட்டம் குறித்து ஒரு போர்டை நட்டுக் கொண்டிருந்தனர்.

'காட்டில் வேலை செய்கிறோம், ஆனால் காட்டு விலங்குகள் ஒன்றைக்கூட கண்ணில் பார்க்கவில்லையே..' என்று பேசிக்கொண்டே போர்டை நடத் துவங்கினார்கள்.

போர்டை நட்டு முடித்ததும், தில்லுதுர சற்று பின்னால் சென்று போர்டை கவனித்தார்.
 
"மான் நடமாட்டம் நிறைந்த பகுதி. வேகம் குறைத்துச் செல்லவும்..." என எழுதி ஒரு அழகான மான் தாவுவதுபோல படம் போட்டு அம்சமாய் இருந்தது போர்டு.

திருப்தியுடன் அடுத்த போர்டை நடுவதற்காக சற்று தூரம் தள்ளிப் போய் குழியை தோண்ட ஆரம்பித்தார்கள்.

கொஞ்ச நேரம் இருக்கும்.

ஏதோ ஒரு சப்தம் கேட்டுத் பின்னால் திரும்பிய தில்லுதுர, ஒரு அழகான மான் துள்ளி சாலையின் குறுக்கே ஓடுவதை கவனித்தார்.

அதையே பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுர, நண்பரிடம் திரும்பி ஆச்சர்யத்துடன் சொன்னார்.

"எவ்வளவு அறிவான மான் பார்த்தியா.? எவ்வளவு பாதுகாப்பாய் இருக்கு அது.? நாம போர்டு நட்டு வைக்கற வரைக்கும் காத்திருந்து, இப்ப நட்ட உடனே ரோட்டை க்ராஸ் பண்ணுது..!".
.
.
.

Wednesday, March 9, 2011

தில்லுதுர என்றொரு நல்லவர்


சிறுவன் ரமேஷ் வேலை பார்ப்பது ஒரு முட்டைக் கடையில்.

கொள்முதலாய் வாங்கும் முட்டைகளை கடைத்தெருவில் இருக்கும் சில்லறைக் கடைகளில் கொண்டு போய்க் கொடுப்பதுதான் அவன் வேலை.

ஒருநாள், கூட்டம் அதிகமாய் இருந்த கடைத்தெருவின் வழியாக வரும்போது, ஒரு தடுமாற்றத்தில் வண்டி கவிழ்ந்துவிட, முட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து உடைந்து சிதறிவிட்டது.

"ஐயோ... என் முதலாளிக்கு என்ன பதில் சொல்வேன்..? இவ்வளவு முட்டையின் காசுக்கு நான் எங்கே போவேன்..?" என்று நினைக்கும்போதே பயம் வந்து, ரமேஷ் அழ ஆரம்பித்துவிட்டான்.

கடைத்தெருவில் போவோர் வருவோரெல்லாம் கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்போது, அங்கே வந்த தில்லுதுர ஆதரவாய் ரமேஷின் தோள்களைத் தட்டி, "ஏன் தம்பி அழறே..? இந்த முட்டைகளுக்கு உன்னால் காசு கொடுக்க முடியாது என்றுதானே..?" என்று கேட்க, ரமேஷ் கண்களில் நீருடன் 'ஆம்.." என்று தலையை ஆட்டினான்.

உடனே தில்லுதுர, "கவலைப்படாதே.. இங்கே நான் இருக்கேன். இவ்வளவு பேர் இருக்காங்க. நாங்க உனக்கு உதவி செய்யாமப் போயிடுவோமா..?" என்றபடி பக்கத்தில் இருந்த ஒரு பெரியவரின் தோளில் இருந்த தோளில் இருந்த துண்டை எடுத்தார்.

தன் பையில் இருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து அதில் போட்டுவிட்டு, கூட்டத்தாரிடமும் வந்தார்.

கூட்டத்தில் இருந்தவர்கள் சிறுவனின் நிலைக்கு வருத்தப்பட்டு பத்தும் இருபதுமாய் ரூபாய்களைப் போட, கணிசமாய் பணமும் சேர்ந்தது.

வசூலை முடித்து, கூட்டத்தினர் முன்பே பணத்தை எண்ணி அந்தச் சிறுவனிடம் கொடுத்த தில்லுதுர, "அழாதப்பா... இந்தா இந்தப் பணத்தைக் கொண்டுபோய் உன் கடையில் கட்டிவிடு..!" என்று போய்விட்டார்.

கூட்டத்தினர் எல்லோரும் தில்லுதுரயின் உதவும் குணத்தை எண்ணி வியந்து கொண்டிருக்க, அந்தப் பையனிடம் ஒருவர் கேட்டார்.

"அவர் மட்டும் வரலைனா உன் கதி என்ன ஆகியிருக்கும். எவ்வளவு நல்லவர் அந்த மனுஷர். எவ்வளவு உதவும் குணம் அவருக்கு. அவரை உனக்கு முன்னமே தெரியுமா..?".

அழுது கொண்டிருந்த ரமேஷ் கண்களைத் துடைத்தபடியே சொன்னான்.

"அண்ணே.. அவர் பேரு தில்லுதுர. அவர்தான் என் முதலாளி... இந்த முட்டையெல்லாம் அவரு ஏத்தி அனுப்பினது தான்..?".
.
.

Monday, March 7, 2011

டேனியும் யானையும்


அன்று காலையில் சென்னை வந்திருந்தோம்.

கணவருடன் காஞ்சிபுரம் போவதாய் ஏற்பாடு.

சென்னையில் இருந்து கிடத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம்.

டேனி சந்தோஷத்தில் அவன் அப்பாவுடன் என்னென்னவோ பேசிக் கொண்டு வந்தான்.

நான்கு வயதுக் குழந்தைக்கு எதைப் பார்த்தாலும் ஆச்சர்யம்தானே..?.

கோவிலுக்கு வந்து, சுற்றும் முற்றும் என்ன பொம்மைகள் வாங்க வேண்டுமென்று முதலிலேயே லிஸ்ட் போட்டு விட்டான்.

உள்ளே நுழையும்போது, அழகான இரண்டு கோயில் யானைகள் அருமையான அலங்காரத்துடன் நின்று கொண்டிருந்தன.

வருகிறவர்கள் அதற்கு தின்னவோ, பைசாவோ கொடுக்க வாங்கிக் கொண்டு அது சந்தோசமாய் அவர்களை ஆசிர்வாதம் பண்ணிக் கொண்டிருந்தது.

பொதுவாய் யானை, குதிரை என்றால் சந்தோசமாய்ப் பார்க்கும் டேனியை, ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தைக் கொடுத்து யானையிடம் ஆசிர்வாதம் வாங்க அழைத்துப் போனேன் நான்.

அவனோ வர மறுத்து அழ ஆரம்பிக்க, அவன் அப்பா, "விடு.. அவன் பயப்படறான்னா எதுக்கு கூட்டிட்டு போற..?" என்று தடுத்து விட்டார்.

இருந்தாலும், அவன் பயந்தவனோ என லேசாய் அவர் யோசிப்பது தெரிந்தது.

எனக்கோ, அவன் ரெண்டு மாதம் முன்பு பேரூர் கோவிலில் யானையிடம் சந்தோஷமாய் ஆசிர்வாதம் வாங்கியது நினைவுக்கு வர, அதை என் கணவரிடம் சொன்னேன்.

