Friday, October 15, 2010

தியான மண்டப திகில்

பொள்ளாச்சிக்கு அருகில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்திருந்தது அந்த தியான மண்டபம்.

அன்று நான் வேலை செய்த கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த இன்பச் சுற்றுலாவில் அந்த மண்டபம் போவதும் ஒரு நிகழ்வாயிருந்தது.

அந்தச் சுற்றுலா சனிக்கிழமை ஏற்பாடானது.

அன்று பள்ளி விடுமுறை என்பதால், என் நான்கு வயது மகன் டேனி என்னுடன் சுற்றுலா வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

ஆளியாறு அணை, குரங்கு அருவி, பூங்கா எல்லாம் சுற்றிவிட்டு தியான மண்டபம் போவது என முடிவு செய்து அதன்படியே எல்லாம் நடந்து கொண்டிருந்தது.

மாணவர்களுடன் ஒன்றாகக் கலந்துவிட்ட என் மகன், அருவியிலும் அணையிலும் ஆடிய ஆட்டங்கள் எனக்கு உற்சாகத்தை அளிப்பதாகவே இருந்தது.

எல்லாம் முடிந்து, கடைசியில் தியான மண்டபம் வந்தபோதுதான்... உண்மையான பிரச்சினை ஆரம்பமானது.

தியான மண்டபத்தில், அதன் வழிகாட்டி மாணவ மாணவியரை தியானத்தில் எவ்வாறு உட்கார வேண்டும், எவ்வாறு தியானத்தில் ஈடுபட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அமைதியாகத்தான் இருந்தான் டேனி.

ஆனால், எல்லோரும் தியானத்தில் ஆழ்ந்ததும் அந்த அமைதியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மெல்ல சப்தம் செய்ய ஆரம்பித்தான்.

யாரும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிய ஆரம்பித்ததும் அவன் சப்தம் அதிகரிக்க ஆரம்பித்தது.

நான் அவனைச் சட்டென்று தியான மண்டபத்தை விட்டு வெளியே அழைத்து வந்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் 'தியானம் என்றால் என்ன' என்பது குறித்து எல்லாம் அவனுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லிவிட்டுக் கேட்டேன்.

"என்ன நான் சொன்னது எல்லாம் புரிஞ்சதா...?".

புரிந்தது என்று தலையாட்டினான் டேனி.

"இப்பச் சொல்லு டேனி... தியான மண்டபத்துக்குள்ளே ஏன் சத்தம் போடக் கூடாது...?".

நான் கேட்டதும் எல்லாம் புரிந்ததுபோல் தலையாட்டிய படிக் கேட்டுக் கொண்டிருந்தவன் சொன்னான்.

"அதுவா... நான் சத்தம் போட்டா அங்கே தூங்கிட்டு இருக்கறவங்களுக்கு டிஸ்டபென்ஸா இருக்கும்...!".
.
.
.

3 comments:

துளசி கோபால் said...

சரியாப்போச்சு:-)))))

என் மகள் குழந்தையா இருந்தப்ப ஒரு சினிமாவில் விரதம் இருந்தவங்க வாயைக் கட்டிக்கிட்டு தீமிதிச்சாங்க. ஏன் வாயைக் கட்டுறாங்க? சொல்லுன்னு நான் கேட்டேன்.

'இல்லேன்னா ஐயோ ஐயோன்னு கத்துவாங்களே'ன்னாள்.

சென்ஷி said...

@ துளசி டீச்சர் - :)))))

RAVI said...

First class......
To துளசி.. :-)))

Post a Comment