Thursday, August 19, 2010

மூன்றாவது பதிப்பு

டெட்சுகன் ஒரு ஆரம்ப ஜென் குருக்களில் ஒருவர்.

அவர் ஜென் சூத்திரங்களை சீன மொழியிலிருந்து ஜப்பானிய மொழியில் மொழி பெயர்க்க வேண்டுமென்று முடிவு செய்தார்.

அதற்குத் தேவையான பெரும் பணத்தை சேகரிக்க ஜப்பானின் கிராமங்கள், நகரங்கள் எனப் பல இடங்களுக்குச் சென்று, பலரையும் சந்தித்து நிதி திரட்டினார்.

தேவையான நிதி திரட்டுவதற்குள் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஓடிவிட்டன.

நிதி சேர்ந்த சமயம், உஜி நதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கால் மக்கள் தமது வீடு,வாசல்,உடைமைகளை இழந்து உணவின்றித் தவித்தனர்.

டெட்சுகன் தாம் திரட்டிய பொருள் அனைத்தையும் மக்கள் மறுவாழ்விற்காகச் செலவிட்டார்.

மீண்டும் புதிதாக நிதி திரட்டத் தனது பயணத்தைத் துவக்கினார்.

மீண்டும் பல ஆண்டுகள் கழிந்து ஒருவாறு பணம் சேர்ந்த சமயம்... நாடெங்கும் கொள்ளை நோய் பரவியது.

இந்த முறையும் டெட்சுகன் மக்கள் உயிரைக் காக்க தான் திரட்டிய பணத்தைச் செலவிட்டார்.

பின்னர் மூன்றாம் முறை, அடுத்த இருபது ஆண்டுகள் பொருள் சேர்த்து தனது லட்சியப்படி சீன சூத்திரங்களை ஜப்பானிய மொழியில் ஏழாயிரம் படிகள் எடுத்தார்.

அதன் முதல்பிரதி கியோடோ நகரின் ஓபகு மடாலயத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

அதனைப் பார்வையிட்ட ஜென் குருமார்கள் தமது சீடர்களிடம்,"டெட்சுகன் வெளியிட்ட இந்தப் பதிப்பு... மூன்றாவது பதிப்பு. இதைவிடக் கண்ணுக்குத் தெரியாத அந்த முதல் இரண்டு பதிப்புகளும்தான் அற்புதமானவை!" என்று மகிழ்வுடன் சொன்னார்கள்.
.
.
.

1 comment:

VELU.G said...

கருத்துள்ள கதை

Post a Comment