Monday, June 28, 2010

டைம் மெஷின்







அன்று நான் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்தேன்.

பாலக்காடு செல்லும் பஸ் வர இன்னும் அரை மணியாகும் என்றதால் கிடைத்த சீட்டில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தேன்.

எதிரே ஒரு வெயிட் பார்க்கும் மெஷினில் சில குழந்தைகள் தங்களது எடையைப் பார்த்து விளையாடிக் கொண்டிருந்தன.

எனக்கும் எனது எடையைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருந்தது.

போய் ஏறி மெஷினில் சக்கரம் எல்லாம் சுற்றி நின்றபின் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டேன்.

டர்ரென்று கார்ட் வந்து விழுத்தது.

நாற்பத்தியெட்டு கிலோ.

அதுபோக, எடை காட்டும் மெஷினில் விழும் கார்டில் எப்போதும் எனக்கு இன்னொரு ஆவல் உண்டு.

அது, பின்னால் சொல்லும் ஜோசியம்.

திருப்பிப் பார்த்தேன். அதில்...

"நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள்..."

'சரியாய்ச் சொல்கிறதே... நான் ஒரு ஆசிரியை என்பதும் கேரளா செல்லப்போகிறேன் என்பதும் மெஷினுக்கு எப்படித் தெரியும்..?'

குழப்பம் அதிகமாக இன்னொரு தடவை சரியாகக் காட்டுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள மறுபடி மெஷினில் ஏறினேன்.

இப்போது கார்டைப் பார்க்க அதில், "நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் கணவரைச் சந்திக்கப் போகிறீர்கள்..."

நானாவது... என் கணவரைப் பார்க்கப் போவதாவது...!

'அவர் இப்போது அவருடைய அலுவலகத்தில் இருப்பார்...' என்று எண்ணிக்கொண்டே வந்து உட்கார்ந்திருப்பேன்.

பின்னால் அவர் குரல் கேட்டது.

"ஹேய் பத்மினி... இன்னும் பஸ் கிடைக்கலையா... ஒரு அர்ஜன்ட் வேலை - கோவை போகணும். சாயங்காலம் பாக்கலாம்..." என்றபடி அவர் கோயமுத்தூர் செல்லும் பஸ்சில் ஏறி கைகாடியவாறே சென்றார்.

எனக்கு ஆச்சர்யம் அதிகமாகியது.

'இது எப்படி நடக்கும்...?'.

யோசித்து யோசித்து தலை வலிக்கும் போலிருந்தது.

சரி இன்னொரு தடவை பார்த்து விடலாம்.

மீண்டும் மெஷினில் ஏறி இன்னொரு ஒரு ரூபாயைப் போட்டேன்.

இப்போது, 'நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவரைச் சந்தித்துவிட்டீர்கள்... இப்போது கடவுள் உங்கள் அருகில் வரப் போகிறார்...!'

நான் முடிவே செய்துவிட்டேன்.

'கடவுளாவது பக்கத்தில் வருவதாவது... அதுவும் இத்தனை பேர் இருக்கும் பஸ் ஸ்டாண்டில்...?'

யோசித்து முடித்திருப்பேன். முருகன் வேடம் போட்ட ஒரு சிறுவன், "அக்கா...!" என்று என்னெதிரே கை நீட்டி நின்றான்.

எனக்கோ தலையே வெடித்துவிடும் போலாகிவிட்டது.

எப்படி.?

எப்படி..?

எப்படி...?

மெஷினையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்... என்னால் நம்பவே முடியவில்லை.

'இது எப்படி நடக்கும்...?'

'சரி... இதெல்லாம் யதேச்சையாய் நடக்கிறதா... இலலை, உண்மையிலேயே மெஷினுக்கு ஏதாவது சக்தி இருக்கிறதா என்று பார்த்துவிடலாம்.'

கடைசியாய் ஒருமுறை மெஷினில் ஏறி ஒரு ரூபாய் நாணயத்தை மறுபடி போட்டேன்.

அதில், ''நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவரைச் சந்தித்துவிட்டீர்கள்... கடவுளைச் சந்தித்துவிட்டீர்கள் ...இப்போது உங்கள் பஸ்ஸைத் தவறவிட்டு விட்டீர்கள்!" என்றிருந்தது.

"அய்யய்யோ...!' என்று நிமிர்கையில்...

அந்தப் பாலக்காடு பஸ் பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறி என் கண்ணை விட்டு மறைந்து கொண்டிருந்தது.
.
.
.

11 comments:

Aba said...

கலக்கல்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

சகாதேவன் said...

மீண்டும் ஒரு ரூபாய் போட்டு சீட்டு எடுத்தீர்களா? அதில்
//நீங்கள் ஒரு ஆசிரியை. நீங்கள் இப்போது வேறொரு மாநிலம் செல்லக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கணவரைச் சந்தித்துவிட்டீர்கள்... கடவுளைச் சந்தித்துவிட்டீர்கள் ...இப்போது உங்கள் பஸ்ஸைத் தவறவிட்டு விட்டீர்கள்.வீட்டுக்குப் போனதும் இதை வலைப்பூவில் பதிவு செய்வீர்கள்//
என்று சொன்னதா?

சகாதேவன்

ப.கந்தசாமி said...

ஜோர்

bogan said...

அற்புதம்.இன்னும் நிறைய எழுதுங்கள்.

துரோகி said...

:)

எல் கே said...

arumai

மங்களூர் சிவா said...

@சகாதேவன்
கமெண்ட் சூப்பர்!
:))

Sakthivel said...

Super....thaarumaaru

Sakthivel said...

Super...thaarumaaru... @Sakthivel_twitt

KARTHICK said...

Super..

Post a Comment