Friday, July 23, 2010

வியாபாரம்

சின்னப்பன் செட்டி என சென்னையில் அழைக்கப்படும் சின்னப்பனின் தொழில் ஹோல்சேல் வியாபாரம்.
'செட்டி அன் கோ' என்றால் தெரியாதவர் சென்னைக்குப் புதுசு என்று அர்த்தம்.
அவர் குடும்பம் பரம்பரையாய் வியாபாரத்தில் பெயர் பெற்றது.
கடல் கடப்பது மதவிரோதமாய் இருந்த காலத்திலேயே கடல்கடந்து வியாபாரம் செய்தவர்கள் அவர்கள்.
ராஜாக்கள் காலத்திலும் வெள்ளைக்காரன் காலத்திலும் விடாமல் வியாபாரம் செய்து பொருளீட்டியது அவர் வம்சம்.
எல்லாம் சின்னப்பன் காலத்தில் தொலைந்துவிடும் போலிருக்கிறது.
சின்னப்பனுக்கு சமீபமாய் வியாபாரத்தில் பயங்கர நஷ்டம்.
நஷ்டத்தைச் சரிக்கட்டப்போய் இன்னொரு நஷ்டம்... அதைச் சரிக்கட்ட இன்னொரு நஷ்டம்... என வளர்ந்து வளர்ந்து மொத்தத்தில் மூழ்கிப்போகும் நிலைக்கு வந்துவிட்டார்.
எல்லாம் கணக்குப் பார்த்ததில் மிஞ்சியது ஒன்றுமில்லை.
வீட்டை விற்று, காட்டை விற்று கடைசியில் போன வாரம் கார் வரை விற்றாகிவிட்டது.
காரை விற்றதிலிருந்து, தாத்தா உபயோகப்படுத்திய ஒரு வெள்ளைக்காரன் காலத்து தகர டப்பா காரைத்தான் உபயோகப்படுத்தி வருகிறார்.
அதுவோ பெட்ரோலைக் குடித்துத் தள்ளுகிறது.
அதன் சத்தமோ ரோட்டில் சின்னப்பனின் மானத்தை வாங்கிவிடுகிறது.
இத்தனை காலம் சேர்த்த மரியாதை போயாச்சு. மானம் போயாச்சு. பணம் போயாச்சு.
சின்னப்பனிடம் இனிப் போவதற்கு ஒன்றுமில்லை.
இருந்த காசையும் கார் பெட்ரோலாய்க் காலி பண்ணிவிட இப்போது ஊருக்குப் போவதற்குக்கூடப் பைசா இல்லை.
ராத்திரிப்பூராவும் யோசித்தார்.
இந்தக்காரை வாங்குபவன் பேரீச்சம்பழம் தராமல் ஒரு ரெண்டாயிரம் ரூபாய் தந்தால் சத்தம் காட்டமல் உறுக்கு ஓடிவிடலாம்.
ஒரு இருபதாயிரம் தந்தால் ஊரில் ஒரு பொட்டிக்கடை போட்டு 'ஐயா வணக்கம்' என்று முதலில் இருந்து ஒருமுறை விளையாடிப் பார்க்கலாம்.
யோசித்துக் கொண்டே உறங்கிவிட்டார்.
காலையில் வாசலில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருக்கும்போது தெருவில் வாக்கிங் போய்க்கொண்டிருந்த ஒருத்தர் வந்தார்.
"சார்... நான் பக்கத்துத் தெருவில்தான் இருக்கிறேன். ராஜேஸ்வரி மில்லோட ஓனர். பழைய வின்டேஜ் கார்கள் சேகரிப்பது என்னோட ஹாபி. நீங்க இந்தப் பழைய ஆஸ்டின் காரை விக்கறதா இருந்தாக் கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்...!".
சின்னப்பனுக்குள் ஒரு சந்தோசம் வந்து உட்கார்ந்தது.
'இந்த காரை வாங்கறதுக்குக் கூட ஊருக்குள்ள பைத்தியங்கள் இருக்குதா என்ன...?' என்று யோசித்தபடியே கேட்டார்.
"என்ன விலை தருவீங்க...?".
வந்தவர் லேசாய் இழுத்தபடி சொன்னார்.
"ஒரு ஐம்பதாயிரம்னா முடிச்சுடலாம்...!".
சின்னப்பன் கொஞ்சம்கூட யோசிக்காமல் சடாரென்று சொன்னார்.
"சார் ஒரே ரேட்டு... ரெண்டு லட்சம்னா நாம மேல பேசலாம்
...!".

3 comments:

வார்த்தை said...

சின்னப்பனின் அடுத்த ரவுண்ட் ஆரம்பித்துவிட்டது..

Unknown said...

அப்ப... ஐயா வணக்கத்திலருந்து மறுபடிஆரம்பிப்பாருன்னு சொல்லுங்க...!

Aba said...

அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பிச்சிடிச்சு....

Post a Comment