Saturday, November 30, 2013

சோமாலிய கடற்கொள்ளையன் சொறிமுத்து


ஸ்ரீராம் கப்பல் சம்பந்தமான வியாபாரம் செய்பவன்.

அன்று அவன் சோமாலியவிற்கு ஒரு விற்பனை குறித்துப் பேசுவதற்காக வந்திருந்தான்.

அந்தக் கம்பெனி கடற்கரை ஓரமாக இருந்ததால், தனது தங்கும் அறையையும் அங்கேயே பக்கத்தில் இருந்த ஹோட்டலில் போட்டிருந்தான் ஸ்ரீராம்.

அன்றிரவு போரடிக்கிறது என்று ஹோட்டல் பாருக்குப் போனபோதுதான், பாரில் அந்தக் கடற்கொள்ளையனை ஸ்ரீராம் சந்தித்தான்.

ஸ்ரீராம் ஒரு கடற்கொள்ளையனை சந்திப்பது அதுதான் முதல்முறை.

கட்டைக் காலும், கைகளில் ஹூக்கும், ஒரு கண்ணை மறைத்த பேட்சும் பார்க்கவே வித்தியாசமாயிருந்த, அவனைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவனிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான் ஸ்ரீராம்.

கடற்கொள்ளையன் நல்ல போதையில் இருந்ததால், குஷியாய் தன் பெயர் சொறிமுத்து என்றும்... தான் ஒரு மிகப் பெரிய கடற்கொள்ளையன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

ஸ்ரீராம் கேட்டான்,"அண்ணே... உங்க ஒரு கால் ஏன் இப்படிக் கட்டைல செஞ்சதா இருக்கு..?".

கேட்க ஆள் கிடைத்ததும் சொறிமுத்து சந்தோஷமாய் தனது சாகஸங்களை அவிழ்த்துவிடத் துவங்கினான்.

"சுறா மிகுந்த கடல்களில் நீச்சல் அடிப்பது கடற்கொள்ளையர்களின் வீரத்துக்கு அடையாளம். அப்படி ஒரு சமயத்தில் ஒரு சுறா என் காலைக் கவ்விக் கொண்டது. நான் அந்தச் சுறாவை அந்த இடத்திலேயே கொன்று தள்ளிவிட்டுத்தான் கப்பல் ஏறினேன். ஆனால், அதற்குள் அந்தச் சுறா என் காலை சிதைத்திருந்தது. அப்படித்தான் என் கால் போனது..!".

தன் கால் போனதைக்கூட அவ்வளவு சந்தோசமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான் சொறிமுத்து.

ஸ்ரீராம் அடுத்த சந்தேகத்தைக் கேட்டான்.

"அதுசரி.. உங்க கைக்கு என்ன ஆச்சு.? அதுல ஏன் இப்படி ஹூக் மாட்டிருக்கீங்க?".

சொறிமுத்து தனது அடுத்த சாகஸத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

"கடற்கொள்ளையர் வாழ்க்கைங்கறது ஆஃபீஸ் போய்ட்டு வர்றது மாதிரி அவ்வளவு ஈசியான ஜாப் கிடையாது. அவங்க வாழ்க்கைல போர் தவிர்க்கவே முடியாதது. அதுபோல ஒருமுறை சண்டையின் போது வாள் பிடித்துச் சண்டை போட்ட என் வலது கையை மணிக்கட்டோடு வெட்டிவிட்டான் எதிரி. அதற்கப்புறம் அவன் தலையைக் கழற்றி விட்டுத்தான் ஓய்ந்தேன். அதன் பிறகு, என் தலைவன் என் வீரத்தைப் பாராட்டி இந்த ஹூக்கை என் கைகளில் மாட்டிவிட்டான்...!" சொல்லிவிட்டு இடி இடியெனச் சிரித்தான் சொறிமுத்து.

ஸ்ரீராம் அவனது தைரியத்தை வியந்தபடியே அடுத்த கேள்வியைக் கேட்டான்.

"உங்க வலது கண்ணுல பேட்ச் போட்டு இருக்கீங்களே... அதுக்கு என்ன ஆச்சு..?".

ஸ்ரீராம் கேட்டதும் சொறிமுத்து சொன்னான்.

"ஸீகல்னு கடல்ல காக்கா மாதிரி ஒரு பறவை இருக்கு. அது ஒருசமயம் என் கண்ணுல ஆய் போயிடுச்சு..!".

ஸ்ரீராம் அரண்டு போனான்.

"என்ன சொல்றீங்க... ஒரு பறவையோட ஆய் கண்ணைப் போக்கற அளவுக்கு பாய்ஷனா என்ன..?".

ஸ்ரீராம் கேட்டதும், அதற்கு சொறிமுத்து மிகச்சோகமாய் பதில் சொன்னான்.

"அது அவ்வளவு பாய்ஷன் இல்லை. அது என்ன ஆச்சுனா, அந்த சம்பவம் நான் கையில ஹுக் மாட்டின அடுத்தநாளே நடந்தது..!".
.
.
.

Thursday, October 3, 2013

டேனி எனும் தன்வந்திரி நாராயணன்


டேனி படிப்பது கான்வெண்ட் என்பதால் வகுப்பில் தமிழ் பாடம் அவனுக்கு ரெண்டு வருடம் கழித்துத்தான் வந்தது.

உயிரெழுத்து, மெய்யெழுத்து எல்லாம் சொல்லிக் கொடுத்த பிறகு, அன்று அவனது தமிழாசிரியை அவன் வகுப்பில் உள்ள எல்லோரையும் அவரவர் பெயரை தமிழில் எழுத பெற்றோரிடம் கற்றுவரச் சொல்லியிருந்தார் போல.

டேனியை நாங்கள் கூப்பிடும் பெயர்தான் அதுவே தவிர, ஸ்கூல் ரெக்கார்ட் படி அவன் பெயர் தன்வந்திரி நாராயணன் என்பதால் அதை தமிழில் எழுதப் பழக்கிக் கொண்டிருந்தார் அவன் அப்பா.

கொஞ்சம் பெரிய பெயர் என்பதால் டேனி தனது முழுப் பெயரையும் எழுதக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான்

மறுநாள் காலை வரை டேனி தனது முழுப் பெயரையும் அவ்வப்போது சரியாயும் தவறாயும் மாறி மாறி எழுதிக் கொண்டிருந்தான்.

அதேபோல் அன்று வகுப்பிலும் நிறையப்பேர் தப்பும் தவறுமாய் எழுதியதால், அவனது தமிழாசிரியை எல்லோரையும் அவரவர் பெயரை பத்து முறை எழுத வைத்து விட்டார்கள் போல.

மாலை வீடு திரும்பிய டேனி படு கோபத்துடன் வந்தான்.

என்ன விஷயம் என்று கேட்டதும் தமிழ் டீச்சர் எல்லோரையும் தங்களது பெயரை பத்து முறை எழுத வைத்ததை சொல்லி, தன்வந்திரிநாராயணன் என பத்து முறை எழுதிய பேப்பரை கோபத்துடன் காட்டினான்.

நான் அவனை தமிழில் இன்னும் கவனமாய் எழுத வைக்க ஊக்கப்படுத்தும் விதமாய்  அவனிடம் மெல்ல ஆறுதலாய்ச் சொன்னேன்.

“சரியா எழுதாட்டி பனிஷ்மெண்ட் கொடுக்கத்தான செய்வாங்க. அதுக்காக டீச்சர் மேல கோபப்படலாமா.?”

கேட்டதும் கோபத்துடன் திரும்பியவன் கடுப்புடன் சொன்னான்.

“எனக்கொன்னும் டீச்சர் மேல கோபம் இல்ல. உங்க மேலதான். எம்பக்கத்துல உக்காந்திருந்த தீபா எவ்வளவு சீக்கிரம் அவ பேரை எழுதிட்டா தெரியுமா.?”.
.
.
.


Wednesday, September 18, 2013

நாளைக்கு மழ வருமுங் ஸாமீயோவ்…


டைரக்டர் முனிரத்தினத்தின் புதிய பட ஷூட்டிங் அந்த அடர்ந்த கானகத்தின் உள்ளே நடந்து கொண்டிருந்தது.

படத்தின் ஒரு காட்சிக்காக குடிசைகள் போட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஒரு ஆதிவாசி,"குடிசை போடாதீங்க ஸாமீ... நாளைக்குப் புயல் வருமுங்க..!" என்று சொல்லிவிட்டுப் போனார்.

எதற்கும் பார்ப்போமே என்று முனிரத்னம் வேலையை நிறுத்திவிட்டுப் பார்க்க…

சொன்னது போலவே, மறுநாள்  கடும்புயல் அடித்து... அது போட்டிருந்த ஒன்றிரண்டு குடிசையையும் அடித்து துவம்சம் செய்துவிட்டுப் போனது.

இன்னும் சில நாட்கள் போயிருக்கும்.

ஆற்றங்கரையோரம் கோயில் ஒன்று செட் போட்டுக் கொண்டிருக்கும்போது அந்தப்பக்கமாய் வந்த அதே ஆதிவாசி,"நாளைக்கு பெருமழை இருக்கு ஸாமீயோவ்...! ஆத்துல வெள்ளம் வந்தாலும் வருமுங்க.." என்று சொல்லிவிட்டுப் போனார்.

சொன்னதுபோல், மறுநாள் மழை கொளுத்த ஆரம்பித்தது.

 மூன்று நாளும் விடாது பெய்து, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
'ஆதிவாசிகள் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள் என்பது தெரியும். அதற்காக இப்படியா..?' டைரக்டர் முனிரத்தினம் மிரண்டு விட்டார்.

அவர் தன்னுடைய உதவியாளர்களை கூப்பிட்டு "இந்த மனுசனை புடிச்சு வச்சிக்கங்கப்பா. நம்ம ஷூட்டிங் முடியற வரைக்கும் நமக்கு யூஸ்ஃபுல்லா இருப்பான்...!".

டைரக்டர் சொன்னபடி, அந்த ஆதிவாசியும் மிகச்சரியாக காலநிலைகளைக் கணித்துச் சொல்ல… இவர்கள் அந்த ஆதிவாசி சொன்னதற்கேற்ப ப்ளான் செய்து ஷூட்டிங்கை விறுவிறுவென நடந்து கொண்டிருந்தார்கள்.

அன்று மேக்சிமம் ஸ்டாரின் கால்ஷீட். காட்சியோ உச்சபட்ச வெயில் வேண்டிய காட்சி. நாளைய சீதோஷ்ணம் எப்படியிருக்கும் எனத் தெரிந்துகொள்ள, டைரக்டர் அந்த ஆதிவாசியை அழைத்துக் கேட்டார்.

"நாளைக்கு கிளைமேட் எப்படியிருக்கும்..?".

