Thursday, October 3, 2013

டேனி எனும் தன்வந்திரி நாராயணன்


டேனி படிப்பது கான்வெண்ட் என்பதால் வகுப்பில் தமிழ் பாடம் அவனுக்கு ரெண்டு வருடம் கழித்துத்தான் வந்தது.

உயிரெழுத்து, மெய்யெழுத்து எல்லாம் சொல்லிக் கொடுத்த பிறகு, அன்று அவனது தமிழாசிரியை அவன் வகுப்பில் உள்ள எல்லோரையும் அவரவர் பெயரை தமிழில் எழுத பெற்றோரிடம் கற்றுவரச் சொல்லியிருந்தார் போல.

டேனியை நாங்கள் கூப்பிடும் பெயர்தான் அதுவே தவிர, ஸ்கூல் ரெக்கார்ட் படி அவன் பெயர் தன்வந்திரி நாராயணன் என்பதால் அதை தமிழில் எழுதப் பழக்கிக் கொண்டிருந்தார் அவன் அப்பா.

கொஞ்சம் பெரிய பெயர் என்பதால் டேனி தனது முழுப் பெயரையும் எழுதக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்

மறுநாள் காலை வரை டேனி தனது முழுப் பெயரையும் அவ்வப்போது சரியாயும் தவறாயும் மாறி மாறி எழுதிக் கொண்டிருந்தான்.

அதேபோல் அன்று வகுப்பிலும் நிறையப்பேர் தப்பும் தவறுமாய் எழுதியதால், அவனது தமிழாசிரியை எல்லோரையும் அவரவர் பெயரை பத்து முறை எழுத வைத்து விட்டார்கள் போல.

மாலை வீடு திரும்பிய டேனி படு கோபத்துடன் வந்தான்.

என்ன விஷயம் என்று கேட்டதும் தமிழ் டீச்சர் எல்லோரையும் தங்களது பெயரை பத்து முறை எழுத வைத்ததை சொல்லி, தன்வந்திரிநாராயணன் என பத்து முறை எழுதிய பேப்பரை கோபத்துடன் காட்டினான்.

நான் அவனை தமிழில் இன்னும் கவனமாய் எழுத வைக்க ஊக்கப்படுத்தும் விதமாய்  அவனிடம் மெல்ல ஆறுதலாய்ச் சொன்னேன்.

“சரியா எழுதாட்டி பனிஷ்மெண்ட் கொடுக்கத்தான செய்வாங்க. அதுக்காக டீச்சர் மேல கோபப்படலாமா.?”

கேட்டதும் கோபத்துடன் திரும்பியவன் கடுப்புடன் சொன்னான்.

“எனக்கொன்னும் டீச்சர் மேல கோபம் இல்ல. உங்க மேலதான். எம்பக்கத்துல உக்காந்திருந்த தீபா எவ்வளவு சீக்கிரம் அவ பேரை எழுதிட்டா தெரியுமா.?”.
.
.
.