Friday, February 24, 2012

தில்லுதுர இன் டாஸ்மாக் பார்

ஒரு வெள்ளிக்கிழமையின் சாயங்காலம் முடிந்த நேரத்தில் டாஸ்மாக் பாருக்குள் நுழைந்த தில்லுதுர, மங்கலான வெளிச்சத்தில் ஒரு ஆளில்லாத டேபிளைத் தேடி அமர்ந்தார்.

அமர்ந்ததும் அவசர அவசரமாய் அங்கும் இங்கும் பரபரப்புடன் பார்த்த அவர், அட்டென்டரை வேகமாய்க் கையை ஆட்டி அழைத்தார்.

பக்கம் வந்த அட்டென்டர் ஆர்டரைக் கேட்பதற்குள், "சீக்கிரம் சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள... ரெண்டு எம்சி லார்ஜ் வித் ச்சில் சோடாவோட எடுத்துட்டு வாப்பா..!" என்றார்.

குழப்பத்துடன் அவரைப் பார்த்த அட்டென்டர், தில்லுதுர கேட்டதை கொண்டு வந்து கொடுத்தார்.

சரக்கு வந்ததும் கொஞ்சம் அவசரமாகவே அதைக் குடித்த தில்லுதுர, திருமபவும் பரபரப்புடன் அந்த அட்டென்டரை அழைத்தார்.

பக்கம் வந்த அட்டென்டரிடம் மறுபடி, "சீக்கிரம் சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள இன்னும் ரெண்டு எம்சி லார்ஜ் வித் ச்சில் சோடாவோட எடுத்துட்டு வாப்பா..!" என்றார்.

இன்னும் குழப்பமான அந்த அட்டென்டர், ஒன்றும் பேசாமல் திரும்பவும் தில்லுதுர கேட்டதையெல்லாம் கொண்டு வந்து டேபிளில் வைத்தார்.

அதையும் குடித்து முடித்துவிட்டு அந்த அட்டென்டரை அழைத்த தில்லுதுர, "சீக்கிரம் சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள இன்னும் ரெண்டு எம்சி லார்ஜ் வித் ச்சில் சோடாவோட எடுத்துட்டு வாப்பா..!" என்றார்.

கடுப்பாகிப் போன அட்டென்டர் ஆரடரைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, தில்லுதுரயைப் பார்த்து எரிச்சலுடன் கேட்டார்.

"சும்மா 'சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள சண்டை ஆரம்பிக்கறதுக்குள்ள'னு சொல்லறியே... சண்டை எப்பய்யா ஆரம்பிக்கப் போகுது.?".

அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருந்த தில்லுதுர, இப்போ அந்த அட்டென்டரைப் பார்த்து போதையாய் சிரித்தபடி சொன்னார்.

"இப்ப... நான் குடிச்சதுக்கெல்லாம் நீ பணம் கேட்ட உடனே...!" என்றார்.
.
.
.

Wednesday, February 22, 2012

வயதைக் கண்டுபிடிப்பது எப்படி.?


அன்று மாலை அலுவலகம் விட்டு வந்ததும் என் நான்கு வயது மகன் டேனியுடன் விளையாடாமல், ஏதோ ஒரு அப்ளிகேசனை நிரப்பும் பணியை கவனமாய் செய்து கொண்டிருந்தார் என் கணவர்.

அந்த வேலை முடிந்ததும் அவர் எப்படியும் விளையாட வருவார் என்ற நம்பிக்கையோடு, கையில் பேட்டும் பந்துமாய் அவர் எழுதும் டேபிளுக்கு அருகிலேயே விளையாடிக் கொண்டிருந்தான் டேனி.

அப்ளிகேஷனை நிரப்பிக் கொண்டே வந்தவர் திடீரென்று என்னை அழைத்தார்.

"கொஞ்சம் கால்குலேட்டரை எடுத்துட்டு வர்றியா..?"

அடுக்களையில் வேலையாய் இருந்த நான், "அப்ளிகேஷன் ஃபில் பண்ண கால்குலேட்டர் எதுக்குங்க..?" என்று கேட்க கடுப்புடன் பதில் சொன்னார் அவர்.

"இந்த மாசம் மொதத் தேதி அன்னிக்கு என் வயசு என்னனு கேட்டிருக்கான். அதை கழிச்சுப் பாக்கணும், அதுக்குத்தான்...!".

அவர் பேசுவதை கவனித்தபடியே விளையாடிக் கொண்டிருந்த டேனி சட்டென்று கேட்டான்.

"அப்பா... உன் வயசு தெரியணும்னா ஒரு ஈஸியான வழி இருக்கு, சொல்லட்டா.?"

ஆவலுடன் நிமிர்ந்த அவர் கேட்டார்.

"என்னது... சொல்லு சொல்லு..!".

அவர் கேட்டதும் டேனி சொன்னான்.

"உன்னோட பனியன், பின்னால உள்பக்கமா பாத்தா கண்டுபுடிச்சுடலாம்..!".

