Saturday, May 29, 2010

அற்புதர்துறவி ஒருவர் அந்த ஊருக்கு வந்திருந்தார்.

ஊர் மக்கள் எல்லோரும் அவரைத் தரிசிக்க வந்த போது அதில் ஒருவர் துறவியின் சீடரைப் பார்த்துக் கேட்டார்.

"அவ்வளவு பெரியவரா இந்தத் துறவி...?"

அதற்குச் சீடர் சொன்னார்.

"மகான் இவர். நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் மிகப் பெரிய அற்புதங்களைச் செய்ய வல்லவர் இப்பெரியவர்...!".

வந்தவரோ இன்னும் சந்தேகம் தெளியாமல் கேட்டார்.

"அப்படியெதுவும் அற்புதங்களை இவர் செய்ததாய் நாங்கள் கேட்டதில்லையே..."

அதற்கும் சீடர் எந்தச் சலனமும் இல்லாமல் சொன்னார்.

"மாமனிதர் இவர்... இவர் எப்படி அற்புதங்களைச் செய்ய வல்லவரோ... அதேபோல் அற்புதங்களைச் செய்யாமல் இருப்பதிலும் வல்லவர்...!".

அற்பர்கள் வியப்பதற்காக அற்புதங்களைச் செய்வதில்லை அற்புதர்கள்.
.
.
.

Friday, May 28, 2010

பாசக்கார பயபுள்ள...டேனி மாடியிலிருந்து இறங்கும்போதே பயங்கரமாய் அழுதுகொண்டே வந்தான்.

நான் என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டேன்.

வேகமாய் அவனருகே சென்று, "என்ன டேனி... என்ன ஆச்சு...?"

அவன் அழுதுகொண்டே,"அம்மா.. அம்மா... அப்பா மாடியில சுவத்துல ஃபோட்டோக்கு ஆணி அடிக்கும்போது நழுவி சுத்தியல் அப்பா கையிலயே பலமாப் பட்டுடுச்சு...!"

நான் இவனுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் சற்று ஆசுவாசமானேன்.

அவனோ இன்னும் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான்.

இவன் தான் எவ்வளவு நல்லவன்.

அப்பா மேல்தான் பையனுக்கு எவ்வளவு பாசம்.

நான் அவனைச் சமாதானப்படுத்த எண்ணி மெல்ல அவனுடன் பேச ஆரம்பித்தேன்.

"இதப் பாரு டேனி... இது ஒரு சின்ன விஷயம்... இதுக்குப் போயி நீ இவ்வளவு அழுக வேண்டியதில்லை... நீ நிறைய வளர்ந்து இப்ப பெரிய பையனா ஆயாச்சு... இதுக்கெல்லாம் போயி அழுகக்கூடாது... இன்னும் சொல்லப்போனா நீ இதுக்கு சிரிக்கக்கூடச் செய்யலாம்...!"

அழுது கொண்டிருந்த டேனி சட்டென்று நிமிர்ந்து பார்த்துச் சொன்னான்.

"போம்மா... அப்பா கையில சுத்தியல் பட்டதும் நான் முதல்ல சிரிக்கத்தான் செஞ்சேன்...!".
.
.
.

Thursday, May 27, 2010

தூஸ்ரா
டர்டஜன்சிங் ஒரு இந்திய ஸ்பின்னிங் பவ்லர்.

அவருக்கு இன்று காலையில்தான் திருமணம் முடிந்தது.

மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் முடிந்து பெண் அழைப்பில் பெண் வீட்டில் அமைதியாய் உட்கார்ந்திருந்தபோது அவர் மொபைலில் ஒரு எம்.எம்.எஸ். வந்தது.

அதைப் பார்த்ததும் டர்டஜன்சிங்குக்கு தலையே வெடித்துவிடும் போலிருந்தது.

அதில் அவருடைய புதிய மனைவி வேறு யாருடனோ திருமணக் கோலத்தில் நின்றிருந்தார்.

அவருக்கு வந்ததே கோபம்.

ஒரே ரகளை செய்துவிட்டார்.

ரகளையின் போது பெண் வீட்டு உறவினரில் ஒருவர் கோபமாய் சொன்னதுதான் உச்சகட்டம்.

