Thursday, June 20, 2013

என்ன கொடும சார் இது.?



டேனிக்கு காய்ச்சல் என்று பக்கத்திலிருந்த க்ளினிக் ஒன்றிற்கு போயிருந்த நேரம்.

க்ளினிக் என்றால் கொஞ்சம் பெரிய க்ளினிக்.

குழந்தைகள் டாக்டரில் இவர் கொஞ்சம் கைராசி என்பதால் எப்போதுமே அங்கு கூட்டம் வேறு அதிகமாய் இருக்கும்.

ரிசப்ஷனில் இருந்த வடக்கிந்தியப் பையனிடம் பெயர் சொல்லவே வெய்ட் பண்ண வேண்டிய அளவு கூட்டம்.

எனக்கு முன்னால் இருந்த பெரியவர் அந்த ரிசப்ஷனில் இருந்த அந்த ஹிந்திக்காரப் பையனிடம் "நேரமாகுமா சாமி.?" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்தப் பையனோ இவரை கொஞ்சமும் கவனிக்காமல் தான் வைத்திருந்த நோட்டில் குனிந்தபடியே எழுதிக் கொண்டிருக்க, நான் பெரியவருக்காக அந்தப் பையனிடம் அதை ஆங்கிலத்தில் கேட்டேன்.

அவனோ முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல், "சீட்ல வெய்ட் பண்ணச் சொல்லுங்க. அவர் டர்ன் வரும்போது கூப்பிடறேன்..." என்றவன் டேனியின் பெயரைக் கேட்டு எழுதிக் கொண்டான்.

நான் பெரியவரிடம், முன்னாடி இருந்த வரிசைச் சேர்களில் உட்காரச் சொல்லிவிட்டு... நானும் பக்கத்து சீட்டிலேயே டேனியுடன் அமர்ந்து கொண்டேன்.

பெரியவர் அவ்வப்போது சந்தேகத்துடன், "அவன் என் பேரையே கேக்கலையே..!" என்று சந்தேகத்துடன் கேட்டுக் கொண்டிருக்க, "கேக்கலைனா என்னங்க... அதோ அந்தப் பெரியவர் உங்களுக்கு முன்னதான் பேரு சொன்னாரு. அவருக்கு அடுத்து நீங்க போயிடுங்க.!" என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில், ரிசப்ஷனில் முன்னால் சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த டாம் அன்ட் ஜெர்ரியில் டேனி லயித்துப் போக, நான் வருகிறவர் போகிறவர்களையும், ரிசப்ஷன் ஹிந்திக்காரப் பையனின் தப்புத்தப்பான தமிழ்ப் பேச்சையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

பெரியவரோ நேரமாய்க் கொண்டிருக்கிறதே என்ற கடுப்புடன் நெளிந்து கொண்டிருந்தார்.

ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும்.

ரிசப்ஷன் ஹிந்தி, "பழனிச்சாமி... உள்ள போங்க!" என்று குரல் கொடுக்க, பெரியவருக்கு முன்னால் பெயர் சொன்னவர் எழுந்து போனார்.

நான் அடுத்து பெரியவரைக் கூப்பிடுகிறாரா என்று நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

உள்ளே போன அந்த பழனிச்சாமி என்பவர் வெளியே வந்ததும், அந்த ஹிந்திக்காரப் பையன் பெரியவரைப் பார்த்து குரல் கொடுத்தான்.

"ஏனுங்க... நேரமாகுமா சாமி... உள்ள போங்க.!".
.
.
.

Wednesday, June 12, 2013

தில்லுதுரயும் டீக்கடை நாயரும்



ஞாயிற்றுக்கிழமை என்பதால்... நண்பரைப் பார்க்க அன்று அவரது ரூமுக்கு வந்திருந்தார் தில்லுதுர.

அவரோ அப்போதுதான் எழுந்திருந்தார் போலும்.

தில்லுதுரயைப் பார்த்ததும், "வாடா... நாயர்கடைல ஒரு டீ சாப்ட்டுட்டு வரலாம்.!" என்று தில்லுதுரயையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

தெருமுனையிலேயே இருந்தது நாயர்கடை.

வாசலில் இருந்த பெஞ்சில் கிடந்த பேப்பரை எடுத்தபடியே உட்கார்ந்த தில்லுதுரயின் நண்பர், " நாயர் எனக்கொரு டீ.!" என்றவர் தில்லுதுரயின் பக்கம் திரும்பி, "உனக்கென்னடா வேணும்.... டீயா காஃபியா.?" என்றார்.

