Monday, January 30, 2012

மாவீரன் தில்லுதுர

அது ஐந்தாம் வகுப்புக்கான நீதிபோதனை வகுப்பு.

ஆசிரியை தனது மாணவர்களுக்கு நேற்று கொடுத்திருந்த அசைன்மென்ட் பற்றி கேட்டுக்> கொண்டிருந்தார்.

அது எல்லோரும் தனது பெற்றோரிடம் ஒரு நீதிக்கதையைக் கேட்டு அதை வந்து> வகுப்பில் சொல்ல வேண்டும் என்பதே.>> அதேபோல், எல்லோரும் ஒவ்வொருவராய் வந்து தனது அப்பா அம்மா சொன்ன கதைகளை> சொல்லத் துவங்கினர்.

எல்லாம், வழக்கமான கெடுவான் கேடு நினைப்பான், ஏமாற்றாதே ஏமாறாதே வகைக் கதைகளே.

கிட்டத்தட்ட ஆசிரியை அலுத்துப் போகும்போது, தில்லுதுரயைன் மகன் எழுந்து வந்தான்.

ஆசிரியை அவனிடம் ஆவலுடன் கேட்டார்.

"தம்பி... நீ எதுவும் கதை சொல்லப் போறியா?".

அவன் ஆர்வத்துடன் பதில் சொன்னான்.

"ஆமா மிஸ். எங்க அம்மா சொன்னாங்க. எங்க அப்பாவைப் பத்தின கதை!".

சுத்தமாய் அலுத்துப் போயிருந்த ஆசிரியை, சட்டென்று ஆர்வம் கண்ணில் மின்ன கேட்டார்.

அவன் ஆர்வமாய் சொல்ல ஆரம்பித்தான்.

"மிஸ்... எங்கப்பா பேரு தில்லுதுர. இது அவர் மிலிட்டரில வேலை பார்க்கும்போது நடந்தது. அவர் ஒரு சமயம் பாகிஸ்தான் பார்டர்ல போயிட்டருந்தப்ப அவர் ப்ளேனை எதிரிகள் சுட்டு விழுக வச்சிட்டாங்க. அப்ப, எங்கப்பா டக்குனு பாராசூட்ல வெளிய குதிச்சுட்டாரு. குதிக்கும்போது அவர் கையில ஒரு பாட்டில் விஸ்கி, ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி மட்டும்தான் இருந்ததாம். குதிச்ச இடமோ எதிரிகள் மத்தியில. எங்கப்பா மேல இருந்து எறங்க எறங்கவே கையில இருந்த விஸ்கிய மொத்தமும் தொறந்து குடிச்சுட்டாராம்."

ஆசிரியை மட்டுமல்ல, வகுப்பே தில்லுதுர இப்ப என்ன செஞ்சிருப்பாருனு ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தது. பையன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

"கீழே எறங்கின எங்க அப்பாவை எதிரிகள் 75 பேரு சுத்திக்கிட்டாங்க. எங்கப்பா மொதல்ல துப்பாக்கில இருந்த புல்லட் தீருற வரைக்கும் 40 பேரை சுட்டுக் கொன்னுட்டு, அடுத்த 20 பேரை கத்தி ஒடயற வரைக்கும் குத்திக் கொன்னாராம். மீதி இருந்த 15 பேரையும் வெறும் கையாலயே அடிச்சுக் கொன்னுட்டு வந்த எங்கப்பாவுக்கு அரசாங்கமே பரம்வீர்சக்ரா அவார்ட் கொடுத்துச்சாம்!".

அவன் சொல்லி முடித்ததும் வகுப்பே வியப்புடன் அவனைப் பார்க்க, ஆசிரியை மட்டும் அதிர்ச்சியுடன் அவனிடம் கேட்டார்.

"இந்தக் கதைல உங்க அம்மா உனக்குச் சொன்ன நீதி என்ன? ".

ஆசிரியை கேட்டதும் அவன் எந்த சலனமும் இல்லாமல் சொன்னான்.

"அப்பா குடிச்சிருக்கும் போது யாரும் அவர் பக்கத்துல போகக் கூடாது..!".
.
.
.

