Wednesday, May 14, 2014

தப்புத் தப்பாய் ஒரு தப்பு

டேனியின் பள்ளியில் விடுமுறை விட்டு பதினைந்து நாட்களாகிவிட்டது.

இந்த விடுமுறை நாட்களில் பாடம் மறந்துவிடாமல் இருக்க, சின்னச் சின்னக் கணக்குகளும்,  மூன்றெழுத்து நான்கெழுத்து தமிழ் வார்த்தைகளும் எழுதப் படிக்கப் பழக்கச் சொல்லியிருந்தார்கள்.

அந்த முறையில் இன்று தமிழைக் கையில் எடுத்திருந்தேன்.

’படம், பாடம், உப்பு, தப்பு’ என மூன்றெழுத்து தமிழ் வார்த்தைகளை எழுதப் பழக்குவது என்ற முடிவுடன் உட்கார்ந்தாகிவிட்டது.

விடுமுறையிலும் எழுதப் படிக்கச் சொல்கிறார்களே என்ற கடுப்புடன் அமர்ந்த டேனி, தமிழ் என்றதும் கடுப்பின் உச்சத்துக்கே போய்விட்டான்.

படிப்பது ஆங்கில மீடியம் என்பதால் தமிழ் சரியாய் வராது என்பதும், தமிழ் என்றால் ஹோம்வொர்க் முடிய நேரம் அதிகமாகி விளையாடச் செல்வது தாமதமாகும் என்பதும்தான் காரணம்.

முதலில் படம், அடுத்து பாடம் என்னும் வார்த்தைகளை தப்பும் தவறுமாய் எழுதி என்னைக் கொஞ்ச நேரம் வெறுப்பேற்றிய பிறகு சரியாய் எழுதியவன், பிறகு உப்பு என்னும் வார்த்தையை தவறின்றி எழுதிவிட்டான்.

அடுத்த வார்த்தை ”தப்பு”.

டேனியிடம் திரும்பி, “நாலாவதா எழுத வேண்டிய வார்த்தை ’தப்பு”. எங்க எழுது பார்க்கலாம்... தப்பு.!”.

சொன்னதும் டேனி கர்ம சிரத்தையாய் குனிந்து தனது ஹோம்வொர்க் நோட்டில் எழுதினான்.

“ட... ப்... பு..!”

எழுதிவிட்டு நிமிர்ந்து பார்த்தவன், “கரெக்ட்டானு பாரும்மா.!” என்று நோட்டை என்னிடம் நீட்டினான்.

பார்த்ததும் லேசான கோபத்துடன், அவனுக்குப் புரியட்டும் என்பதற்காக சற்று அழுத்தமாய்ச் சொன்னேன்.

“டேனி... நீ எழுதியிருக்கிறது தப்புடா.!”.

நான் சொன்னதும் தனது ஹோம்வொர்க் நோட்டைத் திருப்பி ஒருமுறை பார்த்த டேனி, எந்தச் சலனமும் இல்லாமல் என்னைப் பார்த்துச் சொன்னான்.

“ஆமா... அதைத்தான நீ எழுதச் சொன்ன.!”.
.
.
.



Tuesday, April 22, 2014

தில்லுதுரயும் டாஸ்மாக் லீவும்

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மூன்றுநாள் லீவ் என்றதும் தில்லுதுர அலர்ட் ஆகிவிட்டார்.

மூன்று நாளும் வீட்டில் சரக்கை வாங்கி வைத்துக் குடிக்க மனைவி விட மாட்டாள் என்பதால், வரும் போதே நன்றாக சுதி ஏத்திக் கொண்டுதான் வந்தார்.

வீட்டுக்கு வந்து மனைவியின் திட்டு எல்லாம் வாங்கி முடித்து விட்டு, சாப்பிட்டு படுக்கும் போதுதான் மனைவி சொன்னாள்...

“ஏங்க... புதுசா வந்ததால இங்க நமக்கு ஓட்டு இல்ல. என் ஓட்டு இன்னும் அம்மா வீட்டு அட்ரஸ்ல தான இருக்கு. நான் வேணும்னா நாளைக்கு காலைல போய்ட்டு எலெக்சன் முடிஞ்சு வெள்ளிக் கிழமை வரட்டுமா.!”.

கேட்டதுதான் தாமதம்.

மூன்று நாட்கள்...மனைவியும் இல்லாமல் டாஸ்மாக்கும் இல்லாமல்.

தில்லுதுர கண்கள் கலங்கி விட்டது.

குரல் போதையில் உளறலோடு சொன்னார்.

“மூணு நாள்... ஐயோ... நீ இல்லாம நான் எப்படி இருக்கப் போறேன்னு தெரியலையே தங்கம்...!”

தில்லுதுர புலம்ப ஆரம்பித்ததும் மனைவி சிரித்தபடி கேட்டாள்.

“இது யாரு பேசறது... நீங்க பேசறீங்களா இல்ல உள்ள போன சரக்கு பேசுதா.?”.