என் கணவர், மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

"டேனி யானைன்னா உனக்கு பயமா..?".

அவன் சிரித்தபடி சொன்னான்.

"இல்லியே..!".

அவர் தொடர்ந்தார், "அப்ப... முன்னால யானைகிட்ட போவியாமே, இப்ப ஏன் யானைகிட்ட போக மாட்டேனுட்டே..?".

கொஞ்சம் யோசித்த டேனி சொன்னான்.

"அதுவா.. கோயில்ல இருக்கற யானை எல்லாம் காசு வாங்கிட்டு தலைல குட்டி வச்சிடுதுப்பா..!".
.
.
.

Saturday, March 5, 2011

தில்லுதுர செய்த ஆக்ஸிடென்ட்


தில்லுதுர அப்போதுதான் அந்தப் பெரிய ஃபோர்ட் என்டேவர் காரை வாங்கியிருந்தார்.

மாருதியை ஓட்டிக் கொண்டிருந்தவருக்கு, இவ்வளவு பெரிய வண்டியை ஓட்டுவதற்கு என்னவோ போலிருந்தது.

எட்டி எட்டி முன்னால் பார்த்தபடியே ஓட்டிக் கொண்டிருந்தவருக்கு, அன்று மாலையே அந்த வினை வந்து சேர்ந்தது.

ஒரு காஃபி சாப்பிடலாம் என்று புது வண்டியை எடுத்துக் கொண்டு பெருமையாய் ஹோட்டலுக்கு வந்தவர், வண்டியைப் பார்க் செய்யும் போது அங்கே நின்று கொண்டிருந்த வண்டியை இடித்து விட்டார்.

புது வண்டியில் லேசாய் ஒடுக்கு விழுந்துவிட்டாலும், செலவை இன்ஸ்யூரன்ஸில் வாங்கிவிடலாம் என்று, இன்ஸ்யூரன்ஸ் அலுவலகத்திற்கு வந்து கிளெய்ம் ரிப்போர்ட் வாங்கி அதை நிரப்பிக் கொண்டிருந்தார்.

க்ளெய்ம் ரிப்போர்ட்டில், 'இந்த ஆக்ஸிடென்ட்டைத் தவிர்க்க எதிராளி என்ன செய்திருக்கலாம் என்று கூற விரும்புகிறீர்கள்..?' என்றொரு கேள்வி இருந்தது.

ஒரு கணம் யோசித்த தில்லுதுர எழுதினார்.

"அவன், அவனோட வண்டியை வேற எங்கயாவது நிறுத்தியிருக்கலாம்..!".
.
.
.

Wednesday, March 2, 2011

சிவராத்திரி என்றாலும் சினிமாதான்

ராமசாமி ஒரு தீவிர கடவுள் பக்தன்.

அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி என ஒன்று விடாமல் விரதம் இருந்து சாமி கும்பிடுவதே அவன் வேலை.

சூரியன் உதிப்பதிலிருந்து, மறையும் வரை ராமசாமி கும்பிடும் அளவுக்கு யாராலும் சாமி கும்பிட முடியாது.

ஆனால், பக்கத்து வீட்டு பரமானந்தமோ ஒரு தீவிர நாத்திகன்.

கோவில் பக்கம் தலை வைத்ததுகூட இல்லை.

சிவராத்திரி என்றாலும் சினிமாதான் போவான்.

ஆனாலும் அவன் வாழ்க்கை என்னவோ சிறப்பாகவே இருந்தது.

நல்ல வேலை.அருமையான அழகிய மனைவி. கார், பங்களா, குழந்தைகள் என எல்லா விதத்திலும் பரமானந்தம் கொடுத்து வைத்தவன் தான்.

ஆனால், ராமசாமி நிலையோ தலைகீழ்.

மட்டமான சம்பளம். கீழ்படியாத மனைவி.அடங்காத குழந்தைகள்.

வாழ்க்கையில் அவனுடைய நாள் வரவேயில்லை.

வாழ்க்கை வெறுத்துப்போன ராமசாமி, ஒருநாள் எப்போதும்போல் மனமுருக பிரார்த்தித்து, கடவுளைப் பார்த்துக் கேட்டான்.

"ஏ கடவுளே... நான் டெய்லி உன்னை கும்பிடறேன். என்னோட ஒவ்வொரு விஷயத்தையும் உன்னை கேட்டுட்டுதான் செய்யறேன். என்னோட ஒவ்வொரு சின்னச்சின்ன பாவத்தையும் உன்கிட்ட சொல்லி மன்னிப்பு கேக்கறேன். ஆனா, அந்தப் பக்கத்துவீட்டு பரமானந்தம் உன்னைக் கும்பிடறது கூடக் கிடையாது... அவன் சந்தோஷமா நல்லா இருக்கான். நான் மட்டும் எப்பவும் கஷ்டப்பட்டுகிட்டு பணம் இல்லாம... எனக்கு மட்டும் ஏன் இந்த வாழ்க்கை..?".

ராமசாமி கேட்டு முடித்ததும் வானத்திலிருந்து அந்த அசரீரி கேட்டது.

"ஏன்னா... அவன் இப்படி எல்லாத்துக்கும் உன்னைய மாதிரி ச்சும்மா நொய்யி நொய்யின்னு  என்னை தொந்தரவு பண்ணறது இல்ல, அதனாலதான்..! போடா... போயி வேலையப் பாரு...!".
.
.
.

Friday, February 25, 2011

திருமதி செல்வம்

திருமணம் முடிந்து அலுவலகத்துக்கு வந்த முதல்நாள், தன் மனைவியையும் உடன் அழைத்து வந்திருந்தார் தில்லுதுர.

புதிய மணமக்களை வரவேற்று, ஒரு பார்ட்டி ப்ளான் செய்திருந்தார்கள் அலுவலகத்தினர்.

மணமக்களை எல்லோரும் வாழ்த்திப் பேசிவிட்டு பரிசுப் பொருட்களை கொடுத்த பிறகு, அலுவலகத்திலேயே நீண்ட காலம் பணிபுரியும், மனமொத்த மிக அந்நியோன்யமான, வயதான தம்பதியரான... செல்வம் தம்பதியினர் ஜோடியாய் மேடைக்கு வந்தனர்.

செல்வம் தம்பதியினர் பரிசைக் கொடுத்து வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு, மேடையை விட்டு இறங்கும்போது, தில்லுதுர அவர்களிடம் கேட்டார்.

"செல்வம் சார்.. உங்களுடைய நீண்டநாள் சந்தோஷமான மண வாழ்வின் ரகசியத்தைச் சொன்னால், அது இந்த சமயத்தில் எங்களுக்கு மிகவும் உபயோகமாய் இருக்குமே..!".

தில்லுதுர கேட்டதும், செல்வத்தை முந்திக் கொண்டு திருமதி செல்வம் பதில் சொன்னார்.

"அது ஒண்ணும் பெரிய ரகஷியமில்லை மிஸ்டர் தில்லுதுர... வாழ்க்கை முழுவதும், எப்போதும் எந்த நேரத்திலும், நீங்க நான் சொல்லும் மூன்று வார்த்தையைச் சொல்லிக் கொண்டிருந்தால் போதும். உங்கள் வாழ்க்கை எப்போதுமே சந்தோசமாகவே செல்லும்..!".