"ஆப்டர் ஆல்... இவன் ஒரு ஸ்பின்னர். இவனுக்கு விளையாட்டுல பால் கூட புதுசாத் தரமாட்டாங்க... பொண்ணு புதுசா வேணுமாம்...!".
.
.
.

Wednesday, May 26, 2010

சுகமான சுமைகள்துறவி ஒருவர் தனக்குத் தேவையான பொருட்களைத் தூக்கிக் கொண்டு மலை உச்சியை நோக்கி ஏறி கொண்டிருந்தார்.

செங்குத்தான மலை. எனவே, மேலே ஏறஏற சுமை அதிகமாகி மூச்சு வாங்கத் துவங்கியது அவருக்கு.

சற்று தூரம் இன்னும் முன்னால் போனதும், அங்கே ஒரு மலைவாழ் சிறுமி தனது மூன்று வயதுத் தம்பியைத் தூக்கிக் கொண்டு உற்சாகமாய்ப் பாடல் ஒன்றும் பாடிக் கொண்டு மிகச் சாதாரணமாய் மலை உச்சி நோக்கிப் போவதைப் பார்த்தார்.

துறவிக்கோ ஆச்சர்யமான ஆச்சர்யம்.

அவர் சிறுமியைப் பார்த்துக் கேட்டார்.

"என்னம்மா... இவ்வளவு சிறிய பையைத் தூக்கி கொண்டே மலை ஏற என்னால் முடியவில்லையே... உன்னால் எப்படியம்மா இவ்வளவு பெரியவனைத் தூக்கிக் கொண்டு ஏற முடிகிறது...?"

அதற்கு அந்தச் சிறுமி பதில் சொன்னாள்.

"அய்யா... நீங்கள் தூக்கிக் கொண்டிருப்பது ஒரு சுமையை... ஆனால், நான் தூக்கிக் கொண்டிருப்பதோ என் தம்பியை...!"

துறவிக்குப் புரிந்தது...

'அன்பு எதையும் சுமக்கும்...!'.
.
.
.

Tuesday, May 25, 2010

ஆல் அரசியல்வாதி இன் எ பஸ்ஒரு சமயம் தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் கட்சிப் பாகுபாடு இல்லாமல் ஒரு இன்பச் சுற்றுலா கிளம்புவதாக முடிவானது.

அந்தப் பொன்னாளில் அவர்கள் யாருடைய தொகுதியும் அந்தச் சுற்றுலா வரைவில் வந்துவிடாமல் பார்த்துக் கொண்டு ஒரு அட்டகாசமான பஸ்ஸைப் பிடித்துக் கிளம்பியும் விட்டார்கள்.

எல்லா ஏரியாவும் சுற்றி முடித்துவிட்டு திரும்பும் போது இரவில் அவர்கள் பஸ் பிரேக் பிடிக்காமல் ஒரு வயலோரமாய் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்துவிட்டது.

கொஞ்ச நேரம் எல்லோரும் கதறிக் கொண்டிருக்க, அந்த வழியாய் வந்த ஒரு விவசாயி அவர்களைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டதும் ஒரு பெரிய குழியைத் தோண்டி அனைவரையும் ஒன்றாய்ப் புதைத்துவிட்டார்.

மறுநாள் போலிஸ் வந்து அந்த விவசாயியை விசாரித்தது.

விவசாயி நடந்ததை அப்படியே சொன்னார்.

ஆச்சர்யப்பட்ட போலிஸ் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"என்ன... அத்தனை பேரையும் புதைச்சுட்டையா...? அதுல ஒருத்தர் கூடவா உயிரோட இல்ல...?".

அதற்கு அந்த விவசாயி பதில் சொன்னார்.

“இல்ல… நான் புதைக்கும்போது நிறையப் பேரு உயிரோடதான் இருக்கேன்னு கத்தினாங்க. ஆனா, நீங்களே சொல்லுங்க… அரசியல்வாதி சொல்றதையெல்லாம்  நாம நம்ப முடியுமா என்ன…?”.
.
.
.

Saturday, May 22, 2010

நரமாமிசம் சாப்பிடுபவனின் ஃபாஸ்ட் ஃபுட்காட்டில் வசித்து வரும் நம்ம நரேன் ஒரு நரமாமிசம் சாப்பிடுபவன்.

