Friday, February 25, 2011

திருமதி செல்வம்

திருமணம் முடிந்து அலுவலகத்துக்கு வந்த முதல்நாள், தன் மனைவியையும் உடன் அழைத்து வந்திருந்தார் தில்லுதுர.

புதிய மணமக்களை வரவேற்று, ஒரு பார்ட்டி ப்ளான் செய்திருந்தார்கள் அலுவலகத்தினர்.

மணமக்களை எல்லோரும் வாழ்த்திப் பேசிவிட்டு பரிசுப் பொருட்களை கொடுத்த பிறகு, அலுவலகத்திலேயே நீண்ட காலம் பணிபுரியும், மனமொத்த மிக அந்நியோன்யமான, வயதான தம்பதியரான... செல்வம் தம்பதியினர் ஜோடியாய் மேடைக்கு வந்தனர்.

செல்வம் தம்பதியினர் பரிசைக் கொடுத்து வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு, மேடையை விட்டு இறங்கும்போது, தில்லுதுர அவர்களிடம் கேட்டார்.

"செல்வம் சார்.. உங்களுடைய நீண்டநாள் சந்தோஷமான மண வாழ்வின் ரகசியத்தைச் சொன்னால், அது இந்த சமயத்தில் எங்களுக்கு மிகவும் உபயோகமாய் இருக்குமே..!".

தில்லுதுர கேட்டதும், செல்வத்தை முந்திக் கொண்டு திருமதி செல்வம் பதில் சொன்னார்.

"அது ஒண்ணும் பெரிய ரகஷியமில்லை மிஸ்டர் தில்லுதுர... வாழ்க்கை முழுவதும், எப்போதும் எந்த நேரத்திலும், நீங்க நான் சொல்லும் மூன்று வார்த்தையைச் சொல்லிக் கொண்டிருந்தால் போதும். உங்கள் வாழ்க்கை எப்போதுமே சந்தோசமாகவே செல்லும்..!".

தில்லுதுர ஆர்வம் தாங்காமல் திருமதி செல்வத்தைப் பார்த்துக் கேட்டார்.

"சொல்லுங்கள் மேடம். எது அந்த மூன்று வார்த்தை..?".

திருமதி செல்வம் எல்லோரும் ஆர்வத்துடன் தன்னைப் பார்ப்பதை அறிந்து சந்தோசமாய் சொன்னார்.

"அந்த மூணு வார்த்தை, 'நீங்க சொன்னா சரிதான்' என்பதுதான்...!" .

திருமதி  செல்வம் சொன்னதும் தில்லுதுர ஆர்வத்துடன் செல்வத்தைப் பார்த்துக் கேட்டார்.

"சார் நீங்க என்ன சொல்லறிங்க..?".

தில்லுதுர கேட்டதும் அனைவரும் ஆர்வத்துடன் செல்வம் பக்கம் பார்க்க...
அவர் சிரித்தபடியே சொன்னார்.

"அவ சொன்னா சரிதான்...!".
.
.
.

Wednesday, February 23, 2011

தில்லுதுர Vs அதிசய நாய்

தில்லுதுரயின் நண்பர் ஒரு அதிசய நாயை எங்கிருந்தோ வாங்கி வந்தார்.

அந்த நாய்க்கு தண்ணீரில் நடக்கும் சக்தி இருந்தது.

ஆண்டாண்டு காலமாய் தில்லுதுரயின் பெருமைகளையே கேட்டுக் கேட்டு அலுத்துப் போயிருந்த அந்த நண்பர், இப்போது தில்லுதுரயிடம் தனது பெருமையைக் காட்ட நினைத்தார்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை, தில்லுதுரயையும் நாயையும் கூப்பிட்டுக் கொண்டு துப்பாக்கியுடன் ஏரிக்கரைக்கு வந்தார் அவர்.

தில்லுதுர பார்த்துக் கொண்டிருக்கும்போதே... கரையில் இருந்தபடி அவர் வாத்துக்களை ஒவ்வொன்றாக சுட, அந்த அதிசய நாயும் தண்ணீரின் மேலாக நடந்து போய் ஒவ்வொரு வாத்தையும் கரைக்கு எடுத்து வந்து கொண்டிருந்தது.

உணர்ச்சியே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுரயிடம் திரும்பி, நண்பர் பெருமையுடன் கேட்டார்.

"பாத்தியா தில்லு, எப்படி என் நாய்..?".