தெருமுனைக் கடையின் சுத்தத்தில் அவ்வளவாய் திருப்தியில்லாமல் அசுவாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுர நாயரிடமே திரும்பி, "எனக்கும் டீயே போட்ருங்க..!" என்றவர்  தொடர்ந்து, "அப்டியே... கொஞ்சம் டம்ளரைக் கழுவிப் போட்ருங்க நாயரே.!" என்றபடி தானும் ஒரு பேப்பரை எடுத்து புரட்டலானார்.

ஒன்றுமே பேசாமல் டீயைப் போட ஆரம்பித்த நாயர், ரெண்டொரு பக்கம் தலைப்புகளை மேய்வதற்குள்ளேயே  இரண்டு டம்ளர்களுடன் அவர்களிடம் வந்தவர் கேட்டார்.

"தம்பி... இதோ நீங்க ஆர்டர் பண்ண டீ. இதுல யாரு கழுவின டம்ளர்ல கேட்டது.?".
.
.
.

Thursday, June 6, 2013

சர்க்கஸ்



நான் என்னுடைய பத்தாவது படிக்கும்போது நடந்தது இது.

அன்று என் அப்பா என்னை சர்க்கஸ் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார்.

எங்க வீட்டிலிருந்து  சர்க்கஸ் நடக்கும் இடத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரமும், என்னை சைக்கிளில் டபிள்ஸ் வைத்து மிதித்து சென்றிருந்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்க்கஸுக்கு நல்ல கூட்டம் இருந்தது.

நானும் என் அப்பாவும் க்யூவில் நின்று மெல்ல மெல்ல நகர்ந்து போன போதுதான் கவனித்தேன்.

எங்களுக்கு முன்னால் நின்றிருந்த குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பமாய் இருந்தது.

அப்பா, அம்மா மற்றும் பதினைந்து வயதுக்குடபட்ட ஆறு குழந்தைகள் என இருந்தது அந்தக் குடும்பம்.

கிராமத்தை சேர்ந்தவர்கள் போலவும் இல்லை அவர்கள்.

பார்க்கவும் அவ்வளவு வசதியாய் தெரியாவிட்டாலும்... குழந்தைகள் ஆறும் சுத்தமான உடை உடுத்தி வரிசையாய் இரண்டிரண்டு குழந்தைகளாய் கையைக் கோர்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தன.

அந்த அப்பாவும் அம்மாவும் கூட படித்தவர்கள் போலத் தெரியவில்லை என்றாலும், அவர்களும் தங்கள் குழந்தைகள் போலவே கைகளைக் கோர்த்துக் கொண்டு நின்றிருந்தது, அவர்கள் எவ்வளவு அன்பான தம்பதிகள் என சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

அவைகளின் பேச்சில் அந்த சர்க்கஸை சுற்றி கட்டியிருந்த பேனர்களும், அன்று பார்க்கப் போகும் மிருகங்களும், அவைகளின் சாகசங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளும் தெறித்துக் கொண்டிருந்தன.

அந்த அப்பா அம்மா முகங்களிலும் தமது குழந்தைகளுக்கு ஒரு சந்தோஷத்தைத் தரப்போகும் ஒளியாய் மகிழ்வு தெரிந்து கொண்டிருந்தது.

வரிசை மெல்ல நகர்ந்து, இப்போது எங்களுக்கும் டிக்கெட் கவுன்டருக்கும் இடையே அந்தக் குடும்பம் மட்டுமே இருந்தது.

டிக்கெட் கவுன்டர் அருகே சென்றதும் அந்தக் குழந்தைகளின் அப்பா மெல்லக் குனிந்து, "ஆறு குழந்தைகள் ரெண்டு பெரியவங்க.." என்று சொன்னதும், கவுன்டரில் இருந்தவர் டிக்கெட்டை கிழித்தவாறே தொகையைச் சொன்னார்.

தொகையைச் சொன்னதுதான் தாமதம்... அந்த அப்பாவின் முகம் அப்படியே கறுத்துப் போனது.

மனைவியை பிடித்திருந்த கைகள் தன் பிடியை விட்டு பாக்கெட்டைத் தொட்டது.

சந்தோஷம் எல்லாம் வடிந்துபோக, கம்மிய குரலில் டிக்கெட் கவுன்டரில் இருந்தவரிடம் மறுபடி கேட்டார்.

"சார்... எவ்ளோ சொன்னீங்க.!".

அவர் மறுபடி தொகையைச் சொல்ல, அந்தக் குழந்தைகளின் அப்பாவின் முகம் கிட்டத்தட்ட செத்தே விட்டது.

அவரிடம் கையில் அவ்வளவு தொகை இல்லை போலும்.

அந்தக் குழந்தைகளோ இவை எதையும் கவனிக்காமல் சர்க்கஸ் போஸ்டரில் விலங்குகள் செய்யும் குறும்பு ஃபோட்டோக்களை பற்றி தங்களுக்குள் ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தன.