டைரக்டர் கேட்டதும் அந்த ஆதிவாசி தன் தோள்களைக் குலுக்கியவாறே சொன்னார்.

"தெரியாதுங் ஸாமீ..!".

ஆதிவாசியின் பதிலால் ஆச்சர்யமாகிப்போன டைரக்டர் முனிரத்தினம் கேட்டார்.

"தெரியாதா... ஏன் தெரியாது..?".

கேட்ட டைரக்டரின் முகத்தைப் பார்த்து அப்பிராணியாய் அந்த ஆதிவாசி சொன்னார்.

"நேத்து ரேடியோப் பொட்டி கீழவிழுந்து ஒடஞ்சுபோச்சுங் ஸாமீயோவ்..!".
.
.
.


Sunday, September 8, 2013

குடி…. குடியைக் கெடுக்கும்.!


தில்லுதுரயின் மருமகன் ஒரு மகா குடிகாரன்.

டாஸ்மாக்கே கோயில் என வாழும் தமிழ்க் குடிமகன்களில் ஒருவன்.

எத்தனையோ முறை மகளும் மனைவியும் புகார் கூறியும் தில்லுதுர அதுகுறித்து தனது மருமகனிடம் பேசியதில்லை.

குடிப்பதினால் ஏற்படும் சங்கடங்களை உணரும்போது அவர் அதை நிறுத்திவிடுவார் என்பது தில்லுதுரயின் எண்ணம்.

ஆனால், தில்லுதுரயின் மனைவியோ இதை விடுவதாயில்லை.

மருமகனை எப்போதும் திட்டுவதும் கேவலமாய்ப் பேசுவதும் எனத் தொடர்ந்து கொண்டே இருந்தது.

தில்லுதுர மனைவியிடம் எவ்வளவோ சொல்லியும் அவர் எப்போதும் போல், தில்லுதுரயின் பேச்சை மதித்ததேயில்லை.

அன்றும் அப்படித்தான்.

தீபாவளிக்கோ எதற்கோ மகளுடன் வீட்டுக்கு வந்த மருமகன், மாலை வீட்டுக்கு வரும்போது குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று ஆரம்பித்த வக்குவாதம்… சண்டையாய் மாறி, கைகலப்பாகி கடைசியில் தில்லுதுரயின் மருமகன் தில்லுதுரயின் மனைவியைத் துப்பாக்கியால் சுட முயன்றதில் போய் முடிந்துவிட்டது.

நல்லவேளையாய், மருமகன் துப்பாக்கி குறி தவறியதால் மாமியார் உயிர் தப்பிவிட, அவர் மருமகன் மீது போலிசில் புகார் செய்தேயாக வேண்டும் என அலுவலகத்தில் தில்லுதுரயை உடனே வரச் சொன்னார்.

தில்லுதுர வீடு வந்து சேர்வதற்குள் நிலவரம் ஓரளவு தணிந்திருக்க, மனைவியை சமாதானப் படுத்திவிட்டு, மருமகனைக் கூப்பிட்டு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.

“இதோ பாருங்க… குடிக்கறது ஒரு மோசமான பழக்கம். அதனால, நீங்க என்னென்ன இழந்திருக்கீங்கனு யோசிச்சுப் பாருங்க. உங்க மனைவியின் அன்பு, குழந்தைகளுடனான விளையாட்டு, உறவுகளுடனான கொண்டாட்டம், உங்க மரியாதை இப்படி எல்லாத்தையும் இழந்திருக்கீங்க..”

மருமகன் தில்லுதுர சொல்வதின் அர்த்தம் ஓரளவு புரிந்து கவலையுடன் பார்க்க… தில்லுதுர தொடர்ந்தார்.

“இதையெல்லாம் தாண்டி இன்னிக்கு பொறுப்பான உங்க கையில் துப்பாக்கி தூக்கும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டது. ஆனா, நல்லா யோசிச்சுப் பாருங்க. இந்தக் குடியாலதான் இன்னிக்கு உங்க குறியும் தவறிப் போச்சு.! இதை உணர்ந்துகிட்டீங்கனா சரி.!”.
.
.
.Saturday, September 7, 2013

அமாவாசை பூஜை


பொதுவாய் அமாவாசை தினங்களில் சாமி கும்பிடுவதுடன் இறந்தவர்களுக்கும் படைப்பது எங்க வீட்டுப் பழக்கம்.

அன்றும் அப்படித்தான்.

சமையலை முடித்து பூஜைக்கான ஏற்பாடு செய்வதற்குள் அவரைப் பூக்கடைக்குப் போய் தேவையான பூ மற்றும் மாலைகளை வாங்கி வரச் சொல்லியிருந்தேன்.

வந்தவர் மாலைகளை சாமி படங்களுக்குப் போட ஆரம்பிக்க, டேனி - தனக்கும் மாலை வேண்டும்... நானும் படங்களுக்கு போடுவேன் -  என்று அவரிடம் வம்பு செய்ய ஆரம்பித்தான்.

தொந்தரவு தாங்காமல் டேனியிடமும் மலர்ச் சரங்களைக் கொடுத்து படங்களுக்கு வைக்கச் சொன்னேன்.

அளவாய் நான் வெட்டிக் கொடுக்க முதலில் அவன் கைக்கு எட்டிய சாமி படங்களில் அதை மாலை போல் மாட்டிவிட்டு வந்தான்.

அடுத்துக் கொடுத்த சரத்தை அவருடைய அப்பா படத்துக்கு மாலை போட்டுவிட்டு வந்தவன், அதற்கடுத்ததை அவர் அம்மா படத்துக்கு போடப் போக நான் தடுத்தேன்.

“டேனி… அப்பத்தா படத்துக்கு மாலை போடக்கூடாது.!”.

நான் சொன்னதும் குழப்பத்துடன் திரும்பியவன் கேட்டான்.

“ஏம்மா… அப்பத்தா படத்துக்கு போடக்கூடாது.? தாத்தா படத்துக்கு போட்டோமே.!”.

டேனி கேட்டதும் அவனுக்கு புரியும்படியாய் சொல்ல ஆரம்பித்தேன்.

“ஏன்னா… அப்பத்தா உயிரோட இருக்காங்கதான… அதனால அவங்க படத்துக்கு மாலை போடக்கூடாது. ஆனா… தாத்தா செத்துப் போயிட்டாங்கல்ல… அதனால அவங்க படத்துக்கு மாலை போடலாம்.!”.

சொன்னதும் ஓரளவு புரிந்த பார்வையோடு திரும்பிய டேனி, மறுபடி குழப்பத்தோடு தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“ஏம்மா… இப்ப சாமி படத்துக்கு மாலை போட்டமே… அப்ப சாமியும் செத்துப் போச்சாம்மா.?”.
 .
.
.


Wednesday, September 4, 2013

இறந்த பிறகு என்னவாய் ஆகிறோம்


ஜப்பானிய மன்னன் ஒருவனுக்கு திடீரென ஒரு தீவிர சந்தேகம் கிளம்பியது.

இந்த துறவிகள் ஏன் துறவறம் மேற்கொள்கிறார்கள்.? நாம் இறந்தால் என்ன ஆவோம் என சாஸ்திரங்கள் சொல்கிறது. ஆனால் இந்தத் துறவிகள் இறந்த பிறகு ஏதும் அதிசயங்கள் நடக்குமோ.? அதனால்தான் துறவறம் பூணுகிறார்களோ.?

தனது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள அவன் ஒரு சென் துறவி குடோ-வை அணுகினான்.

“தன்னை முழுவதும் உணரும் ஞானஒளி பெற்ற ஒரு ஞானகுரு தான் இறந்த பிறகு என்ன ஆகிறான்.?” என்று கேட்டான்.

துறவியோ எந்த உணர்ச்சியும் இன்றி மன்னனைப் பார்த்துக் கேட்டார்.

“அதை ஏன் மன்னா என்னிடம் கேட்கிறாய்.? அது எப்படி எனக்கு தெரியும்.?”.

மன்னன் இன்னும் அதிக குழப்பத்துடன் குருவிடம் கேட்டான்.

“உங்களுக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும். நீங்கள்தானே ஞானகுரு.?”.

மன்னன் கேட்டதும் குடோ அவனைப் பார்த்து புன்னகைத்தபடி பதில் சொன்னார்.

“ஆமாம்… நான் ஞானகுரு தான். ஆனால் நான் இன்னும் சாகவில்லையே.!”.
.
.
.


Monday, September 2, 2013

டேனி என்றொரு தமிழறிஞன்


டேனியின் வகுப்பில் தமிழ் கற்றுக் கொடுக்க ஆரம்பித்திருந்த காலம்.

அன்று டேனி தன் வகுப்புத் தோழர்கள் பெயரை தமிழில் எழுதி விளையாடிக் கொண்டிருந்தான்.

விடுமுறை தினம் என்பதால் நான் சமையலறையில் மும்முரமாய் இருக்க இவன் முன்னறையில் இருந்தான்.

ஒரு பத்து நிமிடம் போயிருக்கும்.

“அம்மா… அம்மா…” என்று கூப்பிட்ட படியே வந்தவன்,”அம்மா… றிவுக்கரசு-க்கு ஸ்பெல்லிங் என்ன.? பெரிய றி-யா சின்ன ரி-யா… எப்படி எழுதணும்.?”.

எனக்கு அவன் வகுப்பில் அறிவுக்கரசு என்றொருவன் படிப்பது தெரியும் என்றாலும், முதலில் அவன் கேட்டதை சொல்லிவிடுவோம் என்று யோசித்தபடியே, “பெரிய றி-தான் போடணும். அப்பறம் வ போட்டு வு. அடுத்து க். அப்பறம் க. அடுத்து ஒரு சின்ன ர. அப்பறம் ச-போட்டு சு.!”.

கவனமாய்க் கேட்டுக் கொண்டே இருந்தவன், “ஓக்கேம்மா.!” என்றபடி நகர நான் குறுக்கிட்டு அவனுக்கு புரிவதற்காக மெதுவாய்ச் சொன்னேன்.

“டேனி… ஆனா உன் ஃப்ரண்ட் பேரு றிவுக்கரசு இல்ல… அது அறிவுக்கரசு.. சோ… அறிவுக்கரசுனு எழுத நீ கேட்ட றிவுக்கரசு ஸ்பெல்லிங்குக்கு முன்ன அ போடணும்.!”

சொன்னதும் டேனி முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் சொன்னான்.

“அவன் பேர்லயே எனக்கு அ மட்டுந்தாம்மா தெரியும். அத முன்னாடியே நான் பேப்பர்ல எழுதிட்டேன்.!”.

.
.
.

Saturday, August 24, 2013

நூறு தர்பூசணிப் பழங்கள்


டேனிக்கு ஒரு ஐந்து வயதிருக்கும்.

