Saturday, July 24, 2010

ஐம்பது பைசா


டேனி அன்றைய தினத்தை எங்களுக்கு திகிலுடன் தான் துவக்கினான்.


அவன் அப்பா ட்ரஸ் மாற்றும்போது கீழே விழுந்த ஒரு ஐம்பது பைசா நாணயத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

அவர் பதறி, "துப்புடா... துப்புடா...!!" என்று கத்திக்கொண்டே வருவதற்குள், இப்போதுதான் வட்டமாய் வாட்டமாய்ச் சின்னதாய் இருக்கிறதே... அந்த ஐம்பது பைசாவை அவன் விழுங்கியே விட்டான்.

அவர் மேலும் பதறி,"முழுங்கிட்டான்.. முழுங்கிட்டான்.." என்று வீட்டையே ரணகளப் படுத்திவிட்டார்.

"கொஞ்சம் பொறுமையா இருங்க.." என்ற நான் டாகடருக்குப் போன் செய்தேன்.

டாக்டர் விக்குகிறானா, மூச்சுத் திணறுகிறதா என்பதெல்லாம் விசாரித்துவிட்டு, 'பயப்பட ஒண்ணுமில்ல... பதினோரு மணிக்கு ஹாஸ்பிடல் வந்திடுங்க...!' என்று போனை வைத்துவிட்டார்.

அதற்குள் அவர் ஊரிலிருக்கும் அவருடைய அம்மாவிற்குப் போன் செய்து விசாரித்து விட்டார்.

அவருடைய அம்மாவும் பதறாமல், 'கொஞ்ச நாள் விளக்கெண்ணெயும் பூவன் பழமுமாகக் கொடுத்தால் தன்னால வந்துடப் போகுது...!' என்று சொன்னதும்தான் சற்றே ஆசுவாசமானார்.

ஆனால், இதற்கிடையில் இவர் பண்ணிய ஆர்ப்பாட்டத்தில் மிரண்டு அழ ஆரம்பித்த டேனியோ இன்னும் நிறுத்தாமல் அழுதுகொண்டிருந்தான்.

எவ்வளவு சொல்லியும் கொஞ்சியும் அவன் விடாமல் அழுது கொண்டிருக்கவே டேனியின் அப்பா அவனுடைய கவனத்தைத் திசைதிருப்ப ஒரு மேஜிக் செய்வதாய் ஆரம்பித்தார்.

பாக்கெட்டில் இருந்து டேனி விழுங்கியதைப் போலவே ஒரு சிறிய புது ஐம்பது பைசாவை எடுத்து வைத்துக் கொண்டு டேனியைக் கூப்பிட்டார்.

"டேனி, இங்க பாரு... அப்பா இப்ப ஒரு மேஜிக் பண்ணுவேனாம். டேனி அழுகாமப் பார்ப்பானாம்...! இப்ப, அப்பா டேனி முழுங்குன காசை எப்படி எடுக்கப் போறேன் பாரு...!" என்றவர், அந்த இன்னொரு ஐம்பது பைசாவை வைத்திருந்த கையை அவன் வயிற்றருகில் கொண்டு சென்று,"ஜீபூம்பா..." என்று சொல்லி கையை ஒரு ஆட்டு ஆட்டி, மேலே தூக்கி... அவன் முகத்தருகே கொண்டு சென்று அந்த ஐம்பது பைசாவை டேனியிடம் காட்டினார்.

அவர் மேஜிக் செய்ய ஆரம்பித்ததுமே அழுகை குறைந்த டேனி, ஆச்சர்யமும் ஆர்வமுமாய் அவன் அப்பா கையிலிருந்த புது ஐம்பது பைசாவையே பார்த்துக் கொண்டிருந்தவன் டப்பென்று அந்த ஐம்பது பைசாவையும் பிடுங்கி வாயில் போட்டு சடாரென்று விழுங்கிவிட்டு சொன்னான்.

"எங்கே இன்னொருவாட்டி எடு பார்போம்...!".
.
.
.

5 comments:

சென்ஷி said...

ஹய்யய்யோ :(

SRK said...

125-க்கு வாழ்த்து!

Anonymous said...

:) super

KARTHIK said...

:-))

Chithran Raghunath said...

வாழ்த்துக்கள்.

Post a Comment