குரு தனது சிஷ்யர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
"ஞானம் அடைவதற்கு மனிதன் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது..!".
ஆர்வத்துடன் ஒரு சிஷ்யன் கேட்டார்.
"அவை என்னென்ன நிலைகள் என்று கூற முடியுமா குருவே..?".
குரு புன்னகைத்த படியே சொன்னார்.
"அவை பாமர நிலை, ஆன்மிக நிலை மற்றும் தெய்வீக நிலை..."
சிஷ்யர் தொடர்ந்து கேட்டார்.
"குருவே பாமர நிலை என்பது என்ன..?".
குரு சொன்னார்.
"அது மிக எளிமையானது. அந்த நிலையில் ஒருவனுக்கு மரங்கள் மரங்களாகவும் மலைகள் மலைகளாகவும் தெரிகிறது..!".
சிஷ்யர் அடுத்துக் கேட்டார்.
"சரி குருவே... ஆன்மிக நிலை என்பது என்ன..?"
குரு தொடர்ந்தார்.
"அது சற்று நுண்மையானது. எதையும் ஆராய்ந்து பார்க்கும் நிலை அது. இந்நிலையில் அவன் பொருட்களின் உள்ளார்ந்து பார்க்கும்போது மரங்கள் நீண்ட நேரம் மரங்களாக இருப்பதில்லை... மலைகளும் நீண்ட நேரம் மலைகளாக இருப்பதில்லை..!".
சிஷ்யர் விடுவதாயில்லை... அவர் கேட்டார்.
"அப்போ தெய்வீக நிலை என்பது என்ன குருவே..?".
குரு தனது புன்முறுவல் மாறாமல் தொடர்ந்து சொன்னார்.
"அதுதான் முழுவதும் உணர்ந்த ஞான நிலை. இப்போது மரங்கள் மீண்டும் மரங்களாகவும் மலைகள் மீண்டும் மலைகளாகவும் அவனுக்குத் தெரிய ஆரம்பிக்கும்...!".
No comments:
Post a Comment