Wednesday, October 27, 2010

அழகுக் குறிப்பு

அன்று விடுமுறையாதலால் வீட்டிலேயே இயற்கை முறையில் ஃபேஷியல் செய்வதாக முடிவு செய்தேன்.

வீட்டில் அவரும் இல்லாதது, இன்னும் வசதியாய்ப் போனது.

சமீபத்தில், ஒரு புத்தகத்தில் அதற்கான வழிமுறைகளை வேறு படித்திருந்தது என்னை இன்னுமே தைரியமாய் இந்த முடிவை எடுக்க வைத்திருந்தது.

புத்தகத்தில் சொன்னபடி ஒரு தக்காளி, ஒரு சின்ன வெள்ளரிப் பிஞ்சு, நாலைந்து கறிவேப்பிலை எல்லாம் எடுத்து மிக்ஸியில் அடிப்பதையும், பிறகு எலுமிச்சை ஒரு மூடி அதில் பிழிவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் என் நான்கு வயது மகன் டேனி.

இதையெல்லாம் ஏதோ புதிய சமையல் என்று நினைத்துக் கொண்டிருந்தவன், அந்தக் க்ரீமை எடுத்து என் முகத்தில் பூசத் துவங்கியதும் குழப்பத்துடன் கேட்டான்.

"என்னம்மா பண்ணறே..?".

நான் அவனுக்கும் புரியட்டுமே என்று விளக்கமாய்ச் சொன்னேன்.

"இதுக்குப் பேருதான் ஃபேஷியல்..!".

அவன் அடுத்த கேள்வியைக் கேட்டான்.

"இதை எதுக்கு செய்யணும்..?".

"இப்படி செஞ்சா அம்மா இன்னும் அழகாயிடுவேன்..!".

சொல்லிக் கொண்டே நான் இன்னும் க்ரீமைப் பூசிக் கொண்டிருக்க, என் முகம் முழுவதும் அது கவர் ஆகி அவனுக்கு விநோதமாய்த் தெரிய, அவன் பேசுவதை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

புத்தகத்தில் சொன்னபடி பத்து நிமிடங்களில், காய்ந்துபோன அந்தக் கிரீமை மெல்ல இழுக்க அது தோல் போல உரிந்துவர ஆரம்பித்தது.

அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டேனி, அப்போது தன் மழலை மாறாமல் கேட்டான்.

"ஏம்மா... வேணாம்னு விட்டுட்டியா...?".
.
.
.

5 comments:

Post a Comment