Tuesday, January 24, 2012

க்ரீன் ஆப்பிள் என்ன சுவை.?


வேலை முடிந்து அவர் சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்டால் டேனியுடன் விளையாடியபடியே சாயங்கால ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவது அவர் வழக்கம்.

அன்றும் அப்படித்தான்... தின்பதற்கு ஒன்றும் இல்லாததால் பிரட் டோஸ்ட் செய்து உடன் இரண்டு ஜாம் வகைகளையும் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

நான் சமையலறையில் இருந்தாலும், முன்னறையில் அப்பாவும் பையனும் பேசுவது காதில் விழுந்து கொண்டுதானிருந்தது.

ஏதோ ஒரு ஜாமை பிரட்டுடன் சாப்பிட்டவர், டேனியிடம் சந்தேகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

"என்ன ஜாம்டா இது.?".

பதிலுக்கு டேனியின் அசிரத்தையான் குரலும் கேட்டது.

"அதுல என்ன வாசம்பா அடிக்குது.?".

பதிலுக்கு அவருடைய குரல் அந்த டேஸ்ட் பிடிக்காத கடுப்புடன், "ஏதோ பசையோட வாசம் அடிக்குதுடா...!".

சொன்னவுடன் டக்கென்று டேனியின் பதில் குரல் கேட்டது.

"அப்பிடின்னா நீ சாப்பிடறது க்ரீன் ஆப்பிள் ஜாம்-ப்பா... ஸ்ட்ராபெர்ரி ஜாம்னா சோப்பு வாசம் அடிக்கும்..!".
.
.
.

Monday, January 23, 2012

டெண்டுல்கரும் தில்லுதுரயின் நாயும்

அன்று மிகப் பெரிய திரையில் பொதுமக்கள் ஒன்டே கிரிக்கெட் பார்க்க அந்த ஹோட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

டாஸில் ஜெயித்த இந்தியா முதலில் பேட் செய்ய ஆரம்பித்து, டெண்டுல்கர் இறங்கியிருந்ததால் கூட்டம் உள்ளே வேகவேகமாய் நுழைந்து கொண்டிருந்தது.

ஹோட்டலின் அந்த ஹாலில் நுழைபவர்களை செக் செய்து அனுப்பிக் கொண்டிருந்த அந்த செக்யூரிட்டிகளில் ஒருவர், அப்போதுதான் வாசலை கடந்து கொண்டிருந்த தில்லுதுர நாயுடன் வருவதைப் பார்த்து ஆச்சர்யத்துடன் நிறுத்தினார்.

"சார்... இது பொது மக்கள் நிறைய பேர் பார்க்க ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி. இங்க நாயையெல்லாம் அனுமதிக்க முடியாது.!".

சொன்ன செக்யூரிட்டியைப் பார்த்து தில்லுதுர சொன்னார்.

"சார்... தயவுசெய்து என் நாயை நீங்க அனுமதிச்சே ஆகணும். என் நாய் கிரிக்கெட்னா விரும்பிப் பார்க்கும். அதுவும் டெண்டுல்கர்னா இதுக்கு உயிரு..!".

செக்யூரிட்டி இப்போது குழப்பத்துடன் தில்லுதுரயைப் பார்த்தார்.

'நாய் கிரிக்கெட் பார்க்குமா.? அதுவும் டெண்டுல்கர் எல்லாம் அதுக்கு தெரியுமா.?'.

அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, டெண்டுல்கர் ஒரு ஃபோர் அடிக்க, அதை திறந்திருந்த கதவின் வழியே பார்த்த தில்லுதுரயின் நாய் சட்டென்று இரண்டு கால்களில் எழுந்து நின்று, முன்னங்கால்களைத் தட்டி 'உய் உய்"யென்று விசில் அடிக்க... செக்யூரிட்டி அரண்டே போனார்.

"பாத்தீங்களா.?" என்று தில்லுதுர கேட்பதற்குள், டெண்டுல்கர் அடுத்த பாலில் ஒரு சிக்ஸரை விளாச, நாய் இப்போது இன்னும் உற்சாகமாகி, கைதட்டி விசிலடித்து ஒரு பல்டி வேறு போட்டது.

பார்த்துக் கொண்டிருந்த செக்யூரிட்டி ஆச்சர்யத்துடன் தில்லுதுரயைப் பார்த்துக் கேட்டார்.

"என்னங்க இது.. பயங்கர ஆச்சர்யமா இருக்கு.! டெண்டுல்கர் அடிக்கற ஃபோர் சிக்ஸுக்கே உங்க நாய் இந்த ஆட்டம் போடுதே... டெண்டுல்கர் ஒரு செஞ்சுரியப் போட்டா என்னங்க செய்யும்.?".

செக்யூரிட்டி கேட்டதும் தில்லுதுர ஒரு சுரத்தே இல்லாம பதில் சொன்னார்.

"அது என்ன பண்ணும்னுதான் தெரிய மாட்டேங்குதுங்க.! ஏன்னா, நான் இந்த நாயை வாங்கி பத்து வருசம்தான் ஆகுது.!" என்றார்.
.
.
.

Wednesday, January 18, 2012

டாய்லெட் எங்கே இருக்கு.?


டேனி படிக்கும் யூகேஜி வகுப்பிற்கு அன்றுதான் புதிதாக வந்திருந்தான், பள்ளிக்கே அன்றுதான் புதிதாய் வந்திருந்த அச்சுத்.

வந்தவன் நேராய் டேனிக்கு பக்கத்தில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.

புதிதாய் வந்த பயத்துடனும் தயக்கத்துடனும் இருந்த அச்சுத்... கொஞ்ச நேரத்தில் லேசான கூச்சத்துடன் எழுத்து, "மிஸ்..!" என்று ஒற்றை விரலை உயர்த்தினான்.

ஆசிரியை அவன் புதிதாய் வந்தவன் என்பது தெரியாமல் தலையாட்ட, அவன் தயக்கத்துடனே வெளியே போய் ஐந்து நிமிடங்களில் வகுப்பு வாசலுக்கு திரும்ப வந்தான்.

"மிஸ்... எங்க இருக்குனு தெரியல..!".

குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்த ஆசிரியை அவன் புதியவன் என்பதை உணர்ந்ததும், "நேராய் போய் லாஸ்ட்ல லெஃப்ட். சீக்கிரம் போய்ட்டு வா..!" என்று சொல்லிவிட்டு வகுப்பைத் தொடர ஆரம்பித்தார்.

இப்போதும் அதைவிடத் தயக்கத்துடன் மெல்ல தலையாட்டியபடி நகர்ந்த அச்சுத், ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்து இன்னும் பாவமாய் சொன்னான்.

"மிஸ்... எங்க இருக்குனு தெரியல..!".

சற்றே கோபத்துடன் நிமிர்ந்த ஆசிரியை அச்சுத்தை பார்த்துவிட்டு டேனியிடம் திரும்பி சொன்னார்.

"டேனி.. கோ அன்ட் ஹெல்ப் ஹிம்...!".

டேனி எழுந்து வேகமாய் ஓடிய ஐந்து நிமிடத்தில், சந்தோசத்துடனும் நிம்மதியுடனும் வந்த அச்சுத் அவன் இருக்கையை நோக்கிப் போய் அமர, பின்னாலேயே வந்த டேனியிடம் ஆசிரியை கேட்டார்.

"என்ன ஆச்சு.? டாய்லெட் முன்னாலயே தான இருக்கு.? ஏன் அவன் எங்க இருக்குனு தெரியலனு சொன்னான்.?".

ஆசிரியை கேட்டதும் டேனி கூச்சத்துடன் டேனி தலையைக் குனிந்தபடி சொன்னான்.

"மிஸ்... அவனுக்கு டாய்லெட் எங்க இருக்குனு தெரிஞ்சுடுச்சு. ஆனா, விட்டுலருந்து வர்ற அவசரத்துல ட்ரவுசர திருப்பி போட்டுட்டு வந்துட்டான். அதத்தான் எங்க இருக்குனு தெரியலனு சொல்லிட்டு இருந்திருக்கான்..!" என்றான்.
.
.
.

