Thursday, March 29, 2012

தில்லுதுர வீட்டுக்கு வரல

அன்று தில்லுதுர மனைவிக்கு பிறந்த நாள்.

சாயங்காலம் வந்து வெளியே எங்கேயாவது கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லிச் சென்ற தில்லுதுர, இரவு பதினோரு மணியாகியும் வீடு வந்து சேரவில்லை.

காத்திருந்து காத்திருந்து வெறுத்துப் போன மனைவி கடுப்புடன் அவருக்கு ஃபோன் செய்தாள்.

மறுமுனையில் தில்லுதுர ஃபோனை எடுத்ததும், கடுப்பும் வெறுப்பும் உமிழ கோபமாய்க் கேட்டாள்.

"எங்க போய்த் தொலைஞ்சீங்க இந்நேரம் வரைக்கும்.?".

மறுமுனையில் அன்பும் காதலும் வழிய தில்லுதுரயின் குரல் கேட்டது.

"செல்லம்... உனக்கு ஞாபகம் இருக்கா.? அன்னிக்கு ஒருநாள் ஒரு நகைக் கடையில ஒரு வைர நெக்லஸை பாத்துட்டு ஆசையோட கேட்டியே... எங்கிட்ட கூட அன்னிக்கு பணம் இல்லாம இருந்தது. ஆனாலும் அப்ப உங்கிட்டச் சொன்னேனே.... இந்த வைர நெக்லஸ் கண்டிப்பா ஒருநாள் உன் கழுத்துல கிடக்கும்னு.... உனக்கு ஞாபகம் இருக்கா..?".

தில்லுதுரயின் மனைவியின் கோபம் இப்போது காணாமல் போயிருந்தது.

அதே காதலும் புன்னகையும் வழிய ஃபோனில் பதில் சொன்னாள்.

"அதெப்படிங்க மறப்பேன்... நல்லா ஞாபகம் இருக்கு.!".

மனைவி சொன்னதும் தில்லுதுர அதே அன்புடன் தொடர்ந்து சொன்னார்.

"அந்த நகைக்கடைக்கு பக்கத்து இருக்கற டீக்கடையிலதான் இப்ப என் ஃபிரண்ட் ராஜாகூட டீ சாப்டுட்டு இருக்கேன்...!".
.
.
.

Monday, March 26, 2012

மாருதிஜென் குரு கொஸாகிபஸபுகல்

100 வருடங்களைத் தாண்டியும் வாழ்ந்தவர் நம்ம மாருதிஜென்குரு கொஸாகிபஸபுகல்.

அவர் தனது இறக்கும் தருவாயில் இருந்தார்.

வாழும் ஒவ்வொரு கணமும், பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இந்த சமூகத்துக்கான செய்தியாய் விளங்கியவர் அவர்.

இறக்கும் தருணத்தில் அவர் சொல்லப்போகும் கடைசிச் செய்திக்காக, அந்த ஊரும் அவரது சிஷ்யர்களும் அவரது மரணப் படுக்கையைச் சுற்றிக் காத்திருந்தார்கள்.

போகும் தருணம் சுகமாய் இருப்பதற்காக, சிஷ்யர்கள் கொடுத்த கடைசி டம்ளர் பாலையும் அருந்த மறுத்துக் கொண்டிருந்தார் குரு கொஸாகி.

பார்த்துக் கொண்டே இருந்த பிரதம சிஷ்யன் தோத்தாங்கோலீஸ்-க்கு அந்த யோசனை வர, டக்கென்று அந்த பால் டம்ளரை எடுத்துக் கொண்டு தனது அந்தரங்க அறைக்கு ஓடினான்.

போன மாதம் தனது நண்பன் கொடுத்த ஃபாரின் விஸ்கியை கப்போர்டிலிருந்து எடுத்து, தேவைக்கு சற்று அதிகமாகவே அந்தப் பாலில் கலந்தான் சிஷ்யன் தோத்தாங்கோலீஸ்.

பிறகு அந்தப் பாலை மரணப் படுக்கையில் இருந்த குரு கொஸாகிபஸபுகலிடம் கொண்டு வந்த சிஷ்யன் தோத்தாங்கோலீஸ், அன்புடன் குருவின் தலையை ஆதுரத்துடன் தடவியவாறு அந்தப் பாலை அருந்தக் கொடுத்தான்.

