Friday, July 9, 2010

தோள்... தோள்... தோள் மேல...

அத்தியாயம் - 3
கடவுள் சொன்ன பொய்
(கீழே முந்தைய இரு அத்தியாயங்களைப் படித்துவிட்டு வரவும்)


கணேஷ் சாயந்திரம் வீடு திரும்பியபோது, வாசலில் வசந்தியின் செருப்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான்.

எப்போது வந்தாள்?

என்றைக்குமே இல்லாத ஆர்வத்தோடு வசந்தி ஓடோடி வந்து, ஏதோ விருந்தாளியை வரவேற்பது போல் வரவேற்றாள்.

"வாங்க, வாங்க. என்ன இவ்வளவு லேட்?"

"வசந்தி, ஊர்ல இருந்து நாளைக்குத்தானே வரதா இருந்தே?"

"ஆமா. ஆனா என்னமோ நேத்துலர்ந்தே மனசுக்குள்ளே படபடன்னு இருந்தது. அதான் ஒரு நாள் முன்னாலயே புறப்பட்டு வந்துட்டேன். வந்தது நல்லதாப் போச்சு. நான் கேள்விப்பட்டதெல்லாம் நிஜமா?"

கணேஷ் சற்றே துணுக்குற்று அவளைப் பார்த்தான். "என்ன கேள்விப்பட்டே?"

"கடவுள் உங்க முன்னால வந்தாராம். கண்ணாடி குடுத்தாராம்."

"யார் சொன்னா உனக்கு?"

வெக்கென்று மோவாயை தோளில் இடித்துக் கொண்டு முணுமுணுத்தாள். "ஆமா, கட்டின பெண்டாட்டிக்கு கூட யாராவது மூணாவது மனுஷங்க சொல்லித்தான் தெரியணும்."

கணேஷ் அவளை சமாதானப்படுத்த முயன்றான். "நீதான் ஊர்ல இருந்தியே வசந்தி..."

"இல்லேன்னா மட்டும்? ஏன், ஊர்ல இருந்தா போன் பண்ணி சொல்ல முடியாதா? உங்க ஆபிஸ் பூராவும் தெரிஞ்ச விஷயம் எனக்குத் தெரியலை. சே, கேவலம். சரி அதை சீக்கிரமா எடுத்துட்டு வாங்க."

"எதை?"

"அந்தக் கண்ணாடியைத்தான்."

"எதுக்கு வசந்தி?"

"அதுல என்னோட கால் தடத்தை நான் பார்க்கணும்."

கணேஷ் திடுக்கிட்டான். "வசந்தி... அதுல எப்படி உன்னோட கால் தடம்...?"

"ம்ம்... கண்ணாடில உங்க கால் தெரியும். கடவுளோட கால் தெரியும். உங்க மேனேஜரோட புட் ப்ரிண்ட் கூட தெரியும். ஆனா உங்க வாழ்க்கைப் பாதையில் என்னோட கால் இருக்காதா...?"

அவள் கேள்வியில் திணறிப்போய் வாய் குழறினான். "அதில்லை வசந்தி. அது அப்படிப்பட்ட கண்ணாடி இல்லை. என்னோட வாழ்க்கைப் பாதையை காட்டும் கண்ணாடி. என்னோட பாதம் தெரியும். கடவுளோட கால் தடமும் தெரியும். வேற யாரோட பாதத்தையும் அதிலே பார்க்க முடியாது."

"என்னை ஏமாத்தப் பார்க்காதிங்க. அப்ப மேனேஜரோட புட் ப்ரிண்ட் மட்டும் எப்படி தெரிஞ்சதாம்?"

"அந்த ஆள் ஆபிஸ்ல என்ன உளறினாலும் எல்லாரும் ஆமா ஆமான்னு தலையாட்டிட்டுதான் வருவோம். அதைப் போய் பெரிசா எடுத்துக்கிறதா?"

"என்னை ஏமாத்தறதா நினைச்சு உங்களை நீங்களே ஏமாத்திக்காதிங்க. ஆபிஸ் நேரத்தில் உங்களோட தெரிஞ்சது மேனேஜர் கால் தடம்தான். அதே மாதிரி மத்த சமயங்களில் உங்களோட இருந்தது என்னோட பாதங்களாகத்தான் இருக்கும். கண்ணாடியை சீக்கிரமா கொண்டு வாங்க. அதை கன்பர்ம் பண்ணிரலாம்."

"அப்ப கடவுளோட பாதம்?"

"கடவுள் உங்க கிட்டே அது தன்னோட பாதம்ன்னு பொய் சொல்லியிருக்கார்."

"என்ன சொல்றே நீ? கடவுள் பொய் சொல்லுவாரா? ஏன் அப்படிச் சொல்லணும்?"