தில்லுதுர ஆர்வம் தாங்காமல் திருமதி செல்வத்தைப் பார்த்துக் கேட்டார்.

"சொல்லுங்கள் மேடம். எது அந்த மூன்று வார்த்தை..?".

திருமதி செல்வம் எல்லோரும் ஆர்வத்துடன் தன்னைப் பார்ப்பதை அறிந்து சந்தோசமாய் சொன்னார்.

"அந்த மூணு வார்த்தை, 'நீங்க சொன்னா சரிதான்' என்பதுதான்...!" .

திருமதி  செல்வம் சொன்னதும் தில்லுதுர ஆர்வத்துடன் செல்வத்தைப் பார்த்துக் கேட்டார்.

"சார் நீங்க என்ன சொல்லறிங்க..?".

தில்லுதுர கேட்டதும் அனைவரும் ஆர்வத்துடன் செல்வம் பக்கம் பார்க்க...
அவர் சிரித்தபடியே சொன்னார்.

"அவ சொன்னா சரிதான்...!".
.
.
.

Wednesday, February 23, 2011

தில்லுதுர Vs அதிசய நாய்

தில்லுதுரயின் நண்பர் ஒரு அதிசய நாயை எங்கிருந்தோ வாங்கி வந்தார்.

அந்த நாய்க்கு தண்ணீரில் நடக்கும் சக்தி இருந்தது.

ஆண்டாண்டு காலமாய் தில்லுதுரயின் பெருமைகளையே கேட்டுக் கேட்டு அலுத்துப் போயிருந்த அந்த நண்பர், இப்போது தில்லுதுரயிடம் தனது பெருமையைக் காட்ட நினைத்தார்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை, தில்லுதுரயையும் நாயையும் கூப்பிட்டுக் கொண்டு துப்பாக்கியுடன் ஏரிக்கரைக்கு வந்தார் அவர்.

தில்லுதுர பார்த்துக் கொண்டிருக்கும்போதே... கரையில் இருந்தபடி அவர் வாத்துக்களை ஒவ்வொன்றாக சுட, அந்த அதிசய நாயும் தண்ணீரின் மேலாக நடந்து போய் ஒவ்வொரு வாத்தையும் கரைக்கு எடுத்து வந்து கொண்டிருந்தது.

உணர்ச்சியே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுரயிடம் திரும்பி, நண்பர் பெருமையுடன் கேட்டார்.

"பாத்தியா தில்லு, எப்படி என் நாய்..?".

கேட்ட நண்பரை திரும்பிப் பார்த்த தில்லுதுர சலனமின்றிக் கேட்டார்.

"ஆமா, உன் நாய்க்கு நீந்தத் தெரியாது போலிருக்கே...!".
.
.
.

Monday, February 21, 2011

ஒரு வார்த்தைக்கு என்ன எடை..?

பாரசீகக் கவிஞரும் ஞானியுமான ஷாஅதி ஏதோ ஒரு விஷயமாக அந்தப் பயில்வானைப் பார்க்க அந்த ஊருக்கு வந்திருந்தார்.

பயில்வானோ ஒரு அற்புதமான பயில்வான்.

எவ்வளவு எடை வேண்டுமானாலும் தூக்குவார்... நாட்டில் அவருடன் எடை தூக்கும் போட்டியில் அவரை யாரும் வென்றதும் கிடையாது.

எப்போதும் அவருடன் போட்டியிட்டு எவரும் இதுவரை ஜெயித்ததும் கிடையாது.

ஷாஅதி அவரைப் பார்க்க வந்தபோது பயில்வான் மிகுந்த கோபத்துடன் இருந்தார்.

வீட்டின் உள்ளே, கோபமாய் அவர் குரலும் பாத்திரங்கள் விழுந்து உடைவதுமாய் சப்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தது.

ஷாஅதி என்ன விஷயமென்று பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தார்.

அவர் சொன்னார்.

"பக்கத்து ஊரில் யாரோ பயில்வானை கேவலமாய்ப் பேசி விட்டார்களாம். அதைக் கேள்விப்பட்டு பயில்வான் பயங்கர கோபமாகிவிட்டார். அப்போதிருந்து இப்படித்தான் வீட்டுக்குள் சப்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறது..!".

அதைக் கேட்ட ஷாஅதி அந்தப் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்னார்.
 
"எவ்வளவோ பயங்கரமான எடைகளைத் தூக்கிய இந்த பயில்வானால், கேவலம் யாரோ சொல்லிய ஓரிரு வார்த்தைகளின் கனத்தைத் தாங்க முடியவில்லையா...? ஐயோ பாவம்..!" என்றாராம்.
.
.
.

Saturday, February 19, 2011

போன ஜென்மத்து ஞாபகம்

தில்லுதுர தன் வீட்டு வாசலில் உட்கார்ந்தபடி தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

"கொஞ்சநாளா வேலை டென்ஷன்ல எல்லாமே மறந்து போகுதுன்னு சொன்னேனே. அதுக்கு ஒரு டாக்டரைப் போயி பார்த்தேன். அவரு அதுக்கு ஒரு மாத்திரைய ப்ரிஸ்கிரைப் பண்ணினாரு. இட்ஸ் ஜஸ்ட் அமேஜிங். நீங்க அந்த மாத்திரையை சாப்பிட்டுப் பார்க்கணுமே. அட்டகாசம்... எனக்கு இப்ப போன ஜென்மத்து ஞாபகம் எல்லாம் வந்துடும் போல இருக்கு...!".

சொல்லிக் கொண்டே சிரித்தார் தில்லுதுர.

கேட்டுக் கொண்டிருந்த நண்பர் ஆச்சர்யப்பட்டு, "அந்த மாத்திரையோட பேரு என்ன்னு சொல்லறியா..? கொஞ்சம் உபயோகமா இருக்கும்...!".

நண்பர் கேட்டதும் தில்லுதுர யோசித்தபடி சொல்ல ஆரம்பித்தார்.

"அ... அது வந்து... இரு சொல்லறேன்...! இந்த ஒரு பூ இருக்குமே. சிகப்பு கலர்ல. சின்னச் சின்னதா அழகா. செடில முள்ளு எல்லாம் இருக்குமே. பறிச்சா கையில கூடக் குத்தும். நேரு சட்டைல வச்சிருப்பாரே..!".

யோசனையாய் தில்லுதுர சொல்வதைப் பார்த்த நண்பர் குழப்பத்துடன் கேட்டார்.

"எது... ரோஜாப் பூவையா கேக்கற..?".

நண்பர் சொன்னதும் பிரகாசமான தில்லுதுர, "கரெக்ட்.. ரோஜாதான்...!" என்றபடி வீட்டின் உள்பக்கமாய் திரும்பி மனைவியைப் பார்த்துக் கத்தினார்.

"ஏண்டி ரோஜா.. அந்த மாத்திரையோட பேரு என்னடி..?".
.
.
.

Thursday, February 17, 2011

தோடுடைய செவியன்

நான் ஒரு தமிழ் முனைவர் பட்டம் வாங்கியவள்.

நான் படித்த கல்லூரி கோவையில் சிவனடியார்களால் நடத்தப்பட்ட கல்லூரி.

படித்து முடித்து நான் முதன்முதலில் வேலை பார்த்த பள்ளியோ முருகனடிமைகளால் நடத்தப்பட்டது.

