Wednesday, March 31, 2010

கடின உழைப்புக்கு


தின டமாரம் பத்திரிக்கை நிருபர் அந்தப் பெரிய வயதான பணக்காரரைப் பேட்டி எடுக்க வந்திருந்தார்.

"ஆச்சர்யம்... எப்படி இவ்வளவு பெரிய பணக்காரராய் மாற முடிந்தது உங்களால்...?"

அந்த பணக்காரர் மெல்லிய குரலில் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

"அது என் திருமணம் முடிந்த நேரம்.
எங்களுடையது காதல் திருமணம்.
அதனால் இரண்டு வீட்டிலும் கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது.
எனக்கோ வேலை வேறு இல்லை.
என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.
என் மனைவிதான் அந்த ஐடியாவைக் கொடுத்தாள்.
அவளிடம் ஒரு நூறு ரூபாய் இருந்தது.
அதை வைத்து ஒரு ஜோடி ஷூ வாங்கினேன்.
கூடவே ஒரு பாலிஷும் பிரஷும்.
காலையில் இருந்து சாயங்காலம் வரையில் அந்த ஜோடி ஷூவை பாலிஷ் செய்து கொண்டே இருந்தேன்.
சாயங்காலம் அதை இருநூறு ரூபாய்க்கு விற்றுவிட்டேன்.
மறுநாள் அதை வைத்து ரெண்டு ஜோடி ஷூ வாங்கினேன்.
அதையும் அதேபோல் மாலை வரை பாலிஷ் செய்தேன்.
அன்று மாலை அந்த இரண்டு ஜோடி ஷூவையும் இருநூறு இருநூறு ரூபாய்க்கு விற்றுவிட்டேன்.
மறுநாள் அதை வைத்து நான்கு ஜோடி ஷூ வாங்கினேன்.
மறுபடி அதை விற்றேன்.
இப்படியே கிட்டத்தட்ட பத்து நாளில் இருபத்தைந்து ஆயிரம் வரை சம்பாதித்து விட்டேன்...".

அந்த நிருபர் மிகுந்த ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்தான்...

"அப்புறம்..?".

அவர் தொடர்ந்தார்.

"அப்புறம்... ஒரு நாள் மாலை என் மனைவியின் தந்தை இரண்டு கோடி சொத்தை வைத்துவிட்டு இறந்துவிட்டார். அது எனக்கு வந்து சேர்ந்தது. நான் பணக்காரனாகிவிட்டேன்...!".
.
.
.

Saturday, March 27, 2010

காக்கும் கடவுள்


ரமேஷ் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது திடீரென அந்தக் குரல் கேட்டது.

"நகராதே...!" .

ரமேஷ் அப்படியே நின்றுவிட்டான்.

அந்த விநாடி, அவன் நிற்கும் இடத்திற்குச் சற்று முன்னால் கட்டிகொண்டிருந்த கட்டிடத்திலிருந்து ஒரு செங்கல் விழுந்து உடைந்தது.

அந்தக் குரல் மட்டும் கேட்காவிட்டால் அவன் இந்நேரம் பரலோகம் போயிருப்பான்.

நன்றியை மனதுக்குள் சொல்லிக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்போது அந்தச் சாலையின் திருப்பத்தில் மறுபடி அந்தக் குரல் கேட்டது.

"நகராதே...!" .

ரமேஷ் மறுபடி அப்படியே நின்றுவிட்டான்.

அந்த விநாடி சாலையின் திருப்பத்தில் ஒரு கார் அவன் காலை உரசிக் கொண்டு போனது.

நிற்காமல் இருந்தால் அது இந்நேரம் அவனை அடித்துத் தூக்கியிருக்கும்.

ஆச்சர்யத்தில் அவன் கேட்டான்.

"கடவுளே... யார் நீ..?".

அந்தக் குரல் பதில் சொன்னது.

"நான் தான் உனது காக்கும் கடவுள். உனக்கு ஆபத்து வரும் போதெல்லாம் நான் குரல் கொடுப்பேன். அதை நீ கேட்டால் தப்பித்துக் கொள்ளலாம்....!".