அவர் என்ன செய்யப் போகிறார் என்று நானும் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவர் தன் குழந்தைகளிடம் விஷயத்தைச் சொல்ல திரும்பும் அந்த விநாடியில்... என் அப்பா ஒரு காரியம் செய்தார்.

தன் பாக்கெட்டில் இருந்த நூறு ரூபாயை எடுத்துக் கீழே போட்டு, அதை எடுப்பதுபோல் எடுத்து அந்தக் குழந்தைகளின் அப்பாவிடம், "சார்... இது உங்க நூறு ரூபாயா பாருங்க... கீழ போட்டுட்டீங்க போல.!" என்று நீட்டினார்.

அவருக்கும் என் அப்பா செய்த காரியம் விளங்கிவிட்டது.

"அண்ணே... என்னண்ணே..." என்றவாறு தயக்கத்துடன் நின்ற அவரின் கைகளைப் பிடித்து என் அப்பா, "புடிங்க சார்... ஒன்னும் யோசிக்காதீங்க. குழந்தைகளை கூட்டிட்டுப் போங்க..!" என்று ரூபாயை அழுத்த..

"ரொம்ப நன்றிங்க அண்ணா.. இதுக்கு நான் என்ன செய்யறதுனே தெரியல..!" என்ற போது அவருடைய கண்கள் கலங்கியே விட்டது.

கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தைகளுடன் சந்தோஷமாய் சர்க்கஸ் கூடாரத்துக்குள் நுழைவதை பார்க்கும்போது... என் அப்பா எவ்வளவு பெரிய மனிதர் என்று எனக்கு மிகப் பெருமையே தோன்றியது.

ஒன்றை இப்போது நான் மறக்காமல் கூறியே ஆக வேண்டும்.

அன்று என் அப்பாவிடம் இருந்ததே அந்த நூறு ரூபாய் மட்டுமே என்பதால்... அன்று நாங்கள் இருவரும் சர்க்கஸ் பார்க்காமலேதான் வீடு திரும்பினோம்.!.
.
.
.
# எப்போதோ படிச்ச கதை

Tuesday, June 4, 2013

நமஸ்காரா டேனி



அது திருமணத்திற்குப் பிறகு நானும் டேனியும் கோவையில் இருக்க, அவர் மட்டும் மைசூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம்.

ஏதோ ஒரு சமயத்தில் மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்று என்னையும் அவனையும் மைசூரு வரச் சொல்லியிருந்தார் அவர்.

அருமையான ஊர்... அட்டகாசமான க்ளைமேட்.

எல்லாவற்றிற்கும் மேலாக நாம் பேப்பரில் படிப்பது போலெல்லாம் இல்லாமல் அன்பைப் பொழியும் மக்கள்.

போன முதல் நாள் காலை, வெளியே ஊர் சுற்றிப் பார்க்க கிளம்புவதற்கு முன், அவர் ஹவுஸ் ஓனரம்மாவை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது வீட்டுக்குள் இருந்த ஹவுஸ் ஓனரின் குழந்தை ஷன்மதியை அவர்கள் டேனிக்கு அறிமுகம் செய்ய, அது அழகாய் டேனியைப் பார்த்து புன்னகைத்தபடி, "நமஸ்காரா..!" என்றது.

டேனி அதுவரை நமஸ்காரா என்ற வார்த்தையை கேட்டதில்லை என்பதால், அது அந்தக் குழந்தையின் பெயராய் இருக்குமோ என்றா குழப்பத்துடன் அந்தக் குழந்தையைப் பார்த்து, "நான் டேனி" என்றான்.

பேச்சு சுவாரஸ்யத்தில் யாரும் அதைக் கவனிக்கவில்லை என்றாலும், வெளியே செல்லும்போது டேனிக்கு நான் நமஸ்காரா என்றால், வணக்கம் குட்மார்னிங் போல ஒரு வார்த்தை என்பதை மெல்ல சொல்லிக் கொடுத்தேன்.

டேனிக்கும் புரிந்தது போலத்தான் இருந்தது.

மறுநாள் நாங்கள் பார்க்குக்கு கிளாம்பிக் கொண்டிருந்த சமயம்... வாசலில் ஹவுஸ் ஓனர் குழந்தை ஷன்மதியைப் பார்த்ததும் டேனி அவளிடம் ஓடினான்.

விளையாடிக் கொண்டிருந்த அவள் தோள்களைத் தொட்டு அவள் திரும்பியதும் அழகாய், "ஷன்மதி... நமஸ்காரா.!" என்றான்.

டேனி சொன்னதும் ஒரு விநாடி யோசித்த ஷன்மதி புன்னகையுடன் சிரித்தபடி அவனிடம் சொன்னாள்.

"நான் டேனி.!".
.
.
.