மனைவி கேட்டதும் அதே உளறலோடு பதில் சொன்னார்.

“ஏண்டி... நாந்தான் பேசறேன். ஆனா நான் பேசறது உங்கூட இல்ல... சரக்குகூட.!” என்றார்.
.
.
.



Wednesday, April 16, 2014

டேனியின் அழுகை

டேனி அன்று பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே சோகமாகவே இருந்தான்.

சாயங்காலம் சாப்பிடுவதற்கான நொறுக்குத் தீனிகளைக் கொடுத்து விட்டு, மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.

”ஏன் டேனி... சோகமா இருக்க.?”

கேட்டதும் டேனி கவலையுடன் திரும்பி என்னைப் பார்த்தான்.

“நான் ரொம்பக் கருப்பா இருக்கனாம்மா.?”

நான் அவனைத் தேற்றும் விதமாய்ச் சொன்னேன்.

“இல்லியேடா... நீ நல்ல செகப்பு தான.!”

சொன்னதும் அவன் தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“என் கண்ணு ரெண்டும் முட்டை முட்டையா பெருசா இருக்காம்மா.?”

இதென்னடா வம்பாப் போச்சு - என்று எண்ணியவாறே அவனுக்கு ஆறுதலாய் பதில் சொன்னேன்.

“இல்லியேடா... உன் கண்ணு ரெண்டும் ரொம்ப அழகா, பட்டு மாதிரி இருக்க வேண்டிய சைஸ்லதான இருக்கு.!”

டேனி இன்னும் திருப்தியாகாமல் தனது அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“நான்... குண்டா தொப்பையா சொட்டைத் தலையோட ஏதாவது இருக்கேன்னாம்மா.?”

என்னடா... புள்ள இன்னிக்கு தன் அழகு மேல இவ்வளவு வருத்தமா இருக்கானே என்று யோசித்த படியே சொன்னேன்.

“சேச்சே... யாருடா சொன்னா அப்படியெல்லாம். நீ சும்மா தங்கமாட்டம் அம்புட்டு அழகா இருக்க. உன்னை யாரு அப்பிடியெல்லாம் சொன்னா.?”

கேட்டதும் டேனி வருத்தத்துடன் சொன்னான்.

“அப்படியெல்லாம் யாரும் சொல்லலம்மா. ஆனா, எதிர் வீட்டு ஆன்ட்டி எப்பப் பாத்தாலும் என்னை ”டேனி... அவன் அப்பா மாதிரியே இருக்கான்”னு சொல்றாங்களே.!”.
.
.
.




Thursday, March 13, 2014

தில்லுதுரக்கு பொறந்த நாளு

இன்னும் ரெண்டு நாளில் தில்லுதுரக்கு பொறந்த நாளு.

அவர் மனைவிக்கோ அவருக்கு ஒரு சர்ப்பரைஸ் பரிசு கொடுக்கலாம்னு ஆசை.

புதுசா ஒரு சட்டை எடுக்கலாம்னு ரெடிமேட் கடைக்குள்ள நொழஞ்சவங்களுக்கு... அங்க போனதும் ஐடியா மாறிப்போச்சு.

தில்லுதுர கிட்ட ரவுண்ட் நெக் டீ-ஷர்ட்டே இல்லாததால, அதயே பொறந்த நாள் கிஃப்ட்டா வாங்கிக் கொடுக்கற ஆசை வந்துடுச்சு.

கடைக்குள்ள நேராப் போயி டீ-ஷர்ட்ட கேட்டவங்க கிட்ட, சைஸ் என்னன்னு சேல்ஸ்மேன் கேட்டதும் தான் தெரிஞ்சது அவருக்கு தில்லுதுரயோட டீ-ஷர்ட் சைஸ் தெரியாதுன்னு.

அவர்கிட்டயே கேக்கலாம்னா... கிஃப்ட்ட வேற சஸ்பென்ஸா கொடுக்கணுமாச்சு.

வேற வழியில்லாம, தில்லுதுர மனைவி நேரா சேல்ஸ் மேன் கிட்டயே கேட்டாங்க.

“சார்... டீ-ஷர்ட் சைஸ்னு நீங்க எதச் சொல்லுவீங்க.?”

சேல்ஸ்மேன் சிரிச்சுகிட்டே சொன்னாரு.

“அம்மா... ஆளாளுக்கு ஒரு சைஸ் இருக்கும். குண்டு, ஒல்லி, சின்னப்பையன், பெரிய பையன்னு எல்லாரும் அவங்க செஸ்ட் சைஸ் சொல்லித்தான் டீ-ஷர்ட் வாங்குவாங்க.! நீங்க அவர் சைஸ் என்னனு சொன்னாத்தான் நாங்க சரியான அளவுல கொடுக்க வசதியா இருக்கும்.!”.

