Tuesday, November 30, 2010

டேனியும் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கும்

நான் ஒரு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர்.

மொழியை மோசமாய்க் கையாளும் யாரைக் கண்டாலும் கோபமாய் வரும் எனக்கு.

என் மகன் டேனியோ, அவனது தந்தையின் விருப்பப்படி கான்வென்டில் படிப்பவன்.

ஆங்கிலம் கலக்காமல் அவனுக்கு ஒரு வாக்கியம் கூடப் பேசவே வராது.

அதனால், அவன் ஆங்கிலம் பேசும்போது அதற்கிணையான தமிழ் வார்த்தைகளைச் சொல்லித் தருவதும் அதை அவனைப் பேச வைப்பதும் என் வழக்கம்.

இது சம்பந்தமாக அடிக்கடி செல்லச் சண்டைகள் நடக்கும் எங்களுக்குள்.

அன்றும் அப்பிடித்தான்...

நான் டேனியுயுடன் கடைவீதியில் வீட்டிற்குத் தேவையான எல்லாம் வாங்கிவிட்டு திரும்பும் போது, டீ சாப்பிடுவதற்காக ஒரு நல்ல அடுமனைக்குள்(பேக்கரி) நுழைந்தோம்.

அடுமனையில் நல்ல நல்ல கேக்குகளைப் பார்த்த டேனி,"அம்மா... ஒரு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்குமா..!"என்றான் கண்கள் நிறைய ஆவலுடன்.

நான் 'சரி' சொல்லவும் சந்தோசமாய் கடைக்காரரை அழைத்து கேக்கை ஆர்டர் செய்துவிட்டு,"ஹை சூப்பர்... ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் ரொம்ப அட்டகாசமாய் இருக்கும்..! ஐ ஜஸ்ட் லவ் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்..." என்றான்.

நான் வழக்கம்போல்,"என்ன மொழி பேசற நீ...? சூப்பர்,அட்டகாசம்,ஜஸ்ட் லவ்னு... ஒழுங்கா நல்லாத் தமிழ்ல சொல்லு. இல்லைனா, உனக்கு கேக் கிடையாது...!".

சொல்லிவிட்டு நான் கோபமாய்த் திரும்பி உட்கார்ந்து கொண்டேன்.

டேனி என் வருத்தத்தைச் சங்கடத்துடன் கவனித்தவன், "சரிம்மா... நான் தெளிவாத் தமிழ்ல சொல்லறேன்..."என்றவன், கடைக்காரர் கொண்டுவந்து டேபிளில் வைத்த கேக்கை ஆவலுடன் பார்த்தபடியே சொன்னான்.

"ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் மிக நன்றாக இருக்கும். அது எனக்கு மிகவும் பிடிக்கும்..!".

நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பும்போது அவன் என்னைப் பார்த்துச் சொன்னான்.

"ஆனா அம்மா... இந்த மாதிரிச் சொல்லும்போது எனக்கு என்னவோ ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கைப் பத்திச் சொல்லற மாதிரியே இல்லை. ஏதோ... காய்ச்சலுக்கு வாங்கிட்டுப் போற காய்ஞ்சுபோன ப்ரட்டைப் பத்திச் சொல்லற மாதிரித்தான் இருக்கு...!".
.
.
.

Thursday, November 25, 2010

நாயே நாயே

நான் கோவையிலிருந்து சென்னைக்கு குடி வந்தபோது நடந்து இது.

என் மகன் டேனியின் செல்ல நாய்குட்டி சீஸரை எங்கே விடுவது என்று ஒரு மஹா குழப்பம் இருந்தது.

கோவையில் நாங்கள் இருந்த வீடு தனி வீடு; அதனால், நாய் வளர்ப்பது பெரிய இடைஞ்சலாய் இல்லை.

ஆனால், நாங்கள் சென்னையில் பார்த்திருப்பதோ ஒரு நெருக்கமான அபார்ட்மென்ட்; அதில், சீஸரை வைத்திருப்பது மற்றவர்களுக்கு இடைஞ்சலாய் இருக்குமே என்பது எனக்கும் கணவருக்கும் யோசனையாய் இருந்தது.