தவிரவும், எனது குடும்பமும் பக்திமயமான குடும்பம் என்பதால், எனது
கல்லூரிக்கால ஆய்வுகளும் பக்தி சார்ந்தே இருந்தன.
 
ஆனால், திருமணத்துக்குப் பிறகு நான் வேலை பார்த்த இடத்தினால், ஆரோக்கிய மாதாவும் குழந்தை ஏசுவும் என் பூசையறையில் புதிதாய் குடி புகுந்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தக் கதை என்னைப் பற்றியதில்லை.

என் மகன் டேனிக்கும் எனக்கும் நடக்கும் பிரச்சினை பற்றியது.

அவன் கதை கேட்கும் போதெல்லாம் நான் எனக்குத் தெரிந்த புராணக் கதைகளை அவனுக்கு சொல்வதையே  வழக்கமாய் வைத்திருந்தேன்..

கூடவே, அவன் அவனுடைய மேலைநாட்டுக் கதைகளைப் பேசும்போதெல்லாம் நான் நமது கதைகளை உயர்த்திப் பிடிப்பது என் வழக்கமும் கூட.

அவன் ஆகாய விமானம் பற்றிப் பேசினால், நான் நமது கற்பனையான புஷ்பக விமானம் பற்றிச் சொல்லுவேன்.

அவன் சூப்பர்மேன் பற்றிச் சொன்னால் நான் ஆஞ்சநேயர் பற்றியும்,
ஹாரிபாட்டர் சொல்லும்போது நமது அம்புலிமாமா பற்றியும் சொல்வது என் வழக்கம்.

அதுபோல்தான் அன்றும் நடந்தது.

தூக்கம் வராமல் கதை கேட்ட டேனிக்கு நான் அஸ்வினி தேவர்கள் கதையை சொல்ல முடிவெடுத்தேன்... சொல்லவும் ஆரம்பித்தேன்.

சதாசர்வ காலமும் சிவனைப் பற்றிப் பாடுவதே அஸ்வினி தேவர்கள்
என்றழைக்கப்படும் அந்த ரெட்டையர்களின் வேலை.

ஒரு சமயம் சிவபெருமான் அவர்கள் பக்தியில் மகிழ்ந்து என்ன வரம்
வேண்டுமென்று கேட்டார்.

தீவிர சிவபக்தர்களான அஸ்வினி தேவர்கள் இருவரும்,"பெருமானே.. நாங்கள் இருவரும் எந்நேரமும் உன்னைப் பற்றிய பதிகங்களைப் பாடிக் கொண்டே இருக்க வேண்டும். அது எப்போதும் உனது காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்...!" என்று கேட்டனர்.

இறைவனும் அவர்கள் ஆசையை நிறைவேற்ற, அவ்விருவரையும் தோடுகளாக்கி தன்னிரு காதுகளில் அணிந்து கொண்டார்.

இதுதான், சிவபெருமான் தோடுடைய செவியன் ஆன கதை என்று சொல்லி முடித்தேன்.

பக்தி இருந்தால் பரமனையும் அடையலாம் என்பதைச் சொல்லும் அஸ்வினிதேவர்களின் கதையிலிருந்து, டேனி என்ன கற்றுக் கொண்டான் என்பதைத் தெரிந்துகொள்ள அவனிடம் கேட்டேன்.

"டேனி.. இந்தக் கதையிலருந்து உனக்கு என்ன தெரியுது.?".

கண்கொட்டாமல் கதை கேட்டுக் கொண்டிருந்த டேனி மகா ஆர்வமாய் பதில் சொன்னான்.

"ஐபாட் ஹெட்ஃபோனையும் நாமதான் மொதல்ல கண்டுபுடிச்சிருக்கோம்,
இல்லம்மா..?" என்றான்.
.
.
.

Thursday, February 10, 2011

டேனியும் ஆப்பிளும்


நானும் என் மகன் டேனியும் அவன் அப்பாவுடன், பர்ச்சேஸ் முடித்து காரில் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்தது இது.

நாங்கள் இருவரும் முன் சீட்டில் உட்கார்ந்திருக்க, டேனி பின் சீட்டில் ஜன்னலில் வேடிக்கை பார்த்தபடி, அப்போதுதான் வாங்கியிருந்த ஆப்பிள்களில் ஒன்றை எடுத்து பாதி சாப்பிட்டிருந்தவன் கேட்டான்.

"அப்பா... ஏன் என்னோட ஆப்பிள் பிரவுன் கலரா மாறிடுச்சு..?".

தன் மகன் எதையும் தெளிவாய் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையை உடைய அவன் அப்பா, வண்டியை ஓட்டியபடியே  அவனுக்கு விளக்கமாய் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

"ஏன்னா, நீ அதோட தோலை சாப்பிட்ட உடனே, அதோட வெள்ளைச் சதையில வெளியில இருக்கிற காத்து படுது. அப்ப, காத்துல இருக்கற ஆக்ஸிஜனோட சேர்ந்து அது ஆக்ஸிடைஸ் ஆகுது. அதனால, அதோட மாலிக்யூலர் ஸ்ட்ரக்சர் மாற்றமாகி அதோட கலரும் மாறுது..!".

தெளிவாய் புரியும்படி சொன்ன திருப்தியில் என் கணவர், வண்டியைத் தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருக்க, ஒரு நீண்ட மௌனத்திற்கு அப்புறம் டேனி அவரிடம் கேட்டான்.

"அப்பா... இப்ப நீங்க என் கூடவா பேசிக்கிட்டு இருந்தீங்க..?".
.
.
.

Tuesday, February 8, 2011

ஜெருசலேமில் தில்லுதுர




தில்லுதுர தன் மனைவி குழந்தைகள் மற்றும் மாமியாருடன் ஜெருசலேம் டூர் போயிருந்தார்.

நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த லோ பேக்கேஜ் டூர் அது.

கிளம்பியதில் இருந்து நல்ல விதமாகவே போய்க் கொண்டிருந்த அந்த 15 நாள் டூரின் நடுவில், சரியாக எட்டாவது நாளில் அந்தப் பிரச்சினை வந்தது.

எட்டாவது நாள் இரவில்தான் தில்லுதுரயின் மாமியாருக்கு நெஞ்சு வலி வந்தது.

நள்ளிரவு நேரம், பாஷை தெரியாத ஊர்.

என்ன செய்வது என்று முடிவு எடுத்து ஹாஸ்பிடல் கொண்டு சேர்ப்பதற்குள் மாமியாரின் கதை முடிந்தே விட்டது.

டாக்டர், 'மாமியாரின் கதை முடிந்தது...' என்று கையை விரித்ததும், மனைவியும் குழந்தைகளும் அழுது புலம்ப தில்லுதுர தனக்கு டூர் அரேஞ்ச் செய்த நண்பனை போனில் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான்.

நண்பன் அங்கே இங்கே என்று விசாரித்துவிட்டு தில்லுதுரயின் போனுக்கு வந்தான்.

"தில்லு.. மாமியார இங்கயே புதைச்சுட்டா நம்மூருப் பணத்துல இருபதாயிரம் தான் ஆகுமாம். அதே பாடிய நம்மூருக்கு கொண்டு போகணும்னா அஞ்சு லட்சத்தத் தாண்டுமாம். என்ன பண்ணனும்னு முடிவு பண்ணிச் சொல்லு..!".