அவன் மகன் இருந்தார்போலிருந்து ஒரு நாள் தான் சாப்பிட ஃபாஸ்ட் ஃபுட் வேண்டும் என்று கேட்டுவிட்டான்.

தன் ஒரே மகனின் ஆசையை நிறைவேற்ற காடெல்லாம் அலைந்தான் தந்தை.

யாருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் என்றால் என்னவென்றே தெரியவில்லை.

சரி நகரத்தில் சென்று தேடலாம் என்று நகரத்திற்குள் வந்துவிட்டான்.

அங்கும் எங்கு தேடியும் அவனுக்கு ஃபாஸ்ட் ஃபுட் கிடைக்கவில்லை.

கடைசியாய்... நேரு விளையாட்டு அரங்கைத் தாண்டும் போது அவன் அவனுடைய மகனுக்குத் தேவையான ஃபாஸ்ட் ஃபுட்டைக் கண்டுபிடித்துவிட்டான்.

அவன் ரன்னிங் ரேசில் முதலாவதாய் வந்தவனைக் காட்டிற்கு தூக்கிச் சென்றுவிட்டான்.
.
.
.

Friday, May 21, 2010

டேனியின் கணக்கு
சில சமயங்களில் நாம் நினைப்பதைவிடச் சுலபமான வழிகள் எல்லாவற்றுக்கும் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு நாள் அவனுடைய அப்பா ஷூ போடும் போது அவனுக்குக் கொடுத்த அட்வைஸை அவன் அப்படியே கணக்குப் பாடத்திற்குச் சொல்லியிருந்தான்.

இன்று கணக்குப் பாடத்திற்கு அவன் கொடுத்த அட்வைஸ் மட்டும் வொர்க் அவுட் ஆயிருந்தால் ராமானுஜமோ வேறு யாருமோ நமக்குத் தேவை இருந்திருக்காது.

நாமும் கணிதத்தால் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கமாட்டோம்.

அவன் கணக்குப் பாடத்தால் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பானோ தெரியாது.

அவன் கணக்கு நோட்டை ஒரு நாள் யதார்த்தமாய் பிரித்துப் பார்த்த போது அவன் அதில் கணக்குப் பாடத்திற்கு மிகப் பெரிய மனிதன் போல் ஒரு அறிவுரை ஆங்கிலத்தில் எழுதியிருந்தான்.

அது தமிழில்...

"டியர் மேத்ஸ்...
நீ இன்னும் வளர்ந்து உன்னுடைய பிராப்ளங்களை நீயே சால்வ் செய்து கொள்ள வேண்டும். வேறு யாராவது வந்து சால்வ் செய்யும் வரை வெய்ட் பண்ணக் கூடாது...! ஓகே...?".
.
.
.

Thursday, May 20, 2010

ட்ராபிக் சிக்னல்


பொள்ளாச்சியின் மிகப் பெரிய ஆர்த்தோ டாக்டரிடம் நான் கார் ட்ரைவராய் இருந்தபோது நடந்தது இது.

அவர் அப்போது ஹாஸ்பிடலை வாடகைக்கு இருந்ததிலிருந்து தனது சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றிக் கொண்டிருந்தார்.

எல்லாம் முடிந்த கடைசியில், அவரது அலுவலக அறையிலிருந்த எலும்புகூட்டை நான் தான் பத்திரமாய் புது அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.

அது பெரும் பாடாய்ப் போய்விட்டது.

அந்த எலும்புக்கூட்டை முன்சீட்டில் உடையாமல் உட்காரவைத்து வலது கையை எடுத்து சீட்டின் மேற்புறமாய் படரவிட்டு ஆடாமல் அசையாமல் ஓட்டிக்கொண்டு போனேன்.

'எலும்புகூடு கீழே விழுந்தால் என்ன ஆவது...?' என்று யோசித்துக் கொண்டே போகையில் சிக்னல் விழுந்துவிட்டது.

வண்டி நின்றதும் முன் கண்ணாடி வழியாய் எலும்புக்கூட்டைப் பார்த்த ட்ராபிக் கான்ஸ்டபிள் குழப்பத்துடன் வந்து ஜன்னல் கண்ணாடியை தட்டினார்.

"என்னது இது...?"