பிரதம சிஷ்யன் கொடுத்ததால், மறுக்கமுடியாமல் ஒரு மிடறு பாலைக் குடித்த குரு கொஸாகி... அடுத்த மிடறு பாலையும் ஆர்வத்துடன் குடித்தார்.

கொஞ்ச நேரம், கொஞ்சமே கொஞ்ச நேரத்தில் டம்ளரின் கடைசிச் சொட்டுவரை ஆர்வத்துடன் பாலைக் குடித்து முடித்த குருவிடம் சிஷ்யர்கள் கேட்டார்கள்.

"குருவே... இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் இறக்கப் போகிறீர்கள். இந்த தருணத்தில் தாங்கள் எங்களுக்கு சொல்லப் போகும் கடைசிச் செய்தி என்ன.?".

குடித்த பாலின் சுவை தொண்டையில் இருக்க, ஒரு கணம் தான் சாப்பிட்ட பாலை சப்புக் கொட்டியவாறு குரு கொஸாகி தனது கடைசி செய்தியைச் சொன்னார்.

"அந்தப் பசுவை விற்றுவிடாதே.!"
.
.
.

Wednesday, March 21, 2012

3 (தனுஷுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல)

அந்த மருத்துவமனையில் அன்று மூன்று குழந்தைகள் பிறந்தன.

ஒன்று விருந்தினராய் வந்திருந்த சிங்களப் பெண்ணுக்கும், ஒன்று அகதியாய் வந்திருந்த ஈழத் தமிழ் பெண்ணுக்கும், மற்றொன்று தமிழகத்தை சார்ந்த மத்திய கட்சி அரசியல்வாதியின் மனைவிக்குமாய் மொத்தம் மூன்று குழந்தைகள்.

ஆச்சர்யமான ஆச்சர்யமாய்... ஒரே நாளில், ஒரே நேரத்தில், ஒரே அறையில், கிட்டத்தட்ட ஒரே எடையில் பிறந்தன அந்த மூன்று குழந்தைகளும்.

அந்த ஆச்சர்யமே ஒரு பெரிய குழப்பத்தையும் உண்டாக்கி விட்டது மருத்துவமனையில்.

குழந்தைகளை குளிப்பாட்ட அறைக்குள் எடுத்துச்சென்ற நர்ஸ், பதட்டத்தில் குழந்தைகளை இடம் மாற்றி வைத்துவிட, இப்போது யார் குழந்தை யாருடையது என்று அடையாளம் தெரியாமல் போய்விட்டது.

கவலையுடன் நர்ஸ் விஷயத்தை டாக்டரிடம் சொல்ல, டாக்டரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளின் தந்தையரை அழைத்து விஷயத்தைச் சொன்னார்.

விஷயத்தைக் கேட்ட மற்றவர்களும் குழப்பமடைய, ஈழத்தமிழ்க் குழந்தையின் தந்தை மட்டும் புன்னகைத்தவாறு சொன்னார்.

"அந்த மூணு குழந்தையையும் இந்த டேபிள்ல கொண்டு வந்து படுக்க வைங்க... கண்டுபிடிச்சிடலாம்..!".

சொன்னதுபோல், வரிசையாய் குழந்தைகளை கொண்டு வந்து டேபிளில் படுக்க வைத்ததும், அந்த ஈழத்தமிழர் சப்தமாய், "ஜெய் டைகர்...!" என்று குரல் கொடுத்தார்.

டைகர் என்ற சப்தம் கேட்டதுதான் மாயம்.

ஈழத்தமிழ்க் குழந்தை கையை உயர்த்தி சல்யூட் அடிக்க, சிங்களக் குழந்தை மூச்சா கக்காவே போய்விட்டது.

ஆனால், மத்திய அரசியல்வாதியின் குழந்தையோ எந்தக் கவலையும் இன்றி குஷியாய், அந்த மூச்சா கக்காவில் கையால் டப்டப்பென்று அடித்து, அது மூஞ்சியில் தெறிக்க விளையாட ஆரம்பித்திருந்தது.
.
.
.

Monday, March 19, 2012

டாக்டர் தண்டபாணி

டாக்டர் தண்டபாணி அந்த நகரத்திலேயே ஒரு புகழ் பெற்ற ஆங்கில மருத்துவர்.

அவரை அன்று லையன்ஸ் க்ளாப் சார்பாக, ஒரு சர்க்கரை நோய் விழிப்புணர்வுக் கூட்டத்தில் பேச சிறப்பு விருந்தினராய் அழைத்திருந்தார்கள்.

