Thursday, June 20, 2013

என்ன கொடும சார் இது.?



டேனிக்கு காய்ச்சல் என்று பக்கத்திலிருந்த க்ளினிக் ஒன்றிற்கு போயிருந்த நேரம்.

க்ளினிக் என்றால் கொஞ்சம் பெரிய க்ளினிக்.

குழந்தைகள் டாக்டரில் இவர் கொஞ்சம் கைராசி என்பதால் எப்போதுமே அங்கு கூட்டம் வேறு அதிகமாய் இருக்கும்.

ரிசப்ஷனில் இருந்த வடக்கிந்தியப் பையனிடம் பெயர் சொல்லவே வெய்ட் பண்ண வேண்டிய அளவு கூட்டம்.

எனக்கு முன்னால் இருந்த பெரியவர் அந்த ரிசப்ஷனில் இருந்த அந்த ஹிந்திக்காரப் பையனிடம் "நேரமாகுமா சாமி.?" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்தப் பையனோ இவரை கொஞ்சமும் கவனிக்காமல் தான் வைத்திருந்த நோட்டில் குனிந்தபடியே எழுதிக் கொண்டிருக்க, நான் பெரியவருக்காக அந்தப் பையனிடம் அதை ஆங்கிலத்தில் கேட்டேன்.

அவனோ முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல், "சீட்ல வெய்ட் பண்ணச் சொல்லுங்க. அவர் டர்ன் வரும்போது கூப்பிடறேன்..." என்றவன் டேனியின் பெயரைக் கேட்டு எழுதிக் கொண்டான்.

நான் பெரியவரிடம், முன்னாடி இருந்த வரிசைச் சேர்களில் உட்காரச் சொல்லிவிட்டு... நானும் பக்கத்து சீட்டிலேயே டேனியுடன் அமர்ந்து கொண்டேன்.

பெரியவர் அவ்வப்போது சந்தேகத்துடன், "அவன் என் பேரையே கேக்கலையே..!" என்று சந்தேகத்துடன் கேட்டுக் கொண்டிருக்க, "கேக்கலைனா என்னங்க... அதோ அந்தப் பெரியவர் உங்களுக்கு முன்னதான் பேரு சொன்னாரு. அவருக்கு அடுத்து நீங்க போயிடுங்க.!" என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில், ரிசப்ஷனில் முன்னால் சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த டாம் அன்ட் ஜெர்ரியில் டேனி லயித்துப் போக, நான் வருகிறவர் போகிறவர்களையும், ரிசப்ஷன் ஹிந்திக்காரப் பையனின் தப்புத்தப்பான தமிழ்ப் பேச்சையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

பெரியவரோ நேரமாய்க் கொண்டிருக்கிறதே என்ற கடுப்புடன் நெளிந்து கொண்டிருந்தார்.

ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும்.

ரிசப்ஷன் ஹிந்தி, "பழனிச்சாமி... உள்ள போங்க!" என்று குரல் கொடுக்க, பெரியவருக்கு முன்னால் பெயர் சொன்னவர் எழுந்து போனார்.

நான் அடுத்து பெரியவரைக் கூப்பிடுகிறாரா என்று நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

உள்ளே போன அந்த பழனிச்சாமி என்பவர் வெளியே வந்ததும், அந்த ஹிந்திக்காரப் பையன் பெரியவரைப் பார்த்து குரல் கொடுத்தான்.

"ஏனுங்க... நேரமாகுமா சாமி... உள்ள போங்க.!".
.
.
.

2 comments:

indrayavanam.blogspot.com said...

நல்லாயிருக்குபா....

cheena (சீனா) said...

அட சூப்பர் - ரிசப்ஷன் ஹிந்திக்காரப் பய - ஏனுங்க நேரமாகுமா சாமிய கரெக்டா உள்ளே அனுப்பிச்சுட்டானே - நல்வாழ்த்துகள் பதிமினி - நட்புடன் சீனா

Post a Comment