Friday, April 9, 2010
சர்வர் சுந்தரம்
அந்த மனிதனும் அவன் நண்பனும் சர்வர் சுந்தரம் வேலை பார்க்கும் ஹோட்டலில்தான் தினசரி காலையில் சாப்பிட வருவார்கள்.
அபூர்வ நண்பர்கள் அவர்கள்.
வந்தவுடன் சர்வர் சுந்தரம் எப்போதும் கேட்கும் முதல் கேள்வி,"என்ன சாப்பிடறீங்க சார்..?" என்பதுதான்.
அவர்களில் அந்த மனிதன் மறக்காமல் எப்போதும், "ஒரு ஆனியன் ஊத்தப்பம் அது சாப்பிட்டு முடியும் போது ஒரு காஃபி..." என்பான்.
கூட வந்தவன் உடனே, "எனக்கும் அதேதான்..." என்பான்.
சாப்பிட்டு முடித்ததும், "பில் நாற்பத்தைந்து ரூபாய்..." என்று சர்வர் சுந்தரம் சொன்னதும், "சரி..." என்று அவன் பேன்ட் பாக்கட்டுக்குள் கையை விட்டு மிகச் சரியான சில்லறையை எடுத்துக் கொடுப்பான்.
வாரம் பூராவும் இதுவே தொடரும்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவன் மெனு மாறும்.
சுந்தரம்,"என்ன சாப்பிடறீங்க சார்..?" என்று கேட்டதும், "ஒரு பொங்கல், ஒரு மசால் தோசை... அப்புறம் அது சாப்பிட்டு முடியும் போது ஒரு காஃபி..." என்பான்.
கூட வந்தவன் உடனே, "எனக்கும் அதேதான்..." என்பான்.
சாப்பிட்டு முடித்ததும், "பில் நூற்றிப் பன்னிரண்டு ரூபாய்..." என்று சர்வர் சுந்தரம் சொன்னதும், "சரி..." என்று அவன் பேன்ட் பாக்கட்டுக்குள் கையை விட்டு மிகச் சரியான சில்லறையை எடுத்துக் கொடுப்பான்.
சர்வர் சுந்தரத்துக்கோ ஒரே ஆச்சர்யம்.
'எப்படி இவனால் மட்டும் மிகச் சரியான சில்லறையை ஒவ்வொரு முறையும் கொடுக்க முடிகிறது...!'.
இதுவே ஒரு மாதத்திற்கும் மேலே தொடர ஆளில்லாத ஒரு நாளில் அவனிடம் சர்வர் சுந்தரம் அதைக் கேட்டே விட்டான்.
அந்த மனிதன் ரொம்ப நேரம் யோசித்து விட்டுச் சொன்னான்.
"தம்பி... நீயும் ரொம்ப நாளாய் எங்களுக்கு சர்வ் செய்துட்டு இருக்க... உங்கிட்ட சொல்றதுக்கு என்ன..? நீயும் ரொம்பக் கஷ்டப்பட்ற... உனக்கும் ஏதாவது செய்யணும்னு நெனச்சுக்கிட்டுத்தான் இருந்தோம். அதுக்குள்ள நீயே கேட்டுட்ட...!" என்றவன் தொடர்ந்து...
"என்னோட பேன்ட் பாக்கட்ல அலாவுதீன் விளக்கு ஒண்ணு இருக்கு. அதை நான் தேய்ச்சதும் அதுல இருக்கற அந்த பூதம் நான் என்ன கேட்டாலும் கொடுக்கும். இப்ப நான் அதிக் கூப்பிடப் போறேன். உனக்கும் ஏதாவது வேணும்னா அதைக் கேட்டுக்க...!" என்றவன் பேன்ட் பாக்கட்ல இருக்கற அலாவுதீன் விளக்கை எடுத்து தேய்த்தான்.
சட்டென்று அந்த இடத்தில் ஒரு வெளிச்சம் பரவ... அந்த அலாவுதீன் பூதம் அங்கே தோன்றியது.
என்ன கேட்கப் போகிறானோ என்று அவர்கள் இருவரும் சுந்தரத்தையே பார்த்துக் கொண்டிருக்க....
...மிகுந்த பிரமிப்புடன் அலாவுதீன் பூதத்தை மேலும் கீழுமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த நம்ம சர்வர் சுந்தரம் கேட்டான்....
"என்ன சாப்பிடறீங்க சார்..?" .
.
.
.
Labels:
அலாவுதீன்,
ஆனியன்,
சர்வர் சுந்தரம்,
பூதம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இதுதான் தொழில் பக்தியென்பது.
Post a Comment