கேட்ட நண்பரை திரும்பிப் பார்த்த தில்லுதுர சலனமின்றிக் கேட்டார்.

"ஆமா, உன் நாய்க்கு நீந்தத் தெரியாது போலிருக்கே...!".
.
.
.

Monday, February 21, 2011

ஒரு வார்த்தைக்கு என்ன எடை..?

பாரசீகக் கவிஞரும் ஞானியுமான ஷாஅதி ஏதோ ஒரு விஷயமாக அந்தப் பயில்வானைப் பார்க்க அந்த ஊருக்கு வந்திருந்தார்.

பயில்வானோ ஒரு அற்புதமான பயில்வான்.

எவ்வளவு எடை வேண்டுமானாலும் தூக்குவார்... நாட்டில் அவருடன் எடை தூக்கும் போட்டியில் அவரை யாரும் வென்றதும் கிடையாது.

எப்போதும் அவருடன் போட்டியிட்டு எவரும் இதுவரை ஜெயித்ததும் கிடையாது.

ஷாஅதி அவரைப் பார்க்க வந்தபோது பயில்வான் மிகுந்த கோபத்துடன் இருந்தார்.

வீட்டின் உள்ளே, கோபமாய் அவர் குரலும் பாத்திரங்கள் விழுந்து உடைவதுமாய் சப்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தது.

ஷாஅதி என்ன விஷயமென்று பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தார்.

அவர் சொன்னார்.

"பக்கத்து ஊரில் யாரோ பயில்வானை கேவலமாய்ப் பேசி விட்டார்களாம். அதைக் கேள்விப்பட்டு பயில்வான் பயங்கர கோபமாகிவிட்டார். அப்போதிருந்து இப்படித்தான் வீட்டுக்குள் சப்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறது..!".

அதைக் கேட்ட ஷாஅதி அந்தப் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொன்னார்.
 
"எவ்வளவோ பயங்கரமான எடைகளைத் தூக்கிய இந்த பயில்வானால், கேவலம் யாரோ சொல்லிய ஓரிரு வார்த்தைகளின் கனத்தைத் தாங்க முடியவில்லையா...? ஐயோ பாவம்..!" என்றாராம்.
.
.
.

Saturday, February 19, 2011

போன ஜென்மத்து ஞாபகம்

தில்லுதுர தன் வீட்டு வாசலில் உட்கார்ந்தபடி தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

"கொஞ்சநாளா வேலை டென்ஷன்ல எல்லாமே மறந்து போகுதுன்னு சொன்னேனே. அதுக்கு ஒரு டாக்டரைப் போயி பார்த்தேன். அவரு அதுக்கு ஒரு மாத்திரைய ப்ரிஸ்கிரைப் பண்ணினாரு. இட்ஸ் ஜஸ்ட் அமேஜிங். நீங்க அந்த மாத்திரையை சாப்பிட்டுப் பார்க்கணுமே. அட்டகாசம்... எனக்கு இப்ப போன ஜென்மத்து ஞாபகம் எல்லாம் வந்துடும் போல இருக்கு...!".

சொல்லிக் கொண்டே சிரித்தார் தில்லுதுர.

கேட்டுக் கொண்டிருந்த நண்பர் ஆச்சர்யப்பட்டு, "அந்த மாத்திரையோட பேரு என்ன்னு சொல்லறியா..? கொஞ்சம் உபயோகமா இருக்கும்...!".

நண்பர் கேட்டதும் தில்லுதுர யோசித்தபடி சொல்ல ஆரம்பித்தார்.

"அ... அது வந்து... இரு சொல்லறேன்...! இந்த ஒரு பூ இருக்குமே. சிகப்பு கலர்ல. சின்னச் சின்னதா அழகா. செடில முள்ளு எல்லாம் இருக்குமே. பறிச்சா கையில கூடக் குத்தும். நேரு சட்டைல வச்சிருப்பாரே..!".

யோசனையாய் தில்லுதுர சொல்வதைப் பார்த்த நண்பர் குழப்பத்துடன் கேட்டார்.

"எது... ரோஜாப் பூவையா கேக்கற..?".

நண்பர் சொன்னதும் பிரகாசமான தில்லுதுர, "கரெக்ட்.. ரோஜாதான்...!" என்றபடி வீட்டின் உள்பக்கமாய் திரும்பி மனைவியைப் பார்த்துக் கத்தினார்.

"ஏண்டி ரோஜா.. அந்த மாத்திரையோட பேரு என்னடி..?".
.
.
.