நீண்ட பெருமூச்சுக்குப் பின்னர் ரமேஷ் கேட்டான். "எல்லாம் சரி... என் கல்யாணத்தப்ப நீ எங்க போயிருந்த...?"
.
.
.

Thursday, March 25, 2010

மின்மினிதேசத்தில் மின்மினிகள்


நான் என் மகன் டேனியை முதல்முதலாய் என் தந்தையின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அன்று மாலை அங்கிருந்த வயற்காட்டிற்குச் சென்ற போது தேன் கூட்டை தெரியாமல் கலைத்துவிட்டோம்.

கூட்டிலிருந்து கோபமாய்ப் புறப்பட்ட தேனிக்கள் எங்களைத் துரத்தித் துரத்திக் கொட்ட ஆரம்பிக்க நாங்கள் இருவரும் பம்ப் ரூமுக்குள் ஓடி ஒளிந்து கொண்டோம்.

பம்ப் ரூம் நல்ல இருட்டு.

பயந்தபடி ஒளிந்திருந்த நான் தேனிக்களின் சத்தம் ஓயக் காத்திருந்தேன்.

அப்போது சில மின்மினிப் பூச்சிகள் மெல்ல பம்ப் ரூமைப் பார்த்து பறந்து வருவதைப் பார்த்த என் மகன் டேனி கத்தினான்.

"அம்மா... அந்தப் பூச்சிகள் நம்மைத் தேடி டார்ச் அடித்து கொண்டு வருகின்றன... ஓடு..!"
.
.
.

Wednesday, March 24, 2010

அகம் ப்ரம்ஹாஸ்மி....


நாயின் நினைப்பு:

இந்த மனிதர்கள் எனக்கு உணவிடுகிறார்கள்.
அன்பு செலுத்துகிறார்கள்.
நான் வாழ அழகிய சிறிய வீட்டைக் கொடுத்திருக்கிறார்கள்.
என் மீது மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்.
எனக்கென்னவோ.........

இவர்கள் தான் கடவுள் என்று தோன்றுகிறது.


பூனையின் நினைப்பு:
இந்த மனிதர்கள் எனக்கு உணவிடுகிறார்கள்.
அன்பு செலுத்துகிறார்கள்.
நான் வாழ அழகிய சிறிய வீட்டைக் கொடுத்திருக்கிறார்கள்.
என் மீது மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்.
எனக்கென்னவோ..........

நான் தான் கடவுள் என்று தோன்றுகிறது.
.
.
.

Saturday, March 20, 2010

கார்த்தசாரதி


தினேஷ் சாப்ட்வேரில் பெரிய ஆள்.

நல்ல சம்பளம்.

எனவே, லோன் மற்றும் இன்னபிற சங்கதிகளுக்காக அப்பாவின் காரை மாற்றி ஒரு புதிய, பெரிய கார் வாங்கி அதில் ஞாயிற்றுக்கிழமை அவுட்டிங் போவதாய் முடிவும் ஆகியாயிற்று.

அன்று அதிகாலையிலேயே எல்லோரும் காரில் அவரவருக்கு பிடித்த சீட்டில் உட்கார்ந்து கொள்ள அப்பா மட்டும் தினேஷின் ட்ரைவர் சீட்டுக்குப் பின் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார்.

தினேஷ் அம்மாவிடம் சொன்னான்.

"அம்மா பார்த்தியா... சீன் மாறிப்போச்சு. அப்பா, இப்ப பின் சீட்டில் உட்கார்ந்துகிட்டு எனக்கு எப்படி டிரைவ் செய்யணும்னு சொல்லிக் கொடுக்கப்போறாரு... இல்லியா?"

"இல்லை...!" அப்பா தலையாட்டிவிட்டு சொன்னார்.

"இத்தனை நாள் நீ எப்படிப் செய்தாயோ... அதே மாதிரி பின் சீட்டில் உட்கார்ந்து ட்ரைவர் சீட்டை உதைத்துக் கொண்டே வரப்போறேன்...!" என்றார்.
.
.
.