என்றாலும், டேனி சீஸர் இல்லாமல் ஏங்கிப் போய்விடுவானே என்று நாயையும் எங்களுடனேயே அழைத்து வந்துவிட்டோம்.

சென்னை வந்து ரொம்ப நாள் ஆனபின்னாலும்கூட வீட்டுக்குள்ளேயே இருப்பது, சீஸருக்குப் பிடிக்காத விஷயமாகவே இருந்து வந்தது.

சின்னதாய் கதவைத் திறந்தாலும் வெளியே ஓடிவிடுவது அதன் குணமாய் இருந்தது.

அப்படித்தான் ஒரு சனிக்கிழமை நடந்தது.

டேனி ஸ்கூலுக்குப் போயிருந்தான்.

நான் கேஸ் வந்திருக்கிறது என்று சமயலறையின் உள்ளே சிலிண்டரை மாற்றிக் கொண்டிருந்தபோது, கதவு திறந்திருக்க அதன் வழியே சீஸர் வெளியே ஓடிவிட்டது.

கேஸ்காரர் வெளியே போய் சற்று நேரத்துக்கு அப்புறம்தான், சீஸர் வீட்டுக்குள் இல்லை என்பதே எங்களுக்கு உறைத்தது.

வெளியே இறங்கி அபார்ட்மென்ட் முழுவதும் தேடியாகிவிட்டது.

அக்கம்பக்கம், அபார்ட்மென்ட் வாட்ச்மேன் யாரும் சீஸரை கவனிக்கவில்லை என்பதால், காரை எடுத்துக் கொண்டு தெரு, மெயின் ரோடு எல்லாம் தேடியும் கிடைக்காமல்... ஒவ்வொரு தெருவாய் பதைபதைப்புடன் தேடிக் கொண்டே வந்தோம்.

சுத்தமாய் ஒரு ரவுண்ட் அடித்து முடித்துவிட்டோம்... சீஸர் கிடைக்கவில்லை.

டேனி வந்ததும் சீஸர் இல்லை என்றால் அழுவானே என்பது ஒருபுறம் இருக்க, அதற்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற பயம் அதிகமாக... என் கணவரும் காரை நிறுத்தி எதிரில் வந்த ஒரு சிறுவனிடம் கேட்டார்.

"தம்பி... இந்தப் பக்கமா ஒரு ப்ரவுன் கலர் நாய் எதையாவதைப் பார்த்தியா.? எங்க நாயைக் காணோம்..!".

என் கணவர் கேட்டு முடித்ததும் அந்தச் சிறுவன் பதிலுக்குச் சிரித்தபடியே அவரிடம் கேட்டான்.

"எந்த நாய் அங்கிள்... ரொம்ப நேரமா உங்க கார் பின்னாடியே ஓடி வந்திட்டிருக்கே, அந்த நாயவா தேடறீங்க..?".
.
.
.

Tuesday, November 23, 2010

மாணவன் குறும்பு

அப்போது நான் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம்.

நான் பள்ளியின் பத்தாம் வகுப்பு டீச்சர் என்பதோடு தமிழ்ப்பாடமும் எடுத்து கொண்டிருந்தேன்.

பள்ளிக்கூடத்தில் மாணவர்களை எல்லாம் ஒன்றாய் உட்கார வைத்து, அந்த வருட க்ரூப் ஃபோட்டோ எல்லா வகுப்புக்கும் எடுத்தாகிவிட்டது.

ப்ரிண்ட் வந்ததும் ஒவ்வொரு வகுப்பிலும் எல்லா மாணவர்களிடமும் ஆளுக்கொரு ப்ரிண்ட்டாவது விற்றுவிட வேண்டும் என்று நிர்வாகம் வகுப்பு ஆசிரியர்களிடம் சொல்லியிருந்தது.

ஆனால், நான் வகுப்புக்கு போனதும்தான் தெரிந்தது... நிறைய மாணவர்களுக்கு ஃபோட்டோவை வாங்கும் எண்ணமே இல்லை என்பது.