நான் ஏற்கனவே இருந்த குழப்பத்தில் என்ன சொல்லுவது என்று தெரியாமல்,"டாக்டர் ஹாஸ்பிடலுக்கு கொண்டு வரச் சொன்னார்...!" என்று மட்டும் சொன்னேன்.

அதற்குள் ஒருவாறு நிலைமையை யூகித்திருந்த அந்த ட்ராபிக் கான்ஸ்டபிள் குறுஞ்சிரிப்புடன் சொன்னார்.

"ஆனா... எலும்புக்கூடு ஆகறவரைக்கும் வெயிட் பண்ணாம கொஞ்சம் முன்னாடியே கொண்டு போயிருக்கலாம்....!".
.
.

Tuesday, May 18, 2010

காவியாவின் கணவன்காவியா இன்று இதற்கொரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்று முடிவு செய்தாள்.

கல்யாணம் ஆன ஒரு மாதத்திற்குள்ளாகவே இப்படி ஒரு பிரச்னை வரும் என அவள் நினைக்கவில்லை.

அதுவும் கேவலம் ஒரு ஒண்ணரை ரூபாய் முட்டையால்.

கல்யாணம் ஆன போதே மாமியார் சொல்லியிருந்தாள்.

"அவனுக்கு சாப்பாட்ல டெய்லி ஒரு முட்டை சேத்துக்கணும். அதுவும் ஆம்லெட் இல்லாட்டி அவிச்ச முட்டையாத்தான் இருக்கணும்...."

ஆனால், இவள் கணவனோ முட்டையிலேயே ஆயிரம் குறை கண்டுபிடிப்பவனாய் இருந்தான்.

முட்டையை அவித்து வைத்தால் ஆம்லெட் போட்டிருக்கலாம் என்பான்.  ஆம்லெட் போட்டிருந்தாலோ அவித்திருக்கலாமே என்பான்.

இதுவே தினசரி தொடர காவியாவின் மனதுக்குள் முட்டையால் ஒரு பெரும் புயல் வீச ஆரம்பித்தது.

ஒரு மாதம்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் இன்று பொறுமை இழந்துவிட்டாள்.

கணவன் சாப்பிட வந்ததும் காலையிலேயே முடிவு செய்தபடி ஒரு முட்டையை அவித்தும் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டும் வைத்துவிட்டு கணவன் என சொல்கிறான் என்று பார்க்கக் காத்திருந்தாள்.

அவனோ என்றுமில்லாத ஆச்சர்யமாய் வாயே திறக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

தாங்க முடியாமல் காவியாவே,"என்னங்க முட்டையை அவிச்சும் வச்சிருக்கேன், ஆம்லெட் போட்டும் வச்சிருக்கேன்.. நீங்க அதைப்பத்தி ஒண்ணுமே சொல்லலியே...!" என்று வாயைத் திறந்து கேட்டும் விட்டாள்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவன் நிமிர்ந்து கோபமாய் சொன்னான்.

"என்னத்த சொல்றது.? உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியப் போறதில்ல...!"

காவியா குழம்பிப் போனாள்,"இதுல என்னங்க தப்பு...?"

கணவன் தனது கோபம் குறையாமலே பதில் சொன்னான்.

"என்ன தப்பா...? அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!'

காவியா இப்போது மயக்கம் போடாமலிருக்க ட்ரை பண்ணிக்கொண்டிருக்கிறாள்.
.
.

Sunday, May 16, 2010

மீன்ஸ் (மீன் ரெண்டு).பாருக்குள் நுழைந்து தட்டுத் தடுமாறி இருட்டில் நான்கைந்து பேர் காலை மிதித்து டேபிளைத் தேடி அமர்ந்தது மீன்கள் ரெண்டு.

உட்கார்ந்தவுடன் டேபிளைத் தட்டிக் கொண்டு 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...' என்று பாட்டு வேறு.

பக்கத்தில் இருந்தவர்கள் கடுப்புடன் பார்க்க....

பார் அட்டென்டர் கோபமாய் வந்து கேட்டான்.

"என்ன வேணும்...?"

முரட்டுத்தனமாய் இருந்த அந்த மீனில் ஒன்று சொன்னது.

"தண்ணி....!".
.
.
.

