இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஆடும் ஒன்டே மேட்ச் அது.
முதல் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியா ஆட, எல்லாம் முடிந்து கடைசி ஓவரில் கடைசி விக்கெட்டுடன் இந்தியா ஆடிக் கொண்டிருக்கிறது.
கடைசியான இந்த ஓவரில் எடுக்க வேண்டிய ரன்கள் நான்கு.
சுலபமாய் ஜெயிக்க வாய்ப்பு இருந்தாலும், பேட்டிங் சைடில் இருப்பதோ டர்டஜன்சிங்.
மறுமுனையில் நிற்கும் கேப்டன் டேனிக்கு பகீரென்றிருந்தது.
பவுலரான டர்டஜன்சிங் அப்படியொன்றும் பேட்ஸ்மேன் இல்லை என்றாலும், இப்போது எப்படியாவது ஒரு ரன் எடுத்து ஓடி வந்துவிட்டால், மேட்ச்சை ஜெயித்து விடலாம் என்று மனதிற்குள் கணக்குப் போட்டுக் கொண்டு காத்திருந்தான்.
இருப்பது ஆறு பால்... தேவையோ நாலு ரன்.
என்ன செய்யப் போகிறானோ டர்டஜன்சிங்..!
ஓவரின் முதல் பால்.
ஆஸ்திரேலியா பவுலர் பேயாய் ஓடி வந்து பாலைப் போட்டான்.
பவுன்ஸர்.
டர்டஜன்சிங் குனிந்து கொண்டான்.
ரன் இல்லை.
இன்னும் ஐந்து பால்.. நாலு ரன்.
இப்போது பவுலர் போட்டது யார்க்கர்.
கிழே விழ இருந்த டர்டஜன்சிங் ஒருவாறு சமாளித்து நின்றான்.
"அப்பாடா விக்கட் இல்லை..ரன்னும் இல்லை..."
டேனிக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
இன்னும் நாலு பால், நாலு ரன்.
டேனி ஏதோ ஜாடை செய்கிறான்.
டர்டஜன்சிங் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
பவுலர் இப்போது போட்டதோ மகா ஸ்லோ பால்.
தட்டுத் தடுமாறி, டர்டஜன் அந்த பாலைத் தொடுவதற்குள் அது கீப்பர் கைக்குப் போய்விட்டது...ரன் இல்லை.
இன்னும் மூணு பால், நாலு ரன்.
கேப்டன் டேனி, கடுப்புடன் டர்டஜன்சிங்கிடம் சென்று ஏதோ முணுமுணுத்துவிட்டு வந்தான்.
அடுத்த பால்... சற்று வேகமாய் ஸ்டெம்பை நோக்கி சீறிக் கொண்டு வர, டர்டஜன்சிங் சற்றும் யோசிக்காமல் ஸ்டம்ப்பை விட்டு சுத்தமாய் ரெண்டு அடி விலகி நின்றான்.
லட்டுப்போல், பந்து ஸ்டம்ப்பைத் தகர்க்க...
"க்ளீன் போல்ட்...!" ஆஸ்திரேலியர்கள் கத்திக்கொண்டு கொண்டாட்டமாய் ஓட...
இந்தியா தோற்றது.
பெவிலியன் திரும்பும்போது, டேனி பயங்கரக் கோபத்துடன் டர்டஜன்சிங்கைப் பார்த்துக் கேட்டான்.
"ஏண்டா... அப்படிப் பண்ணின...?"
டேனி அப்படிக் கேட்டதும், டர்டஜன்சிங் அப்பாவியாய் டேனியைப் பார்த்துக் கேட்டான்.
"என்னடா இப்படிக் கேக்கற..? நீதானடா சொன்ன - 'பயபடாம வெளயாடு, பீ போல்டுன்னு...' - அதான் போல்டாயிட்டேன்..!".
.
.
2 comments:
ரசனையாக உள்ளது ;)
"க்ளீன் போல்ட்...!” நல்லா இருந்தது
Post a Comment