"குழந்தைங்க நச்சரிப்பு தாங்கலைன்னா சமாளிக்க அதுங்க கிட்ட நாம அப்போதைக்கு மனசுக்குத் தோணின எதையாவது சொல்றதில்லையா? ஞாயித்துக் கிழமை உங்க நச்சரிப்புத் தாங்காம உங்க முன்னாடி காட்சி குடுத்துட்டார். இந்தக் கண்ணாடியையும் குடுத்துட்டார். அப்புறம் சும்மா திரும்பிப் போனா நல்லாருக்காதுன்னு நினைச்சு உனக்கு எல்லாமே நான்தான்னு பெருமையடிச்சுட்டுப் போயிருக்கார்."

"வசந்தி, எனக்கு ஒரே குழப்பமா இருக்கே! அப்போ கஷ்ட காலத்தில் என் கூட இருந்தேன்னு கடவுள் சொன்னதெல்லாம் பொய்யா?"

"ஆமா. உங்களோட அல்லும் பகலும் கூட வந்தது என்னோட பாதமாகத்தான் இருக்கணும்."

கணேஷால் ஆர்வம் தாங்க முடியவில்லை. கண்ணாடியை கொண்டு வந்து அங்குமிங்கும் தட்டித் தட்டி, பாதங்களை உற்று உற்றுப் பார்த்தான். கூடவே வரும் அந்தப் பாதத் தடங்கள் நளினமான பெண்ணின் பாதம் போலத்தான் தெரிந்தது.

"வசந்தி, நீ சொல்றது சரிதான் போலிருக்கு. ஆனா..."

"ஆனா என்ன?"

"தனியா ஒரு ஜோடி பாதம் மட்டும் தெரிஞ்சதே... கஷ்ட காலத்தில் நான்தான் உன்னை சுமந்தேன்னு கடவுள் சொன்னாரே... அதுதான் புரியலை."

வசந்தி புன்னகைத்தாள். ஓடிப் போய் ட்ரன்க் பெட்டிக்குள் குடைந்து ஒரு பழைய டயரியை எடுத்து வந்தாள். "ஆகஸ்ட் பனிரெண்டு 1997-ல் பாருங்க, ஒரு ஜோடி பாதம் மட்டுந்தான் இருக்கும்."

"ஆமா."

"18 ஜூன் 2000?"

"ஆமா வசந்தி. கரெக்ட்."

"28 பிப்ரவரி 2001 டு 14 மார்ச் 2001?"

"ஒரு ஜோடி பாதம் மட்டும் தெரியும் இந்த தேதிகளை எப்படி இவ்வளவு துல்லியமா சொல்றே?"

"அப்போ எல்லாம் நான் கோவிச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டேன். நீங்க மட்டும் தனியா வீட்டில் இருந்திங்க. அதான் ஒரே ஒரு ஜோடி பாதம். 22 செப்டெம்பர் 2003?" - உற்சாகமாக கேட்டுக் கொண்டே கண்ணாடியைப் பார்த்த வசந்தி சட்டென்று பத்ரகாளியாக உருமாறிப் போனாள்.

கணேஷுக்கும் மூச்சடைத்தது போலானது.

அந்த தேதியில் இரண்டு ஜோடி பாதங்கள் தெரிந்தன. அதில் ஒன்று படு நளினமாக இருந்தது.
.
.
.
நெஜம்மாவே
முற்றும்.
.


எழுத்து: சத்யராஜ்குமார்
.



10 comments:

எல் கே said...

hihi

பத்மினி said...

சூப்பர்...

Chithran Raghunath said...

ஹாஹா! சத்யராஜ்குமார் கலக்கிட்டாரு.

Lakshmi said...

Attahasam !!!!!!!!!

Unknown said...

என்னடா.. இப்போதைக்கு முற்றும்னு போட்டிருக்கேன்னு நெனைச்சேன்.
ஒரு கதையே அதிகம்னா இதுல ஒரு தொடர் போட்டு அசத்திட்டீங்களே பத்மினி.
ஒரு சென்டிமென்ட், ஒரு காமெடி, ஒரு க்ரைம்னு இதுல வெரைட்டி வேற.
இதுவரை யாரும் செஞ்சிருக்க மாட்டாங்கன்னு நெனைக்கிறேன்.
அசத்துங்க.

Unknown said...

சத்யராஜு... இது சூப்பரோ சூப்பரு....!

Mohan said...

கடவுள் நேரில் வந்தால் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் :-)

அறிவிலி said...

சூப்பரு...

Sujai said...

கலக்கிடீங்க சார் :)
இனிமேல் அவரு கடவுள் கிட்ட பொலம்ப மாட்டாரு :)

அரபுத்தமிழன் said...

அண்ணன் பாபாவின் வலைப்பூ மூலம் இன்றுதான் இங்கு வருகிறேன்.
அனைத்துப் பதிவுகளும் சும்மா அசத்தல் ரகம். தொடருங்கள், பின் தொடர்கிறோம்.

Post a Comment