அவனும் நானும் அவன் அப்பாவுடன் ஒரு ஞாயிறு மதியத்தில் பர்ச்சேஸ் முடித்து வரும்போது நடந்தது இது.

காலையிலேயே கிளம்பியது.

மளிகை, கொஞ்சம் துணிகள், அவனுக்கு பொம்மை என எல்லாம் வாங்கி முடிக்கையில் கிட்டத்தட்ட மதியமாகிவிட்டது.

திரும்பும் வழியில் வெயில் தாங்காமல் ஒரு சாலையோர தர்பூசணிக் கடையில் நிறுத்தினார் அவர்.

ரெகுலராய் இளநீர்க் கடையும் வைத்திருப்பவர் என்பதால் அந்தக் கடைக்காரர் டேனி அப்பாவுக்கும் பழக்கம் போல.

போனதுமே ”வாங்க சார்… சவுக்கியமா.?” என்றபடி, சுவையான பழமாய்த் தேர்ந்தெடுத்து மூன்று ப்ளேட்டுகளில் சின்னச் சின்னத் துண்டுகளாய் வெட்டி கொடுத்துப் போனார்.

நாங்கள் சாப்பிட, டேனிக்கு அந்த தர்பூசணீயின் சிவப்புக் கலரும், முக்கோணம் முக்கோணமான அதன் துண்டுகளும் அதன் சுவையும் பிடித்துப் போக வெயிலின் கொடுமையும் சேர ஆர்வமுடன் சாப்பிட ஆரம்பித்தான்.

ஒரு பிளேட்டையும் அவனே சாப்பிட்டதைப் பார்த்த அந்த கடைக்காரர் அவனுக்கு இன்னும் கொஞ்சம் பழத் துண்டுகளை வைத்தபடியே டேனியிடம் விளையாட்டாய்க் கேட்டார்.

“குட்டிப் பையனுக்கு தர்பூசணிப்பழம் புடிச்சிருக்கா.?”.

டேனி உற்சாகமாய்த் தலையாட்டினான்.

“ரொம்ப புடிச்சிருக்கு அங்கிள். செம டேஸ்ட்டு..!”.

கடைக்காரர் சிரித்தபடியே அடுத்து அவனிடம் கேட்டார்.

“இப்ப நூறு தர்பூசணிப் பழம் உனக்குத் தர்றேன். உன் அப்பாவையும் அம்மாவையும் எங்கிட்ட விட்டுட்டுப் போயிடறயா.?”.

நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் டேனியின் பதிலுக்காக அவன் முகத்தைப் பார்த்தபடி இருக்க, அவனோ ஒரு நிமிசம் பலமாய் யோசித்து விட்டு, “முடியாது அங்கிள்… எனக்கு என் அப்பா அம்மாதான் வேணும்.!” என்றான்.

கடைக்காரர் சிரித்தபடியே அவன் கன்னத்தை தட்டிவிட்டு, என் கணவரிடம், “பாசக்கார பயதான் சார்.” என்றபடி பணத்தை வாங்கிக் கொண்டார்.

திரும்பும் வழியில் அவன் அப்பா டேனியிடம் கேட்டார்.

“ஏண்டா… அந்த அங்கிள் ’நூறு பழம் தர்றேன்… அப்பா அம்மாவக் கொடுத்திடறியா..”னு கேட்டப்ப உடனே பதில் சொல்லாம என்ன யோசிச்ச.?”.

அவர் கேட்டதும் டேனி சிரித்தபடியே சொன்னான்.


“என்னால எப்படி நூறு தர்பூசணிப் பழத்தை கொண்டுபோக முடியும்னுதான் யோசிச்சுப் பார்த்தேன்.!”.
.
.

Thursday, August 22, 2013

இருபதாயிரம் ரூபாய் பொம்மை


டேனியின் ஸ்கூலில் ட்ரேடிங் பற்றி ஏதோ சொல்லிக் கொடுத்த தினம் அன்று.

அவன் சாயங்காலம் வீட்டுக்கு வந்ததுமே அவனுடைய அப்பாவிடம் தனக்குப் பிடிக்காத தன்னுடைய டைனோசர் பொம்மையை விற்க முயன்று கொண்டிருந்தான்.

“எவ்வளவு ரூபாய்டா இந்த பொம்மை.?”.

அப்பா கேட்டதும் டேனி கண்களை விரித்துக் கொண்டு சொன்னான்.

“ட்வெண்ட்டி தவ்சண்ட் ரூபீஸ்.!”.

அப்பா சிரித்தபடியே சொன்னார்.

“இருபதாயிரம் ரூபாய் ரொம்ப அதிகம்டா. இந்த பொம்மையோட விலையே அறுநூறு ரூபாய்தான்.!”.

சொன்னதும் டேனி சிரித்தபடியே சொன்னான்.

“அது இந்த பொம்மை புதுசா வாங்கினப்ப. இப்பத்தான் நம்ம வீட்டுல எல்லோர்கிட்டயும் பழகிடுச்சில்ல.!”.

”அப்பக் கூட இது ரொம்ப அதிகம்டா.!”.

சொல்லிவிட்டு அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட, டேனி வெளியே விளையாட ஓடிவிட்டான்.

ரெண்டொரு நாள் போயிருக்கும்.

திடீரென ஞாபகம் வந்து அவர் டேனியிடம் கேட்டார்.

“டேய்… அந்த டைனோசர் பொம்மை என்னாச்சு.?”.

அவர் கேட்டதும் டேனி வெற்றிக் களிப்புடன் சொன்னான்.

“அதை அன்னிக்கே பக்கத்து வீட்டு அர்னேஷ் கிட்ட இருபதாயிரத்துக்கு வித்துட்டேனே.!”.

கேட்டதும் ஆச்சர்யத்துடன் அவர் டேனியிடம் கேட்டார்.

“எப்படினு சொல்லு… புரியலயே.!”.

கேட்டதும் டேனி புன்னகையுடன் சொன்னான்.


“என் இருபதாயிரம் ரூபாய் பெரிய டைனோசர் பொம்மைய கொடுத்திட்டு, அவன்கிட்ட இருந்த பத்தாயிரம் ரூபாய் சின்ன கார் பொம்மை ரெண்டை வாங்கிட்டேன். சரிதான.?” என்றான்.
.
.
.

Saturday, August 17, 2013

பிரார்த்தனைசுற்றுலா வந்து வழி தவறிப் பாலைவனத்தில் மாட்டிக் கொண்ட இரு நண்பர்களுக்கும் எப்படித் தப்பிப்பதென்றே தெரியவில்லை.

ரெண்டு மூன்று நாட்களாக வெயிலிலும் இரவிலும் சோறு தண்ணியில்லாமல் நடந்து திரிந்தும் சாப்பிட குடிக்க ஒன்றும் கிடைக்காமல் ஓய்ந்து போனார்கள்.

மூன்றாம் நாள் மதியம் கிட்டத்தட்ட இருவரும் ஓய்ந்துபோன சமயம், 

தாகத்துக்கான தண்ணீருக்காய் தவித்து கடைசி முயற்சியாய் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய அமர்ந்தார்கள்.

முதல் நண்பன் மனமுருகி கிட்டத்தட்ட அரைமணி நேரம் பிரார்த்தனை செய்திருப்பான்.

இரண்டாவது நண்பன் ரெண்டு நிமிடம் கூட பிரார்த்தனை செய்திருக்க மாட்டான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர்கள் சோலையுடன் கூடிய ஒரு நீரூற்றைக் கண்டார்கள்.

நல்ல அமிர்தம் போன்ற நீரைக் குடித்து ஓய்வெடுத்ததும் அடுத்து உணவுக்காக பிரார்த்தனையை துவங்கினார்கள்.

வழக்கம் போல முதலாமவன் அரைமணி பிரார்த்தனை செய்ய, இரண்டாமவன் அரை நிமிடம்கூட பிரார்த்திருக்க மாட்டான்.

அடுத்த நிமிடம், அவர்கள் கண்முன்னே ஒரு அற்புத உணவுத் தட்டுடன் கூடிய டேபிள் தோன்ற அதையும் சாப்பிட்டு முடித்தார்கள்.

வயிறு நிறைந்ததும் முதலாமவனுக்கு இப்போது இரண்டாமவனைப் பார்த்து வெறுப்புத் தோன்ற ஆரம்பித்தது.

நாம் அரை மணி செய்யும் பிரார்த்தனையின் பலனை இவன் அரை நிமிடம்கூட செய்யாமல் அனுபவிக்கிறானே என கடுப்பு அதிகரித்தது.
கொஞ்ச நேரம் கழிந்தது.

இருவரும் வீட்டுக்குத் திரும்ப வழி கேட்டு இறைவனை நோக்கி பிரார்த்தித்தார்கள்.

வழக்கம்போலவே முதலாமவன் அரைமணிக்கு குறையாமல் பிராத்தித்து எழ, இரண்டாமவன் அரை நிமிடத்தில் தனது பிராத்தனையை முடித்துக் கொண்டான்.

பத்தே நிமிடத்தில் அவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல தேவதூதர்கள் வாகனத்துடன் வந்து நின்றார்கள்.

வாகனத்தைப் பார்த்ததும் பரவசத்துடன் முன்னால் ஓடிய முதலாமவன், வாகன ஓட்டியிடம் சொன்னான்.

“நான் கஷ்டப்பட்டு செய்த பிரார்த்தனையின் பலனை என் நண்பனும் அனுபவிக்கிறான். இந்தமுறை என் பிரார்த்தனையின் பலனாய் வந்த இந்த வண்டியில் அவனை நம்முடன் அழைத்துச் செல்ல வேண்டாம்.!”.

சொன்ன முதலாமவனைப் பார்த்து அந்த வாகன் ஓட்டி சிரித்தார்.

“இந்த வண்டி உண்மையில் உன் பிரார்த்தனையின் பலனாக வரவில்லை. உன் நண்பனின் பிரார்த்தனைக்காகவே வந்திருக்கிறது.!”.

கேட்ட முதலாமவன் அதிர்ந்து அந்த வாகன ஓட்டியைப் பார்த்து சந்தேகத்துடன் கேட்டான்.

“அது எப்படி… நான் அரைமணி பிரார்த்தனை செய்யும் போது அவன் அரை நிமிடம் கூட பிரார்த்திக்கவில்லையே.!”.

அவன் கேட்டதும் வாகன ஓட்டி சிரித்தபடியே சொன்னான்.

“ஆமாம். உன்னுடைய பிரார்த்தனைகள் எல்லாம் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றே இருந்தது. அதனால் நீளமாய் இருந்தது. ஆனால், உன் நண்பன் கடவுளிடம் என்ன கேட்டான் தெரியுமா.? ’எனக்கு எதுவும் செய்யும் முன்னர் என் நண்பனின் பிரார்த்தனையை நிறைவேற்று இறைவா.!’ என்பதே. அதனால் அவன் பிரார்த்தனை எப்போதும் சிறிதாகவே இருந்தது. கடவுள்  எப்போதும் ஒருவன் தனக்காக பிரார்த்திப்பதை விட அடுத்தவருக்காக பிரார்த்திப்பதையே உடனடியாய் நிறைவேற்றுவார். இப்போது புரிகிறதா.?”..

