இது நடந்து ஒரு மாதம் இருக்கும்.
என் பக்கத்து வீட்டில் ஒரு நள்ளிரவில் திருடு போய்விட்டது.
அதுவும் நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.
பக்கத்து காம்பவுண்டில் இருந்தது சுமித்ராவின் குடும்பம்.
அன்று வெளியூர் போவதாக என்னிடம் சொல்லிவிட்டுதான் கிளம்பினார்கள்.
அப்போது, இரவு ஒரு ஒன்பது மணி இருக்கும்.
ட்ரெயினுக்கு நேரமாச்சு என்று அவசர அவசரமாகக் கிளம்பிப் போனார்கள்.
இரவு பதினோரு மணிப்போல் பார்த்த போது அவர்கள் வீட்டில் லைட் எரிந்துகொண்டிருந்தது.
டீவியில் படம் ஓடிக் கொண்டிருந்தது.
சரி, ட்ரெயின் மிஸ் ஆகிவிட்டதுபோல... காலையில் விசாரித்துக் கொள்வோம் என்று தூங்கப் போய்விட்டேன்.
காலையில் எழுந்து பார்த்தால் கதவு தாழ்ப்பாளை நெம்பி யாரோ உள்ளே போய்த் திருடி இருப்பதாகத் தெருவே களேபரமாய் இருந்தது.
பிறகு, சுமித்ராவின் கணவருக்குப் போன் செய்து, அவர் வந்து, போலீசுக்குப் புகார் எல்லாம் கொடுத்து ...
அது ரெண்டு மூணு நாட்கள் ஆகிவிட்டது.
ஒருநாள், சுமித்ராவின் வீட்டுக்கு வந்த போலீஸ் என்னையும் விசாரித்தது.
நான் நடந்தவைகளைச் சொல்ல, அதை ஒருமுறை ஸ்டேஷனுக்கு வந்து எழுதித் தர முடியுமா என்று கேட்டார்கள்.
"தாரளமாய்..." என்ற நான் மறுநாள் என் நான்கு மகன் டேனியையும் அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்குப் போனேன்.
நான் எழுதிக் கொண்டிருக்கும்போது, அங்கிருக்கும் 'வான்டட் கிரிமினல்'களின் போட்டோக்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த டேனி கிளம்பும்போது அந்த இன்ஸ்பெக்டரிடம் கேட்டான்.
"அங்கிள்... இந்த போட்டோல இருக்கறவங்க எல்லாம் யாரு...?"
அந்த இன்ஸ்பெக்டர் என் மகனிடம் மிகுந்த கனிவுடன் பதில் சொன்னார்.
"அவனுக எல்லாம் ரொம்பக் கெட்ட பசங்க....!".
டேனி லேசான குழப்பத்துடன் திரும்பி,"எதுக்காக கெட்ட பசங்களோட போட்டோவ இங்க மாட்டி வச்சிருக்கீங்க...?".
இன்ஸ்பெக்டர் சொன்னார்.
"அவனுகளைப் பாத்ததும் தேடிப் பிடிக்கறதுக்காகத்தான் அவனுகளோட போட்டோவை இங்கே மாட்டி வச்சிருக்கோம்...!".
இன்ஸ்பெக்டர் சொன்னதும் டேனி தனது சந்தேகம் தீராமல் அவரிடம் மீண்டும் கேட்டான்.
"ஏன் அங்கிள்... அவங்களை இப்பத் தேடிப் பிடிக்கறதவிட இந்த போட்டோவ எடுக்கும் போதே பிடிச்சிருக்கலாமே அங்கிள்...!".
.
.
.
4 comments:
நல்லாக் கேட்டான் போங்க! குழந்தைகளின் உலகமே அலாதியான சுவாரஸ்யம் கொண்டது தான்!
Super.
:)
ஹாஹாஹா :)))
Post a Comment