அழுது கொண்டிருந்த மனைவி தில்லுதுரயின் முகத்தைப் பார்க்க, தில்லுதுர நண்பனிடம் போனில் சொன்னான்.

"இதோப்பாருடா... அஞ்சு லட்சமில்ல, அம்பது லட்சமானாலும் பரவாயில்ல. என் மாமியார எங்க ஊர்லதான் அடக்கம் பண்ணனும். ஏற்பாடு பண்ணு...!".

தில்லுதுர சொன்னபடி மாமியாரின் உடல் சென்னை வந்து அடக்கம் செய்யும் போது, செலவு கிட்டத்தட்ட ஏழு லட்சம் ஆகியிருந்தது.

வந்தவர்களில் தில்லுதுரயின் நெருங்கிய நண்பன் ஒருவன் கேட்டான்.

"ஏன்டா... அங்கயே எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்திருந்தா இந்த ஏழு லட்சம் மிச்சம்தானே..?".

நண்பன் கேட்டதும் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, தில்லுதுர தணிந்த குரலில் தன் நண்பனிடம் சொன்னான்.

"அங்கயே பொதச்சிருக்கலாம்தான். ஆனா, அந்த ஊர்லதான் யேசு கிறிஸ்து செத்துப் போன மூணாம் நாளே உயிரோட வந்தாராமே..! கைடு அன்னிக்கு காலைலதான் சொன்னான். சரி, மாமியார் விஷயத்துல எதுக்கு அந்த ரிஸ்க் எடுக்கணும்தான் செலவானாலும் பரவாயில்லேனு இங்கயே கொண்டு வந்துட்டேன்..!" என்றான்.
.
.
.

Friday, February 4, 2011

குரு ஸ்தோத்திரம்


டேனி கின்டர்கார்டன் போக ஆரம்பித்து பத்து மாதங்கள் ஆனபோது நடந்தது இது.
ஆனால், அவன் எதுவும் கற்றுக் கொள்கிறானா என்பதிலேயே, என் கணவருக்கு ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.
கணவர் வெளியூரில் இருந்ததாலும் நான் கல்லூரிக்கு வேலைக்குப் போவதாலும் அவனுடைய பள்ளிக்குப் போக முடியாமலே இருந்து வந்தது.
டேனியிடம் பள்ளியில் என்ன நடந்தது என்பது பற்றியும் விசாரித்து அறிந்துகொள்ள முடியாமலேயே நாட்கள் நகர்ந்தது.
என் கணவர் மட்டும் அவனிடம் போனிலும் நேரிலும், 'ஏபிசிடி சொல்லு... பாபா ப்ளாக் ஷீப் சொல்லு..' என்று முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்.
அன்றும் அப்படித்தான், அவர் ஊருக்கு வந்திருந்தபோது சூப்பர் மார்க்கெட் போன இடத்தில் அவனுடைய வகுப்பு டீச்சரை எதிர்பாராமல் சந்தித்தோம்.
அவர்தான் டீச்சர் என்று தெரிந்ததும் என் கணவர் அவரிடம் விசாரணையை ஆரம்பித்துவிட்டார்.
"டேனி வகுப்புல எப்படி டீச்சர்..?".
அந்தப் பெண்மணி இயல்பாய் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
"ரொம்ப அமைதியான பையன். ஆனா, அவனும் அவனோட ஃபிரண்ட் ஹர்சந்த்தும் சேர்ந்துட்டாத்தான் ஒண்ணும் கையில பிடிக்க முடியாது..!".
"படிப்புல டீச்சர்..?".
டீச்சர் பொறுமையாய் சொன்னார்.
"ரொம்ப சுட்டி. க்ளாஸ்லயே இவன் தான் ஃபர்ஸ்ட். ஆல்ஃபபெட்ஸ்,நம்பர்ஸ்,கலர்ஸ் எல்லாம் கரெக்டா சொல்லுவானே...!".
என் கணவர் அலுப்புடன் சொன்னார்.
"ஆனா, நாங்க கேட்டா வாயே திறக்க மாட்டேங்கறாண் டீச்சர்..!".
டீச்சர் சிரித்தார்.
"அதெல்லாம் டேனி அட்டகாசமாச் சொல்லுவானே. அதுமட்டுமில்ல, அவன் என் கூடவே குரு ஸ்தோத்திரம் 'குருப்ரம்மா குருவிஷ்ணு' சொல்லற அழகப் பாக்கணுமே நீங்க..!".
தன் மகன் குரு ஸ்தோத்திரம் சொல்லுவான் என்றதும்  என் கணவரின் சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே..!
அவர் ஆர்வமாய் டீச்சரிடம் கேட்டார்,"டீச்சர்.. அவன் உண்மையிலேயே சொல்லுவானா டீச்சர்..?".
என் கணவரின் ஆர்வத்தைப் பார்த்த அந்த டீச்சர் சொன்னார்.
"நான் க்ளாஸ்ல நுழைஞ்சதும் மொதல்ல சொல்லறதே குரு ஸ்தோத்திரம்தான். அதுக்கப்புறம்தான் காலை வணக்கம் சொல்லி, அட்டன்டென்ஸ் எடுக்கறதே. இருங்க, இப்ப டேனிய சொல்ல வைக்கிறேன்..!" என்றவர் டேனியை அழைத்து, "டேனி... எங்கே குரு ஸ்தோத்திரம் சொல்லு..!".
அவன் டீச்சரை வெளியிடத்தில் பார்த்த வெட்கத்தில் நெளியவும், அவரே ஆரம்பித்தார்.
"டேனி... மிஸ் சொல்லுவேன் நீயும் கூடவே சொல்லணும், என்ன.?".
டேனி தலையை ஆட்டியதும் அவர் ஆரம்பித்தார்.
"குரு ப்ரம்மா..!"
டேனி தொடர்ந்தான்
"குரு ப்ரம்மா..!".
"குரு விஷ்ணு..!".
"குரு விஷ்ணு..!" என்று தொடர்ந்த டீச்சர்...
"குருவே நமஹ..!" என்று வெற்றிப் புன்னகையுடன் முடிக்க,
குரு ஸ்தோத்திரம் சொன்ன தன் மகனையே பெருமை பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த என் கணவரைப் பார்த்து சிரித்தபடியே, "குருவே நமஹ..!" என்று முடித்த டேனி தொடர்ந்து சொன்னான்.
"ஆல் ஆஃப் யூ குட்மார்னிங்...!".
.
.
.

Tuesday, February 1, 2011

அடுத்த வாரிசு

'ராம்நாத் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்' உரிமையாளர் ராம்நாத் நேற்று அதிகாலையில் இறந்து போனார்.

ராம்நாத் திருமணம் ஆகாதவர்.

எனவே, அவரது இந்தக் கோடிக்கணக்கான சொத்துக்கு நேரடி வாரிசு கிடையாது.

அவர் தனது மொத்தச் சொத்தையும் யார் பெயரில் எழுதி வைத்திருக்கிறார் என்பது ஒரு ரகசியமாகவே இருந்தது.

ஆனால், அதை யார் பெயருக்கு எழுதி வைத்திருக்கிறார் என்பது, அவரது வக்கீலான எனக்கும் ராம்நாத்தின் நெருங்கிய நண்பர்கள் சில பேருக்கு மட்டும்தான் தெரியும்.