அவன் சொன்னதும் குழப்பமாகிப் போன என் கணவர் புரியாமல் அவனிடமே கேட்டார்.

"அதெப்படிடா... பனியன் உள்பக்கம் பாத்தா வயசு தெரியும்..?".

அவர் கேட்டதும் டேனி இன்னும் அழகாய் விளக்கும் விதமாய் சொன்னான்.

"ஆமாப்பா... வேணும்னா என் பனியனைப் பாரேன். உள்ளே ஃபோர் இயர்ஸ், ஃபைவ் இயர்ஸ்னு போட்டிருக்கு...!" என்றான்.
.
.
.

Tuesday, February 14, 2012

தில்லுதுரயும் வாலன்டைன்ஸ் டே-யும்

அன்று பிப்ரவரி 14ம் தேதி என்று ஞாபகமே இல்லாமல் தான் போஸ்ட் ஆஃபிஸுக்குள் ஏதோ வேலையாய் நுழைந்தார் தில்லுதுர.

தன்னுடைய கடிதத்துக்கான ஸ்டாம்பை ஒட்ட, பசை இருக்கும் இடத்தை நெருங்கும் போதுதான் அந்த நபரைக் கவனித்தார்.

கிட்டத்தட்ட ஒரு நாற்பத்தைந்து வயதிருக்கும் அந்த ஆளுக்கு.

நல்ல சிவப்பு... ஓரளவு முடி கொட்டி முன்மண்டை முழுவதும் கிரவுண்ட் வாங்கியிருந்தது.

கையில் குறைந்தது நல்ல பளபளக்கும் பிங்க் கலரில் ஒரு கவர்.. அதில் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் சிவப்பில் ஒரு இதயத்தின் படம்.

அந்த ஆள் ஸ்டாம்பை அந்த இதயத்தின் மீது படாமல் பக்காவாய் ஒட்டி, கவரைத் திறந்து கையிலிருந்த சென்ட் பாட்டிலைத் திறந்து உள்ளே பளீரென்று ஸ்ப்ரே செய்து கவரை ஒட்டிக் கொண்டிருந்தார்.

ஆச்சர்யத்துடன் அதையே பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுர அவரிடம் கேட்டார்.

"பாக்கவே சந்தோஷமா இருக்கு. உங்களுக்கு உங்க ஆள் மேல உங்களுக்கு இவ்வளவு பிரியமா..?".
தில்லுதுர கேட்டதும் அவர் அலுத்துக் கொண்டே பதில் சொன்னார்.

"அட... இது ஒரு ஆம்பளைக்குங்க...!"

தில்லுதுர லேசான கலவரத்துடன் கேட்டார்.

"ஆம்பளைக்கா... ஏன்.?"

அந்த சொட்டை நபர் சிர்த்தபடி பக்கத்திலிருந்த பேக்கை திறந்து காட்டியபடி சொன்னார்.

"இது ஒண்ணு மட்டுமில்ல... இதே மாதிரி இன்னும் ஆயிரம் கவர் இருக்கு. எங்க பாஸ் சொன்னபடி அனுப்பிக்கிட்டு இருக்கேன்.!"

தில்லுதுர குழப்பத்துடன் வாழ்த்து அனுப்பும் இடத்தில் யார் அனுப்புகிறார் என்பதைப் பார்த்தார்.

அந்த இடத்தில் பெயர் எழுதாமல் வெறுமனே "கெஸ் ஹூ.?" என்று மட்டும் இருந்தது.
பார்த்த தில்லுதுர இன்னும் கடுப்பு அதிகமாகி அவரிடம் கேட்டார்.

"ஏம்பா... யாருன்னு பேரு எழுதாம மொட்டையாப் போடறீங்களே, இதை அவரு பாக்காம வீட்டுல யாராவது பாத்தா அங்க குழப்பந்தான உண்டாகும்.?"

அவர் சிரித்தபடி சொன்னார்.

"ஆமா சார்... அதுதான வேணும்..!".

சொன்ன சொட்டை நபரைப் பார்த்த தில்லுதுர கோபாமாய்க் கேட்டார்.

"அதானால உங்களுக்கு என்னப்பா லாபம்.?"

அப்போதும் அந்த சொட்டை நபர் அசராமல் சொன்னார்.

"இருக்கே... எங்க பாஸ்தான இந்த ஊர்லயே பெரிய டைவர்ஸ் லாயர்..!" என்றான்.
.
.
.

Wednesday, February 8, 2012

வாலன்டைன் தினத்தில் தில்லுதுர

பிப்ரவரி - 14 வாலன்டைன் தினத்தன்று காலையில் படுக்கையிலிருந்து கண்விழித்த மனைவி, தில்லுதுரயை எழுப்பினாள்.

"என்னங்க.. என்னங்க... எந்திரிங்க...!".

"என்னடி.?"

கொட்டாவியுடன் கண்விழித்த தில்லுதுரயிடம் அவள் சொன்னாள்.