Thursday, February 17, 2011

தோடுடைய செவியன்

நான் ஒரு தமிழ் முனைவர் பட்டம் வாங்கியவள்.

நான் படித்த கல்லூரி கோவையில் சிவனடியார்களால் நடத்தப்பட்ட கல்லூரி.

படித்து முடித்து நான் முதன்முதலில் வேலை பார்த்த பள்ளியோ முருகனடிமைகளால் நடத்தப்பட்டது.

தவிரவும், எனது குடும்பமும் பக்திமயமான குடும்பம் என்பதால், எனது
கல்லூரிக்கால ஆய்வுகளும் பக்தி சார்ந்தே இருந்தன.
 
ஆனால், திருமணத்துக்குப் பிறகு நான் வேலை பார்த்த இடத்தினால், ஆரோக்கிய மாதாவும் குழந்தை ஏசுவும் என் பூசையறையில் புதிதாய் குடி புகுந்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தக் கதை என்னைப் பற்றியதில்லை.

என் மகன் டேனிக்கும் எனக்கும் நடக்கும் பிரச்சினை பற்றியது.

அவன் கதை கேட்கும் போதெல்லாம் நான் எனக்குத் தெரிந்த புராணக் கதைகளை அவனுக்கு சொல்வதையே  வழக்கமாய் வைத்திருந்தேன்..

கூடவே, அவன் அவனுடைய மேலைநாட்டுக் கதைகளைப் பேசும்போதெல்லாம் நான் நமது கதைகளை உயர்த்திப் பிடிப்பது என் வழக்கமும் கூட.

அவன் ஆகாய விமானம் பற்றிப் பேசினால், நான் நமது கற்பனையான புஷ்பக விமானம் பற்றிச் சொல்லுவேன்.

அவன் சூப்பர்மேன் பற்றிச் சொன்னால் நான் ஆஞ்சநேயர் பற்றியும்,
ஹாரிபாட்டர் சொல்லும்போது நமது அம்புலிமாமா பற்றியும் சொல்வது என் வழக்கம்.

அதுபோல்தான் அன்றும் நடந்தது.

தூக்கம் வராமல் கதை கேட்ட டேனிக்கு நான் அஸ்வினி தேவர்கள் கதையை சொல்ல முடிவெடுத்தேன்... சொல்லவும் ஆரம்பித்தேன்.

சதாசர்வ காலமும் சிவனைப் பற்றிப் பாடுவதே அஸ்வினி தேவர்கள்
என்றழைக்கப்படும் அந்த ரெட்டையர்களின் வேலை.

ஒரு சமயம் சிவபெருமான் அவர்கள் பக்தியில் மகிழ்ந்து என்ன வரம்
வேண்டுமென்று கேட்டார்.

தீவிர சிவபக்தர்களான அஸ்வினி தேவர்கள் இருவரும்,"பெருமானே.. நாங்கள் இருவரும் எந்நேரமும் உன்னைப் பற்றிய பதிகங்களைப் பாடிக் கொண்டே இருக்க வேண்டும். அது எப்போதும் உனது காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்...!" என்று கேட்டனர்.

இறைவனும் அவர்கள் ஆசையை நிறைவேற்ற, அவ்விருவரையும் தோடுகளாக்கி தன்னிரு காதுகளில் அணிந்து கொண்டார்.

இதுதான், சிவபெருமான் தோடுடைய செவியன் ஆன கதை என்று சொல்லி முடித்தேன்.

பக்தி இருந்தால் பரமனையும் அடையலாம் என்பதைச் சொல்லும் அஸ்வினிதேவர்களின் கதையிலிருந்து, டேனி என்ன கற்றுக் கொண்டான் என்பதைத் தெரிந்துகொள்ள அவனிடம் கேட்டேன்.

"டேனி.. இந்தக் கதையிலருந்து உனக்கு என்ன தெரியுது.?".

கண்கொட்டாமல் கதை கேட்டுக் கொண்டிருந்த டேனி மகா ஆர்வமாய் பதில் சொன்னான்.

"ஐபாட் ஹெட்ஃபோனையும் நாமதான் மொதல்ல கண்டுபுடிச்சிருக்கோம்,
இல்லம்மா..?" என்றான்.
.
.
.

Thursday, February 10, 2011

டேனியும் ஆப்பிளும்


நானும் என் மகன் டேனியும் அவன் அப்பாவுடன், பர்ச்சேஸ் முடித்து காரில் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் நடந்தது இது.