வாகன ஓட்டி கேட்க கேட்க முதலாமவன் தலை  வெட்கிக் கவிழ்ந்தது.
.
.
.

Friday, August 16, 2013

தில்லுதுர அட் தியானா க்ளாஸ்

தில்லுதுர படித்து முடித்து நீண்ட நாட்களாக வேலையின்றி வீட்டில் சும்மா இருந்த காலம் அது.

அப்பா எவ்வளவு திட்டியும் கண்டுகொள்ளாமல், சும்மா இருப்பதின் சுகத்தை முழுதாய் அனுபவித்தபடி தில்லுதுர ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.

திட்டித் திட்டி அலுத்துப்போய் இப்போதெல்லாம் அவர் தில்லுதுரயை திட்டுவதைக் கூட நிறுத்தி விட்டார்.

கொஞ்ச நாட்கள் போயிருக்கும்.

அன்று தில்லுதுரயின் அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், தில்லுதுரயின் அம்மா மகிழ்வுடன் அவரிடம் சொன்னார்.

”ஏங்க... விஷயம் தெரியுமா.! நம்ம பையனுக்கு நல்ல புத்தி வந்துடுச்சு.!”.

அவர் சொல்வதைக் கேட்ட அப்பா கோபத்துடன் கேட்டார்.

”ஏன்... உம்பையன் எங்கயும் வேலைக்குச் சேந்துட்டானா.?”.

அவர் கேட்டதும், தில்லுதுரயின் அம்மா சந்தோசத்துடன் சொன்னார்.

“இல்லீங்க... ஆனா அவனுக்கு நல்ல புத்தி வந்துடும். இன்னிலருந்து அவன் ஒரு தியான வகுப்பில சேர்ந்திருக்கான்.!”.

சொன்னதும் கடுப்புடன் திரும்பிய தில்லிதுரயின் அப்பா கோபமாய்ச் சொன்னார்.

“வெவரம் புரியாமப் பேசாத.! தியானம்ங்கறதே சும்மா இருக்கறதுதான். என்ன... இவ்வளவு காலம் தனியா சும்மா இருந்த உம்மகன் இனி கூட்டத்தோட சும்மா இருப்பான். அவ்வளவுதான் வித்தியாசம்.!”

அவர் சொல்லிக் கொண்டே போக, அதற்காக மகனுக்கு ரூபாய் ஐயாயிரம் கொடுத்த அதிர்ச்சியில் உறைந்திருந்தார் தில்லுதுரயின் அம்மா.
.
.
.


Tuesday, August 13, 2013

தில்லுதுர கம்பெனி ஆட்கள்

தில்லுதுரயின் அளவான சாஃப்ட்வேர் கம்பெனி, கடுமையான பொருளாதார சிக்கலில் தவித்த காலம் அது.

ஹெ.ஆர். டிபார்ட்மெண்ட்டில் இருந்து சிக்கலை சமாளிக்க ஆள் குறைப்பு செய்ய தில்லுதுரயிடம் அறிவுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

சொன்னபடி ஆட்களைக் குறைத்தாலும் தில்லுதுர வேறொரு யோசனையுடன் இருந்தார்.

ஹெச்.ஆர். ஹெட்டை கூப்பிட்டு தனது கம்பெனியின் சிறந்த இருபது பேரைத் தேர்ந்தெடுத்து... தமது செலவில், பத்துப் பேரை இங்கிலாந்துக்கும், பத்துப் பேரை அமெரிக்காவுக்கும் அனுப்பி வெவ்வேறு கம்பெனிகளில் வேலை செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னார்.

ஓரிரு வருடங்களில் தமது கம்பெனி சிக்கலில் இருந்து மீண்டதும் இவர்களது அனுபவத்தைப் பயன்படுத்தி, தனது கம்பெனியை மேம்படுத்தலாம் என்பது அவரது திட்டம்.

சொன்னபடி அந்த இருபது பேரையும் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் அனுப்பி வைக்கவும் செய்தார்கள்.

எண்ணிப் பதினைந்தே மாதம்.

தில்லுதுரயின் கம்பெனி மறுபடி பிஸினெஸில் சூடுபிடித்து பட்டையைக் கிளப்ப ஆரம்பித்திருந்தது.

திடீரென ஒருநாள் அந்த இருபது பேர் ஞாபகம் வந்து ஹெ.ஆர். ஹெட்டைக் கூப்பிட்டு விசாரித்தார் தில்லுதுர.

”வெளிநாடு பயிற்சி பெற்ற இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்.?”.

ஹெ.ஆர். சிரித்தபடி சொன்னார்.

“இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற அனைவரும் உண்மையிலேயே புத்திசாலிகள். அவர்கள்  எல்லோருக்கும் இப்போது நம் கம்பெனியில் மிக உயர்ந்த பதவிகளைக் கொடுத்தாயிற்று.!”.

தனது முடிவு சரியாய் அமைந்து விட்ட சந்தோஷத்துடன் தில்லுதுர ஹெச்.ஆரிடம் அடுத்துக் கேட்டார்.

“அந்த... அமெரிக்கா போனவர்கள் என்னாச்சு.?”.

தில்லுதுர கேட்டதும் ஹெச்.ஆர். முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் தில்லுதுரயிடம் சொன்னார்.

“அவய்ங்க ரொம்ப புத்திசாலிக.... திரும்பி வரமுடியாதுனு சொல்லிட்டு அமெரிக்காவுலயே செட்டிலாயிட்டானுக.!”.
.
.

Monday, August 12, 2013

கடவுளிடம் சென்ற காக்கை

டேனியின் வயது அப்போது நான்கு இருக்கும்.

அவனை கிண்டர்கார்டன் ஸ்கூலிலிருந்து சாயங்காலம் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தேன்.

வீடும் ஸ்கூலும் பக்கம்தான் என்பதால் நடந்தே அழைத்துச் செல்வதும் திரும்பக் கூட்டி வருவதும்தான் வழக்கம்.

அன்றும் அப்படித்தான் கூட்டி வந்து கொண்டிருந்தேன்.

சாலையோரம் கிடந்த கூழாங்கற்களை எடுப்பதும் எறிவதுமாக வந்து கொண்டிருந்தவன் திடீரென கலவரமாய்க் கூப்பிட்டான்.

“அம்மா... அங்க பாத்தியா.?”.

அவன் காட்டிய திசையில் சாலையோரத்தில் ஒரு காகம் இறந்து கிடந்தது.

கொஞ்சம் முன்புதான் இறந்திருக்க வேண்டும்.

பளபளப்பு மாறாமல் அப்படியே இருந்தது அந்தக் காகம்.

அதன் அருகே செல்ல விடாமல், டேனியை சற்றே என் பக்கமாய் இழுத்தபடி நடக்கையில் அவன் கேட்டான்.

“ஏம்மா அந்த காக்கா அப்பிடிக் கெடக்குது.?”.

அந்தக் காக்கை இறந்துவிட்டது என்பதை குழந்தைக்கு எப்படிச் சொல்வது என்று புரியாமல், நான் எல்லோரும் சொல்வதுபோல், “அது சாமிகிட்டப் போயிடுச்சுடாதங்கம்.!” என்றேன்.

நான் சொன்னதும் ஏதோ புரிந்தது போலவே யோசித்தபடி வந்த டேனி மறுபடி கேட்டான்.

"ஏம்மா... சாமி கிட்டப் போன காக்கா எப்பிடி இங்க கெடக்குது.? கருப்பா இருக்குனு புடிக்காம சாமி திரும்ப தூக்கி எறிஞ்சிட்டாரா.?”.
.
.
.

Saturday, August 10, 2013

டயட்டு

கணவர் காலில் அடிபட்டு படுத்திருக்கும் சமயம்.

ரெண்டு மூணு மாசம் படுத்திருக்க வேண்டியிருப்பதால் வெய்ட் ஏறாமல் இருக்க கண்டிப்பாக டயட் மெய்ண்டெய்ன் பண்ண டாக்டர் அட்வைஸ் செய்திருந்தார்கள்.

எனவே கலோரி கம்மியான, மசாலா குறைத்து, ஆயில் ஃப்ரைகள் எல்லாம் தவிர்த்து அவருக்கு செய்து வைத்துவிட்டு, நானும் டேனியும் வழக்கம் போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

அந்த ஞாயிறு அன்று மதியம் அப்படித்தான்.

டேனி காளான் ஃப்ரையும், காலி ஃப்ளவர் க்ரேவியும் கேட்க... அவனுக்கு அதை செய்துவிட்டு, அவருக்கு எப்பவும் போல் கோதுமை அரிசி சாதமும் வெண்டைக்காய் சாம்பாரும் பரிமாற ஆரம்பித்தேன்.

பாதி சாப்பிட்டிருப்பார்.

அதன் பிறகு நானும் டேனியும் சாப்பிட அமர்ந்தோம்.

சாப்பிடுக் கொண்டே திரும்பியவர், நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து விட்டு பரிதாபமாகக் கேட்டார்.

“டயட்லயே மிகக் கொடுமையான பார்ட் என்னனு தெரியுமா.?”

சாப்பிட்டுக் கொண்டே நிமிர்ந்து அவரை எதுவும் புரியாமல், “என்னது.?” என்று கேட்டபடி  நான் பார்க்க, அவர் தொடர்ந்து சொன்னார்.

“டயட்லயே கொடுமையான பகுதி... சாப்பிட என் தட்டுல என்ன இருக்குனு பாக்கறத விட, பக்கத்துல இருக்கறவங்க தட்டுல என்ன இருக்குனு பாத்துட்டு சும்மா இருக்கறதுதான்.!”.
.
.
.

Thursday, July 25, 2013

இரவுப் பிரார்த்தனை


டேனியின் ஸ்கூலில் புதிதாய் இரவு தூங்கும் முன்னர் பிரார்த்தனை செய்துவிட்டுத் தூங்கக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

இப்போதெல்லாம், அவன்  விடிவிளக்கின் வெளிச்சத்தில் படுக்கையில் அமர்ந்தபடி கண்களை மூடி, கைகளைக் கூப்பி முணுமுணுப்பது பார்க்க அவ்வளவு அழகாய் இருக்கும்.

அன்றும் அப்படித்தான்.

படுக்கைக்கு வந்ததும், இன்னும் ஓரிரு வாரத்தில் வரப்போகும் அவனது பிறந்த நாளுக்கான அவனது பிரார்த்தனையை எப்போதும் போல் இல்லாமல் சத்தமாய்க் கூறத் துவங்கிவிட்டான்.