கம்ப்யூட்டரே கதை எழுது


நான் ஒரு 'ஒரு பக்கக் கதை' எழுத்தாளன்.

பேனாவில் எழுதியே பழக்கப்பட்டவன்.

டைப்ரைட்டர்கூடப் பார்க்காத நான் ஒரு லேப்டாப் வாங்க ஆசைப்பட்டு வாங்கியும் விட்டேன்.

பிறகுதான் பிரச்சினைகளே ஆரம்பம்.

ஆன், ஆஃப் செய்யவெல்லாம் கற்றுக்கொண்டு தமிழில் டைப் செய்ய ஆரம்பித்தபின் வார்த்தைகளுக்கிடையே இடைவெளி விட என்ன செய்யவேண்டுமென்று மறந்துவிட்டது.

யாரிடமும் கேட்கலாமென்றால் கவுரவப் பிரச்சினை.

நேராய் லேப்டாப் கம்பெனியின் ஹெல்ப்லைனிற்கு போன் செய்தேன்.

இனிமையான குரலில் அந்தப் பக்கம் இருந்தவன் எனக்கு என்ன செய்ய வேண்டுமென்பதைத் தெளிவாய் இவ்வாறு கூறினான்.

"நீங்கள் ஒரு வார்த்தையை டைப் செய்த பிறகு அடுத்த வார்த்தைக்குப் போகும் முன்பு ஸ்பேஸ்பாரை அழுத்தவேண்டும்..!".

எனக்கோ ஸ்பேஸ்பார் எது என்பதே தெரியவில்லை.

நீண்ட நேர விளக்கத்திற்குப் பின்பு ஒருமாதிரி அதைக் கற்றுக் கொண்டுவிட்டேன்.

ஒரு வாரத்திற்குப் பின்பு, நான் கம்ப்யூட்டரை உபயோகிக்க உபயோகிக்க எனக்குப் பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே போனது.

நான் மறுபடி ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டு ஒரு இன்ஸ்ட்ரக்டரை அனுப்பக் கேட்டுக்கொண்டேன்.

வந்தவன் தெளிவாய் சொல்லிக் கொடுத்துக் கொண்டே போகும்போது எனக்கு ஒன்று புரிந்துவிட்டது. நான் சொன்னேன்.

"சார்.. நீங்க சொல்லிக் கொடுக்கறதுல எந்த உபயோகமும் இல்ல.எனக்கு ஒண்ணும் புரியவும் மாட்டேங்குது. எனக்கு கம்ப்யூட்டர் வேண்டாம்...!"

என் குழப்பத்தைப் புரிந்து கொண்ட அவன் என்னைத் தேற்றும்விதமாய்ச் சொன்னான்.

"சார் பயப்படாதீங்க... நீங்க எவ்வளவோ பரவாயில்லை. உங்களைவிட மோசமானவர்கள் எல்லாம் கம்ப்யூட்டரை யூஸ் பண்ணுகிறார்கள். போனவாரம் எங்களுக்கு ஒரு கஸ்டமர் 'ஸ்பேஸ்பார் எங்க இருக்கு'னு போன் பண்ணினார். அவரைவிடவா நீங்க மோசமாப் போயிட்டீங்க..!".
.
.
.

Friday, March 19, 2010

சின்னத் துண்டு... பெரிய துண்டு....


சின்ன வயதில் எனக்கும் என் தம்பிக்கும் எல்லா விஷயங்களிலும் போட்டி இருந்துகொண்டே இருக்கும்.

வீட்டில் அன்று நான் வெஜ்.

மீன் வறுவல் எங்க அம்மாவின் வெரி ஸ்பெஷல்.

அம்மா பொரித்துப் போட்டுக் கொண்டே இருக்க, நாங்கள் வெளுத்துக் கட்டிக் கொண்டே இருக்கிறோம்.

கடைசியில்தான் பிரச்னை வந்தது.

அம்மா கொண்டுவைத்த இரண்டு துண்டுகளில் ஒன்று நல்ல பெரிய நடுத்துண்டு... இன்னொன்று மிகச் சிறிய வால் துண்டு.