நாங்கள் இருவரும் முன் சீட்டில் உட்கார்ந்திருக்க, டேனி பின் சீட்டில் ஜன்னலில் வேடிக்கை பார்த்தபடி, அப்போதுதான் வாங்கியிருந்த ஆப்பிள்களில் ஒன்றை எடுத்து பாதி சாப்பிட்டிருந்தவன் கேட்டான்.

"அப்பா... ஏன் என்னோட ஆப்பிள் பிரவுன் கலரா மாறிடுச்சு..?".

தன் மகன் எதையும் தெளிவாய் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையை உடைய அவன் அப்பா, வண்டியை ஓட்டியபடியே  அவனுக்கு விளக்கமாய் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

"ஏன்னா, நீ அதோட தோலை சாப்பிட்ட உடனே, அதோட வெள்ளைச் சதையில வெளியில இருக்கிற காத்து படுது. அப்ப, காத்துல இருக்கற ஆக்ஸிஜனோட சேர்ந்து அது ஆக்ஸிடைஸ் ஆகுது. அதனால, அதோட மாலிக்யூலர் ஸ்ட்ரக்சர் மாற்றமாகி அதோட கலரும் மாறுது..!".

தெளிவாய் புரியும்படி சொன்ன திருப்தியில் என் கணவர், வண்டியைத் தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருக்க, ஒரு நீண்ட மௌனத்திற்கு அப்புறம் டேனி அவரிடம் கேட்டான்.

"அப்பா... இப்ப நீங்க என் கூடவா பேசிக்கிட்டு இருந்தீங்க..?".
.
.
.

Tuesday, February 8, 2011

ஜெருசலேமில் தில்லுதுர




தில்லுதுர தன் மனைவி குழந்தைகள் மற்றும் மாமியாருடன் ஜெருசலேம் டூர் போயிருந்தார்.

நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த லோ பேக்கேஜ் டூர் அது.

கிளம்பியதில் இருந்து நல்ல விதமாகவே போய்க் கொண்டிருந்த அந்த 15 நாள் டூரின் நடுவில், சரியாக எட்டாவது நாளில் அந்தப் பிரச்சினை வந்தது.

எட்டாவது நாள் இரவில்தான் தில்லுதுரயின் மாமியாருக்கு நெஞ்சு வலி வந்தது.

நள்ளிரவு நேரம், பாஷை தெரியாத ஊர்.

என்ன செய்வது என்று முடிவு எடுத்து ஹாஸ்பிடல் கொண்டு சேர்ப்பதற்குள் மாமியாரின் கதை முடிந்தே விட்டது.

டாக்டர், 'மாமியாரின் கதை முடிந்தது...' என்று கையை விரித்ததும், மனைவியும் குழந்தைகளும் அழுது புலம்ப தில்லுதுர தனக்கு டூர் அரேஞ்ச் செய்த நண்பனை போனில் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான்.

நண்பன் அங்கே இங்கே என்று விசாரித்துவிட்டு தில்லுதுரயின் போனுக்கு வந்தான்.

"தில்லு.. மாமியார இங்கயே புதைச்சுட்டா நம்மூருப் பணத்துல இருபதாயிரம் தான் ஆகுமாம். அதே பாடிய நம்மூருக்கு கொண்டு போகணும்னா அஞ்சு லட்சத்தத் தாண்டுமாம். என்ன பண்ணனும்னு முடிவு பண்ணிச் சொல்லு..!".

அழுது கொண்டிருந்த மனைவி தில்லுதுரயின் முகத்தைப் பார்க்க, தில்லுதுர நண்பனிடம் போனில் சொன்னான்.

"இதோப்பாருடா... அஞ்சு லட்சமில்ல, அம்பது லட்சமானாலும் பரவாயில்ல. என் மாமியார எங்க ஊர்லதான் அடக்கம் பண்ணனும். ஏற்பாடு பண்ணு...!".

தில்லுதுர சொன்னபடி மாமியாரின் உடல் சென்னை வந்து அடக்கம் செய்யும் போது, செலவு கிட்டத்தட்ட ஏழு லட்சம் ஆகியிருந்தது.

வந்தவர்களில் தில்லுதுரயின் நெருங்கிய நண்பன் ஒருவன் கேட்டான்.

"ஏன்டா... அங்கயே எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்திருந்தா இந்த ஏழு லட்சம் மிச்சம்தானே..?".

