Thursday, July 25, 2013

இரவுப் பிரார்த்தனை


டேனியின் ஸ்கூலில் புதிதாய் இரவு தூங்கும் முன்னர் பிரார்த்தனை செய்துவிட்டுத் தூங்கக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

இப்போதெல்லாம், அவன்  விடிவிளக்கின் வெளிச்சத்தில் படுக்கையில் அமர்ந்தபடி கண்களை மூடி, கைகளைக் கூப்பி முணுமுணுப்பது பார்க்க அவ்வளவு அழகாய் இருக்கும்.

அன்றும் அப்படித்தான்.

படுக்கைக்கு வந்ததும், இன்னும் ஓரிரு வாரத்தில் வரப்போகும் அவனது பிறந்த நாளுக்கான அவனது பிரார்த்தனையை எப்போதும் போல் இல்லாமல் சத்தமாய்க் கூறத் துவங்கிவிட்டான்.

"கடவுளே... எனக்கு இந்த பர்த்டேக்கு எப்படியாவது ஒரு ப்ளே-ஸ்டேஷன் கிடைக்க அருள்புரிவாய்... ஆண்டவா.!".

வழக்கமாய் முணுமுணுத்தபடி பிரார்த்தனை செய்யும் டேனி, இன்று சத்தமாய் பிரார்த்தனை செய்யவே நான் லேசான குழப்பத்துடன் அவனிடம் கேட்டேன்.

"எதுக்கு இவ்வளவு சத்தமா ப்ரே பண்ணற.? மெதுவாச் சொன்னாலே சாமிக்குக் கேட்கும் இல்லியா.?".

நான் கேட்டதும், என் பக்கமாய் திரும்பிய டேனி லேசான புன்னகையுடன் கூறினான்.

"ஆனா... அப்பாவுக்கு கேக்காதே.!".
.
.

1 comment:

'பரிவை' சே.குமார் said...

குழந்தைகள் எல்லாம் இப்போ ரொம்ப புத்திசாலியாயிட்டாங்க...

Post a Comment