Saturday, January 7, 2012

விட்டமின் மாத்திரைகள்

டேனியை பள்ளியிலிருந்து அழைத்து வந்த ஒருநாள் மாலையில் நடந்தது இது.

என் பக்கத்து வீட்டுப் பெண் செல்போனில் அழைத்து, வரும் வழியில் அவரது ஒரு வயதுக் குழந்தைக்கு ஏதோ ஒரு விட்டமின் மாத்திரையின் பெயரும் அது பவுடர் போல இருக்கும் என்றும் சொல்லி அதை வாங்கி வர முடியுமா என்று உதவி கேட்டார்.

"கண்டிப்பாய்..!" என்று சொல்லி செல்லை அணைத்துவிட்டு, மெடிக்கல் ஷாப் வந்து சேர்வதற்கான பத்து நிமிடத்தில் அந்த விட்டமின் மாத்திரையின் பெயரை சுத்தமாய் மறந்து விட்டிருந்தேன்.

திரும்பவும் அவருக்கு ஃபோன் பண்ணிக் கேட்டால், நாம் எவ்வளவு கவனக்குறைவாய் இருக்கிறோம் என்று நினைத்து விடுவாரோ என்று முதலில் மெடிக்கல் ஷாப்பிலேயே கேட்டுப் பார்க்கலாம் என முடிவு செய்தேன்.

மெடிக்கல் ஷாப்பில் இருந்தவரோ, ஒரு வயதுக் குழந்தைக்கான பவுடர் வடிவ விட்டமின் மாத்திரைகள் என்று இன்னும் பத்துப் பதினைந்து பேரைச் சொல்ல இருந்த கொஞ்ச ஞாபகமும் போய் குழப்பத்துடன் விழித்தேன்.

நான் குழம்புவதைப் பார்த்த மெடிக்கல் ஷாப்காரர் எனக்கு உதவுவதற்காக, "மேடம்.. அது விட்டமின் ஏயா,பியா இல்ல சியான்னாவது சொல்ல முடியுமா..?" என்று கேட்டார்.

அதுவரை பேசாமல் எங்கள் இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டேனி, இப்போது மெடிக்கல் ஷாப்காரரைப் பார்த்துச் சொன்னான்.

"எது வேணா குடுங்க அங்கிள். அவன் ரொம்ப சின்னப் பையன். அவனுக்கு இன்னும் ஏ,பி,சி,டி எல்லாம் தெரியாது...!" என்றான்.
.
.
.

Wednesday, January 4, 2012

ட்வின்ஸ்

இரண்டாம் வகுப்பு படிக்கும் டேனி அன்று பள்ளியிலிருந்து வந்ததும் அவன் அப்பாவிடம் ஆச்சர்யமாய் ஓடினான்.

"அப்பா... இன்னிக்கு எங்க க்ளாஸ்ல ராம் லக்ஷ்மண்னு புதுசா ரெண்டு ஸ்டூடண்ட்ஸ் வந்திருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் பாக்க அப்டியே ஒரே மாதிரி இருக்காங்க தெரியுமா?".

"அப்பிடியா.?" ஆச்சர்யமாய் கேட்ட அவன் அப்பா, ஒரு புதிய வார்த்தையை டேனிக்கு கற்றுக் கொடுக்கும் ஆர்வத்துடன், "அவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருந்தா அவங்க ரெண்டு பேரும் ட்வின்ஸா இருப்பாங்க..!" என்றார்.

"ஓஹோ... அப்படி இருந்தா அவங்க ட்வின்ஸா.?" என்று ஆர்வத்துடன் கேட்ட டேனி விளையாட ஓடிவிட்டான்.

ஆனால், மறுநாள் பள்ளி விட்டு வந்ததும், அதைவிட ஆச்சர்யத்துடன் அவன் அப்பாவிடம் ஓடியவன் கண்களை விரித்தபடி சொன்னான்.

"அப்பா விசயம் தெரியுமா...? நான் அந்த ராம் லக்ஷ்மண் கிட்ட கேட்டேன். அவங்க நீ சொன்ன மாதிரி ட்வின்ஸ் மட்டுமில்ல... அவங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பியும் கூடவாம்...!" என்றான்.
.
.
.