நண்பன் கேட்டதும் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, தில்லுதுர தணிந்த குரலில் தன் நண்பனிடம் சொன்னான்.

"அங்கயே பொதச்சிருக்கலாம்தான். ஆனா, அந்த ஊர்லதான் யேசு கிறிஸ்து செத்துப் போன மூணாம் நாளே உயிரோட வந்தாராமே..! கைடு அன்னிக்கு காலைலதான் சொன்னான். சரி, மாமியார் விஷயத்துல எதுக்கு அந்த ரிஸ்க் எடுக்கணும்தான் செலவானாலும் பரவாயில்லேனு இங்கயே கொண்டு வந்துட்டேன்..!" என்றான்.
.
.
.

Friday, February 4, 2011

குரு ஸ்தோத்திரம்


டேனி கின்டர்கார்டன் போக ஆரம்பித்து பத்து மாதங்கள் ஆனபோது நடந்தது இது.
ஆனால், அவன் எதுவும் கற்றுக் கொள்கிறானா என்பதிலேயே, என் கணவருக்கு ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.
கணவர் வெளியூரில் இருந்ததாலும் நான் கல்லூரிக்கு வேலைக்குப் போவதாலும் அவனுடைய பள்ளிக்குப் போக முடியாமலே இருந்து வந்தது.
டேனியிடம் பள்ளியில் என்ன நடந்தது என்பது பற்றியும் விசாரித்து அறிந்துகொள்ள முடியாமலேயே நாட்கள் நகர்ந்தது.
என் கணவர் மட்டும் அவனிடம் போனிலும் நேரிலும், 'ஏபிசிடி சொல்லு... பாபா ப்ளாக் ஷீப் சொல்லு..' என்று முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்.
அன்றும் அப்படித்தான், அவர் ஊருக்கு வந்திருந்தபோது சூப்பர் மார்க்கெட் போன இடத்தில் அவனுடைய வகுப்பு டீச்சரை எதிர்பாராமல் சந்தித்தோம்.
அவர்தான் டீச்சர் என்று தெரிந்ததும் என் கணவர் அவரிடம் விசாரணையை ஆரம்பித்துவிட்டார்.
"டேனி வகுப்புல எப்படி டீச்சர்..?".
அந்தப் பெண்மணி இயல்பாய் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
"ரொம்ப அமைதியான பையன். ஆனா, அவனும் அவனோட ஃபிரண்ட் ஹர்சந்த்தும் சேர்ந்துட்டாத்தான் ஒண்ணும் கையில பிடிக்க முடியாது..!".
"படிப்புல டீச்சர்..?".
டீச்சர் பொறுமையாய் சொன்னார்.
"ரொம்ப சுட்டி. க்ளாஸ்லயே இவன் தான் ஃபர்ஸ்ட். ஆல்ஃபபெட்ஸ்,நம்பர்ஸ்,கலர்ஸ் எல்லாம் கரெக்டா சொல்லுவானே...!".
என் கணவர் அலுப்புடன் சொன்னார்.
"ஆனா, நாங்க கேட்டா வாயே திறக்க மாட்டேங்கறாண் டீச்சர்..!".
டீச்சர் சிரித்தார்.
"அதெல்லாம் டேனி அட்டகாசமாச் சொல்லுவானே. அதுமட்டுமில்ல, அவன் என் கூடவே குரு ஸ்தோத்திரம் 'குருப்ரம்மா குருவிஷ்ணு' சொல்லற அழகப் பாக்கணுமே நீங்க..!".
தன் மகன் குரு ஸ்தோத்திரம் சொல்லுவான் என்றதும்  என் கணவரின் சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே..!
அவர் ஆர்வமாய் டீச்சரிடம் கேட்டார்,"டீச்சர்.. அவன் உண்மையிலேயே சொல்லுவானா டீச்சர்..?".
என் கணவரின் ஆர்வத்தைப் பார்த்த அந்த டீச்சர் சொன்னார்.
"நான் க்ளாஸ்ல நுழைஞ்சதும் மொதல்ல சொல்லறதே குரு ஸ்தோத்திரம்தான். அதுக்கப்புறம்தான் காலை வணக்கம் சொல்லி, அட்டன்டென்ஸ் எடுக்கறதே. இருங்க, இப்ப டேனிய சொல்ல வைக்கிறேன்..!" என்றவர் டேனியை அழைத்து, "டேனி... எங்கே குரு ஸ்தோத்திரம் சொல்லு..!".
அவன் டீச்சரை வெளியிடத்தில் பார்த்த வெட்கத்தில் நெளியவும், அவரே ஆரம்பித்தார்.
"டேனி... மிஸ் சொல்லுவேன் நீயும் கூடவே சொல்லணும், என்ன.?".
டேனி தலையை ஆட்டியதும் அவர் ஆரம்பித்தார்.
"குரு ப்ரம்மா..!"
டேனி தொடர்ந்தான்
"குரு ப்ரம்மா..!".
"குரு விஷ்ணு..!".
"குரு விஷ்ணு..!" என்று தொடர்ந்த டீச்சர்...
"குருவே நமஹ..!" என்று வெற்றிப் புன்னகையுடன் முடிக்க,
குரு ஸ்தோத்திரம் சொன்ன தன் மகனையே பெருமை பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த என் கணவரைப் பார்த்து சிரித்தபடியே, "குருவே நமஹ..!" என்று முடித்த டேனி தொடர்ந்து சொன்னான்.
"ஆல் ஆஃப் யூ குட்மார்னிங்...!".
.
.
.

