Tuesday, April 22, 2014

தில்லுதுரயும் டாஸ்மாக் லீவும்

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மூன்றுநாள் லீவ் என்றதும் தில்லுதுர அலர்ட் ஆகிவிட்டார்.

மூன்று நாளும் வீட்டில் சரக்கை வாங்கி வைத்துக் குடிக்க மனைவி விட மாட்டாள் என்பதால், வரும் போதே நன்றாக சுதி ஏத்திக் கொண்டுதான் வந்தார்.

வீட்டுக்கு வந்து மனைவியின் திட்டு எல்லாம் வாங்கி முடித்து விட்டு, சாப்பிட்டு படுக்கும் போதுதான் மனைவி சொன்னாள்...

“ஏங்க... புதுசா வந்ததால இங்க நமக்கு ஓட்டு இல்ல. என் ஓட்டு இன்னும் அம்மா வீட்டு அட்ரஸ்ல தான இருக்கு. நான் வேணும்னா நாளைக்கு காலைல போய்ட்டு எலெக்சன் முடிஞ்சு வெள்ளிக் கிழமை வரட்டுமா.!”.

கேட்டதுதான் தாமதம்.

மூன்று நாட்கள்...மனைவியும் இல்லாமல் டாஸ்மாக்கும் இல்லாமல்.

தில்லுதுர கண்கள் கலங்கி விட்டது.

குரல் போதையில் உளறலோடு சொன்னார்.

“மூணு நாள்... ஐயோ... நீ இல்லாம நான் எப்படி இருக்கப் போறேன்னு தெரியலையே தங்கம்...!”

தில்லுதுர புலம்ப ஆரம்பித்ததும் மனைவி சிரித்தபடி கேட்டாள்.

“இது யாரு பேசறது... நீங்க பேசறீங்களா இல்ல உள்ள போன சரக்கு பேசுதா.?”.

மனைவி கேட்டதும் அதே உளறலோடு பதில் சொன்னார்.

“ஏண்டி... நாந்தான் பேசறேன். ஆனா நான் பேசறது உங்கூட இல்ல... சரக்குகூட.!” என்றார்.
.
.
.



Wednesday, April 16, 2014

டேனியின் அழுகை

டேனி அன்று பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே சோகமாகவே இருந்தான்.

சாயங்காலம் சாப்பிடுவதற்கான நொறுக்குத் தீனிகளைக் கொடுத்து விட்டு, மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.

”ஏன் டேனி... சோகமா இருக்க.?”

கேட்டதும் டேனி கவலையுடன் திரும்பி என்னைப் பார்த்தான்.

“நான் ரொம்பக் கருப்பா இருக்கனாம்மா.?”

நான் அவனைத் தேற்றும் விதமாய்ச் சொன்னேன்.

“இல்லியேடா... நீ நல்ல செகப்பு தான.!”

சொன்னதும் அவன் தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“என் கண்ணு ரெண்டும் முட்டை முட்டையா பெருசா இருக்காம்மா.?”

இதென்னடா வம்பாப் போச்சு - என்று எண்ணியவாறே அவனுக்கு ஆறுதலாய் பதில் சொன்னேன்.

“இல்லியேடா... உன் கண்ணு ரெண்டும் ரொம்ப அழகா, பட்டு மாதிரி இருக்க வேண்டிய சைஸ்லதான இருக்கு.!”

டேனி இன்னும் திருப்தியாகாமல் தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“நான்... குண்டா தொப்பையா சொட்டைத் தலையோட ஏதாவது இருக்கேன்னாம்மா.?”

என்னடா... புள்ள இன்னிக்கு தன் அழகு மேல இவ்வளவு வருத்தமா இருக்கானே என்று யோசித்த படியே சொன்னேன்.

“சேச்சே... யாருடா சொன்னா அப்படியெல்லாம். நீ சும்மா தங்கமாட்டம் அம்புட்டு அழகா இருக்க. உன்னை யாரு அப்பிடியெல்லாம் சொன்னா.?”

கேட்டதும் டேனி வருத்தத்துடன் சொன்னான்.

“அப்படியெல்லாம் யாரும் சொல்லலம்மா. ஆனா, எதிர் வீட்டு ஆன்ட்டி எப்பப் பாத்தாலும் என்னை ”டேனி... அவன் அப்பா மாதிரியே இருக்கான்”னு சொல்றாங்களே.!”.
.
.
.