இன்னும் சொல்லப்போனால், இனி அந்தச் சொத்துக்கு முழு உரிமையாளராகப் போகும் அவரது தூரத்து உறவுக்கார ஏழை அநாதைப் பெண்ணான, அந்த வசந்திக்குக் கூடத் தெரியாது.

ராம்நாத் இறந்ததும் வசந்தியைத் தேடி அவள் தங்கியிருக்கும் விடுதிக்குப் போனோம்.

அவள், யாரோ தனது தோழி வீட்டுக்குப் போயிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

ராம்நாத்தின் இறுதிக் காரியங்களில் நிறைய வேலை பாக்கி இருந்ததால், எனக்குத் தொழில்ரீதியாக நிறைய உதவிவரும் அந்தப் 'ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜன்ஸி'யைத் தொடர்பு கொண்டேன்.

அதன் முதலாளி விக்ரம் ஒரு துடிப்பான வளரத் துடிக்கும் இளைஞன்.. நல்ல புத்திசாலி.

அவனிடம் வசந்தியின் ஃபோட்டோவைக் கொடுத்து, ஆனால் அந்த உயில் விஷயத்தைச் சொல்லாமல், அந்தப் பெண்ணை பத்திரமாய் மூன்றாம் பேருக்குத் தெரியாமல் கொண்டு வரும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தேன்.

பிறகு, எனக்கிருந்த பிடுங்கல்களில் இந்த விஷயம் மறந்துபோக, ஒரு வாரம் கழித்து அவனுக்கு போன் செய்தேன்.

"என்னாச்சு விக்ரம்.? அந்த வசந்தியை கண்டுபிடிச்சுட்டியா..?".

விக்ரம் மறுமுனையில் பதில் சொன்னான்.

"நீங்க சொன்ன மறுநாளே கண்டுபிச்சுட்டேன் சார்..!".

"அப்புறம் அவ எங்கே இருக்கிறா..?".

நான் கேட்டதும் விக்ரம் கூலாய் பதில் சொன்னான்.

"என்கூட என் வீட்டில்தான் இருக்கிறா சார்...! பாவம் ஏழைப் பொண்ணு. சின்ன வயசு. என்னைப் போலவே அநாதை.பாக்கவே ரொம்பக் கஷ்டமா இருந்தது. மனசு தாங்கல.அதனால, நேத்துதான் அவளை வடபழனில வச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...!".
.
.
.

Thursday, January 27, 2011

கிளி ஜோஷியம்

டேனி இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளியில், அவனது ஆசிரியை கிளி பற்றிச் சொல்லும்போது, கிளி ஜோதிடம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

"கிளியானது எடுத்துக் கொடுக்கும் கார்டை வைத்து ஜோசியக்காரர் நம்ம எதிர்காலத்தைச் சொல்லுவார். உங்க யாருக்காவது இதுபோலக் கார்டை வச்சு எதிர்காலத்தைச் சொல்லும் ஆட்களைத் தெரியுமா..?".

மாணவர்கள் எல்லோரும் அமைதியாய் இருக்க, டேனி மட்டும் கையை உயர்த்தினான்.

"மிஸ்... என் அம்மா சொல்லுவாங்க மிஸ்..!".

ஆசிரியை மிகவும் ஆச்சர்யத்துடன் அவனிடம் கேட்டார்.

"நிஜம்மாவா..? எப்படிச் சொல்லுவாங்க..?".

டேனி தனது கண்களை விரித்துக் கொண்டு விளக்கமாய்ச் சொன்னான்.

"யெஸ் மிஸ்... ஒவ்வொரு தடவை என்னோட பிராக்ரஸ் கார்டைப் பார்க்கும்போதும் எங்கப்பா வீட்டுக்கு வந்ததும் என்ன நடக்கும்னு சொல்லுவாங்க. அதேதான் நடக்கும்...!" என்றான்.
.
.
.

Tuesday, January 25, 2011

தொபுக்கடீர்..!

ஒரு மாலை வேளையின் இளம் வெயிலில், அந்த மூன்று துறவிகளும் இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் ஏரியின் நடுவில் இருந்த படகில் உட்கார்ந்திருந்தார்கள்.

அதில் இருவர் அந்த இடத்திற்கு மிகப் பழக்கமானவர்களாகவும், ஒருவர் மிகப் புதியவராகவும் தோன்றினார்கள்.

வெயில் சற்றே அதிகமாக, அதில் ஒரு துறவி புதிய துறவியிடம், "நான் கரையில் இருக்கும் மரத்தடிக்குப் போகிறேன்..!" என்றபடி, படகை விட்டு இறங்கி சடசடவென்று தண்ணீரின் மீது நடந்துபோய், கரையில் இருந்த அந்த மரத்தடியில் உட்கார்ந்தார்.

உடனே, அடுத்த துறவியும் புதிய துறவியிடம், "நானும் அவருக்குத் துணையாய் அங்கே போகிறேன்..!' என்றபடி படகில் இருந்து இறங்கினார்.

அவரும், அதேபோல் தண்ணீரில் மேலாக ஒரு நடை நடந்துபோய், முந்தைய துறவியுடன் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டார்.

இதைப் பார்த்த அந்த புதிய துறவி, 'அவர்களால் முடியும்போது, நம்மால் முடியாதா என்ன..?" என்று எண்ணியபடி ஏரியில் இறங்கியவர், தொபுக்கடீர் என்று ஏரித் தண்ணீரில் விழுந்து காணாமல் போனார்.

கரையில் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு துறவிகளில், ஒருவர் மற்றொருவரிடம் சொன்னார்.

"அவர்கிட்ட பாறை எங்கெங்கே இருக்குன்னு நாம சொல்லவே இல்லியோ..?".
.
.
.

Saturday, January 22, 2011

வேண்டா விருந்து

தனது மேனேஜரை, ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார் என் கணவர்.
எதற்கெடுத்தாலும் டிரீட் கேட்டு தொந்தரவு செய்யும் மேனேஜர் என்பதால், வேண்டா வெறுப்பாய்த்தான் விருந்துக்கு அழைத்திருந்தார்.

மேனேஜர் வந்ததும், டைனிங் டேபிளை ஒழுங்கு செய்வதற்காக நானும் என் கணவரும் உள்ளே போயிருந்தபோது, ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த என் நான்கு வயது மகனிடம் பேச்சுக் கொடுத்தார் அவர்.

"தம்பி, உன் பேரு என்ன..?".

"டேனி.."

"ஸ்வீட் நேம். நான் யாருன்னு உனக்குத் தெரியுமா..?".

"ஓ தெரியுமே... நீங்க மேனேஜர் அங்கிள்..!".

"வெரிகுட். இன்னிக்கு யாருக்கு உங்க வீட்டுல விருந்துன்னு சொல்லு பார்க்கலாம்..!".

"உங்க வீட்டு நாய்க்கு அங்கிள்..!".

டேனியின் பதிலால் குழப்பமாகிப் போன மேனேஜர் அவனிடம் தெளிவாய்க் கேட்டார்.

"என் வீட்டு நாய்க்கா..? எப்படிச் சொல்லற..?".

டேனி இப்போது மிகத் தெளிவாய் அவரிடம் சொன்னான்.

"இன்னிக்குக் காலைல, 'எதுக்கு இவ்வளவு சிக்கன் வாங்கிட்டு வந்தீங்க'ன்னு அம்மா கேட்டப்ப, அப்பா சொன்னாரே... 'இன்னிக்கு அந்த மேனேஜர் நாய் விருந்துக்கு வருது'-ன்னு..!".
.
.
.

