Saturday, August 24, 2013

நூறு தர்பூசணிப் பழங்கள்


டேனிக்கு ஒரு ஐந்து வயதிருக்கும்.

அவனும் நானும் அவன் அப்பாவுடன் ஒரு ஞாயிறு மதியத்தில் பர்ச்சேஸ் முடித்து வரும்போது நடந்தது இது.

காலையிலேயே கிளம்பியது.

மளிகை, கொஞ்சம் துணிகள், அவனுக்கு பொம்மை என எல்லாம் வாங்கி முடிக்கையில் கிட்டத்தட்ட மதியமாகிவிட்டது.

திரும்பும் வழியில் வெயில் தாங்காமல் ஒரு சாலையோர தர்பூசணிக் கடையில் நிறுத்தினார் அவர்.

ரெகுலராய் இளநீர்க் கடையும் வைத்திருப்பவர் என்பதால் அந்தக் கடைக்காரர் டேனி அப்பாவுக்கும் பழக்கம் போல.

போனதுமே ”வாங்க சார்… சவுக்கியமா.?” என்றபடி, சுவையான பழமாய்த் தேர்ந்தெடுத்து மூன்று ப்ளேட்டுகளில் சின்னச் சின்னத் துண்டுகளாய் வெட்டி கொடுத்துப் போனார்.

நாங்கள் சாப்பிட, டேனிக்கு அந்த தர்பூசணீயின் சிவப்புக் கலரும், முக்கோணம் முக்கோணமான அதன் துண்டுகளும் அதன் சுவையும் பிடித்துப் போக வெயிலின் கொடுமையும் சேர ஆர்வமுடன் சாப்பிட ஆரம்பித்தான்.

ஒரு பிளேட்டையும் அவனே சாப்பிட்டதைப் பார்த்த அந்த கடைக்காரர் அவனுக்கு இன்னும் கொஞ்சம் பழத் துண்டுகளை வைத்தபடியே டேனியிடம் விளையாட்டாய்க் கேட்டார்.

“குட்டிப் பையனுக்கு தர்பூசணிப்பழம் புடிச்சிருக்கா.?”.

டேனி உற்சாகமாய்த் தலையாட்டினான்.

“ரொம்ப புடிச்சிருக்கு அங்கிள். செம டேஸ்ட்டு..!”.

கடைக்காரர் சிரித்தபடியே அடுத்து அவனிடம் கேட்டார்.

“இப்ப நூறு தர்பூசணிப் பழம் உனக்குத் தர்றேன். உன் அப்பாவையும் அம்மாவையும் எங்கிட்ட விட்டுட்டுப் போயிடறயா.?”.

நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் டேனியின் பதிலுக்காக அவன் முகத்தைப் பார்த்தபடி இருக்க, அவனோ ஒரு நிமிசம் பலமாய் யோசித்து விட்டு, “முடியாது அங்கிள்… எனக்கு என் அப்பா அம்மாதான் வேணும்.!” என்றான்.

கடைக்காரர் சிரித்தபடியே அவன் கன்னத்தை தட்டிவிட்டு, என் கணவரிடம், “பாசக்கார பயதான் சார்.” என்றபடி பணத்தை வாங்கிக் கொண்டார்.

திரும்பும் வழியில் அவன் அப்பா டேனியிடம் கேட்டார்.

“ஏண்டா… அந்த அங்கிள் ’நூறு பழம் தர்றேன்… அப்பா அம்மாவக் கொடுத்திடறியா..”னு கேட்டப்ப உடனே பதில் சொல்லாம என்ன யோசிச்ச.?”.

அவர் கேட்டதும் டேனி சிரித்தபடியே சொன்னான்.


“என்னால எப்படி நூறு தர்பூசணிப் பழத்தை கொண்டுபோக முடியும்னுதான் யோசிச்சுப் பார்த்தேன்.!”.
.
.

1 comment:

'பரிவை' சே.குமார் said...

கில்லாடிப் பயதான்.

Post a Comment