இதையெல்லாம் பார்த்து நான் கவனிக்கும் முன் அம்மா வைத்ததில் பெரிய நடுத் துண்டை தம்பி பாய்ந்து எடுத்துவிட்டான்.

ஏமாந்த கடுப்பில் இருந்த நான்... அவனுக்கு 'டேபிள் மேனர்ஸ்' கற்றுக் கொடுப்பதாய் நினைத்து, "தம்பி...சில நாகரிகங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் நீ... சாப்பிடும்போது இந்த மாதிரி நடந்து கொள்ளக் கூடாது. இதே நிலைமையில் நான் இருந்தால் பெரிய துண்டை எடுத்திருக்க மாட்டேன்... சின்னத் துண்டைத்தான் எடுத்திருப்பேன்..." என்றேன்.

தம்பியோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், "அதுதான் அங்கே இருக்கே...!" என்றான்.
.
.
.

Saturday, March 13, 2010

எலி சிறுசு... தொல்லை பெருசு...


வீட்டில் எலித்தொல்லை தாங்க முடியாத என் அலுவலக அக்கவுண்டன்ட் ஒருவர் தன் பக்கத்து டேபிள் நண்பரிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் ரொம்பவும் சீரியஸாய் என்ன பண்ணலாம் என்று ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்.

"வீட்ல எலி பொறி இருக்கா..?"

"இருக்கு..."

"அதுல ஒரு கருவாட்டுத் துண்ட மாட்டி வச்சிடு...!"

"நாங்க சைவம்பா... கருவாடெல்லாம் எங்க வீட்ல இருக்காது..."

"ஓகே... மசால் வடை ஒண்ண எடுத்து..."

"மசால் வடையெல்லாம் ஏதப்பா வீட்ல..."

"சரி விடு... தேங்காய் துண்டு ஒரு பீஸ் எடுத்து..."

"கொலஸ்ட்ரால் வந்ததுலருந்து எங்க வீட்ல நாங்க தேங்காயே யூஸ் பண்றதில்லையேப்பா..."

"அதுவும் இல்லியா... சரி, இந்த ரொட்டித் துண்ட தேங்காயெண்ணயில நனச்சு..."

அவர் முடிக்கவேயில்லை..."இல்லப்பா... என் மனைவிக்கு பிரட் பிடிக்காதுங்கறதால நான் வீட்டுக்கு பிரட்டே வாங்கமாட்டேம்பா...!"

மிகுந்த டயர்டாகிப் போன அவர் அந்த அக்கவுண்டன்டிடம் கேட்டார்.

"கருவாடு இல்ல. மசால்வடை இல்ல. தேங்காய் இல்ல. ரொட்டித் துண்டுகூட இல்ல.... அப்புறம் அந்தப் பாழாப்போன எலி என்னதான் பண்ணுது உன் வீட்ல...?".
.
.
.

Friday, March 12, 2010

தப்பைஸ்...


சொர்க்கத்தில் அன்று அறிவியல் அறிஞர்களின் விளையாட்டு நடந்து கொண்டிருந்தது.

அது ஒளிந்து கொள்பவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் 'ஐஸ்பாய்' விளையாட்டு.

ஐன்ஸ்டின், கிரகாம்பெல், மேடம் கியூரி, எடிசன், கலிலியோ, ரைட் பிரதர்ஸ் என இன்னும் நிறைய ஆட்கள்.

கிரகாம்பெல்தான் இப்போது தேடுபவர்.

எனவே மற்றவர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்து கொண்டனர்.

கிரகாம்பெல் ஒன்று, இரண்டு என நூறுவரை எண்ணிவிட்டு மற்றவர்களைத் தேட ஆரம்பித்தார்.

முதலில் சிக்கியது நியூட்டன்.

நியூட்டன் இப்போது சரியாய் ஒரு 'ஒரு மீட்டர் டைல்ஸ்' மீது நின்று கொண்டிருந்தார்.

கிரகாம்பெல் ஓடி வந்து "நியூட்டன் ஐஸ்பாய்" என்று சொல்ல...

