Friday, February 4, 2011

குரு ஸ்தோத்திரம்


டேனி கின்டர்கார்டன் போக ஆரம்பித்து பத்து மாதங்கள் ஆனபோது நடந்தது இது.
ஆனால், அவன் எதுவும் கற்றுக் கொள்கிறானா என்பதிலேயே, என் கணவருக்கு ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.
கணவர் வெளியூரில் இருந்ததாலும் நான் கல்லூரிக்கு வேலைக்குப் போவதாலும் அவனுடைய பள்ளிக்குப் போக முடியாமலே இருந்து வந்தது.
டேனியிடம் பள்ளியில் என்ன நடந்தது என்பது பற்றியும் விசாரித்து அறிந்துகொள்ள முடியாமலேயே நாட்கள் நகர்ந்தது.
என் கணவர் மட்டும் அவனிடம் போனிலும் நேரிலும், 'ஏபிசிடி சொல்லு... பாபா ப்ளாக் ஷீப் சொல்லு..' என்று முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்.
அன்றும் அப்படித்தான், அவர் ஊருக்கு வந்திருந்தபோது சூப்பர் மார்க்கெட் போன இடத்தில் அவனுடைய வகுப்பு டீச்சரை எதிர்பாராமல் சந்தித்தோம்.
அவர்தான் டீச்சர் என்று தெரிந்ததும் என் கணவர் அவரிடம் விசாரணையை ஆரம்பித்துவிட்டார்.
"டேனி வகுப்புல எப்படி டீச்சர்..?".
அந்தப் பெண்மணி இயல்பாய் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
"ரொம்ப அமைதியான பையன். ஆனா, அவனும் அவனோட ஃபிரண்ட் ஹர்சந்த்தும் சேர்ந்துட்டாத்தான் ஒண்ணும் கையில பிடிக்க முடியாது..!".
"படிப்புல டீச்சர்..?".
டீச்சர் பொறுமையாய் சொன்னார்.
"ரொம்ப சுட்டி. க்ளாஸ்லயே இவன் தான் ஃபர்ஸ்ட். ஆல்ஃபபெட்ஸ்,நம்பர்ஸ்,கலர்ஸ் எல்லாம் கரெக்டா சொல்லுவானே...!".
என் கணவர் அலுப்புடன் சொன்னார்.
"ஆனா, நாங்க கேட்டா வாயே திறக்க மாட்டேங்கறாண் டீச்சர்..!".
டீச்சர் சிரித்தார்.
"அதெல்லாம் டேனி அட்டகாசமாச் சொல்லுவானே. அதுமட்டுமில்ல, அவன் என் கூடவே குரு ஸ்தோத்திரம் 'குருப்ரம்மா குருவிஷ்ணு' சொல்லற அழகப் பாக்கணுமே நீங்க..!".
தன் மகன் குரு ஸ்தோத்திரம் சொல்லுவான் என்றதும்  என் கணவரின் சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே..!
அவர் ஆர்வமாய் டீச்சரிடம் கேட்டார்,"டீச்சர்.. அவன் உண்மையிலேயே சொல்லுவானா டீச்சர்..?".
என் கணவரின் ஆர்வத்தைப் பார்த்த அந்த டீச்சர் சொன்னார்.
"நான் க்ளாஸ்ல நுழைஞ்சதும் மொதல்ல சொல்லறதே குரு ஸ்தோத்திரம்தான். அதுக்கப்புறம்தான் காலை வணக்கம் சொல்லி, அட்டன்டென்ஸ் எடுக்கறதே. இருங்க, இப்ப டேனிய சொல்ல வைக்கிறேன்..!" என்றவர் டேனியை அழைத்து, "டேனி... எங்கே குரு ஸ்தோத்திரம் சொல்லு..!".
அவன் டீச்சரை வெளியிடத்தில் பார்த்த வெட்கத்தில் நெளியவும், அவரே ஆரம்பித்தார்.
"டேனி... மிஸ் சொல்லுவேன் நீயும் கூடவே சொல்லணும், என்ன.?".
டேனி தலையை ஆட்டியதும் அவர் ஆரம்பித்தார்.
"குரு ப்ரம்மா..!"
டேனி தொடர்ந்தான்
"குரு ப்ரம்மா..!".
"குரு விஷ்ணு..!".
"குரு விஷ்ணு..!" என்று தொடர்ந்த டீச்சர்...
"குருவே நமஹ..!" என்று வெற்றிப் புன்னகையுடன் முடிக்க,
குரு ஸ்தோத்திரம் சொன்ன தன் மகனையே பெருமை பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த என் கணவரைப் பார்த்து சிரித்தபடியே, "குருவே நமஹ..!" என்று முடித்த டேனி தொடர்ந்து சொன்னான்.
"ஆல் ஆஃப் யூ குட்மார்னிங்...!".
.
.
.

5 comments:

கண்ணன் ஜே நாயர் said...

வழக்கம் போல் யதார்தாமாய் இருந்தாலும் ஆழ்ந்த கருத்துக்களை பொதிந்து வைத்துள்ளது இந்த சம்பவம் .. இன்று உள்ள கல்வி சூழல் மாணவனின் நிலைமை .. மொத்தத்தில் அட்டகாசம் .. அருமை :))))

சாம்ராஜ்ய ப்ரியன் said...

//"ஆல் ஆஃப் யூ குட்மார்னிங்...!".//

:-)

-Mr.R.Din

ILA(@)இளா said...

பதிவோட உள் அர்த்தம் என்னான்னு சொல்லாம விட்டுட்டீங்களே? பகிர்தல்,..அதாவது குழந்தைங்களை கேள்வி கேட்டா பதில் சொல்லாதுங்க. (ஆர்வமா) அதே சமயம் நாமளும் கூட சேர்ந்து சொன்னா கண்டிப்பா சொல்லுவாங்க. கூடவே சொல்லனும்னு கூட இல்லை, ஆரம்பிச்சு வெச்சா கூட போது, மீதிய அவுங்களே முடிச்சிருவாங்க. இதைத்தான் குழந்தைகளும் எதிர்பார்க்கிறாங்க. இதே பழக்கம் பதின்ம வயசு வரைக்குமே வரும், அதாவது அவுங்க கூட கொஞ்ச நேரம் அவுங்க வயசுக்கே மாறிட்டா எல்லாத்தையும் பகிர்ந்துப்பாங்க. ஒரே வயசுப் பசங்களா நம்மளை மாத்திகிட்டா நாமளும் நண்பன் ஆகிரலாம், உறவும் கூடும்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

good one

பார்த்திபன் நாகராஜன் said...

டீச்சர்களுக்கு வணக்கத்திற்கு பதில் குரு ஸ்தோத்திரம் சொல்ல வேண்டுமா?
என்ன கொடுமை சார் இது?

Post a Comment