மழையின் காரணமாக விடுமுறை என்பதால், இரண்டாம் வகுப்புப் படிக்கும் என் மகன் டேனியை ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்ப அழைத்து வந்து கொண்டிருந்தேன்.
எதிர்பாராத விடுமுறை என்பதால் மிகுந்த சந்தோஷத்துடன் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தவன், அந்த டெலிபோன் கம்பங்களைப் பார்த்ததும் திடீரென என்னிடம் திரும்பிக் கேட்டான்.
"ஏம்மா... அந்த வயர்ல எல்லாம் கரண்ட் போகுதாம்மா..?".
நான் தமிழ் படித்தவள்.. கல்லூரியில் விரிவுரையாளர்.
எனக்கு அது டெலிபோன் சம்பந்தமான கம்பங்கள் என்று தெரியுமேயொழிய, அதில் கரண்ட் போகுதா... இல்லை, வெறும் சிக்னல்கள் மட்டும் போகுதா என்பது தெரியாது என்பதால் சொன்னேன்.
"எனக்கு சரியாத் தெரியலையேடா...!".
டேனி ஒன்றும் சொல்லாமல், அவனது சாலையோர விளையாட்டுகளில் கவனம் ஆனான்.
கொஞ்ச நேரம்தான்... இப்போது ஒரு சரியான மின்னலைத் தொடர்ந்து இடி இடிக்க அடுத்த கேள்வியைக் கேட்டான்.
"ஏம்மா... இந்த மின்னல், இடி எல்லாம் எப்படிம்மா வருது..?".
உண்மையில் எனக்கு சந்தேகமாக இருந்ததால் அவனிடம் சொன்னேன்.
"எனக்குத் தெரியலையேடா...!".
அடுத்து "ஓணான்ல கேர்ள்ஸ்னு எப்படிம்மா தெரிஞ்சுக்கறது..?" போல அவனது சந்தேகங்கள் எல்லாம் விதவிதமாய், வீடு வந்து சேரும்வரை வந்து கொண்டே இருந்தாலும், நான் சொன்ன பதில் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
"எனக்குத் தெரியலையேடா...!".
'எப்படித்தான் இவனுக்கு இத்தனை சந்தேகங்கள் வருது... தெரியலையே?' என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறக்கையில் அவன் கேட்டான்.
"ஏம்மா... நான் ரொம்ப கேள்வி கேட்டு உன்னைத் தொந்தரவு பண்ணறேனா..?".
டேனி கேட்டதும் சந்தோஷமாய்,"இல்லைடா கண்ணா...!" என்று சொன்னவள் தொடர்ந்து சொன்னேன்.
"நீ நிறைய கேள்விகள் கேட்டாத்தான், நிறையா கத்துக்க முடியும்...!".
.
.
.
No comments:
Post a Comment