தண்டபாணியும் அந்த புத்தகம் இந்தப் புத்தகம் என்று எல்லாப் புத்தகமும் பார்த்து, அற்புதமாய் ஒரு ஆறு பக்க ஆங்கில உரையை ரெடி செய்து, அதை தன் கைப்பட எழுதி எடுத்து சென்றிருந்தார்.

கூட்டம் ஆரம்பித்து, எல்லோரும் சர்க்கரை நோய் குறித்து கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என எல்லாப் பக்கமும் அலசி ஆராய்ந்து உரையாற்றிவிட்டு அமர்ந்தார்கள்.

ஒரு அரை மணி இருக்கும்

நிகழ்ச்சி அமைப்பாளர், இப்போது டாக்டர் தண்டபாணியை பேச அழைத்தார்கள்.

தண்டபாணி புன்னகையுடன் எழுந்து சென்று, மைக்கைத் தட்டிப் பார்த்துவிட்டு, தான் கொண்டு வந்திருந்த பேசுவதற்காக உரையைப் பிரித்தார்.

கடவுளே... என்னவொரு சோதனை...?

தண்டபாணிக்கு தான் எழுதியதில் ஒரு எழுத்துகூட தனக்கே புரியவில்லை.

தொண்டையைக் கனைத்தபடி, மைக்கைத் தட்டியபடி ஒவ்வொரு பக்கமாக புரட்டுகிறார்.

ம்ஹூம்... ஒரு எழுத்து என்றால் ஒரு எழுத்து கூடப் புரியவில்லை.

வந்தவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லியபடியே, தான் எழுதியது யாருக்குப் புரியும் என்று யோசித்தவாறு பேசிய டாக்டர் தண்டபாணி... அடுத்துக் கேட்டார்.

"இந்தக் கூட்டத்துல யாராவது மெடிக்கல் ஷாப் வச்சிருக்கவங்க இருக்கீங்களா.?"
.
.
.

Tuesday, March 13, 2012

தில்லுதுர கிஸ் மீ

நான் அன்னிக்கு லீவுக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தேன்.

வீட்ல மதிய சாப்பாடு முடிந்து ஒரு சின்னத் தூக்கத்துக்கு அப்புறம், சாயங்காலம் காலாற ஒரு சின்ன வாக்கிங் போய்க் கொண்டிருந்த நேரம்.

"தில்லுதுர ஏழாம் நம்பர் மரத்தடில தோண்டு..!"னு ஒரு குரல் கேட்டது.

சுத்தியும் பார்த்தா யாரும் இல்ல."தில்லுதுர ஏழாம் நம்பர் மரத்தடில தோண்டு..!"னு மறுபடி அதே குரல் கேட்க, கவனிச்சுப் பார்த்தா அந்த மரத்தடியில பச்சைநிறத்தில் மின்னிக்கிட்டு ஒரு தவளை மட்டும் தெரிந்தது.

சந்தேகத்துடன் அந்தத் தவளையைப் பார்த்துக் கேட்டேன்.

"நீயா பேசின.?".

"ஆமா, பேசாத.... அந்த மரத்தடில தோண்டு..!".

சரி... என்னதான் நடக்குதுனு பக்கத்துல கிடந்த கம்பிய எடுத்து, அந்த தவளை சொன்ன எடத்துல தோண்டினேன்.

சொன்னா நம்ப மாட்டீங்க.... முழுசா ஒரு பெரிய தங்கக் காசு.

நம்பமுடியாம நான் அந்தத் தவளையப் பார்க்க... அது,"தில்லுதுர... இப்ப பத்தாவது மரத்தடியில தோண்டு...!" அப்டினுச்சு.

இப்ப சந்தேகமே இல்லாம அந்தக் கம்பியத் தூக்கிட்டுப் போயி, பத்தாம் நம்பர் மரத்தடில வேக வேகமாய்த் தோண்டினேன்.

இப்ப அப்படியே முள்ளங்கிப் பத்தையாட்டமா, அஞ்சு பெரிய பெரிய தங்கக் காசு.

மெரண்டு போயிட்டேன்.

இப்ப அந்தத் தவளையைத் தூக்கி கையில வச்சுக்கிட்டு கேட்டேன்.