"கடவுளே... எனக்கு இந்த பர்த்டேக்கு எப்படியாவது ஒரு ப்ளே-ஸ்டேஷன் கிடைக்க அருள்புரிவாய்... ஆண்டவா.!".

வழக்கமாய் முணுமுணுத்தபடி பிரார்த்தனை செய்யும் டேனி, இன்று சத்தமாய் பிரார்த்தனை செய்யவே நான் லேசான குழப்பத்துடன் அவனிடம் கேட்டேன்.

"எதுக்கு இவ்வளவு சத்தமா ப்ரே பண்ணற.? மெதுவாச் சொன்னாலே சாமிக்குக் கேட்கும் இல்லியா.?".

நான் கேட்டதும், என் பக்கமாய் திரும்பிய டேனி லேசான புன்னகையுடன் கூறினான்.

"ஆனா... அப்பாவுக்கு கேக்காதே.!".
.
.

Thursday, July 18, 2013

மரணக் காமெடி


சில சமயங்களில் நாம் எதிர்பாராத இடங்களில் நடக்கும் காமெடி நம் வயிறைப் பதம் பார்த்து விடும்.

இருக்கும் இடத்தின் நாகரிகம்கூடத் தெரியாமல் வாய்விட்டுச் சிரிக்க வைத்துவிடும்.

அப்படி ஒரு நிகழ்ச்சிதான் அன்று நடந்தது.

காலையில் கண்விழிக்கும் முன்பே அந்த போன் வந்தது.

கணியூர் சித்தப்பா இறந்துவிட்டாராம்.

அப்பாவின் வழியில் ஏதோ ஒரு முறையில் சித்தப்பாவான அவர் பயங்கரக் குடிகாரர்.

எந்நேரமும் சாராயக் கடையே கதியாய்க் கிடப்பார்.

தப்பித்தவறி வீட்டுக்கு வந்தாலோ, சித்தியுடன் சண்டையும் அடிதடியுமாய் இருக்கும் வீடு.

பையன்களையும் படிக்க வைக்கவில்லை.

அப்பேர்ப்பட்டவர்தான் இறந்தார் என்பதால் வருத்தம் ஒன்றும் இல்லை என்றாலும், தவிர்க்க முடியாமல் மரணத்திற்குப் போக வேண்டியதாகி விட்டது.

கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு, கணவருடன் காலையிலேயே அங்கே போய்விட்டேன்.

கிராமத்தில் மரணம் விழுந்த வீடு எப்படி இருக்குமோ... அந்த இலக்கணம் மாறாமல் இருந்தது.

உடம்பு சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இறந்ததினால் அன்றே ஆகவேண்டியதை செய்துவிடுவது என்று முடிவு செய்திருந்தார்கள்.

உறவினர் எல்லாம் மாலைக்குள் வந்துவிட... இறுதிப் பயணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தது.

வீட்டுக்கு சற்று முன்னால் ஒரு மரப் பெஞ்சில் சித்தப்பாவின் உடலைக் குளிப்பாட்ட எடுத்துப்போன போதுதான் நடந்தது அது.

யாரோ ஊர்ப் பெரியவர்... சித்தப்பாவின் நண்பராயிருக்க வேண்டும்...
இறந்தவரைச் சிறப்பிக்க வேண்டுமென்று நினைத்து, எல்லோருடைய காதுபட சித்தப்பாவைப் பற்றி பெருமையாய்ப் பேசிக் கொண்டு இருந்தார்.

"என் நண்பன் ஒரு மகா மேதை. அவன்  எங்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாய் வாழ்ந்து முடிச்சவன். வாழும் காலத்தில் அவனுடைய கடமைகளை சரியாய்ச் செஞ்சு முடிச்சுட்டான். ஓரு நல்ல கணவனாய், ஒரு நல்ல தகப்பனாய், நல்ல மனிதனாய்... மிக நல்லபடி தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சிருக்கான் என் நண்பன்...!".

அந்தப் பெரியவர் பேசிக்கொண்டே இருக்கையில், வீட்டுக்குளிருந்த என் சித்தி ஆற்றாமையுடன் மூக்கைச் சிந்தியபடி  தன் மூத்த மகனை கூப்பிட்டு அழுதபடியே சொன்னார்.

"டேய் கொமாரு... எதுக்கும் ஒருவாட்டி உங்க அப்பாவைத்தான் குளிப்பாட்டறாங்களான்னு பாத்துட்டு வந்திருடா..!".
.
.
.

Thursday, June 20, 2013

என்ன கொடும சார் இது.?டேனிக்கு காய்ச்சல் என்று பக்கத்திலிருந்த க்ளினிக் ஒன்றிற்கு போயிருந்த நேரம்.

க்ளினிக் என்றால் கொஞ்சம் பெரிய க்ளினிக்.

குழந்தைகள் டாக்டரில் இவர் கொஞ்சம் கைராசி என்பதால் எப்போதுமே அங்கு கூட்டம் வேறு அதிகமாய் இருக்கும்.

ரிசப்ஷனில் இருந்த வடக்கிந்தியப் பையனிடம் பெயர் சொல்லவே வெய்ட் பண்ண வேண்டிய அளவு கூட்டம்.

எனக்கு முன்னால் இருந்த பெரியவர் அந்த ரிசப்ஷனில் இருந்த அந்த ஹிந்திக்காரப் பையனிடம் "நேரமாகுமா சாமி.?" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்தப் பையனோ இவரை கொஞ்சமும் கவனிக்காமல் தான் வைத்திருந்த நோட்டில் குனிந்தபடியே எழுதிக் கொண்டிருக்க, நான் பெரியவருக்காக அந்தப் பையனிடம் அதை ஆங்கிலத்தில் கேட்டேன்.

அவனோ முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல், "சீட்ல வெய்ட் பண்ணச் சொல்லுங்க. அவர் டர்ன் வரும்போது கூப்பிடறேன்..." என்றவன் டேனியின் பெயரைக் கேட்டு எழுதிக் கொண்டான்.

நான் பெரியவரிடம், முன்னாடி இருந்த வரிசைச் சேர்களில் உட்காரச் சொல்லிவிட்டு... நானும் பக்கத்து சீட்டிலேயே டேனியுடன் அமர்ந்து கொண்டேன்.

பெரியவர் அவ்வப்போது சந்தேகத்துடன், "அவன் என் பேரையே கேக்கலையே..!" என்று சந்தேகத்துடன் கேட்டுக் கொண்டிருக்க, "கேக்கலைனா என்னங்க... அதோ அந்தப் பெரியவர் உங்களுக்கு முன்னதான் பேரு சொன்னாரு. அவருக்கு அடுத்து நீங்க போயிடுங்க.!" என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில், ரிசப்ஷனில் முன்னால் சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த டாம் அன்ட் ஜெர்ரியில் டேனி லயித்துப் போக, நான் வருகிறவர் போகிறவர்களையும், ரிசப்ஷன் ஹிந்திக்காரப் பையனின் தப்புத்தப்பான தமிழ்ப் பேச்சையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

பெரியவரோ நேரமாய்க் கொண்டிருக்கிறதே என்ற கடுப்புடன் நெளிந்து கொண்டிருந்தார்.

ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும்.

ரிசப்ஷன் ஹிந்தி, "பழனிச்சாமி... உள்ள போங்க!" என்று குரல் கொடுக்க, பெரியவருக்கு முன்னால் பெயர் சொன்னவர் எழுந்து போனார்.

நான் அடுத்து பெரியவரைக் கூப்பிடுகிறாரா என்று நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

உள்ளே போன அந்த பழனிச்சாமி என்பவர் வெளியே வந்ததும், அந்த ஹிந்திக்காரப் பையன் பெரியவரைப் பார்த்து குரல் கொடுத்தான்.

"ஏனுங்க... நேரமாகுமா சாமி... உள்ள போங்க.!".
.
.
.

Wednesday, June 12, 2013

தில்லுதுரயும் டீக்கடை நாயரும்ஞாயிற்றுக்கிழமை என்பதால்... நண்பரைப் பார்க்க அன்று அவரது ரூமுக்கு வந்திருந்தார் தில்லுதுர.

அவரோ அப்போதுதான் எழுந்திருந்தார் போலும்.

தில்லுதுரயைப் பார்த்ததும், "வாடா... நாயர்கடைல ஒரு டீ சாப்ட்டுட்டு வரலாம்.!" என்று தில்லுதுரயையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

தெருமுனையிலேயே இருந்தது நாயர்கடை.

வாசலில் இருந்த பெஞ்சில் கிடந்த பேப்பரை எடுத்தபடியே உட்கார்ந்த தில்லுதுரயின் நண்பர், " நாயர் எனக்கொரு டீ.!" என்றவர் தில்லுதுரயின் பக்கம் திரும்பி, "உனக்கென்னடா வேணும்.... டீயா காஃபியா.?" என்றார்.

தெருமுனைக் கடையின் சுத்தத்தில் அவ்வளவாய் திருப்தியில்லாமல் அசுவாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தில்லுதுர நாயரிடமே திரும்பி, "எனக்கும் டீயே போட்ருங்க..!" என்றவர்  தொடர்ந்து, "அப்டியே... கொஞ்சம் டம்ளரைக் கழுவிப் போட்ருங்க நாயரே.!" என்றபடி தானும் ஒரு பேப்பரை எடுத்து புரட்டலானார்.

ஒன்றுமே பேசாமல் டீயைப் போட ஆரம்பித்த நாயர், ரெண்டொரு பக்கம் தலைப்புகளை மேய்வதற்குள்ளேயே  இரண்டு டம்ளர்களுடன் அவர்களிடம் வந்தவர் கேட்டார்.

"தம்பி... இதோ நீங்க ஆர்டர் பண்ண டீ. இதுல யாரு கழுவின டம்ளர்ல கேட்டது.?".
.
.
.

Thursday, June 6, 2013

சர்க்கஸ்நான் என்னுடைய பத்தாவது படிக்கும்போது நடந்தது இது.

அன்று என் அப்பா என்னை சர்க்கஸ் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார்.

எங்க வீட்டிலிருந்து  சர்க்கஸ் நடக்கும் இடத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரமும், என்னை சைக்கிளில் டபிள்ஸ் வைத்து மிதித்து சென்றிருந்தார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்க்கஸுக்கு நல்ல கூட்டம் இருந்தது.

நானும் என் அப்பாவும் க்யூவில் நின்று மெல்ல மெல்ல நகர்ந்து போன போதுதான் கவனித்தேன்.

எங்களுக்கு முன்னால் நின்றிருந்த குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பமாய் இருந்தது.

