ஒரே ஒரு காட்டிலே, ஒரே ஒரே ஒரு கிணறாம்... அந்தக் கிணற்றுக்குள்ளே எக்கச்சக்கமான தவளைகளாம்.
தங்களுக்கு என ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுப்போம் என்று முடிவு செய்தனவாம் அந்தத் தவளைகள். அதே கிணற்றில் இருந்த ஓர் ஆமைக்கு பட்டம் சூட்டி கோஷம் போட்டனவாம் அந்த ஆமைகள். ஆமையோ, தவளைகளின் நன்மைக்காக உருப்படியாக எதுவும் செய்யாமல், சோம்பேறித்தனமாகவே இருக்க... கொஞ்ச நாளிலேயே சலித்துவிட்டதாம்.
"சுறுசுறுப்பான ஒரு ராஜாதான் வேண்டும்" என்று முடிவெடுத்து, ஒரு பச்சோந்தியைப் பதவியில் அமர்த்தினவாம். நிமிடத்துக்கு ஒரு வண்ணத்துக்கு மாறி, தவளைகளுக்கு நன்றாகவே பொழுதுபோக்கு காட்டிய பச்சோந்தி, அந்தத் தவளைகள் அசந்த நேரம் பார்த்து, அவற்றுக்கு இரையாக வேண்டிய பூச்சிகளை எல்லாம் தானே பிடித்து தின்ன ஆரம்பித்துவிட்டதாம். பட்டினியில் துடித்த பாவப்பட்ட தவளைகள், "பூச்சிக்கு ஆசைப்படாத பெரிய ஜீவராசியாகத் தேர்ந்தெடுத்து அதிகாரத்தை அவர் கையில் கொடுப்போம்" என்று வானத்தைப் பார்த்து பலமாக யோசித்தனவாம்.
அந்த நேரம் பார்த்து, ஜிவ்வென்று வந்து அங்கே இறங்கியதாம் ஒரு நாரை. "ஆஹா, இவர்தான் எத்தனை வெள்ளை! இவர் அலகுதான் எத்தனை உறுதி! சிறகுதான் எத்தனை அகலம்! தூய்மையும், பலமும்,அசாத்திய திறமையும் கொண்ட இவரை ராஜாவாக்கினால், நமக்கு விடிவுகாலம் வந்து விடும்!" என்று நம்பிக்கையோடு நாரையைத் தேர்ந்தெடுத்தன அந்தக் கிணற்றுத் தவளைகள்.
இந்த முறை அசாத்திய மாற்றம்! தவளைகளுக்குப் போட்டியாக பூச்சிகளை யாரும் தின்னவில்லை. அதேசமயம், நாளுக்கு நாள் தவளைகளின் எண்ணிக்கையே குறைய ஆரம்பித்தன!
சும்மா கிடந்த ஆமை ராஜா, தங்கள் இரையைப் பிடுங்கித் தின்ற பச்சோந்தி ராஜா, தவளையே தின்கிற நாரை ராஜா... இவர்களுக்கு அடுத்தபடியாக எந்த புது ராஜாவைத் தேடுவது?" என்று மிச்சம் மீதியிருந்த தவளைகள் கவலையோடு கூடி உட்கார்ந்து, மறுபடி யோசிக்க ஆரம்பித்தனவாம்.
நீதி: கதரோ, கதிரோ, காவியோ... ராஜாக்களை மாற்றிக்கொண்டே இருந்தாலும், தவளைகளின் தலைவிதி மட்டும் மாறுவதே இல்லை..!
.
.
.
நன்றி: விகடன்
4 comments:
அருமையான கதை. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சொல்லி தெரியவே வேண்டாம்...
அருமை...
//நீதி: கதரோ, கதிரோ, காவியோ... ராஜாக்களை மாற்றிக்கொண்டே இருந்தாலும், தவளைகளின் தலைவிதி மட்டும் மாறுவதே இல்லை..!//
Fact and fate.. :(
நம் தமிழ்நாட்டு மக்களும்தான் ......கிணற்றுதவளை தான்.....
neenga enda Rajava patti solaringa ???
Post a Comment