"அடுத்தது என்ன..?"தவளை இப்ப சொல்லுச்சு,"தில்லுதுர... இப்ப கேரளா போ..!".

நானும் உடனே அதேபோல கேரளா வந்துட்டேன்.

தவளை சொல்லுச்சு,"தில்லுதுர... இப்ப கஞ்சன் ஜங்கா பத்துகோடி சூப்பர் பம்பர் லாட்டரி, இன்னிக்கு குலுக்கல்.!".

நானும் அதேபோல கஞ்சன் ஜங்கா பத்துக் கோடி லாட்டரி நேத்திக்கு குலுக்கல் லாட்டரி வாங்கினேன்.

அடிச்சதுடா... மொத ப்ரைஸு பத்துக் கோடி..!

எனக்கு என்ன பண்றதுனே தெரியல. மொதல்ல பாடாவதி ஹோட்டலை மாத்தி ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தேன்.

ஒரே நாள்ல நான் கோடீஸ்வரன். கையில பத்துக்கோடி... நம்பவே முடியல.!

சந்தோசத்தோட அந்த தவளையப் பாத்துக் கேட்டேன்.

"வாழ்க்கைலயே நான் பாக்க முடியாத பணத்த ஒரே நாள்ல சம்பாதிச்சுக் கொடுத்துட்ட. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியல...!"னு சொன்னதும் தவளை சொன்னது.

"தில்லுதுர கிஸ் மீ...!".

நான் கொஞ்சம் கூட யோசிக்கல. ஒருநாள்ல பத்து கோடி சம்பாதிச்சுக் கொடுத்த தவளை... அதை முத்தமிட்டால் என்ன தவறு.?

அந்த தவளையை கையிலெடுத்து ஆசையாய் ஒரு முத்தம் கொடுத்தேன்.

என்ன ஆச்சர்யம்... அந்தத் தவளை அப்படியே ஒரு அழகான மனதை மயக்கும் 20வயசுப் பொண்ணா மாறிடுச்சு.

சொல்லிக் கொண்டே வந்த தில்லுதுர, கொஞ்சம் நிறுத்தி கரகரவென்ற தொண்டையை சரி செய்து கொண்டு தொடர்ந்தார்.

"இப்படித்தான் யுவர் ஆனர் அந்தப் பொண்ணு என் ரூமுக்குள்ள வந்தா. அப்பப் பாத்து போலீஸ் வந்துடுச்சு.!"
.
.
.

Monday, March 12, 2012

சர்க்கரை இல்லாத தேநீர்












ஷிர்டியில் சாய்பாபா வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தது இது.

ஷிர்டியில் இருந்து தொலைவில் இருந்த தாணே-வில் சிவில் கோர்ட்டில் ஒரு தற்காலிக வேலை பார்த்து வந்தவர் சோல்கர்... பயங்கர ஏழை.
ஒரு சமயம் சாயியைப் பற்றிய கீர்த்தனைகளை கேட்க நேர்ந்த அவர், தான் எழுதும் பரிட்சையில் வென்று தனக்கு ஒரு நிரந்தர வேலை கிடைத்தால் ஷிர்டி வந்து சாயியை தரிசித்து, அங்கே கல்கண்டு விநியோகம் செய்வதாய் வேண்டிக் கொண்டார்.

சொன்னது போல் சோல்கரின் வேண்டுதல் நிறைவேறவும் செய்தது.

குடும்ப முன்னேற்றத்திற்க்காக இமயமலையைக் கூட தாண்டிவிடும் ஒரு குடும்பஸ்தனால், குடும்பத்தை மீறி தன் வீட்டு வாசற்படியை தாண்ட முடிவதில்லை என்பது நிதர்சனம்.

நல்ல வேலையும் சம்பளமும் இப்போது கிடைத்தாலும் குடும்பத் தேவைகள் அவரை தனது பிரார்த்தனையை நிறைவேற்ற விடாமல் வாட்டிக் கொண்டிருந்தன.

இதனால், தனது பிரார்த்தனையை முடிக்க ஒரு உபாயம் செய்தார்.

ஷிர்டி செல்லும் பயணத்துக்குத் தேவையான பணத்தை சேமிக்க உணவிலும் தேநீரிலும் சர்க்கரை இல்லாமல் சாப்பிட்டு அந்த பணத்தை சேமிக்க முடிவு செய்து, அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தார்.