அப்பா, அம்மா மற்றும் பதினைந்து வயதுக்குடபட்ட ஆறு குழந்தைகள் என இருந்தது அந்தக் குடும்பம்.

கிராமத்தை சேர்ந்தவர்கள் போலவும் இல்லை அவர்கள்.

பார்க்கவும் அவ்வளவு வசதியாய் தெரியாவிட்டாலும்... குழந்தைகள் ஆறும் சுத்தமான உடை உடுத்தி வரிசையாய் இரண்டிரண்டு குழந்தைகளாய் கையைக் கோர்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தன.

அந்த அப்பாவும் அம்மாவும் கூட படித்தவர்கள் போலத் தெரியவில்லை என்றாலும், அவர்களும் தங்கள் குழந்தைகள் போலவே கைகளைக் கோர்த்துக் கொண்டு நின்றிருந்தது, அவர்கள் எவ்வளவு அன்பான தம்பதிகள் என சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

அவைகளின் பேச்சில் அந்த சர்க்கஸை சுற்றி கட்டியிருந்த பேனர்களும், அன்று பார்க்கப் போகும் மிருகங்களும், அவைகளின் சாகசங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளும் தெறித்துக் கொண்டிருந்தன.

அந்த அப்பா அம்மா முகங்களிலும் தமது குழந்தைகளுக்கு ஒரு சந்தோஷத்தைத் தரப்போகும் ஒளியாய் மகிழ்வு தெரிந்து கொண்டிருந்தது.

வரிசை மெல்ல நகர்ந்து, இப்போது எங்களுக்கும் டிக்கெட் கவுன்டருக்கும் இடையே அந்தக் குடும்பம் மட்டுமே இருந்தது.

டிக்கெட் கவுன்டர் அருகே சென்றதும் அந்தக் குழந்தைகளின் அப்பா மெல்லக் குனிந்து, "ஆறு குழந்தைகள் ரெண்டு பெரியவங்க.." என்று சொன்னதும், கவுன்டரில் இருந்தவர் டிக்கெட்டை கிழித்தவாறே தொகையைச் சொன்னார்.

தொகையைச் சொன்னதுதான் தாமதம்... அந்த அப்பாவின் முகம் அப்படியே கறுத்துப் போனது.

மனைவியை பிடித்திருந்த கைகள் தன் பிடியை விட்டு பாக்கெட்டைத் தொட்டது.

சந்தோஷம் எல்லாம் வடிந்துபோக, கம்மிய குரலில் டிக்கெட் கவுன்டரில் இருந்தவரிடம் மறுபடி கேட்டார்.

"சார்... எவ்ளோ சொன்னீங்க.!".

அவர் மறுபடி தொகையைச் சொல்ல, அந்தக் குழந்தைகளின் அப்பாவின் முகம் கிட்டத்தட்ட செத்தே விட்டது.

அவரிடம் கையில் அவ்வளவு தொகை இல்லை போலும்.

அந்தக் குழந்தைகளோ இவை எதையும் கவனிக்காமல் சர்க்கஸ் போஸ்டரில் விலங்குகள் செய்யும் குறும்பு ஃபோட்டோக்களை பற்றி தங்களுக்குள் ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தன.

அவர் என்ன செய்யப் போகிறார் என்று நானும் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவர் தன் குழந்தைகளிடம் விஷயத்தைச் சொல்ல திரும்பும் அந்த விநாடியில்... என் அப்பா ஒரு காரியம் செய்தார்.

தன் பாக்கெட்டில் இருந்த நூறு ரூபாயை எடுத்துக் கீழே போட்டு, அதை எடுப்பதுபோல் எடுத்து அந்தக் குழந்தைகளின் அப்பாவிடம், "சார்... இது உங்க நூறு ரூபாயா பாருங்க... கீழ போட்டுட்டீங்க போல.!" என்று நீட்டினார்.

அவருக்கும் என் அப்பா செய்த காரியம் விளங்கிவிட்டது.

"அண்ணே... என்னண்ணே..." என்றவாறு தயக்கத்துடன் நின்ற அவரின் கைகளைப் பிடித்து என் அப்பா, "புடிங்க சார்... ஒன்னும் யோசிக்காதீங்க. குழந்தைகளை கூட்டிட்டுப் போங்க..!" என்று ரூபாயை அழுத்த..

"ரொம்ப நன்றிங்க அண்ணா.. இதுக்கு நான் என்ன செய்யறதுனே தெரியல..!" என்ற போது அவருடைய கண்கள் கலங்கியே விட்டது.

கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தைகளுடன் சந்தோஷமாய் சர்க்கஸ் கூடாரத்துக்குள் நுழைவதை பார்க்கும்போது... என் அப்பா எவ்வளவு பெரிய மனிதர் என்று எனக்கு மிகப் பெருமையே தோன்றியது.

ஒன்றை இப்போது நான் மறக்காமல் கூறியே ஆக வேண்டும்.

அன்று என் அப்பாவிடம் இருந்ததே அந்த நூறு ரூபாய் மட்டுமே என்பதால்... அன்று நாங்கள் இருவரும் சர்க்கஸ் பார்க்காமலேதான் வீடு திரும்பினோம்.!.
.
.
.
# எப்போதோ படிச்ச கதை

Tuesday, June 4, 2013

நமஸ்காரா டேனிஅது திருமணத்திற்குப் பிறகு நானும் டேனியும் கோவையில் இருக்க, அவர் மட்டும் மைசூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம்.

ஏதோ ஒரு சமயத்தில் மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்று என்னையும் அவனையும் மைசூரு வரச் சொல்லியிருந்தார் அவர்.

அருமையான ஊர்... அட்டகாசமான க்ளைமேட்.

எல்லாவற்றிற்கும் மேலாக நாம் பேப்பரில் படிப்பது போலெல்லாம் இல்லாமல் அன்பைப் பொழியும் மக்கள்.

போன முதல் நாள் காலை, வெளியே ஊர் சுற்றிப் பார்க்க கிளம்புவதற்கு முன், அவர் ஹவுஸ் ஓனரம்மாவை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது வீட்டுக்குள் இருந்த ஹவுஸ் ஓனரின் குழந்தை ஷன்மதியை அவர்கள் டேனிக்கு அறிமுகம் செய்ய, அது அழகாய் டேனியைப் பார்த்து புன்னகைத்தபடி, "நமஸ்காரா..!" என்றது.

டேனி அதுவரை நமஸ்காரா என்ற வார்த்தையை கேட்டதில்லை என்பதால், அது அந்தக் குழந்தையின் பெயராய் இருக்குமோ என்றா குழப்பத்துடன் அந்தக் குழந்தையைப் பார்த்து, "நான் டேனி" என்றான்.

பேச்சு சுவாரஸ்யத்தில் யாரும் அதைக் கவனிக்கவில்லை என்றாலும், வெளியே செல்லும்போது டேனிக்கு நான் நமஸ்காரா என்றால், வணக்கம் குட்மார்னிங் போல ஒரு வார்த்தை என்பதை மெல்ல சொல்லிக் கொடுத்தேன்.

டேனிக்கும் புரிந்தது போலத்தான் இருந்தது.

மறுநாள் நாங்கள் பார்க்குக்கு கிளாம்பிக் கொண்டிருந்த சமயம்... வாசலில் ஹவுஸ் ஓனர் குழந்தை ஷன்மதியைப் பார்த்ததும் டேனி அவளிடம் ஓடினான்.

விளையாடிக் கொண்டிருந்த அவள் தோள்களைத் தொட்டு அவள் திரும்பியதும் அழகாய், "ஷன்மதி... நமஸ்காரா.!" என்றான்.

டேனி சொன்னதும் ஒரு விநாடி யோசித்த ஷன்மதி புன்னகையுடன் சிரித்தபடி அவனிடம் சொன்னாள்.

"நான் டேனி.!".
.
.
.

Wednesday, May 29, 2013

புரட்சி நடிகன் டேனிடேனியின் பள்ளியின் ஆண்டு விழா ஏற்பாடுகள் களைகட்டிக் கொண்டிருந்த நேரம்.

டேனியும் ஏதோ நாடகத்தில் நடிக்க செலக்ட் ஆகியிருப்பதாகச் சொன்னான்.

என்ன நாடகம், என்ன வேடம் என்பதெல்லாம் க்ளாஸ் டீச்சர் இரண்டொரு நாளில் சொல்வதாகச் சொல்லியிருந்ததும் அன்று தெரிந்து விட்டது.

நாடகத்தில் டேனிக்கு ஒரு காலேஜ் ப்ரொஃபசரின் கணவன் வேடம்.

அவர்களுக்கும் நாடகத்தில் ஒரேயொரு ஆண் குழந்தை.

கிட்டத்தட்ட நாடகத்தின் அமைப்பு எங்கள் வீட்டைப் போலவே தோன்ற, ஆச்சர்யத்துடன் ஓடிப்போய் என் கணவரிடம் சொன்னேன்.

"ஏங்க விஷயம் தெரியுமா.? டேனி நடிக்கற ஸ்கூல் நாடகத்துல அவன் ஒரு காலேஜ் ப்ரொஃபஸர் ஹஸ்பெண்டா நடிக்கறானம்.!".

மொபைலில் ஏதையோ நோண்டிக் கொண்டிருந்த என் கணவர் அசுவாரஸ்யத்துடன் நிமிர்ந்து என்னைப் பார்த்துக் கேட்டார்.

"ஏன்... நாடகத்துல எதும் டயலாக் பேசற மாதிரி வேஷமில்லையாமா.?".
.
.
.

Tuesday, May 28, 2013

டேனியும் சிகரெட்டும்என் எதிர் வீட்டில் குடியிருக்கும் என்ஜினியர் பையன் ஒரு செய்ன் ஸ்மோக்கர்.

அந்தப் பையன் எப்போது சிகரெட் பிடிக்கும் போது பார்த்தாலும் டேனி, "அங்கிள்... சிகரெட் ஸ்மோக்கிங் இஸ் இன்ஜூரியஸ் ட்டூ ஹெல்த்.!" என்று சொல்லிக் கொண்டே இருப்பான்.

ஆனால் அந்தப் பையனும் சிரித்துக் கொண்டே, "விட்டுடறண்டா தம்பி..." என்று கன்னத்தை தட்டிவிட்டுச் செல்வான்.

ஆனால் விட்டபாடுதான் இல்லை.

அன்று காலையிலும் அப்படித்தான்... கடைக்குப் போய் வரும்போது டேனி கேட்டில் நின்ற அவரைப் பார்த்துக் கேட்டான்.

"ஏன் அங்கிள்... ட்டூ த்ரீ டேஸ் நீங்க சிகரெட் புடிக்கவேயில்லையே. விட்டுட்டீங்களா.?"

