Tuesday, May 18, 2010

காவியாவின் கணவன்



காவியா இன்று இதற்கொரு முடிவு கட்டியே தீரவேண்டும் என்று முடிவு செய்தாள்.

கல்யாணம் ஆன ஒரு மாதத்திற்குள்ளாகவே இப்படி ஒரு பிரச்னை வரும் என அவள் நினைக்கவில்லை.

அதுவும் கேவலம் ஒரு ஒண்ணரை ரூபாய் முட்டையால்.

கல்யாணம் ஆன போதே மாமியார் சொல்லியிருந்தாள்.

"அவனுக்கு சாப்பாட்ல டெய்லி ஒரு முட்டை சேத்துக்கணும். அதுவும் ஆம்லெட் இல்லாட்டி அவிச்ச முட்டையாத்தான் இருக்கணும்...."

ஆனால், இவள் கணவனோ முட்டையிலேயே ஆயிரம் குறை கண்டுபிடிப்பவனாய் இருந்தான்.

முட்டையை அவித்து வைத்தால் ஆம்லெட் போட்டிருக்கலாம் என்பான்.  ஆம்லெட் போட்டிருந்தாலோ அவித்திருக்கலாமே என்பான்.

இதுவே தினசரி தொடர காவியாவின் மனதுக்குள் முட்டையால் ஒரு பெரும் புயல் வீச ஆரம்பித்தது.

ஒரு மாதம்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் இன்று பொறுமை இழந்துவிட்டாள்.

கணவன் சாப்பிட வந்ததும் காலையிலேயே முடிவு செய்தபடி ஒரு முட்டையை அவித்தும் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டும் வைத்துவிட்டு கணவன் என சொல்கிறான் என்று பார்க்கக் காத்திருந்தாள்.

அவனோ என்றுமில்லாத ஆச்சர்யமாய் வாயே திறக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

தாங்க முடியாமல் காவியாவே,"என்னங்க முட்டையை அவிச்சும் வச்சிருக்கேன், ஆம்லெட் போட்டும் வச்சிருக்கேன்.. நீங்க அதைப்பத்தி ஒண்ணுமே சொல்லலியே...!" என்று வாயைத் திறந்து கேட்டும் விட்டாள்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவன் நிமிர்ந்து கோபமாய் சொன்னான்.

"என்னத்த சொல்றது.? உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியப் போறதில்ல...!"

காவியா குழம்பிப் போனாள்,"இதுல என்னங்க தப்பு...?"

கணவன் தனது கோபம் குறையாமலே பதில் சொன்னான்.

"என்ன தப்பா...? அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!'

காவியா இப்போது மயக்கம் போடாமலிருக்க ட்ரை பண்ணிக்கொண்டிருக்கிறாள்.
.
.

3 comments:

மங்களூர் சிவா said...

/
கணவன் தனது கோபம் குறையாமலே பதில் சொன்னான்.

"என்ன தப்பா...? அவக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போடு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!'
/

Super!

அமர பாரதி said...

அருமை. சொந்த சரக்கோ அல்லது பிறருடையதோ, மொத்தத்தில் அருமை.

Unknown said...

நன்றி...!

Post a Comment