கொஞ்சகாலம், கற்கண்டை விநியோகிக்க சர்க்கரை அற்ற கசப்பான தேநீர் குடித்ததன் மூலம் மிச்சம் பிடித்த பணத்தை சேமித்த சோல்கர், தேவையான பணம் சேர்ந்ததும் ஷிர்டி வந்து பாபாவின் பாதத்தில் வீழ்ந்தார்.

தான் பட்ட கஷ்டத்தை மறைத்து, தனது ஆசை பூர்த்தியான மனமகிழ்ச்சியுடன் பாபாவுக்கு தான் கொண்டு வந்த தேங்காயை அர்ப்பணித்துவிட்டு தனது வேண்டுதலான கற்கண்டையும் விநியோகித்தார் சோல்கர்.

நீண்டதூரம் பயணித்து தம்மை தரிசிக்க வந்த பக்தருக்கு உணவளிக்க உதவியாளரை அழைத்த பாபா புன்னகையுடன் சொன்னார்.

"விருந்தினர் சோல்கருக்கு மனம் நிறைய உணவளியுங்கள். அதற்கு முன்னர் அவருக்கு சர்க்கரை நிறைமுழுதுமாய் கரைக்கப்பட்ட தேநீரைக் கொடுங்கள்.!".

பாபா இவ்வாறு சொல்ல, கண்களில் கரகரவென நீர்வழிய, மெய்சிலிர்த்து... சோல்கர் மறுபடி பாபாவின் காலில் விழுவதை அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

.

.

.

Monday, March 5, 2012

தலைமுடி ஏன் நரைக்கிறது.?

ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலத்தில், டேனியும் அவன் அப்பாவும் ஏதோ விளையாடிக் கொண்டிருந்த சமயம் நடந்தது இது.

அவன் அப்பா நெருங்கிய நாற்பதுகளில் இருப்பதால், காதோரங்களில் நரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழத் துவங்கியிருந்ததைக் கவனித்த டேனி அப்பாவிடம் கேட்டான்.

"ஏம்பா... உனக்கு முடியெல்லாம் வெள்ளையாயிட்டு இருக்கு.?"

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவனை நல்வழிப்படுத்த தவறமாட்டார் அவர் என்பதால் யோசித்தபடியே சொன்னார்.

"அதுவா... டேனி அவன் அப்பா சொல்றது கேக்காம குறும்பு பண்ணற ஒவ்வொரு தடவையும் அவனோட அப்பாவுக்கு ஒரு தலைமுடி வெள்ளையாகணும்னு கடவுள் சொல்லிருக்காரு... அதனாலதான்.! நீ மட்டும் குறும்பு பண்ணாம, அப்பா சொல்படி கேட்டு நல்ல பையனா நடந்தா... அப்பா தலைமுடி வெள்ளையாகாது சரியா..?".

அப்பா சொல்வதை அப்படியே நம்பிக்கையுடன் கேட்ட டேனி, "சரிப்பா..!" என்றவன் தொடர்ந்து கேட்டான்.

"ஏம்பா... அப்ப தாத்தா தலைமுடி எல்லாம் ஏன் ஃபுல்லா வெள்ளையா இருக்கு..?".
.
.
.

Saturday, March 3, 2012

பரிணாம வளர்ச்சி

ஐந்து வயது டேனி, அன்று வகுப்பிலிருந்து வந்ததும் என்னிடம் ஓடி வந்தான்.

"அம்மா மனிதர்கள் இந்த உலகத்தில் எப்படி வந்தார்கள்னு வீட்டுல கேட்டுட்டு வரணும்னு டீச்சர் சொல்லிருக்காங்க. சொல்லுங்கம்மா... எப்படி வந்தாங்க..?"

ஏதாவது அறிவியல் வகுப்பாய் இருக்கும் என்று யோசித்தபடியே, "ரொம்ப காலத்துக்கு முன்னாடி இருந்த குரங்குகள்லருந்து மனுசங்க வந்தாங்க..!" என்று சொன்ன நான் அது எப்படி என்றும் தொடர்ந்து சொன்னேன்.

ஓரளவு புரிந்துகொண்ட பின் விளையாட ஒட்டிய டேனி, அவன் அப்பா ஆஃபிஸிலிருந்து வருவதைப் பார்த்ததும் ஓடி வந்தான்.

வந்தவன் அலுப்புடன் ஷூ கழற்றிக் கொண்டிருந்தவரிடம் நேராய்க் கேட்டான்.