அந்தப் பையன் சிரித்துக் கொண்டே, "இல்லடா தம்பி... நாலஞ்சு நாளா அங்கிள்க்கு சளி.... அதனாலதான்.! உடம்பு சரியில்லைனா அங்கிள் சிகரெட் புடிக்க மாட்டேன்.!" என்றான்.

அந்தப் பையன் சொன்னதை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்த டேனி அடுத்துச் சொன்னான்.

"அப்ப... அங்கிள்க்கு ஒடம்பு சரியில்லாம இருந்தீங்கனாத்தான், ரொம்ப நாள் ஆரோக்யமா இருப்பீங்க போல.!".
.
.
.

Monday, May 27, 2013

தில்லுதுரயின் புது வீடு


தில்லுதுர அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த நேரம்.

அன்று திங்கட்கிழமை காலை.

அவர் தனது மேனேஜரைப் பார்க்க அவர் அறைக் கதவைத் தட்டி அனுமதி பெற்றுவிட்டு உள்ளே நுழைந்தார்.

ஏதோ ஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்த மேனேஜர் நிமிர்ந்தே பார்க்காமல், "என்ன வேணும்..?" என்று  கடுப்புடன் கேட்டார்.

தில்லுதுர தயக்கத்துடன், "சா.. சார்...!".

மேனேஜர் கடுப்பு கொஞ்சமும் குறையாமல் கேட்டார்.

"சொல்லுப்பா... என்ன விஷயம்.?".

"சார்... நேத்துதான் பழைய வீட்டை காலி பண்ணிட்டு புது வீட்டுக்கு வந்தோம்..!".

தில்லுதுர தொடர்வதற்குள் ஃபைலை விட்டு தலையை மேலே தூக்கிய மேனேஜர் கோபமாய் கேட்டார்.

"அதுக்கு.?".

தில்லுதுர இப்போது மேலும் தயக்கமாய் தொடர்ந்தார்.

"இ.. இல்ல சார். வீட்டுல ஏகப்பட்ட சாமானு. எல்லாம் போட்டது போட்ட படி இருக்கு. மனைவி ஒத்தை ஆளு. எல்லாத்தையும் தனியா எடுத்து வைக்க முடியாதுனு சொல்லி கண்டிப்பா நானும் ஹெல்ப் பண்ணனும்னு சொன்னாங்க..!".

தில்லுதுர பேசப் பேச இடைமறித்த மேனேஜர் கோபமாய் சொன்னார்.

"இங்க பாருப்பா... ஏற்கனவே இந்தவாரம் ஆஃபிஸ்ல லீவ் ஜாஸ்தி. இதுல நீ வேற லீவு கேக்காத. கண்டிப்பா குடுக்க முடியாது... சாரி.!".

சொல்லிவிட்டு மேனேஜர் தலையைக் குனிந்து கொண்டதும்... தில்லுதுர சந்தோஷமாய் மேனேஜரிடம் சொன்னான்.

"சார்... நீங்க இந்த விசயத்துல எனக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவீங்கனு தெரியும் சார்... ரொம்பத் தேங்க்ஸ் சார்.!".
.
.
.

Thursday, May 9, 2013

தில்லுதுர டிஸ்சார்ஜ் ஆகிறார்
அப்போதுதான் லீவு முடிந்து ட்யூட்டிக்கு வந்த ட்ரெய்னிங் நர்ஸ் ரெஜினாவிடம் 44ம் நம்பர் ரூமிலிருந்த பேஷண்டை டிஸ்சார்ஜ் செய்யும் வேலையைப் பார்க்கச் சொல்லியிருந்தார்கள்.

அந்த ஹாஸ்பிடலில் டிஸ்சார்ஜ் செய்யும் போது வாசல் வரை வீல் சேரில் வைத்து வெளியே கொண்டு விடுவதுதான் ரூல்ஸ்.

நர்ஸ் ரெஜினா நுழைந்த போது வார்ட் ரூமில் தில்லுதுர கட்டிலில் நல்ல உடல்நலத்துடன் உட்கார்ந்திருந்தார்.

ஹாஸ்பிடல் ட்ரஸ் எல்லாவற்றையும் அப்போதுதான் மாற்றி இருப்பார் போல.

நார்மல் உடையில் ட்ரஸ் எல்லாம் பேக் செய்து காலடியில் சூட்கேஸோடு புறப்பட ரெடியாய் உட்கார்ந்திருந்தார் தில்லுதுர.

நர்ஸ் ரெஜினா தில்லுதுரயை வீல் சேரை எடுத்து வரும் வரை காத்திருக்கச் சொன்னபோதும், அதெல்லாம் தேவையில்லை என மறுக்கவே செய்தார் தில்லுதுர.

ஆனால், நர்ஸ் ரெஜினா அதை ஒப்புக் கொள்ளாமல் ரூல்ஸ்படி, வலுக்கட்டாயமாய் வீல்சேரைக் கொண்டு வந்து அதில் தில்லுதுரயை மெல்லத் தள்ளிக் கொண்டு போனாள்.

லிஃப்ட்டில் இறங்கும்போதும் வாசல் வரை வீல்சேரை தள்ளிக் கொண்டு செல்லும் போதும் யோசித்தபடியே வந்த ரெஜினா, தில்லுதுரயிடம் சந்தேகத்துடன் கேட்டாள்.

"ஏன் சார்... இப்ப உங்களை வாசல்ல ட்ராப் பண்ணதும் உங்களை பிக்கப் பண்ணிக்க உங்க மனைவி வந்துடுவாங்க தானே.?".

ரெஜினா கேட்டதும், "தெரிலயேம்மா...!" என்று வருத்தத்துடன் தலையாட்டிய தில்லுதுர தொடர்ந்து சொன்னார்.

"அவ இன்னும் மேல பாத்ரூம்ல ஹாஸ்பிடல் கவுனை மாத்திட்டிருப்பானு தான் நெனைக்கிறேன்.!".
.
.
.

Tuesday, May 7, 2013

லெவன்டுல்கர்
லெவன்டுல்கர் நாலைந்து நாட்களுக்கு முன்...

தன்னுடைய ஆப்த நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

"நேத்து நான் என் முழங்கால் வலிக்காக நம்ம டாக்டரைப் பார்க்கப் போயிருந்தேன். அவர் என்னை இனிமேல் கிரிக்கெட் விளையாட வேண்டாம்னு சொல்றார்.!".

கேட்டுக் கொண்டிருந்த நண்பர் கவலையுடன் ஆறுதலாய் லெவன்டுல்கரிடம் கேட்டார்.

"ஏன் திடீர்னு அப்படி சொல்றார்.? உன்னோட எக்ஸ்ரேயை பாத்துட்டா அப்படி சொன்னாரு.?".

நண்பர் கேட்டதும் தலையை ஆட்டிய லெவன்டுல்கர் அதைவிடக் கவலையுடன் சொன்னார்.

" இல்ல ஃப்ரண்டு... அவர் எக்ஸ்ரேயைப் பாத்து சொல்லை. என்னோட ஸ்கோர் போர்டைப் பாத்துட்டுத்தான் அப்படி சொன்னாரு.!".
.
.
.

Friday, April 12, 2013

சூப்பர் மேடம்
தில்லுதுரயின் மனைவி அந்த பெட் ஷாப்புக்குள் நாய்க்குத் தீனி வாங்கத்தான் நுழைந்தாள்.

ஆனால், அந்த ஷாப்புக்குள் நுழைந்ததும் அவள் கண்ணில் பட்டது அந்த அழகான பச்சைக் கிளி.

நல்ல பச்சை நிறமும் சிவந்த மூக்குமாய் பார்ப்பதற்கே அருமையாய் இருந்தது அந்தக் கிளி.

அந்தக் கிளியும் தில்லுதுரயின் மனைவியைப் பார்த்ததும், "சூப்பர் மேடம் சூப்பர் மேடம்..." என்று குதிக்க ஆரம்பித்தது.

தில்லுதுரயின் மனைவி அந்தக் கிளியின் விலை என்ன என்று கடைக்காரரைக் கேட்டாள்.

கடைக்காரரோ,"அந்தக் கிளியை நான் சும்மா கூடத் தந்துவிடுவேனம்மா. ஆனால், அது நம்ம வீட்டுக்கு வேண்டாம். ஏன்னா, அது ஒரு மோசமான தொழில்கார பொம்பள வீட்டுல வளர்ந்த பேசும் கிளி. அந்தப் பொம்பளயும் மோசம், அதோட அந்தக் கிளியின் பேச்சும் ரொம்ப மோசம்.."

கடைக்காரர் என்ன சொன்னாலும்...  அது பேசும் கிளி என்பதால் தில்லுதுரயின் மனைவிக்கு ஆர்வம் இன்னும் அதிகம் ஆகிவிட்டது.

கிளியை பேக் பண்ணச் சொல்லிவிட்டு காரில் வந்து உட்கார்ந்தாள்.

காருக்குள் வந்து வைத்ததிலிருந்து கூண்டுக்குள்ளேயே சிறகுகளை அடித்துக் கொண்டு கிளி சூப்பர் மேடத்துடன் காரைச் சேர்த்துக் கொண்டு,"சூப்பர் மேடம் சூப்பர் கார்...சூப்பர் மேடம் சூப்பர் கார்...!"என்று கத்திக் கொண்டிருந்தது.

கொஞ்சம் கடுப்பாயிருந்தாலும் பெரிய எரிச்சலாய் இல்லாததால் அவள் கண்டுகொள்ளவில்லை.

கொஞ்ச நேரத்தில் வீடு வந்து சேர்ந்ததும் கிளியைக் கூண்டோடு கொண்டுவந்து முன்னறையில் மாட்டிவிட்டாள்.

கிளி இப்போது சூப்பர் மேடம் சூப்பர் காருடன் வீட்டையும் சேர்த்துக் கொண்டு,"சூப்பர் மேடம் சூப்பர் கார் சூப்பர் வீடு... சூப்பர் மேடம் சூப்பர் கார் சூப்பர் வீடு...!" என்று கத்திக் கொண்டிருந்தது.

தில்லுதுரயின் மனைவி கிளியின் செய்கை விநோதமாய் இருந்தாலும், குழந்தைகள் வரும் நேரம் என்பதால், இதையெல்லாம் கவனிக்காமல் குழந்தைகளுக்கு டிபன் செய்யப் போய்விட்டாள்.

கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் வந்ததும் கிளி,"சூப்பர் மேடம் சூப்பர் கார் சூப்பர் வீடு சூப்பர் குழந்தைகள்... சூப்பர் மேடம் சூப்பர் கார் சூப்பர் வீடு சூப்பர் குழந்தைகள்...!" என்று கத்திக் கொண்டிருந்தது.

தில்லுதுரயின் மனைவி நினைத்தது மாதிரியே கிளியை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

குழந்தைகள் கிளியுடன் விளையாட்டோ விளையாட்டு என கதியாய் கிடந்தார்கள்.