Thursday, January 20, 2011

நம்ம சிங்கு, நம்ம சிங்குதான்...!

நம்ம சிங் வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவருக்கு முதலில் கிடைத்த வேலை கொஞ்சம் விநோதமானது.

அது ஒரு நெடுஞ்சாலை கான்ட்ராக்டரிடம், அவர் கான்ட்ராக்ட் எடுத்திருந்த சாலையின் மத்தியில், பட்டையாய் பெயின்ட்டில் வெள்ளைக் கோடு போடும் வேலை.

நம்ம சிங் அந்த வேலையையும், மிக ஆர்வத்துடனும் மிகுந்த செய் நேர்த்தியுடனும் செய்தார்.

அவர் முதல் நாள், ஐந்து கிலோ மீட்டருக்கு அந்த மாதிரி கோடு போட்டிருந்தார்.

அடுத்த நாள், மூன்று கிலோ மீட்டருக்கு அதேபோல் கோடு போட்டிருந்தார்.

அதற்கடுத்த நாள், வெறும் ஒரு கிலோ மீட்டர்தான் கோடு போட்டிருந்தார்.

அவனுடைய கூலியைக் கொடுக்க வந்த அன்று, முதலாளி அவனுடைய நோட்டைப் பார்த்துவிட்டுக் கேட்டார்.

"என்ன சிங்கு... வந்த அன்னைக்கு நல்லா செஞ்சிருக்க. அப்புறம், கொஞ்ச கொஞ்சமாய்க் குறைஞ்சு இன்னைக்கு வெறும் ஒரு கிலோ மீட்டருக்குத்தான் பெயின்ட் பண்ணிருக்க. என்ன விஷயம்..?".

கேள்வி கேட்ட முதலாளியைப் பார்த்து, நம்ம சிங் சொன்னார்.

"இல்ல மொதலாளி... இதுக்கு மேல எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல. ஒவ்வொரு நாளும் எனக்கும் பெயின்ட் டப்பாவுக்கும் இடையில இருக்கற தூரம் அதிகமாயிட்டே போகுதில்ல..?".
.
.
.

Wednesday, January 12, 2011

பைபிள்.., கீதை.., குர்-ஆன்.., அப்புறம்...?

மூன்று மதத் துறவிகளும் கடவுள் மறுப்பாளரும் சந்தித்துக் கொண்ட ஒரு அற்புத நிகழ்வு அது.

அவரவர் மதத்தின் மீது அவரவருக்கு எவ்வளவு பற்று இருக்கிறது என்பதைப் பரிசோதிக்க நினைத்த ஒருவர், அந்தத் துறவிகள் ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்க விரும்பினார்.

துறவிகளின் அனுமதி கிடைத்ததும் அவர் மூன்று மதத் துறவிகளிடமும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்.

"உங்களை யாருமில்லாத தனித்தீவில் விட்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்க்ளுடன் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதித்தால், நீங்கள் எந்தப் புத்தகத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுவீர்கள்...?".

கேள்வியைக் கேட்டதும் அந்தக் கிறிஸ்துவத் துறவி சொன்னார்.

"நான் என்னுடன் எப்போதும் பைபிள் இருப்பதையே விரும்புவேன். அதனால், நான் பைபிளைத்தான் எடுத்துச் செல்வேன்..!".

முகம்மதியரான அந்தத் துறவி மிகுந்த பெருமையுடன் சொன்னார்.

"என் உயிரினும் மேலான எங்கள் திருமறையான குர்-ஆன் ஒன்றே, நான் என்னுடன் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!".

இந்துத் துறவியோ,"கீதை தவிர உயர்ந்தது எதுவும் உண்டோ. அதுவே நான் எடுத்துச் செல்லும் புத்தகமாய் இருக்கும்..!".

கேள்வியைக் கேட்டுப் பதில் பெற்றுக் கொண்டவருக்கு பரம திருப்தி.

என்றாலும், கடவுள் உணர்வாளர்கள் அவரவர் மதத்தின் மறைகளை எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்று தெரிந்து விட்டது...

கடவுளை மறுக்கும் அந்த நாத்திகருக்கு மதமோ, மறையோ இல்லையே, அவர் என்ன புத்தகத்தைக் கொண்டு செல்வார் எனத் தெரிந்து கொள்ள விரும்பி.. அவரிடம் திரும்பி அந்தக் கேள்வியைக் கேட்டார் அவர்.

கடவுளை மறுக்கும் அந்தக் கருப்புச் சட்டைக்காரர், சிரித்தபடியே அதற்கு பதில் சொன்னார்.

"அப்படி ஒரு நிலையில், நான் 'சீக்கிரம் கப்பல் கட்டுவது எப்படி?' என்னும் புத்தகம் கிடைத்தால் அதை எடுத்துச் செல்லவே விரும்புவேன்..!" என்றார்.
.
.
.

Tuesday, January 11, 2011

சார்ஜென்ட் தில்லுதுர

தில்லுதுர கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது.

கல்லூரியின் என்சிசி, ஒரு மலை வாசஸ்தலத்தில் ஒரு மாதம் கேம்ப் போட்டிருந்தது.

அந்த கேம்ப் வந்திருக்கும் என்சிசியில், தில்லுதுர ஒரு கம்பெனியின் சார்ஜென்ட் பொறுப்பில் இருந்தார்.

கேம்ப்பிற்குச் சென்ற மூன்றாம் நாள்.

அவர் கம்பெனியில் இருந்த ஒரு கேடட்டின் அம்மா இறந்து விட்டதாகச் செய்தி வந்திருந்தது.

மாஸ்டர் கூப்பிட்டு தில்லுதுரயிடம் சொன்னார்.

"சார்ஜென்ட் தில்லுதுர... கேடட் செந்திலின் அம்மா இறந்து விட்டதாக தந்தி வந்திருக்கிறது. அவரை வந்து என்னைப் பார்க்கச் சொல்..!".

தில்லுதுர போனபோது, அதிகாலைப் பேரேடில் நின்றிருந்தது ட்ரூப்.

அவர்களைப் பார்த்து பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க ஆரம்பித்தார் தில்லுதுர.

"கம்பெனி லிஷன்... நான் சொல்பவர்கள் ஒரு வரிசை முன்னால் வந்து நிற்கவும். கேடட் ரமேஷ்... இன்று கிச்சன் உங்கள் பொறுப்பு. கேடட் செந்தில்... நமது தங்குமிடம் சுத்தம் செய்வது உங்கள் பொறுப்பு. அப்புறம், கேடட் செந்தில்... உங்கள் அம்மா இறந்துவிட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. நீங்கள் சென்று, அலுவலகத்தில் நமது கேபடனைச் சந்திக்கவும்..!".

அன்று மாலை, தில்லுதுரயிடம் மாஸ்டர் சொன்னார்.

"சார்ஜென்ட் தில்லுதுர... ஒரு கேடட்டின் அம்மா இறந்ததை நீங்கள் தெரிவித்த விதம் சரியில்லை என்றே நான் நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் பதமாக, புத்திசாலித்தனமாகச் சொல்ல முயற்சி செய்யலாம்...!".

"யெஸ் சார்...!" சொன்ன தில்லுதுர, கேப்டனுக்கு ஒரு சல்யூட் அடித்து விடை பெற்றார்.

