Saturday, March 20, 2010
கம்ப்யூட்டரே கதை எழுது
நான் ஒரு 'ஒரு பக்கக் கதை' எழுத்தாளன்.
பேனாவில் எழுதியே பழக்கப்பட்டவன்.
டைப்ரைட்டர்கூடப் பார்க்காத நான் ஒரு லேப்டாப் வாங்க ஆசைப்பட்டு வாங்கியும் விட்டேன்.
பிறகுதான் பிரச்சினைகளே ஆரம்பம்.
ஆன், ஆஃப் செய்யவெல்லாம் கற்றுக்கொண்டு தமிழில் டைப் செய்ய ஆரம்பித்தபின் வார்த்தைகளுக்கிடையே இடைவெளி விட என்ன செய்யவேண்டுமென்று மறந்துவிட்டது.
யாரிடமும் கேட்கலாமென்றால் கவுரவப் பிரச்சினை.
நேராய் லேப்டாப் கம்பெனியின் ஹெல்ப்லைனிற்கு போன் செய்தேன்.
இனிமையான குரலில் அந்தப் பக்கம் இருந்தவன் எனக்கு என்ன செய்ய வேண்டுமென்பதைத் தெளிவாய் இவ்வாறு கூறினான்.
"நீங்கள் ஒரு வார்த்தையை டைப் செய்த பிறகு அடுத்த வார்த்தைக்குப் போகும் முன்பு ஸ்பேஸ்பாரை அழுத்தவேண்டும்..!".
எனக்கோ ஸ்பேஸ்பார் எது என்பதே தெரியவில்லை.
நீண்ட நேர விளக்கத்திற்குப் பின்பு ஒருமாதிரி அதைக் கற்றுக் கொண்டுவிட்டேன்.
ஒரு வாரத்திற்குப் பின்பு, நான் கம்ப்யூட்டரை உபயோகிக்க உபயோகிக்க எனக்குப் பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே போனது.
நான் மறுபடி ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டு ஒரு இன்ஸ்ட்ரக்டரை அனுப்பக் கேட்டுக்கொண்டேன்.
வந்தவன் தெளிவாய் சொல்லிக் கொடுத்துக் கொண்டே போகும்போது எனக்கு ஒன்று புரிந்துவிட்டது. நான் சொன்னேன்.
"சார்.. நீங்க சொல்லிக் கொடுக்கறதுல எந்த உபயோகமும் இல்ல.எனக்கு ஒண்ணும் புரியவும் மாட்டேங்குது. எனக்கு கம்ப்யூட்டர் வேண்டாம்...!"
என் குழப்பத்தைப் புரிந்து கொண்ட அவன் என்னைத் தேற்றும்விதமாய்ச் சொன்னான்.
"சார் பயப்படாதீங்க... நீங்க எவ்வளவோ பரவாயில்லை. உங்களைவிட மோசமானவர்கள் எல்லாம் கம்ப்யூட்டரை யூஸ் பண்ணுகிறார்கள். போனவாரம் எங்களுக்கு ஒரு கஸ்டமர் 'ஸ்பேஸ்பார் எங்க இருக்கு'னு போன் பண்ணினார். அவரைவிடவா நீங்க மோசமாப் போயிட்டீங்க..!".
.
.
.
Labels:
எழுத்தாளன்,
டைப்,
லேப்டாப்,
ஸ்பேஸ்பார்,
ஹெல்ப்லைன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment