நீலிமா என்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு ஆசிரியை.
இன்னும் சொன்னால் எனக்கு மிக நெருங்கிய தோழி.
அவள் மிகச் சமீபமாய் குழந்தைப் பேறு அடைய இருக்கிறாள்.
நாட்கள் நெருங்கி வரவர அது பெண் குழந்தையாய் இருக்குமோவென்று அவளுக்கு பயம் அதிகமாகிக் கொண்டே வந்தது.
பெண் குழந்தை மீது அவளுக்கு ஒன்றும் வெறுப்பு இல்லை என்றாலும், அதை வேண்டாம் என்பதற்கு ஒரு ஆச்சர்யமான காரணம் இருந்தது அவளிடம்.
நீலிமாவின் வீட்டில் யாருக்கும் ஆண் குழந்தை பிறந்ததே இல்லை என்பதுதான் அது.
அவளுடன் பிறந்தவர்கள் இருவரும் பெண்கள்.
அவள் அம்மாவுக்கும் உடன் பிறந்த நான்கும் பெண்கள்.
அவள் பாட்டிக்கும் பாட்டியின் அம்மாவிற்கும் உடன் பிறந்தது எல்லாம் பெண்கள் என அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் பெண்களாய்ப் பிறந்து வந்ததுதான் அந்தப் பரம்பரை சோகம்.
இது பழைய கதை என்றால், சமீபமாய்த் திருமணமான நீலிமாவின் அக்கா இருவருக்கும் சொல்லி வைத்தது போல் ஆளுக்கு இரண்டு பெண் குழந்தைகளே.
எனவே... நீலிமா தனக்கு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட ஆரம்பித்தாள்.
முதலில் சாதரண ஆசையாய்த் தெரிந்த இது பின்னர் வளர்ந்து வளர்ந்து வெறியாய் மாற ஆரம்பித்துவிட்டது.
கடைசி கடைசியாய்... பெண் குழந்தை இவள் ஏற்றுக்கொள்ள மாட்டாளோ என பயப்படும் அளவுக்கு அவளது ஆண்குழந்தைப் பித்து தலைக்கேறிப்போய்க் கிடந்தது.
அன்றும் அப்படித்தான் நீலிமா வேலைக்கு வந்து கொஞ்ச நேரத்தில் அவளுக்கு பிரசவ வலி வந்துவிட்டது.
ஆம்புலன்ஸ் வந்து கிளம்பும்வரை என் கையைப் பிடித்துக் கொண்டு 'பையனாப் பிறக்கணும்னு கும்பிட்டுக்கடி...!' என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.
எனக்கும் என்னவோ... அவளுக்கு பையனே பிறக்க வேண்டும் என்று தோன்றியது.
நீலிமா கிளம்பிப்போன அன்று பூராவும் அவளுக்கு பிரசவம் ஆகவில்லை.
கணவர் வராததால், அவளைப் போய்ப் பார்க்கவும் முடியவில்லை.
மறுநாள், காலையில் சமையல்.. பையனை கிளம்ப வைத்து, அவரை வேலைக்கு அனுப்பி, காலேஜ் உள்ளே நுழைந்ததிலிருந்து விடாமல் க்ளாஸ் என இருந்ததால் நீலிமாவைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மணி... லன்ச் சமயத்தில் ரெஸ்ட் ரூம் வந்து செல்போனை எடுத்தால், நீலிமாவின் போனில் இருந்து நாலைந்து மிஸ்டு கால் வந்திருந்தது.
ஒரு குற்ற உணர்ச்சியுடனும், அவளுக்கு ஆண் குழந்தையே பிறந்திருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் நீலிமாவிற்கு போன் செய்தேன்.
மறுமுனையில் அவள்தான் எடுத்தாள்.
காலை மூன்றரை மணிக்கே பிரசவம் ஆகிவிட்டதாம்... சுகப் பிரசவம்.
கொஞ்சம் பயத்துடனே என்ன குழந்தை என்று கேட்டேன்.
"ஏய்டி இவளே... நீ கும்பிட்டது வீண்போகலைடி. எங்க வம்சத்துலயே இல்லாம எனக்கு பையனே பொறந்துட்டாண்டி....! அம்மா அப்பா அக்கா அக்கா வீட்டுக்காரரு எல்லாருக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம்...! எல்லாரும் குழந்தைய கையில தூக்கிட்டே அலையறாங்க. கீழ வைக்கலேன்னா பாத்துக்கோயேன்".
மிகுந்த சந்தோசத்துடன் அவள் பேசப் பேச நான் ஆர்வத்துடன் கேட்டேன்.
"ஆமா... பையன் யாரு மாதிரி இருக்கான்..? அப்பா மாதிரியா, இல்லை உன்னை மாதிரியா...?".
நீலிமா இன்னும் அந்தச் சந்தோசம் மாறாத குரலில் சொன்னாள்.
"தெரியலடி... மூஞ்சியை யாரு பார்த்தா...?".
.
.
.
6 comments:
ha ha ha
Thanks everybody....!
//"தெரியலடி... மூஞ்சியை யாரு பார்த்தா...?".
.
.
. //
:))))))
:-))))))))))))))))
செம... கிளாசிக் டச்
கிளைமேக்ஸ் சூப்பர் :)
Post a Comment