எனவே, அவர்களை வாங்கத் தூண்டும் விதமாய்ப் பேசத் துவங்கினேன்.

"ஸ்டூடன்ட்ஸ்... ஒரு செகன்ட் யோசிச்சுப் பாருங்க. நாமெல்லாம் பெரியவங்கானதுக்கு அப்புறம், பெரிய பெரிய பதவிக்கெல்லாம் போய், ஒருநாள் இந்த ஃபோட்டோவைப் பார்க்கும்போது ஒரு சந்தோசம் வருமே..! யார்கிட்டயாவது இதைக் காட்டும்போது நாம சொல்லுவோமே, "இதோ இவன் ரமேஷ்... இப்ப இவன் பெரிய வக்கீல், இதோ இவன் ஜெய்... இப்ப இவன் பெரிய டாக்டர்.. இதோ இவங்க என் க்ளாஸ் டீச்சர், இவங்க.."

நான் சொல்லச் சொல்ல இடைமறித்து. ஏதோ ஒரு குறும்புக்கார ஸ்டூடண்டின் அந்தக் குரல் கேட்டது.

"இப்ப இறந்துட்டாங்க..!".
.
.
.

Friday, November 19, 2010

ஒரே ஒரு டால்மேஷன்

தில்லுதுரயின் பையன் '101 டால்மேஷன் ' படம் பார்த்துவிட்டு வந்ததும் அதேபோல் எனக்கும் ஒரு நாய் வேண்டும் என்று ரகளை பண்ண ஆரம்பித்துவிட்டான்.

வெள்ளை உடலில் கருப்பு புள்ளிகளுடன் இருக்குமே, அதுதான் டால்மேஷன்.

அந்தப் படம் 101 டால்மேஷன் நாய்களைப் பற்றிய கதை என்பதால், தில்லுதுரயின் பையன் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகி.. 'நாய் உடனே வீட்டுக்கு வந்தால்தான் ஆச்சு' என்று ஒற்றைக் காலில் நின்றான்.

தில்லுதுரயும் ஒவ்வொரு பெட் ஷாப்பாய் அழைந்து கடைசியில், ஒரு குட்டியைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்.

ஓரளவு பெரிய குட்டி என்பதால், விலையும் கொஞ்சம் அதிகம்தான்.

ஆனால், மகன் கேட்டதாயிற்றே...!

நாய்க்குட்டி நன்றாகத்தான் வளர்ந்துவந்தது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்ததும்தான் பிரச்சினை ஆரம்பித்தது.

நாய் ஏதோ வியாதி கண்டு, சினிமா ஹீரோபோல் ரத்தரத்தமாய் வாந்தி எடுக்க ஆரம்பித்தது.

என்னென்ன வெட்னரி டாக்டர் எங்கெங்கே இருக்கிறார்களோ, அங்கெல்லாம் போய்க் காட்டியாகிவிட்டது.

நாய் தேறிய பாட்டைக் காணோம்... பத்தாதற்கு வியாதி இன்னும் முற்றிக் கொண்டே போனது.

பையனின் அழுகை தாங்காமல், இன்னும் புதிய டாக்டர்களைத் தேடி அழையும் போதுதான் தில்லுதுரைக்கு நண்பர் ராஜாவின் ஞாபகம் வந்தது.

ஒருமுறை, அவர் வீட்டு நாய்க்கும் இதேபோல் பிரச்சினை என்று சொன்னது ஞாபகம் வந்ததும்... உடனே அவருக்கு போன் செய்து கேட்டார்.

"அந்த வியாதிக்கு உன் நாய்க்கு என்ன மருந்து கொடுத்தே ராஜா..?".

ராஜா மறுமுனையில் சொன்னார்.

"டர்பன்டைன் கொடுத்தேன்..!".

தில்லுதுர உடனே உற்சாகமாய் 'நன்றி' சொல்லிவிட்டு, கடைவீதி போய் தேடித் தேடி டர்பன்டைன் வாங்கி வந்து நாய்க்குக் கொடுக்க ஆரம்பித்தார்.