... நியூட்டனோ, "தப்பைஸ்... நான் இப்போது ஒரு சதுர மீட்டரில் நிற்கிறேன். ஃபார்முலாப்படி ஒன் நியூட்டன் பர் மீட்டர் ஸ்கொயர் ஈஸ் ஈக்வல் டூ ஒன் பாஸ்கல். எனவே நான் பாஸ்கல்...!"எனறாராம்.
.
.
.

Thursday, March 11, 2010

டீலா நோ டீலா...


ஆஃபிஸில் ஒருவன் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

"நான் வெட்டிங் டே அன்னிக்கு என் மனைவிக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கிக் கொடுத்தேன். அதுக்கப்புறம் பத்து மாசமா அவ என் கூடப் பேசறதயே நிறுத்திட்டா...!".

ஆச்சர்யப்பட்டுப் போன அவன் நண்பன் கேட்டான்.

"ஏன்...? என்னாச்சு..?".

அவன் கூலாய் பதில் சொன்னான்.

"அதுதான் டீலே...!".
.
.
.

Monday, March 8, 2010

கடவுளின் விளையாட்டு



கதிர் ஒரு வைல்ட் போட்டோகிராபர்.

காட்டு மிருகங்களைப் போட்டோ எடுப்பது அவனது பொழுதுபோக்கு.

அவன் கடைசியாய் காட்டுக்கு போன போது ஒரு புலிக்குப் பக்கத்தில் போய்விட்டான்.

அது அவன் போன அந்த வேளையில் பயங்கர பசியில் உறுமிக்கொண்டிருந்தது.

கதிர் பயத்தில் மூச்சைப் பிடித்தபடி மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டான், "கடவுளே... நல்லா மாட்டிக்கிடேன்...!".

டக்கென்று வானிலிருந்து ஒரு வெளிச்சக் கீற்று அவன் மேல் அடித்தது. பிறகு மேலிருந்து கடவுளின் குரல் கேட்டது.

"இல்லை... நீ இன்னும் மாட்டிக் கொள்ளவில்லை. பார்... புலி அந்தப் பக்கமாய்த் திரும்பி நிற்கிறது. இப்போது நான் சொன்னதைச் செய்..!".

கதிர் மிக மெல்லிய குரலில் கேட்டான்.

"என்ன செய்யணும்..?".

அந்தக் குரல் பதில் சொன்னது.

"உன் காலடியில் இருக்கும் கல்லை எடு...!".

எடுத்தான்.

"அந்தப் புலியின் தலையைக் குறி பார்த்து அடி... யோசிக்காதே... சீக்கிரம்...!"

கதிர் யோசிக்கவே இல்லை. கடவுளின் ஆணை.

கல்லைப் புலியின் தலையில் மிகச் சரியாய் எறிந்தான்.

ஏற்கனவே கடும் பசியில் இருந்த புலி, இப்போது கடும் கோபத்துடன் கதிரைப் பார்த்துத் திரும்பி உறுமியபடி அவன் மேல் பாய்ந்தது.

மேலிருந்து மறுபடியும் அந்தக் குரல் கேட்டது.

"இப்பத்தான் நீ மாட்டிக்கிடே...!"
.
.
.

Tuesday, March 2, 2010

நரமாமிசம் சாப்பிடுபவரின் ஞாயிறு மெனு



அவர்கள் அப்பா, அம்மா, பையன் என மூவர்.


நரமாமிசம் சாப்பிடுபவர்கள்.


ஞாயிற்றுக்கிழமை நான்வெஜ் சாப்பிடுவது அவர்கள் மரபு.


எனவே, சனிக்கிழமை மாலை இரை தேடி அப்பா, பையன் ரெண்டு பேரும் வேட்டைக்குக் கிளம்பினார்கள்.


பொதுவாய் வேலை விட்டு குறுக்கு வழியாய் அவசரமாய் போக இந்த காட்டுப் பக்கம் வருபவர்கள் இவர்களிடம் மாட்டுவார்கள்.

இருவரும் மறைந்து ரொம்ப நேரம் காத்திருந்த பின் மிக ஒல்லியாய் ஒருவன் காட்டைக் கிராஸ் செய்தான்.