"அப்பா... அப்பா... மனுசங்க எப்படிப்பா இந்த பூமிக்கு வந்தாங்க..?".

பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று தெரியாததால் அவர் லேசான கடுப்புடன், " அதுவா... முதல்ல கடவுள் ஆதாம் ஏவாளை பூமியில படைச்சாரு. அப்பறம் அவங்க குழந்தைங்க... அதுக்கப்புறம் அவங்க குழந்தைங்கனு நெறய மனுசங்க பூமிக்கு வந்தாங்க...!".

என் கணவர் சொன்னதும், குழப்பமாகிப் போன டேனி அப்பாவிடம் மறுபடி கேட்டான்.

"என்னப்பா நீ இப்படி சொல்ற.? அம்மா குரங்குகள்லருந்துதான் மனுசங்க வந்ததா சொல்றாங்க...!".

டேனி கேட்டதும், தன் அலுப்பெல்லாம் தீர்ந்ததுபோல் சிரித்தபடி அவர் சொன்னார்.

"ஓ அதுவா... அது அப்படித்தான்..! ஏன்னா, அம்மா அவங்க சைடு மனுசங்களைப் பத்தி உனக்கு சொன்னாங்க... நான் என் சைடு மனுசங்களைப் பத்தி சொன்னேன்..!" என்றார்.

அதற்கப்புறம் அவர் காஃபி கிடைக்காமல் கடைக்கு போனது தனிக்கதை.
.
.
.

Thursday, March 1, 2012

தில்லுதுர இன் கிரிக்கெட்

தில்லுதுர கல்லூரியில் கிரிக்கெட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலம் அது.

அன்று ஸ்டேட் லெவல் மேட்ச்சில் அவர் காலேஜ் வெற்றி, பெற்றதற்கு அவர் கேப்டனாக இருந்ததும் முக்கிய காரணம்.

கப் அடித்ததோடு, அன்று மைதானத்தில் நடந்தது அவரை பறக்கவே வைத்துவிட்டது.

லீடிங் ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையான ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிக்கையின் ஆசாமி ஒருவர் வந்து தில்லுதுரயிடம் சந்தோஷமாய் கைகொடுத்துப் பேசினார்.

"கலக்கலா வெளயாண்டீங்க. ஞாயித்துக் கிழமை வீட்டுல இருப்பீங்களா.? பார்க்கலாமா..?".

தில்லுதுர சந்தோஷமாய், "வாங்க சார்... எப்ப வேணா பாக்கலாம்..!" என்று அங்கேயே சொல்லி விட்டார்.

காலேஜிலும் இந்த நியூஸ் பரவி ஒரு ஹீரோவே ஆகிவிட்டார் தில்லுதுர.

ஐந்து நாட்கள்... ஞாயிற்றுக் கிழமை எப்படா வரும் என்று ஐந்து யுகமாகவே கழிந்தது தில்லுதுரக்கு.

சரியாய் ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு, தில்லுதுர வீட்டு வாசலில் வந்து நின்றது அந்த பைக்.

பைக்கிலிருந்து இறங்கிய இருவரது டி-ஷர்ட்டிலும் 'ஸ்போர்ட்ஸ்டார்' என்று சிவப்பில் எழுதியிருக்க, மிகுந்த குஷியாகிப் போனார் தில்லுதுர.

வந்தவர்களை அழைத்து ஹாலில் உட்கார வைத்து காஃபி, ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்த பின் கேட்டார் தில்லுதுர.

"அப்புறம்.... சொல்லுங்க சார்..!".

வந்தவர்களில் சிவப்பாய் குண்டாய் இருந்தவர் ஆரம்பித்தார்.

"சார்... நாங்க ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிக்கைலருந்து வர்றோம். ஆக்சுவலா ஒரு இஷ்யூ பன்னிரண்டு ரூபா. ஒரு வருஷம் 52 இஷ்யூக்கு நீங்க 624 ரூபா கொடுக்கணும். ஆனா, எங்ககிட்ட சப்ஸ்கிருப்ஷன்னா 350ரூபா கட்டினாப் போதும். நாப்பத்திநாலு பர்சன்ட் லாபம்.!".

சொல்லிக் கொண்டே வந்தவருக்கு தில்லுதுர ஏன் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தார் என்று புரியவில்லை.
.
.
.