Saturday, May 15, 2010

உன் மேல் நான் கொண்ட காதல்... என் மேல் நீ கொண்ட காதல்...
கோபத்தில் மனைவியை ஓங்கி அடித்த கணவன், அடுத்த கணம் தன் தவறை உணர்ந்து சொன்னான்.

"அடித்ததால் உன் மேல் எனக்கு அன்பில்லை என்று நினைத்துக் கொள்ளாதே. உண்மையில் அடிப்பவனுக்குத்தான் அன்பு மிகுதியாய் இருக்கும்... தெரிந்துகொள்...!"

கேட்டுக் கொண்டிருந்த மனைவி இன்னும் கோபமாய் திருப்பி கணவனை இரண்டு அறை அறைந்துவிட்டுச் சொன்னாள் .

"என் அன்பு... உன் அன்புக்குச் சற்றும் குறைந்ததென்று நினைத்தாயோ அன்பே...!".
.
.
.
நன்றி: பொன்.சுதா

Wednesday, May 12, 2010

ஒரு தச்சனும் அவனுடைய பல்பும்தனது மனோதத்துவ மருத்துவமனையில் எப்போதும் போல் மார்னிங் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்தார் டாக்டர் லாடு லபக்குதாஸ்.

அப்போது அவரது நோயாளிகளில் ஒருவன் தரையில் அமர்ந்து மரத்துண்டு ஒன்றை பாதியாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார்.

ஆனால், மற்றொரு நோயாளியோ உத்திரத்தின் உச்சியில் ஒரு கயிறைக் காலில் கட்டிக்கொண்டு தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்தான்.

நம்ம லபக்குதாஸ் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் முதல் நோயாளியைப் பார்த்துக் கேட்டார்.

"என்னப்பா பண்ணிட்டிருக்க..?".

அவன் தனது வேலையிலிருந்து கொஞ்சமும் தனது கவனத்தைத் திருப்பாமல் பதில் சொன்னான்.

"பாத்தா தெரீல... நான் கட்டையை செதுக்கிட்டு இருக்கேன்...!".

லபக்குதாஸ் மேலே தொங்கிக் கொண்டிருந்தவனைக் காட்டிக் கேட்டார்.

"அதோ... அவன் என்னப்பா பண்ணிட்டிருக்கான்...?".

அதற்கு முதலாமவன் பதில் சொன்னான்.

"அவனா... அவன் நம்ம பிரண்டுதான். ஆனா... கொஞ்சம் காமெடியானவன். அவனே அவனை ஒரு லைட்டு பல்புனு நெனச்சுக்கிட்டு மேலே போய் தொங்கிக்கிட்டு இருக்கான்...!"

லபக்குதாஸ் மேலே தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார்.

ரொம்ப நேரமாய்த் தொங்கிக் கொண்டிருந்திருப்பான் போல. முகமெல்லாம் ரத்தம் பாய்ந்து மிகச் சிவந்து கிடந்தது.

லபக்குதாஸ் கலவரத்துடன் அந்த முதலாமவனிடம் கேட்டார்.

"அவன் உன் பிரண்டுன்னா... அவனுக்கு ஏதாவது நடக்கறதுக்குள்ள அவனைக் கொஞ்சம் கீழே வரச் சொல்லலாமில்ல...?".

லபக்குதாஸ் சொன்னதும் முதலாமவன் கோபமாய்க் கேட்டான்.

"என்னது...? அவனைக் கீழே இறக்கிவிட்டுட்டு நான் எப்படி இருட்டுல வேலை செய்யறது...?".
.
.
.

Tuesday, May 11, 2010

ஓடு கண்ணா ஓடுஒரு தமிழனும் பக்கத்து ஸ்டேட்காரனும் காட்டிற்குள் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டார்கள்.

அது ஏமாந்த ஒரு சமயத்தில் இருவரும் தப்பித்து சுறா படத் தியேட்டர் கதவு திறந்தது போல் உயிர் தெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

ஓட்டத்தின் இடையே ஒரு பாதுகாப்பான தூரம் வந்ததும் அந்தத் தமிழன் உட்கார்ந்து வேக வேகமாய் தான் கொண்டு வந்திருந்த பையைத் திறந்து, தனது ரன்னிங் ஷூவை எடுத்துப் போட்டுக் கொள்ள ஆரம்பித்தான்.