பையன் கேட்டான்.

"என்னப்பா... இவன் ஓகேவா..?"

அப்பா சொன்னார்.

"இவன் வேண்டாம்... நம்ம மூணு பேருக்கு இவன் பத்தமாட்டான். இரு வெயிட் பண்ணலாம்..."

கொஞ்ச நேரம் கழித்து ரொம்ம்ப குண்டாய் இன்னொருத்தன் கிராஸ் செய்ய பையன், "என்னப்பா... இவனப் போட்றலாமா..?" என்றான்.

"இவன் வேண்டாம்... இவனுக்கு கொழுப்பு ரொம்ப அதிகமா இருக்கும். நம்ம உடம்புக்கு ஆகாது. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்..."

இன்னும் சற்று கழித்து, மிக அழகாய்ச் சிக்கென்று ஒரு பெண்ணைப் பார்த்தார்கள்.

பையன், " என்னப்பா... இந்தப் பொண்ணுகிட்ட குறையொன்றுமில்லை... இவளத் தூக்கிடலாமா...?"

அப்பா சற்றே யோசித்தவாறு கூறினார்.

"இவளும் வேண்டாம்... ஆனா, இவளத் தூக்கிட்டு... நாளை லஞ்சுக்கு உங்க அம்மாவப் போட்றலாம்...!"

Monday, March 1, 2010

ராஜ வாழ்க்கை


ஜெயிலுக்குள் நுழைந்த கபாலி அறையில் ஏற்கனவே இருந்தவனைப் பார்த்துத் திகைத்து நின்றான்.

ரொம்ப காலம் ஜெயிலில் இருந்திருப்பான் போல.

கபாலி கேட்டான்.

"இன்னா தல... இன்னா செஞ்சுட்டு உள்ளுக்குள்ள வந்த..?"

அவன் பதில் சொன்னான்.

"என்னைப் பாத்தியா... எவ்வளவு மோசமா இருக்கேன். ஒரு காலத்தில நான் ராஜா மாதிரி வாழ்ந்தேன்னா நம்புவியா நீ...?"

கபாலி ஆச்சர்யப்பட்டுப் போய்க் கேட்டான், "எப்புடி... எப்புடிஎப்புடி..?"

"காலை ஜப்பான்ல காஃபி.. மாலை நியூயார்க்ல காபரே... இரவில் தாய்லாந்தில் ஜாலி... சொந்தமா கப்பல்... அழகான பொண்ணுக... அப்படி வாழ்ந்தவன் நான்...!"

கபாலிக்கு ஆச்சர்யம் இன்னும் அதிகமாகியது.

"அப்புறம்... அப்புறம் என்ன ஆச்சு...?"

அதற்கு அவன் சொன்னான்.

"கடைசில... அந்த ராஜாப்பய தன்னோட கிரெடிட் கார்ட் மிஸ்ஸாயிடுச்சுன்னு போலிஸ்ல புகார் கொடுத்திட்டான்...!"


பேய் பங்களா...


முத்து அந்தப் பெரிய பங்களாவை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினான்.

உண்மையில் அது பேய் பங்களா என்பதாலேயே அவ்வளவு குறைந்த விலைக்கு வந்தது.

அவன் முதன் முதலாய் அந்தப் பங்களாவினுள் நுழைந்ததோ இரவு பதினோரு மணி.

புது பங்களா வாங்கியதற்கு கொடுத்த பார்ட்டியில் குடித்த பியர் வேறு வயிற்றில் உருண்டு கொண்டிருந்தது.

அப்போதுதான் அந்தப் பேய் அவன் எதிரே வந்து நின்றது.

அது சந்திரமுகி போல் பயங்கரமாய் சிரித்து, "டாய்... நான் யார் தெரியுமா? நான் தான் இந்த பங்களாவில் முன்னூறு வருடமாய்ச் சுற்றிக் கொண்டிருக்கிறேன்..!"

முத்து மிகுந்த அசிரத்தையாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு கேட்டான்.

"அப்படின்னா... டாய்லெட் எங்க இருக்கு...? அத முதல்ல சொல்லு..!"