மறுபடி, ஒரு பதினைந்து நாள் இருக்கும்... அதேபோல் ஒரு அதிகாலையில் மாஸ்டர் தில்லுதுரயைக் கூப்பிட்டார்.

"சார்ஜென்ட் தில்லுதுர... கேடட் மகேஷின் அம்மா இறந்து விட்டதாக தந்தி வந்திருக்கிறது. அவரை வந்து என்னைப் பார்க்கச் சொல். ஆனால், இந்தமுறை செய்தியைக் கொஞ்சம் பக்குவமாக, புத்திசாலித்தனமாகச் சொல்லவும்...!".

"ஓகே சார்...!" சல்யூட் அடித்துவிட்டு வந்த தில்லுதுர, காலைப் பேரேடில் வரிசையாய் நின்றிருந்த கம்பெனியிடம் சொன்னார்.

கேடட் மகேஷிடம் செய்தியை எப்படிச் சொல்வது என்று யோசித்தபடியே சொன்னார்.

"அட்டென்ஷன் கேடட்ஸ்.. லிசன்...! உங்களில் யார் யாருக்கெல்லாம் அம்மா இருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இரண்டு ஸ்டெப் முன்னால் வரவும்." என்றவர் தொடர்ந்து சொன்னார்.

"நோ நோ... கேடட் மகேஷ். நீங்க முன்னால வர வேண்டாம்..!
.
.
.

Monday, January 10, 2011

ஹிந்தி வாழ்க..!

சென்னையின் ஒரு பேருந்துப் பயணத்தின் இடையில், முழுக்க முழுக்க ஆன்டிராய்ட் மொபைலில் நான் தட்டச்சு செய்து வெளியிட்ட முதல் கதை:

மிக்கி... சுண்டெலியில் ஒரு சுட்டி எலி.
அது தனது அம்மாவின் பேச்சைக் கேட்காமல், அன்றும் வெளியே விளையாடப் போயிருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தை வெகுநாளாய் எதிர்பார்த்திருந்த டாம், இப்போது மிக்கியைத் துரத்தத் துவங்கியது.
துரத்தும் பூனையைக் கண்ட சுண்டெலி மிக்கி, உயிரைக் கையில் பிடித்தபடி தன் வளையை நோக்கி ஓடியது.
குட்டியைத் துரத்தும் டாமைக் கண்ட மிக்கியின் அம்மா தனது வாயைக் குவித்துக் கொண்டு,"லொள்... லொள்..!" என்று நாயைப்போல் கத்தியது.
எலியைத் துரத்திக் கொண்டு வந்த டாம் பூனை, புலியின் குரலைக் கேட்டதுபோல் அலறியபடி திரும்பி ஓட...
இன்னும் உயிர் பயத்தில் நின்றிருந்த குட்டி மிக்கியைப் பார்த்து, அதன் அம்மா சிரித்தபடி சொன்னது.
"இன்னொரு பாஷையைத் தெரிந்து வைத்துக் கொள்வது எவ்வளவு உபயோகம் பார்த்தாயா..?".
,
,
,

தில்லுதுரயின் திருமணம்

தில்லுதுர தனது திருமண விஷயமாக, தன் காதலியின் தந்தையைச் சந்தித்துப் பேச, அவர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

காதலியின் தந்தை எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்ட பின்னர், தனது மனைவிக்கும் இதில் சம்பந்தம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள, தில்லுதுரயிடம் கேட்டார்.

"இது சம்பந்தமாக, இதற்கு முன்னர் நீ என் மனைவியைச் சந்தித்திருக்கிறாயா..?".

அவர் கேட்டதும், லேசான சங்கடத்துடன் தில்லுதுர அவரிடம் சொன்னார்.

"பார்த்திருக்கிறேன் சார்...! ஆனாலும், எனக்கு உங்கள் மகளைத்தான் அதிகம் பிடித்திருக்கிறது..!".
.
.
.

Friday, January 7, 2011

காக்காவும் அதன் கக்காவும்

தில்லுதுர அவரது நண்பர் ராஜாவுடன் பார்க்கில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு காக்கா தில்லுதுர மீது பறந்தபடியே கக்கா பண்ணிவிட்டது.

அசிங்கமாகிவிட்ட சட்டையைத் துடைக்க தண்ணீர் எடுத்துவர, ராஜா வேகவேகமாய் பக்கத்திலிருந்த பைப்பை நோக்கி ஓடினார்.

தில்லுதுர நண்பரைப் பார்த்துச் சொன்னார்.

"யூஸ் இல்ல, விட்டுடுங்க...!".

குழப்பமாய்த் தன்னைப் பார்த்த ராஜாவிடம் தில்லுதுர தொடர்ந்து சொன்னார்.

"எப்புடியும் நீங்க தண்ணியப் புடிச்சுட்டு வர்றதுக்குள்ள, அந்தக் காக்கா இன்னும் அஞ்சாறு கிலோமீட்டர் பறந்து போயிருக்குமே...!" என்றார்.
.
.
.

Wednesday, January 5, 2011

ஆட்டு நாக்கு

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், தில்லுதுர வீட்டில் பிரியாணி செய்யச் சொல்லியிருந்தார்.

டிபார்ட்மென்டல் ஸ்டோரில் முட்டை மற்றும் தேவையான ஐட்டங்களை வாங்கிக் கொண்டு, நேராக மட்டன் கடையில் வந்து பைக்கை நிறுத்தினார் தில்லுதுர.

நல்ல கூட்டம் கடையில்.

காய்கறி இன்னபிற உள்ள பையை பைக்கிலேயே வைத்துவிட்டு, முட்டையை மட்டும் பத்திரமாகக் கையில் எடுத்துக் கொண்டு தன்னுடைய டர்னுக்காக காத்திருக்கும் போதுதான், அவர் கறிக் கடைக்காரர் மட்டன் வெட்டும் அந்த அடிமரக் கட்டையின் மேலிருந்த ஆட்டின் நாக்கைப் பார்த்துவிட்டுக் கேட்டார்.

"இன்னாதுப்பா அது..?".

கறிக் கடைக்காரர் எப்போதும்போல் உற்சாகமாய் பதில் சொன்னார்.

"ஆட்டோட நாக்கு சார்.ஒரு அம்மா எடுத்து வைக்கச் சொல்லிட்டுப் போயிருக்கிது..!".

தில்லுதுர ஆச்சர்யமாய்க் கேட்டார்.

"ஆட்டோட நாக்கை எல்லாமா தின்னுவாங்க..?".

கறிக்கடைக் காரர் சிரித்தார்.

"இன்னா சார் இப்பிடிக் கேட்டுட்ட.? ஷோக்கா இருக்கும். உனக்கு வோணுமா..?".

தில்லிதுர அருவருப்புடன் பதில் சொன்னார்.

"சேச்சே... ஒரு மிருகத்தோட வாயிலருந்து வந்ததை என் வாயில போடறதா..? சான்ஸே இல்லை..! கருமம்..கருமம்..".

கடையில் நின்றிருந்தவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்க்க, கறிக் கடைக்காரர் தில்லுதுர சொன்ன எதைப் பற்றியும் கவலைப்படாமல் கறியை வெட்டியபடியே கேட்டார்.

"அதென்ன சார் கையில வச்சிருக்கீங்க... முட்டையா..?" என்றார்.
.
.
.