Tuesday, February 1, 2011

அடுத்த வாரிசு

'ராம்நாத் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்' உரிமையாளர் ராம்நாத் நேற்று அதிகாலையில் இறந்து போனார்.

ராம்நாத் திருமணம் ஆகாதவர்.

எனவே, அவரது இந்தக் கோடிக்கணக்கான சொத்துக்கு நேரடி வாரிசு கிடையாது.

அவர் தனது மொத்தச் சொத்தையும் யார் பெயரில் எழுதி வைத்திருக்கிறார் என்பது ஒரு ரகசியமாகவே இருந்தது.

ஆனால், அதை யார் பெயருக்கு எழுதி வைத்திருக்கிறார் என்பது, அவரது வக்கீலான எனக்கும் ராம்நாத்தின் நெருங்கிய நண்பர்கள் சில பேருக்கு மட்டும்தான் தெரியும்.

இன்னும் சொல்லப்போனால், இனி அந்தச் சொத்துக்கு முழு உரிமையாளராகப் போகும் அவரது தூரத்து உறவுக்கார ஏழை அநாதைப் பெண்ணான, அந்த வசந்திக்குக் கூடத் தெரியாது.

ராம்நாத் இறந்ததும் வசந்தியைத் தேடி அவள் தங்கியிருக்கும் விடுதிக்குப் போனோம்.

அவள், யாரோ தனது தோழி வீட்டுக்குப் போயிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

ராம்நாத்தின் இறுதிக் காரியங்களில் நிறைய வேலை பாக்கி இருந்ததால், எனக்குத் தொழில்ரீதியாக நிறைய உதவிவரும் அந்தப் 'ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜன்ஸி'யைத் தொடர்பு கொண்டேன்.

அதன் முதலாளி விக்ரம் ஒரு துடிப்பான வளரத் துடிக்கும் இளைஞன்.. நல்ல புத்திசாலி.

அவனிடம் வசந்தியின் ஃபோட்டோவைக் கொடுத்து, ஆனால் அந்த உயில் விஷயத்தைச் சொல்லாமல், அந்தப் பெண்ணை பத்திரமாய் மூன்றாம் பேருக்குத் தெரியாமல் கொண்டு வரும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தேன்.

பிறகு, எனக்கிருந்த பிடுங்கல்களில் இந்த விஷயம் மறந்துபோக, ஒரு வாரம் கழித்து அவனுக்கு போன் செய்தேன்.

"என்னாச்சு விக்ரம்.? அந்த வசந்தியை கண்டுபிடிச்சுட்டியா..?".

விக்ரம் மறுமுனையில் பதில் சொன்னான்.

"நீங்க சொன்ன மறுநாளே கண்டுபிச்சுட்டேன் சார்..!".

"அப்புறம் அவ எங்கே இருக்கிறா..?".

நான் கேட்டதும் விக்ரம் கூலாய் பதில் சொன்னான்.

"என்கூட என் வீட்டில்தான் இருக்கிறா சார்...! பாவம் ஏழைப் பொண்ணு. சின்ன வயசு. என்னைப் போலவே அநாதை.பாக்கவே ரொம்பக் கஷ்டமா இருந்தது. மனசு தாங்கல.அதனால, நேத்துதான் அவளை வடபழனில வச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...!".
.
.
.