ரெண்டே நாள்... டால்மேஷனின் நிலைமை இன்னும் மோசமாகி இறந்தேபோய் விட்டது.

ரொம்பவும் சோகத்துடன் மறுபடி ராஜாவுக்கு போன் செய்தார் தில்லுதுர.

"ராஜா... நீ சொன்னபடி நாய்க்கு டர்பன்டைன் கொடுத்தேன். ஆனாலும், நாய் ரெக்கவர் ஆகல... செத்துப் போச்சு..!".

தில்லுதுர சொன்னதும் மறுமுனையில் ராஜா கூலாய்ச் சொன்னார்.

"ஆமா நண்பா... என் நாய்கூட செத்துப் போச்சு..!".
.
.
.

Thursday, November 18, 2010

தில்லுதுரயும் டாக்ஸியும்

தில்லுதுர அன்று அலுவலக வேலையாய் ஒரு மீட்டிங்கிற்காக கோவை வந்திருந்தார்.

ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தவர், போகும் இடத்தைச் சொல்லி ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறி பின் சீட்டில் அமர்ந்ததும், தனது லேப்டாப்பைப் பிரித்து உட்கார்ந்தார்.

கோவையில் வேலை என்றாலும், தனது அலுவலகம் சம்பந்தமான உத்தரவுகளை சென்னைக்கும் இன்னபிற இடங்களுக்கும் மெயிலில் அனுப்ப ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.

திடீரென மீட்டிங்கிற்கு முன்பு 'சாப்பிட்டு விடலாம்' என்று தோன்றவே, 'நல்ல ஹோட்டல் எங்கே இருக்கிறது..' என்று கேட்பதற்காக டாக்ஸி டிரைவர் தோளைத் தொட்டார்.

டிரைவரின் தோளைத் தொட்டதுதான் தாமதம்.

அதிர்ந்துபோய் திக்கென ஆன டிரைவர், காரை சட்டென்று தாறுமாறாய் கண்டபடி ஓட்ட ஆரம்பித்தார்.

எதிரே வந்த ஒரு லாரியில் மோத இருந்து காரை ஒடித்த டிரைவர், அடுத்து ஒரு ஆட்டோ மேல் மோத இருந்து திருப்பி, மேடு பள்ளத்தில் எகிறி, ஒரு மரத்தில் கிட்டத்தட்ட மோதும் நிலையில் சட்டென்று ஒரு சடன் பிரேக்கைப் போட்டு நிறுத்தினார்.

தில்லுதுரயின் நெஞ்சு படவென்று அடிக்க ஆரம்பித்து, ஓயவே ஐந்து நிமிடம் ஆகியது.

டிரைவரோ நெஞ்சைப் பிடித்தபடி கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தவர், நீளமாய் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டுத் திரும்பி மெதுவான குரலில் தில்லுதுரயிடம் கேட்டார்.

"என்ன சார், இப்படிப் பண்ணிட்டீங்க..?".

தில்லுதுர மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னார்.

"சாரிப்பா... நான் தான் தப்பு பண்ணிட்டேன்..!".

இப்போது லேசாய்ப் புன்னகைத்த டிரைவர், தில்லுதுரயிடம் சொன்னார்.

"இல்ல சார்... இதுல உங்க தப்பு ஒண்ணுமில்ல. எல்லாம் என் தப்புதான். நான் இப்பத்தான் புதுசா டாக்ஸி ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன். இதுக்கு முன்னால பத்து வருசமா ஹாஸ்பிடல்ல டெட்பாடிகளை ஏற்றிச் செல்லும் வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன்..!".
.
.
.

Tuesday, November 16, 2010

மகளிர் மட்டும்

ராஃபியா பஸிரி ஒரு பெண் ஸூஃபி.

ஒரு முறை அவரைச் சந்தித்த சிலர்,சில வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு, அவரை அவமானப்படுத்தும் நோக்குடன் அவரிடம் கேட்டார்கள்.