சொல்லிவிட்டு அவர் அடுத்த கஸ்டமரைக் கவனிக்க,  தில்லுதுர மனைவி அவரிடம் திரும்பக் கேட்டார்.

“ஏன் சார்... அவரோட செஸ்ட் சைஸ் தெரியாது. ஆனா, அவரோட நெக் சைஸ் தெரியுமுங்க. அதவச்சு ஏதாவது செய்ய முடியுமானு சொல்லுங்க.!”

அடுத்த கஸ்டமரை கவனித்துக் கொண்டிருந்த சேல்ஸ் மேன், இவர் சொன்னதை முழுதும் கவனிக்காமல், “சைஸ சொல்லுங்க பாப்பம்” என்றதும்...

தில்லுதுர மனைவி,  தனது வலது கை கட்டை விரலோடு இடது கை கட்டை விரலோடு சேர்த்து, தனது வலது கை நடுவிரலோடு இடது கை நடுவிரலோடு சேர்த்து ஒரு வட்டத்தை செய்து காட்டியபடி சொன்னார்.

“கரெக்ட்டா இந்த சைஸ்ல ஃபிட் ஆகும் சார்.!”.
.
.
.

Wednesday, January 22, 2014

டேனியின் ஹேர்க்கட்


ஐந்து வயது டேனியை இன்று காலை ஸ்கூலுக்கு ஆயத்தப்படுத்தக் குளிப்பாட்டும் போது நடந்தது இது.

தலைக்கு ஷாம்பூவை அவசர அவசரமாய்ப் போடுகையில் கை விரல்கள் அவன் தலை முடியில் சிக்கிக் கொண்டு வர மறுக்க, கைகளை இழுக்கையில் அவனுக்கு வலியாகி அவன் கத்த... கோபத்துடன் சொன்னேன்.

"மொதல்ல இந்த ஞாயித்துக் கெழம உங்க அப்பாவக் கூட்டிட்டுப் போயி உனக்கு முடி வெட்டச் சொல்லணும்.!".

சொன்னதும் பார்பர் ஷாப்புக்கு போவதே பிடிக்காத டேனி, கோபத்துடன் சொன்னான்.

"போம்மா... சும்மா சும்மா நீ முடி வெட்டச் சொல்லிட்டே இருப்ப.!".

அவன் கோபத்துடன் அழுவதைப் பார்த்ததும், லேசாய் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அவனிடம் மேதுவாய்ச் சொன்னேன்.

"பாரு... உனக்குத்தான் சீக்கிரம் சீக்கிரம் முடி வளந்துடுதே.! அதனாலதான முடி வெட்டணும்னு சொல்லறேன்.!".

சொன்னதும் இன்னும் அதிக கோபத்துடன் டேனி சொன்னான்.

"எல்லாம் உன்னாலதாம்மா.. நீ செய்யற வேலைனாலதான முடி வேகவேகமா வளருது.!".

இதென்ன புதுசா சொல்றானே என்ற குழப்பத்துடன் கேட்டேன்.

"உன் தலைல முடி வளர்றதுக்கு நானென்னடா பண்ணா முடியும்.?".

சொன்னதும் இன்னும் கோபமாய் என்னைக் குற்றஞ்சாட்டும் முகத்துடன் டேனி சொன்னான்.

"ஆமா... நீதான் சொல்லச் சொல்லக் கேக்காம குளிக்கும்போது தலைக்கு அதிகமா தண்ணிய ஊத்தறியே. தண்ணிய அதிகமா ஊத்தினா முடி வேகமா வளரத்தான செய்யும்.!".
.
.
.

Monday, January 6, 2014

அசிங்கப்பட்டார் தில்லுதுர



லுவலகத்திலிருந்து தில்லுதுர திரும்பும் போதே, தன் மனைவி பதட்டத்துடன் வாசலில் காத்திருப்பதைப் பார்த்தார்.

தில்லுதுரயை நேரில் பார்த்ததும் தான், அவர் நிம்மதியுடன் நீண்ட ஒரு பெருமூச்சை விட்டபடி சொன்னார்.

"அப்பாடி... உங்களுக்கு ஒண்ணுமில்லியே.! நான்கூட பயந்தே போய்ட்டேன்.!"

மனைவி சொன்னதைக் கேட்டதும் ஆச்சர்யத்துடன் தில்லுதுர கேட்டார்.

"ஏன்... பயப்படற அளவுக்கு என்ன ஆச்சு.?".

தில்லுதுர கேட்டதும் அவர் மனைவி அதே பதைபதைப்பு மாறாமல் சொன்னார்.

"இல்ல... இப்ப கொஞ்சம் முன்ன இந்த வழிய போன ஒருத்தன் சொன்னான், 'தெரு முனைல கருப்பா, குண்டா, எரும மாடு மாதிரி ஒரு ஆளு அடிபட்டுக் கெடக்கான்னு..'  அதான் நீங்களோனு பயந்திட்டேன்.!" என்றாள்.
.
.
.