இதைப் பார்த்த பக்கத்து ஸ்டேட்காரன் கிண்டலாய்க் கேட்டான்.

“இதைப் போட்டுக்கிட்டா மட்டும் நீ புலியைவிட வேகமா ஓடிவிடுவாயா..?”

அதற்கு தமிழன் சொன்னான்.

“என்னோட நோக்கம் புலியை விட வேகமாய் ஓடுவது அல்ல. உன்னைவிட வேகமாய் ஓடுவது. புலிக்குத் தேவை ஒரு ஆள்தானே...?”.
.
.
.

Monday, May 10, 2010

ஒரு கெமிஸ்ட்ரி ஜோக்நியூட்ரான் தெரியுமா உங்களுக்கு...?

ஒரு வீக் எண்ட்.... சாயங்காலம்.

அவனும் அவன் தோஸ்த்து இன்னொரு நியூட்ரானும் ஒரு நாள் தண்ணி அடிக்க பக்கத்துல இருக்கற டாஸ்மாக் பாருக்குப் போனாய்ங்க.
போனாய்ங்களா.... அங்கே தண்ணி அடிச்சு அவனுக ஃபுல் மப்பு.

எல்லாம் முடிஞ்சு கடைசியா நம்ம நியூட்ரான் பார் அட்டென்டர்கிட்ட கேட்டான்.

"இன்னாப்பா... நமக்கு எவ்ளோ சார்ஜு...?"

இதைக் கேட்டதும் கூடக் குடித்துக் கொண்டிருந்த நண்பன் நியூட்ரான் சொன்னது.

"ஏய்... இன்னாப்பா நீ லூஸூ மாதிரிக் கேட்டிகிணுகீற...? நாமதான் நியூட்ரான் ஆச்சே... நமக்கு ஏது சார்ஜூ...?".
.
.
.

Thursday, May 6, 2010

அடடா மழைடா... அடை மழைடா...!
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தைப் பார்வையிட மந்திரி வந்திருந்தார்.

எங்கும் தண்ணீர். இன்னும் விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது.

விவசாயிகளைப் பார்க்க வயல்வெளிக்கே வந்துவிட்டார் அவர்.

வயலெல்லாம் முழங்கால் அளவுத் தண்ணீரில் மூழ்கிக் கிடந்தது.

ஒரு விவசாயியிடம் மந்திரி கேட்டார்.

"அய்யா... இவ்வளவு பெரிய மழையை நான் பார்த்ததே இல்லை. மிகப் பெரிய வெள்ளம் அல்லவா...?'

அந்த விவசாயி பதில் சொன்னார்.

"என்னுடைய வெள்ளம் பெரியது இல்லை அய்யா.  பக்கத்து வயல் பண்ணையாருடையது. அவருக்கு வந்த வெள்ளம்தான் மிகப் பெரியது...!"

மிகச் சாதாரணமாய்ச் சொன்னார் அவர்.

அவர் முகத்தில் இருப்பது சந்தோஷமா... சோகமா என்பதும் தெரியவில்லை.

மந்திரி குழம்பிப் போனார்.

ஒரே ஊர். ஒரே அளவு மழை. ஒரே மாதிரித்தான் வெள்ளமும் இருக்கிறது.

இதில் பண்ணையாருடைய வயலில் மட்டும் எப்படி வெள்ளம் அதிகமாயிருக்க முடியும்..?

மந்திரி அதை அந்த விவசாயியிடம் கேட்டும் விட்டார்.

அதற்கு அந்த விவசாயி பதில் சொன்னார்.

"அதெப்படிங்க ரெண்டு பேர் வயல்லயும் ஒரே மாதிரி வெள்ளம் இருக்கும்..? என்னோட வயல் அஞ்சு ஏக்கர்... பண்ணையாருடையது நூத்தம்பது ஏக்கர் ஆச்சுங்களே...!".
.
.
.

Wednesday, May 5, 2010

கோபம்... கொலைவெறி...


பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”

அப்பா ஒருகணம் யோசித்தார்.

“மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.

“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.

மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.

“சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.

“சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.

“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…”

போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.

“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார்.

“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”

மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது.

“டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!”

மகன் அப்பாவிடம் சொன்னான்.

“அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”

“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.

ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...

... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.

“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”.
.
.
.