Wednesday, July 29, 2015

தில்லுதுரயும் புள்ளிராஜாவும்

தில்லுதுரயும் அவர் நண்பர் புள்ளிராஜாவும் அன்று சனிக்கிழமை வீக்கெண்டை டாஸ்மாக்கில் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டில் மனைவி ஊருக்குப் போயிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாய் நேரமும் சரக்கும் அதிகமாகிக் கொண்டே போனது இருவருக்குமே தெரியவில்லை.

காருக்குத் திரும்பும்போது இருவருமே நிதானத்தில் இல்லை என்பது கால்களால் எட்டு போட்டபடி நடந்தபோதே தெரிந்தது.

காரும் டாஸ்மாக் இவர்களுடன் பாரில் குடித்து விட்டு வந்தது போலவே, சாலையில் இடதும் வலதுமாய் வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது.

நகரத்தை விட்டு வெளியேறியதும்… ஆளில்லா சாலையில் கார் வேகமெடுக்கவும் ஆரம்பித்துவிட்டது.

பத்து நிமிடம் இருக்கும்.

திடீரென காரின் முன் தெரிந்த மரத்தைப் பார்த்ததும் பதறிப்போன தில்லுதுர புள்ளிராஜாவைப் பார்த்துக் கத்தினார்.

“டேய் புள்ளி… மரம்டா.! ப்ரேக்கைப் போடு… ப்ரேக்கைப் போடு.!”.

தில்லுதுர கத்தினாரே தவிர, காரின் வேகம் சற்றும் குறையவில்லை.

“டேய் புள்ளி… மரம்டா.!” என்று தில்லுதுர பயந்து போய் கண்களை மூடிக் கத்தியபடி, “வண்டிய நிறுத்துடா” என்று அலறிய அதே விநாடி கார் அந்த மரத்தின் மீது மோத... தில்லுதுர பயத்தில் மயக்கமடைந்தே விட்டார்.

தில்லுதுர மறுபடி கண்களை விழித்தபோதுதான் தெரிந்தது… தான் ஒரு ஹாஸ்பிடலில் இருப்பது.

அடி பலமாய் இல்லையென்றாலும், வலி பலமாய் இருக்க கண்களைத் திருப்பியவர் பக்கத்தில் பேந்தப் பேந்த விழித்தபடி இருந்த புள்ளிராஜாவைப் பார்த்ததும் கோபத்துடன் கேட்டார்.

“ஏண்டா… எத்தன வாட்டி காரை நிறுத்தச் சொல்லிக் கத்தினேன். ஏன் நீ காரை நிறுத்தவேயில்ல.?”.

கோபத்துடன் பேசிய தில்லுதுரயைப் பரிதாபமாய்ப் பார்த்த புள்ளிராஜா மெலிதான கடுப்போடு சொன்னார்.


“ஏன்னா… காரை நீ ஓட்டிட்டு இருந்த.!”
.
.
.