Wednesday, July 21, 2010

கடவுளின் பிறந்தநாள்

துறவி ஒருவருக்கு இறை வழிபாட்டில் மிகுந்த பிரியம்.
ஆனால், அவருக்கு எந்த மார்க்கத்தில் கும்பிட்டால் இறைவனை அடையலாம் என்று குழப்பம்.
ஒருநாள் இரவு... இதே எண்ணத்துடன் தூங்கும்போது அவர் ஒரு கனவு கண்டார்.
கனவில் அவர் தேவலோகத்தில் இருக்கிறார்.
அங்கே வண்ண விளக்குகளும் வான வேடிக்கைகளுமாய் ஒரே குதூகலமாய் இருக்கிறது தேவலோகம்.
துறவி கேட்டார்,"என்ன விசேஷம்...?"
அருகிலிருந்தவர் சந்தோசமாய் சொன்னார்,"தெரியாதா... இன்று கடவுளின் பிறந்தநாள்...!இன்னும் சற்று நேரத்தில் அவர் ஊர்வலம் வர இருக்கிறார்...!".
துறவிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்.
"கடவுளுக்கே பிறந்தநாளா...? சரி பார்ப்போம்...!".
நினைத்துக் கொண்டிருக்கும் போதே வாத்தியங்கள் ஒலிக்க, ஜெயகோஷங்கள் முழங்க ஒரு ஊர்வலம் வந்தது.
கூட்டம் மிகப் பெரிதாயிருக்க கூட்டத்தின் நடுவே அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஒருவர் மொட்டைத் தலையுடன் ஒருவர் வந்தார்.
"இவர்தான் கடவுளா...?" துறவி கேட்டார்.
"இல்லை.."என்ற அருகிலிருந்தவர் ஒரு பெரிய மதத்தின் பெயரைச் சொல்லி 'அதன் தலைவர் இவர்... உடன் வருபவர்கள் அவரைப் பின்பற்றுபவர்கள்...!" என்றார்.
சற்று நேரத்தில் இன்னொரு ஊர்வலம் வந்தது.
இப்போது ஒருவர் ஊர்வலத்தின் மத்தியில் ஒரு குதிரை மீது அமர்ந்து வந்தார்.
நீண்ட சடாமுடியும் பெரிய தாடியுமாயிருந்த அவரை வேறொரு மதத்தின் தலைவர் என்று துறவியிடம் சொன்னார் அருகிலிருந்தவர்.
அடுத்தடுத்து ஏராளமான ஊர்வலங்கள்.
சிலவற்றில் பத்திருபது பேர்கூட இல்லை.
சிலவற்றில் லட்சக் கணக்கானவர்கள் கூட்டம்.
நாள் முழுவதும் இது நடந்துகொண்டே இருந்தது.
எல்லாம் முடிந்து கடைசியில் ஊர்வலமில்லாமல் ஒரேயொரு குதிரை தள்ளாடியபடி மெல்ல நடந்து வந்தது.
அதன் மீது ஒரு வயதான நபர் அமர்ந்து இருந்தார். அவர் தோற்றமே பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.
துறவி கேட்டார்,"இவர் எந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவர்..?".
"என்னது..?" அருகிலிருந்தவர் குரல் ஆச்சர்யத்துடன் கீச்சிட்டது.
"இவரைத் தெரியவில்லையா...இவர்தான் கடவுள். இவருக்குத்தான் இன்று பிறந்தநாள்.!".
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார் துறவி. கனவு கலைந்தது.
அன்றோடு மார்க்கங்களைப் பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டு கடமைகளை அமைதியாய் கவனிக்க ஆரம்பித்தார் துறவி.

3 comments:

வெங்கட்ராமன் said...

இது கதையல்ல - நிஜம்.
இன்று மக்கள் கடவுளைத்தேடாமல் மதங்களை மட்டுமே தேடுகின்றனர். உன் மதத்தினை விட என் மதமே உயர்ந்தது. அதனால் என்மதத்தில் சேர்ந்துவிடு என்று கட்டாயப்படுத்தும் மதம் என்ற மதம்பிடித்தவர்களே அதிகம் இருக்கின்றார்களே தவிர, அனைத்து உயிர்களுமே ஆண்டவனின் அவதாரம் தான் என்று கருதி மற்றவர்களுக்கு சேவை செய்யும் மனித நேயம் மேற்சொன்ன மதம்பிடித்தவர்களிடம் இல்லாமல் போனது வருத்தத்திற்குறியதே.

Unknown said...

அருமை.... உண்மை...!!!!

சந்துரூ said...

அன்பே சிவம்.

Post a Comment