"என்ன இருந்தாலும் நீங்கள் ஒரு பெண்தானே..! இறைவன் தனது தூதர்களாக ஆண்களை மட்டும்தானே அனுப்பி வைத்திருக்கிறான்.. அது ஏன்? பெண்களின் பலவீனங்களைத் தெரிந்ததால்தானே, அவன் பெண்களைத் தன் தூதர்களாய் அனுப்பவில்லை..?".

உடனே, ராஃபியா பஸிரி அவர்கள் அறியாமையைப் பார்த்துப் புன்னகைத்தபடி கூறினார்.

"நீங்கள் சொல்வது மிகச் சரிதான் நண்பர்களே..! ஆனால், நீங்கள் சொல்லும் அந்தத் தூதர்களை பெற்றெடுக்க இறைவன் பெண்களைத்தானே தேர்ந்தெடுத்திருக்கிறார். நீங்கள் சொல்லும் எந்த ஆணையும் அவர் அதற்குத் தேர்ந்தெடுக்கவில்லையே..!".

கேட்டுவிட்டு அவர் புன்னகைக்க... நண்பர்களோ சொல்ல பதிலின்றி வாயடைத்து நின்றனர்.
.
.
.

Thursday, November 11, 2010

மளிகைக்கடை நாடார்

மருதாசல நாடார் தனது மரணப் படுக்கையில் கிடந்தார்.

மருதாசல நாடாரை எங்க பக்கம் மளிகைக்கடை நாடார் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்.

எங்கோ உடன்குடியில் பிறந்தவர், இன்று சென்னையில் இவ்வளவு லட்சத்திற்கு சொத்துக்கள் சேர்த்திருக்கிறார் என்றால்... அதற்கு அவருடைய மளிகைக்கடையும் மாறாத உழைப்பும்தான் காரணம்.

அப்பேர்ப்பட்ட மருதாசலநாடார் தான் இப்போது படுத்த படுக்கையாய் ஆகிவிட்டார்.

ரெண்டு நாளாய் தொடர்ந்து மயக்கத்தில் இருந்தவர், காலை ஒரு பதினோரு மணிப் போல கண்ணைத் திறந்ததும், அருகில் சோகமே வடிவாய் அமர்ந்திருந்த தன் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.

"மூத்தவன் எங்கேடி...?"

மனைவி அவரது கைகளை ஆறுதலாய்ப் பற்றிக் கொண்டு பதில் சொன்னார்.

"அதோ பாருங்க... அந்த பெஞ்ச்லதான் உக்காந்திருக்கான். நீங்க நல்லபடி எந்திரிச்சு வரணும்னு சாமி கும்பிட்டுகிட்டு இருக்கான்..."

மருதாசல நாடார் அடுத்துக் கேட்டார்.

"ரெண்டாவது மகன் இருக்கானா..?".

மனைவி பதில் சொன்னாள்.

"அவனும் மூத்தவனுக்குப் பக்கத்திலதான் நிக்கறான் பாருங்க.."

இதைக் கேட்டதும், மருதாசல நாடார் படுக்கையில் தட்டுத்தடுமாறி எழுந்து உட்காரப் பார்த்தார்.

அதைக் கண்டதும் பதறிப் போன மனைவி கேட்டார்.

"என்னங்க... என்ன வேணும் சொல்லுங்க..?".

மருதாசல நாடார் கேட்டார்.

"எ..எ..என் மூணாவது பையன்...?".

கேட்கும்போதே மூச்சு வாங்கியது அவருக்கு.

இதைக்கேட்டதும் அவர் மனைவி, குழந்தைகள் எல்லோருக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.

'இவருக்குத்தான் குடும்பத்தின்மீது எவ்வளவு அன்பு..?' என்று எண்ணியபடியே மூன்றாவது மகன் சொன்னான்.

"அப்பா... நான் இங்கேதான் இருக்கேன்... நாங்க எல்லோரும் இங்கேதான் இருக்கோம். நீங்க இந்த நேரத்துல எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க..!".

