அத்தியாயம் - 1
கணேஷ் ஒரு கம்பெனியின் புரொடக்ஸன் சூப்பர்வைசர்.
ஐம்பத்தி ஐந்து வயதுக்கு கொஞ்சம் அதிகம்.
இன்னும் ஓரிரு வருடங்களில் ரிட்டயர் ஆகப் போகிறான்.
கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து வருடங்கள் ஒரே கம்பெனியில் ஒரே வேலை பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டான்.
முன்னேற்றமே இல்லை, வாழ்க்கையிலும் நிம்மதி இல்லை.
வெறுத்துப்போய் ஒரு நாள் கடவுளிடம் முறையிட்டான்.
முறையிடுதல் என்றால் அப்படி இப்படி இல்லை.
அவன் புலம்பல் தாங்க முடியாமல், கடவுளே நேரில் வந்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கணேஷ் கடவுளிடம் கேட்டான்.
"கடவுளே... நான் என்ன பாவம் செய்தேன்...? என் வாழ்க்கையை ஏன் இப்படி வெறுப்பானதாய் ஆக்கினாய்...?".
கடவுள் பதில் அளித்தார்.
"கணேஷ்...கஷ்டம் யாருக்குத்தான் இல்லை. ஆனால், நீதான் எனது செல்லப்பிள்ளை தெரியுமா...?".
கணேஷ் கேட்டான்.
"எப்படி நம்புவது...?".
கடவுள் ஒரு கண்ணாடியை நீட்டினார்.
"இதோ பார்... இது உன் வாழ்க்கைக் கண்ணாடி. இந்தக் கண்ணாடியில் தெரிவது உன் வாழ்க்கைப் பாதை. உன் வாழ்க்கைப் பாதை முழுவதும் தெரிவது உன்னுடைய ஜோடிப் பாதங்கள். அதனுடன் கூடவே தெரிகிறதே, மற்றொரு ஜோடிப் பாதங்கள்... அதுதான் என்னுடையது. இப்போது தெரிகிறதா... நீ என் செல்லப் பிள்ளை என்பது..?".
கணேஷ் நம்பமுடியாமல் அந்தக் கண்ணாடியையே பார்த்தான்.
கடவுள் சொன்னதுபோல் வாழ்க்கை முழுவதும் அவனுடனே நடந்து வந்திருக்கிறார்.
திருப்தியுடனே பார்த்துக் கொண்டு வந்தவன், கடவுளிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்டான்.
"கடவுளே... சில இடஙகளில் ஒரு ஜோடிப் பாதம் மட்டும் தெரிகிறதே... அது என்ன...?".
கடவுள் பதில் சொன்னார்.
"அது உன்னுடைய கஷ்டகாலங்கள்...!".
கணேஷ் கடவுளைச் சந்தேகத்துடன் கேட்டான்.
"ஏன் கடவுளே.. கஷ்ட காலங்களில் மட்டும் ஒரு ஜோடிப் பாதங்கள் தெரிகிறது..? அந்தக் காலங்களில் என்னை மட்டும் தவிக்க விட்டுவிட்டு நீங்கள் எங்கே போனீர்கள்..?".
கடவுள் புன்னகைத்தபடி பதில் சொன்னார்.
"நன்றாகப் பார் கணேஷ். கஷ்டகாலங்களில் கீழே தெரிவது உன் பாதங்களல்ல... என் பாதங்கள். அந்தக் கஷ்டகாலங்களில் எல்லாம், உன்னை என் தோள்களில் தூக்கிச் சுமந்தபடி நான் நடந்து கொண்டிருந்தேன்...!".
.
.
.
தொடரும்...
3 comments:
:)) நல்ல கருத்து , சிந்தனை உள்ள கதைங்க.
Excelllllenttt
அருமை...!
Post a Comment