இரவு எட்டு மணி இருக்கும்... தில்லுதுர அலுவலகம் முடிந்து அப்போதுதான் உள்ளே நுழைகிறார்.

குழந்தைகள் அப்பா வந்ததும் கிளியை அறிமுகப் படுத்த அழைத்துச் சென்றார்கள்.

தில்லுதுரயின் மனைவிக்கும் இப்போது ஆர்வமாய் இருந்தது.

சூப்பர் மேடம் சூப்பர் கார் சூப்பர் வீடு சூப்பர் குழந்தைகள் என்பதோடு இப்போது கிளி என்ன சேர்த்து சொல்கிறது என்று ஆர்வத்தோடு வந்து நின்றாள்.

தில்லுதுரயை பார்த்ததும் கிளி இன்னும் உற்சாகமாய் சிறகுகளை அடித்துக் கொண்டு கத்தத் துவங்கியது.

"சூப்பர் மேடம்... சூப்பர் கார்...  சூப்பர் வீடு... சூப்பர் குழந்தைகள்....."என்றா கிளி தில்லுதுரயின் பக்கம் திரும்பி...

"ஹலோ தில்லுதுர...!" என்றது.
.
.
.

Friday, February 8, 2013

டேனி என்றொரு ஞானி
அவரோட அக்கா கோடை விடுமுறைக்கு குழந்தைகளை கூட்டிக் கொண்டு வீட்டில் விட்டிருந்த நேரம்.

குழந்தைகளா அதுக.?

எந்நேரமும் எதையாவது உடைச்சுகிட்டே தான் இருக்கும்.

ஆனாலும், எப்போதும் தனியாகவே எங்களோடு இருக்கும் டேனிக்கு, இவர்கள் வருகை மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதால் அவர்களை நான் சகித்துக் கொண்டு போய்விடுவேன்.

பத்தாதுக்கு இவரோட அக்கா குழந்தைக வேற.!

ஆனாலும், பொதுவாய் நான் டீச்சர் என்பதாலோ என்னவோ, அந்தக் குழந்தைகள் தவறு செய்யும் போது கத்தி விடுவதும் என் வழக்கமாய் இருந்து வந்தது.

அன்றும் இப்படித்தான்.

சாயங்காலம் வேலை முடித்து வீட்டுக்குள் நுழையும் போதே டீப்பாய் உடைந்திருப்பது கண்ணில் பட்டது.

அதற்கொரு பாட்டம் திட்டி முடித்து விட்டு...

ராத்திரி சாப்பாட்டுக்கு உட்கார்ந்திருந்த போது, டேனிக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவரோட அக்கா பையன் உப்பு வைத்திருந்த பீங்கான் கிண்ணத்தை டைனிங் டேபிளில் இருந்து கீழே தள்ளி உடைத்து விட... கோபத்துடன் அவனைத் திட்டிக் கொண்டே அதைப் பூராவும் சுத்தம் செய்து முடித்தேன்.

அடுத்த சில நிமிடத்தில் அவரோட அக்கா பெண் சட்னியைக் கீழே சாய்த்துவிட, அவர் 'திட்டாதே திட்டாதே...' என்று கண்ணைக் காட்டுவதையும் பொருட்படுத்தாமல், எனக்கு வந்த கோபத்தில் கன்னாபின்னாவென்று அந்தக் குழந்தைகளைத் திட்டிவிட்டு, அடுத்த சட்னியை தயார் செய்ய சமையல் அறையில் நுழைந்தேன்.

கூடவே அந்தக் குழந்தைகளும் நான் திட்டுவதை பொருட்படுத்தாமல் எனக்கு உதவ ஓடிவர... அதை கவனிக்காத மாதிரி காட்டிக் கொண்டு, கோபத்துடன் வேகமாய் எடுத்த எண்ணெய் பாட்டில் கை வழுக்கி தரையில் சிலீரென்ற சத்ததுடன் விழுந்து உடைந்தது.

அந்தக் குழந்தகள் ரெண்டும் அதைப் பார்த்து அதிர்ச்சியுடன் விலகி நிற்க, இத்தனை நேரம் திட்டிய குழந்தைகள் முன்னால் இப்போது தவறு செய்த குற்ற உணர்வுடன் நான் நிற்க... டைனிங் ஹாலில் அவர் டேனியிடம் சொல்வது கேட்டது.

"ஐயையோ தொலைஞ்சாய்ங்க... இப்ப யாரு மாட்டினா தெரியலையே.!".

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த டேனி சொன்னான்.

"இப்ப... இதை உடைச்சது அவங்க ரெண்டு பேருமே இல்ல.! அம்மா...!".

இவன் எப்படி டேனி அங்க உட்கார்ந்த இடத்திலிருந்தே இங்கே நடப்பதை  சொல்கிறான் என்ற ஆச்சர்யம் மனதில் ஓடுவதற்குள், அவர் டேனியிடம் கேட்டார்.

"அதெப்படிடா... அம்மா உடைச்சாங்கனு சொல்ற.?".

அவர் கேட்டதும் டேனி அமைதியாய் தெளிவாய் பதில் சொன்னான்.

"இவ்வளவு நேரமாகியும் அம்மா யாரையுமே திட்டலியே.!".
.
.
.Friday, January 25, 2013

தில்லுதுரயின் ட்ரீம் ஜாப்
ட்ரீம் ஜாப் கெடைச்ச பின்னாலும் ஒரு மனுஷனுக்கு வேலை பிடிக்காமப் போகுமா..?

தில்லுதுரக்கு பிடிக்கவில்லை.

என்ன கதைனு கேளுங்க...

அது தில்லுதுர படித்து முடித்து வேலை தேடித்தேடி அலுத்துப் போயிருந்த காலம்.

வேலை கிடைக்காமல் வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த போது, நண்பன் ராஜா சொன்னான்.

"சுந்தராபுரத்துல இருக்கற சொல்கேட்ட கணபதி கிட்ட வேண்டிக்கடா தில்லு. நம்ம சொன்னத கேக்கற  கணபதியாம்...கேட்டதெல்லாம் கொடுக்கறாராம்.!".

வேலை கிடைக்குமென்றால் எதை வேண்டுமென்றாலும் செய்யத் தயாராயிருந்த தில்லுதுர அன்று மாலையே அந்தக் கோவிலுக்குப் போனான்.

வேண்டுவதுதான் வேண்டுகிறோம்.... கொஞ்சம் நல்லாவே வேண்டிக்கலாம் என்று சொல்கேட்ட கணபதியிடம் கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே வேண்டிக் கொண்டான்.

"கடவுளே... என் பை எப்பவும் பணமா நெரஞ்சிருக்கற மாதிரி ஒரு வேலை; எனக்குனு ஒரு பெரிய வண்டி; அதுல எப்பவும் என்னைச் சுத்தி ஏகப்பட்ட பொண்ணுக... இது மட்டும் இந்த ஒரு மாசத்துக்குள்ள நடக்கற மாதிரி அருள்புரியப்பா ஆண்டவா...!".

தில்லுதுர வேண்டிய சமயத்தில் அந்தக் கோவில் மணியும் அடிக்க மஹா சந்தோஷத்தோடு வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த மாதம் அவன் கேட்ட மாதிரியே ஒரு வேலைகிடைத்து விட்டது.

ஆனாலும்... தில்லுதுர இப்போதும் கடுப்புடன் தான் வேலைக்குப் போகிறான்.

ஏனென்றால்..... தில்லுதுர இப்ப ஒரு லேடீஸ் பஸ் கண்டக்டர்.!
.
.
.Monday, January 7, 2013

கிருஷ்ண சபாவில் டேனி


சனிக்கிழமை மாலை.

டேனி காலையிலிருந்து  சும்மா டிவி பார்த்துக் கொண்டேயிருக்கிறானே என்று யோசித்துக் கொண்டிருந்த போது எதிர் வீட்டில் அந்தத் தகவலைச் சொன்னார்கள்.

ரெண்டு தெரு தள்ளி கிருஷ்ண சபாவில் பாகவத வகுப்புகள் எடுப்பதாகவும் இன்று ஏதோ பாடகர் வந்திருப்பதால் இன்று பேச்சும் பாட்டுமாய் அட்டகாசமாய் இருக்கும் என்றும் சொல்ல....

வெட்டியாய் டிவி பார்ப்பதற்கு இது உபயோகமாய் இருக்குமே என்று டேனியை அழைத்துக் கொண்டு அங்கே கிளம்பினேன்.

டேனி இதுவரை மேடையில் பாட்டுகள் பாடி பார்த்ததில்லை என்பதால், வரும் வழி பூராவும் எப்படி டிவில வருவது போல் ஆடிக் கொண்டே பாடுவார்களா, யாரு டேன்ஸ் ஆடுவார்கள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டே வந்தான்.

வந்த இடத்தில் முதல் வரிசையிலேயே இடம் கிடைக்க ஆர்வத்துடன் அமர்ந்த டேனி, பிரசங்கர் பேசப் பேச டென்ஷனாகிப் போனான்.

பிரசங்கர் பாட்டுக்கு முன்னர் கண்ணன் பிறந்தது வளர்ந்தது லீலைகள் எல்லாம் பெரியவர்களுக்கு போல கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலும் சொல்லிக்கொண்டே போக... அசுவாரஸ்யத்துடன் நெளிந்து கொண்டிருந்த டேனி, அவர் பாட ஆரம்பித்ததும் உற்சாகமாகிப் போனான்.

கண்ணன் பாடல்கள் எப்போதும் போல தனி அழகுடன் ஜொலிக்க, பிரசங்கரும் அதை உற்சாகமாய் பாட....  வந்திருந்த குழந்தைகள் எல்லாம் சந்தோஷத்துடன் கூடவே சேர்ந்து பாட... டேனியும் அவர்களுடன் ஐக்கியமாகிப் போனான்.

கிடத்தட்ட ரெண்டு மணிநேரம்... போனதே தெரியவில்லை.

எல்லாம் முடிந்து வீடு திரும்பும் வழியிலும்கூட டேனி உற்சாகத்துடன், "ராதே ஷ்யாம்... ராதே ஷ்யாம்..." என்று பாடிக் கொண்டே வர, அவனை நல்ல இடத்திற்கு சந்தோஷத்துடன் கேட்டேன்.

"என்ன டேனி... அந்த அங்கிள் பாடின பாட்டெல்லாம் பிடிச்சிருந்ததா.?".

சந்தோஷமாய் பாடிக் கொண்டே வந்த டேனி...  இப்போது அதை நிறுத்திவிட்டு லேசான அலுப்புடன் சொன்னான்.

"பாட்டெல்லாம் நல்லாத்தாம்மா இருந்துச்சு... ஆனா, அட்வர்டைஸ்மென்ட்தான் ரொம்ப நீளம்.!".
.
.
.