மரணப் படுக்கையில் இருந்த மருதாசல நாடார் சற்றே கோபமாய் திணறித் திணறிக் கோபமாய்க் கத்தினார்.

"நீங்க எல்லோரும் இங்கே இருந்தா நான் கவலைப்படாம எப்படி இருக்க முடியும்..? என் கவலையே அதுதான்டா ... எல்லோருமே இங்கே இருந்தா அப்ப அங்கே கடையை கவனிக்கறது யாரு..?".
.
.
.

Wednesday, November 10, 2010

வோடஃபோன் நாய்க்குட்டி

அது நாங்கள் புதிதாய் வீடு வாங்கிக் குடியேறியிருந்த நேரம்.
வீட்டில் எல்லா மரச் சாமான்களும் புதிதாய் வாங்கியிருந்தோம்.

என் கணவர் அன்று வீட்டுக்கு வரும்போது, என் மகன் டேனிக்குப் ரொம்ப நாளாய் அவன் கேட்டுக் கொண்டிருந்த, விளம்பரங்களில் வரும் நாயின் குட்டி ஒன்றை விலை கொடுத்து வாங்கி வந்திருந்தார்.

மொபைல் விளம்பரங்களில் ஒரு பையன் பின்னால் ஓடிக் கொண்டிருக்குமே அந்த நாய்... அதைப்போலவே அவன் பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தது.

நாய்க்குட்டி பார்ப்பதற்கு உண்மையிலேயே மிக அழகாயிருந்தாலும், அதனிடம் ஒரு கெட்ட பழக்கம் எனக்கு மிகவும் எரிச்சலூட்டுவதாய் இருந்தது.

நல்ல நேரம், கெட்ட நேரம் என்று எதுவுமில்லாமல் அதற்கு தோன்றும் போதெல்லாம், அப்போதுதான் புதிதாய் வாங்கியிருந்த ஷோஃபாவை பின்புறம் 'க்ரீச்.. க்ரீச்..' எனப் பிராண்டுவது அதற்கு பிடித்தமான பழக்கமாய் இருந்தது.

ஷோஃபா நாசமாவது தாங்காமல் ஒருநாள், ஒரு குச்சியைத் தூக்கிக் கொண்டு அந்த நாயை அடிக்கப் போகையில், எங்கிருந்தோ ஓடி வந்த டேனி அதைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு என்னைப் பார்த்து பரிதாபமாய் சொன்னான்.

"அம்மா அடிக்காதம்மா... நான் இந்த நாயை எப்படி ட்ரெயின் பண்ணறேன் பாரேன்..!" என்றவன் நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினான்.

அதற்கப்புறம், நிறைய நாட்கள் டேனி அந்த நாய்க்குட்டியை பொறுமையாய்ப் பழக்குவதை நான் பார்த்திருக்கிறேன்.

எப்போதெல்லாம் அந்த நாய், என் ஷோஃபாவைப் பிராண்டுகிறதோ அப்போதெல்லாம் என் மகன் எனக்குத் தொந்தரவில்லாமல் நாயை டிரெயின் பண்ண பொறுப்புடன் வெளியே தூக்கிச் செல்லுவதைப் பற்றி பெருமையுடன் என் கணவரிடம் சொல்லியிருக்கிறேன்.

அந்த நாயும், வெகு சீக்கிரமே பழகி விட்டதென்றே நினைக்கிறேன்.

அதற்கப்புறம், அது எப்போதெல்லாம் வெளியே போக ஆசைப்பட்டதோ... அப்போதெல்லாம் அது ஷோஃபாவைப் பிராண்டக் கற்றுக் கொண்டு விட்டது.
.
.
.

Tuesday, November 9, 2010

மாமியாரின் ஆசை

இது எப்போதும் எங்கள் வீட்டில் நடப்பதுதான்.

என் கணவர், அவருடைய அம்மாவை நான் எப்போதுமே சரியாக கவனிக்கவில்லை என்று குற்றம் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்.