"என்னங்க... இன்னிக்கு கண்ணு முழிக்கும்போது ஒரு கனவுங்க. அதுல, நீங்க இன்னிக்கு வாலன்டைன்ஸ் தினத்துக்காக எனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கித் தர்றீங்க. இதுக்கு என்ன அர்த்தம்னு உங்களுக்குத் தெரியுதா...?".

ஆவலுடன் கேட்ட மனைவியின் முகத்தைப் பார்த்த தில்லுதுர, புன்னகையுடன் சொன்னார்.

"இன்னிக்கு சாயங்காலம் தெரிஞ்சுக்குவ...!".

சொன்னபடி சாயங்காலம் திரும்பிய தில்லுதுர கையில், சிறிய செவ்வகமான... கிஃப்ட் பேப்பரில் சுற்றப்பட்டிருந்த பார்சல் இருந்ததும், அவன் மனைவி மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டாள்.

தில்லுதுர நீட்டியதும், அந்தப் பார்சலை ஆர்வத்துடன் வாங்கிப் பிரித்த அவன் மனைவி, திகைத்துப் போய் தில்லுதுரயைப் பார்த்தாள்.

அதில், "கனவுகளும் அதன் பலன்களும்.." என்ற புத்தகம் இருந்தது.
.
.
.

Monday, February 6, 2012

டேனியும் பில்கேட்ஸும்

ன்னிக்கு வெள்ளிக்கிழமை எந்திரிச்சதே லேட்டு.

இதுல இன்னிக்கு டேனிக்கு கம்ப்யூட்டர் கிளாஸ் வேற.!

ஐந்து வயதுக் குழந்தைக்கு எதுக்கு கம்ப்யூட்டர் என்றால் ஸ்கூலும் அவரும் ஒரே மாதிரி தேவைதான் என்று பதில் மட்டும் சொல்கிறார்கள்.

டேனியும் இப்பல்லாம் மானிட்டர், சிபியூ, வின்டோஸ் என்று சில வார்த்தைகள் வேறு சொல்ல ஆரம்பித்ததும் அவன் அப்பாவுக்கு தலைகால் புரியவில்லை.

ஆனால், கம்ப்யூட்டர் கிளாஸ் வரும் நாட்களில் எனக்குத்தான் காலை அவசரங்கள் அதிகமாகிப் போனது.

காலைல எந்திரிச்சு சமைச்சு.. அவனைக் கிளப்பி, எல்லாம் முடியும் போது மணி எட்டே கால்.

எட்டரைக்குள்ளாக அவனை க்ளாசில் விட்டுவிட்டு, என்னைக் காலேஜில் இறக்கி விட்டுவிட்டு, ஒன்பதுக்குள் அலுவலகத்துக்கு போக வேண்டிய கடுப்பில் நின்று கொண்டிருந்தார் அவர்.

வேகவேகமாய் கிளம்பி வந்து பைக்கை ஸ்டார்ட் செய்தால், பைக் ம்ஹூம் என்று சொல்லிவிட்டது.

அவர் கடுப்புடன் பழக்கமாயிருந்த பக்கத்து கால்டாக்ஸிக்கு ஃபோன் செய்தார்.

ஐந்தே நிமிடத்தில் வந்த கால்டாக்ஸியின் ட்ரைவர்கூட தெரிந்தவர் என்றாலும், பட்ட காலிலேயே படும் என்பதுபோல் கிளம்பிய கால்டாக்ஸி பத்து நிமிடம் ஓடிய பின்பு நின்றுவிட்டது.

அலுவலகத்துக்கு லேட்டாகும் கடுப்புடன் என் கணவர் ட்ரைவரைப் பார்த்துக் கேட்டார்.

"என்னங்க... பெட்ரோல் இல்லையா.?".

"இல்லை சார். காலைலதான் டேங்க் ஃபுல் பண்ணினேன்...!" என்றவர் இறங்கிப் போய் பானட்டைத் திறந்து பார்த்துவிட்டு, "எதும் எலக்ட்ரிகல் ப்ராப்ளம் போல இருக்கு சார்..!" என்றார்.

கோபமாய் என் கணவர் ஏதோ சொல்ல வாயெடுத்த அதே விநாடியில் டேனி ட்ரைவரைப் பார்த்துச் சொன்னான்.

"அங்கிள்... எல்லோரும் இறங்கிட்டு வின்டோஸை எல்லாம் சாத்திட்டு... திரும்ப ஏறி வின்டோஸை எல்லாம் ஓப்பன் பண்ணிப் பாருங்க.... வண்டி ஓடும்...!".

சர்வ நிச்சயமாய்ச் சொன்ன அவனை ஒருகணம் ஆச்சர்யத்துடன் பார்த்த என் கணவர் கேட்டார்.

"எப்படிச் சொல்லற.?".

கேட்ட என் கணவரிடம் கண்களை விரித்தபடி டேனி சொன்னான்.

"ஆமாப்பா... க்ளாஸ்ல கம்ப்யூட்டர் ஓடலைனா நாங்க அப்படித்தான் பண்ணுவோம்...!".
.
.
.