கணவர் வெளியூரில் இருக்க, பள்ளிக்குச் செல்லும் குழந்தையை வைத்துக் கொண்டு, ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்தபடி, என்னால் மாமியாரை எவ்வளவு கவனிக்க முடியுமோ அதற்கும் மேலேதான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும், இந்தப் பிரச்சினை அடிக்கடி வந்தபடியேதான் இருக்கும்.

மனதார எந்தத் தவறும் என்மேல் இல்லாதபோது, அவர் குற்றம் சொல்லி... அதை நான் ஒத்துக் கொள்ள மறுக்கும்போது பிரச்சினை முற்றி சண்டையில் முடிவது போல்தான் அன்றும் நடந்தது.

சண்டையின் இடையே என் கணவர் கோபத்துடன் சொன்னார்.

"எல்லாம் என்னோட தப்புடி. 'படிச்ச பொண்ணக் கட்டிக்காத... படிச்ச பொண்ணக் கட்டிக்காத'னு என் அப்பா தலையால தண்ணி குடிச்சாரு. நாந்தான் உன்னையே கட்டிக்குவேன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப அவஸ்தைப் படறேன்..!".

நானும் மிதமிஞ்சிய கோபத்தில் கண்ணீருடன் சொன்னேன்.

"நானும்தான்... என் அம்மா 'இந்த சம்பந்தம் வேண்டாம்'னு சொன்னப்ப அவங்க சொல்பேச்சு கேட்டிருந்தாக்கூட நான் இப்ப இவ்வளோ கஷ்டப்பட வேண்டியதில்லையே..!".

கோபத்தில் நான் சடாரென்று உண்மையை உளறியதும், அதுவரை சத்தம் போட்டுக் கத்திக் கொண்டிருந்த என் கணவர் சட்டென்று அமைதியாகிப் போனார்.

முகமெல்லாம் ஒரு மாதிரி மாறிப்போய், யோசித்தபடியே திரும்பிய அவர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு கேட்டார்.

"என்ன சொன்ன... உன் அம்மா நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு நினைச்சாங்களா..?".

எனக்கிருந்த கோபத்தில் அப்போதும் என்ன செய்கிறேன் என்பது கூட உறைக்காமல் ஆவேசமாய், 'ஆமாம்..!' என்று தலையாட்டினேன்.

மெல்லிய யோசனையுடன் திரும்பியவர் சொன்னார்.

"எப்பேர்ப்பட்ட பொம்பள உன் அம்மா.." என்றவர் தொடர்ந்து கிண்டலாய்ச் சொன்னார்.

"எவ்வளவு நல்லெண்ணம் அவங்களுக்கு ... நான் நல்லா இருக்கணும்னு எவ்ளோ ஆசைப்பட்டிருக்காங்க... அவங்களப் போயி நான் தப்பா நெனச்சுட்டேனே..!".
.
.
.

Tuesday, November 2, 2010

சகிக்கமுடியாத மனைவி

தன் மனைவிக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் டாக்டரைப் பார்க்க அழைத்துப் போனார் தில்லுதுர.

சற்று கவனிக்க வேண்டிய நிலையில் தில்லுதுரயின் மனைவி இருந்ததால், டாக்டர் சிலபல செக்கப்களை செய்யச் சொன்னார்.

எல்லாவற்றையும் முடித்து வந்ததும் ரிப்போர்ட்களைப் பார்த்த டாக்டர், தில்லுதுரயிடம் அவர் மனைவியின் நிலை குறித்துக் கேட்டார்.

"என்ன உங்க வொய்ஃப் இப்படி இருக்காங்க..? பார்க்கவே சகிக்கலை...!".

டாக்டர் கேட்டதும், தில்லுதுர தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சொன்னார்.

"ஆமா டாக்டர். என்னாலயும்தான் சகிச்சுக்க முடியல. என்ன பண்ணறது..?  ஆனா, நல்லா சமைப்பா டாக்டர். அதுவுமில்லாம என் குழந்தைகளுக்கும் அவள்னா உயிரு...!" என்றார்.
.
.
.